Share

Aug 11, 2017

ஸ்ரீகாந்த்ந.முத்துசாமி சாருடன் இருப்பது ரொம்ப அருமையான அனுபவம்.

டி.வியில் பழைய ஸ்ரீகாந்த் பார்க்க நேர்ந்த போது “ இவரு இப்ப படங்கள்ள நடிக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்.

  நான் “ கொஞ்ச வருடங்களுக்கு முன் சில டி.வி சீரியலில் பார்த்திருக்கிறேன்.”

முத்துசாமி சார் “ பெரிய புடுங்கின்னு நெனப்பு. நாங்க அமெரிக்கன் சென்டர் போகிற காலங்களில் அங்க ரொம்ப வெறப்பா அலட்டிக்கிட்டு...இருப்பார்.”

இப்போது ஸ்ரீகாந்தின் சமீபத்திய புகைப்படம் பார்க்க கிடைத்தது!


..............................


வெண்ணிற ஆடை படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் தியேட்டரில் அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் கத்தியதை நேரில் பார்த்த போது வெறுத்துப்போனார். அவருடைய நடிப்பு அப்போது தமிழ் ரசிகர்களுக்குப்பிடிக்கவில்லை.

ரொம்ப அவமானமாயிருந்ததால் ஒரு முடிவெடுத்தார் - இனி சினிமாவில் நடிக்க கூடாது.
இது அவரே சொன்ன விஷயம்.
வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதற்கு நேர் மாறாக இவரை படம் பார்த்தவர்கள் புறந்தள்ளினார்கள். இப்போது அந்தப்படம் பார்த்தால் அவருடைய நடிப்பு அப்படியொன்றும் மோசமெல்லாம் கிடையாது.அருமையான பி.பி.எஸ் பாடல்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன்!
1965ல் இருந்த ரசிகர்கள் முழுக்க எம்.ஜி.ஆர் – சிவாஜி மயக்கத்தில் இருந்தவர்கள்.

ஸ்ரீகாந்த் அமெரிக்கன் செண்டரில் வேலை பார்த்துக்கொண்டே நடிக்க வந்தவர்.

இவர் தன் திரைப்பட அறிமுகத்திற்குப்பின் கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டார்.

ஸ்ரீ காந்த் சினிமா வாழ்வு கொஞ்சம் விசித்திர மானது. இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டதால் இவருக்கு எந்த பெரிய பலனும் கிட்டவில்லை.
1965ல் ஸ்ரீதர் தரத்துக்கு சற்றும் பொருந்தாத இயக்குனரான ஜோசப் தளியத்தால் அறிமுகமான ஜெய்சங்கர் பிஸியான கதாநாயகன்.
சிறந்த இயக்குனர் பாலச்சந்தர் நாடகங்களில் நடித்து ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் சினிமாவில் சாதாரண நடிகராகிவிட்டார்.
ஸ்ரீதர் முன்னதாக அறிமுகப்படுத்திய ரவிச்சந்திரன் கூட ரசிகர்களால் 'காதலிக்க நேரமில்லை' யில் ரசிக்கப்பட்டார்.


பாலச்சந்தர் நாடகங்களில் நடித்தவர் என்பதால் அதே வருடம் 'நாணல்' படத்தில் காமெடி பாத்திரம் செய்தார்.
ஏ.வி.எம் ராஜன் ‘கற்பூரம்’(1967) – ‘நிலவே உனக்கு குறையேது? என் அருகினில் நெருங்கிட வரும்போது’ என்ற ஒரு பாடலுடன் ஸ்ரீகாந்த்துக்கு சின்ன ரோல்.மணிமாலாவை கற்பழிப்பார்.
செல்வமகள் படத்திலும் ’செல்ல’ வில்லன்.
பாலச்சந்தரின் “நாணல்”,
“பாமாவிஜயம்”
“எதிர் நீச்சல்”
“பூவாதலையா?”
“நவக்கிரகம்” படங்களில் எல்லாம் ஸ்ரீகாந்த் தன் முதல் படத்து பிம்பத்துக்கு சம்பந்தமேயில்லாமல் காமெடி ரோல் தான் செய்தார்!
பாமா விஜயத்தில் சச்சுவிடம் ஸ்ரீகாந்த் " I have no father.. no mother.."
எதிர் நீச்சலில் சௌகாரிடம் " ஏட்டிக்குப்போட்டி பேசாதேடி பட்டோ!"
பூவாதலையா - "போடச்சொன்னா போட்டுக்கிறேன்.போடும் வரை கன்னத்திலே." ஏ.எல்.ராகவன் பின்னனி குரல்!
நவக்கிரகம் - "திட்டுறான் திட்டுறான் மறுபடியும் திட்டுறான்! எல்லாரும் சாட்சி."


அதன் பிறகு அந்த பாலச்சந்தர் பட பாத்திரங்களுக்கு சம்பந்தமேயில்லாமல் ப்ளேய் பாய் ஆக ஆளே மாறிவிட்டார். மிக பிஸி.
“தோரஹா” இந்திப்படம் தமிழில் ‘அவள்’ தயாரிக்கப்பட்டபோது அதில் ருபேஷ் குமார் செய்த வில்லன் ரோலை செய்தார். “I’m always open!”
வெண்ணிற ஆடை நிர்மலாவை கற்பழிப்பார்.

சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் படங்களில் ஸ்ரீகாந்த் பிஸியான நடிகர். அதே 1972ல் காசே தான் கடவுளடா, ஞான ஒளி, தொடர்ந்து அடுத்த வருடம் ராஜபார்ட் ரங்கத்துரை.
1974ல் சிவாஜியின் மகனாக தங்கப்பதக்கத்தில் கலக்கி விட்டார்.

அதேவருடம் சிங்கிதம் சீனிவாசராவின் ‘திக்கற்ற பார்வதி’யில் கதாநாயகன். கதாநாயகி லக்ஷ்மி!
‘ராஜநாகம்’ படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன்.
 தேவர் படம் ‘கோமாதா என் குல மாதா’ வில் பிரமீளாவுக்கு ஜோடி.

அவருடைய ஹேர்ஸ்டைல் தனித்துவமானது.


வத,வத என்று பல படங்கள் நடித்தார்.
‘பைரவி’, ‘சதுரங்கம்’ இரண்டு 1978 படங்களில் ரஜினிகாந்த்துடன்.
(மேஜர் சந்திரகாந்த் கதையில் இரண்டு பாத்திரங்கள். சந்திரகாந்தின் இருமகன்கள் ஸ்ரீகாந்த், ரஜினி காந்த்.
இந்த இரண்டு பெயர்களை பாலசந்தர் இரண்டு நடிகர்களுக்கு சூட்டினார்!)

ஜெயகாந்தன் நாவல்களின் நாயகன்.
ஒரு வித்தியாசமான ஸ்ரீகாந்த்.
சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)


கமல்ஹாசனுடன் “நீயா?”(1979)

.......

ஸ்ரீகாந்த் தன் நண்பன் நாகேஷ் பற்றி சொல்லியிருக்கிற சுவாரசியமான விஷயம்.
நாகேஷ்,ஸ்ரீகாந்த்,கவிஞர் வாலி மூவரும் திரையுலக முயற்சியில் இருந்த காலத்திலேயே நண்பர்கள்.

நாகேஷுக்கு நண்பர்கள் மத்தியில் பட்டப்பெயர்
"மொபைல் நாகேஷ்"!
தங்குவதற்கு தனி அறை ஏதும் இல்லாததால் ஒவ்வொரு நண்பர்கள் அறையாக மாறி, மாறி தங்கிக்கொள்வாராம்! அதனால் மொபைல் நாகேஷ்!

................................................................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.