இரண்டு படங்கள். இரண்டிலுமே ஜூனியர் மோஸ்ட் நான் தான்.
முதல் பார்வையிலேயே தூக்கலாக Contempt, disdain, scorn. கண்ணிலேயே காரணமேயில்லாமல் வெடிக்கும் எள்ளும் கொள்ளும்.
இவன் யாரு? எதுக்கு இவன டைரக்டர் இப்ப அசிஸ்டெண்ட்டா சேக்கனும்.
இவனெல்லாம் சினிமாவில வந்து என்ன செய்யப்போறான்?
நாமெல்லாம் எத்தன வருஷமா கொட்ட போட்டுக்கிட்டு இருக்கோம்.
உடல் மொழியாலும் பார்வையாலும் இப்படி ஒவ்வொரு நிமிஷமும் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.
எப்படியாவது இவன காலி பண்ணணுமே என்று Mind voice என் காதிலேயெ விழும்படி overflow ஆகும்.
’அழைத்தால் வருவேன்’ படத்தில் தான் இப்படி என்றால்
’ராசுக்குட்டி’யிலும் இது பல மடங்காக நான் பார்க்க நேர்ந்தது.
மற்றவர்களையெல்லாம் டைரக்டர் டேய், வாடா போடா என்று சொல்லும்போது இவன மட்டும் வாங்க ராஜநாயஹம், எப்படி இருக்கீங்கன்னு மரியாதயா பேசறாரே.
ஒன்பது பேர் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த நிலை.
'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிக்கையிலும், 'ஜெமினி சினிமா'விலும் படம் பற்றிய கட்டுரையில் ஒரு நான்கு பேரை மட்டும் அஸிஸ்டெண்ட் என்று குறிப்பிட்டு பயில்வான் ரங்கநாதன் எழுதியிருந்தார். அந்த நான்கு பெயர்களில் ராஜநாயஹம் ஒன்று. அதோடு கூடுதலாக என்னைப்பற்றி ஒரு குறிப்பும். ”…..ராஜநாயஹம் போன்ற உற்சாகமிக்க இளைஞர்கள் உதவி இயக்குனர்களாக பணி புரிகிறார்கள். இவர்களில் ராஜநாயஹம் மட்டுமே திருமணமானவர்.”
இது பெயர் இடம்பெற்ற மூன்று பேருக்கும், பெயர் இடம்பெறாத ஒரு நான்கு பேருக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இப்படி தான் புகைந்து கொண்டே இருப்பார்கள்.
சரவணன் மட்டும் எனக்கு உரிய மரியாதை கொடுப்பான். இவனை மற்ற அசிஸ்டெண்ட்கள் படாத பாடு படுத்துவார்கள்.
சரவணன் : என்னங்க டைரக்டர் முகத்த மேக் அப் இல்லாம பாத்திருக்கீங்களாங்க.. கொடூரமா இருக்குமுங்க.”
”உங்கள எல்லோருக்கும் பிடிக்குமுங்க.. உங்களோட பழக எல்லோரும் பழக ஆசைப்படுவாங்க.”
சரவணன் : வீட்டுல இருந்து எனக்கு மாசாமாசம் பணம் அனுப்புறோம்னு சொன்னாங்கங்க… நான் வேண்டாம்னுட்டேன். நானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேங்க!
சரவணன் தான் அப்போது சீமான் பற்றி அடிக்கடி என்னிடம் பேசியிருக்கிறான்.
”என் ஃப்ரண்டு சீமான் படம் பண்ணப்போறாருங்க.”
”எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லங்க….. போன ஷெட்யூல் முடிஞ்சவுன்ன ஊருக்கு போனேங்க. என் தங்கச்சி என்ன ஒரு கேள்வி கேட்டுச்சி. ’ஏண்ணே! அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. உனக்கு சினிமா தான் பெரிசா போச்சா’ன்னு நல்லா உறக்கிற மாதிரி கேட்டுச்சுங்க. என் மூஞ்சை எங்க கொண்டு வச்சுக்கறதுன்னு எனக்கே தெரியலீங்க…”
ஷூட்டிங் முடிந்து காரில் வரும்போது கலங்கிய கண்களுடன் ஒரு அஸோசியேட் பெயரை சொல்லி “ அவன் என்னை அடிச்சிட்டாங்க” என்று தேம்பினான்.
அடித் தொண்டையில் பாடுவான். ” ‘வானத்த போல மனம் படச்ச மன்னவனே…’ நல்லா பாடுவேங்க…”
கோபி செட்டிபாளையத்தில் ரூமில் இருந்த போது திடீரென்று ‘மூள திடீர்னு ஜில்னு இருக்குங்க… நம்ம ஏற்கனவே இந்த இடத்துக்கு வந்திருக்கோம்ங்க.. ஐஸ்கட்டி வச்ச மாதிரி மூள ஜில்னு எனக்கு ஆயிடுச்சுங்க…”
நான் சத்தியமா அந்த இடத்துக்கு இதற்கு முன் வந்ததேயில்லை என்று எத்தனை தடவை சொன்னாலும் ஒத்துக்கொள்ள சரவணன் மறுத்து விட்டான்.
(பின்னாளில் “ஒன்ஸ் மோர் படத்துக்கு என் கதைய திருடிட்டாங்க’ என்று குங்குமம் பத்திரிக்கையில் சரவணன் பேட்டி வந்திருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர்,விஜய்க்கு எதிரான பேட்டி.
கொஞ்ச வருடம் முன் சரவணன் ’விஜய நகரம்’ என்று ஏதோ ஒரு படம் இயக்கியதாக டி.வி. நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தெரிய வந்தது.)
ஏதோ ஒரு சமயம் ஷூட்டிங் போது என்னை பாக்யராஜ்
“ஏய்!” என்று சொல்லி விட்டு “சாரிங்க..ராஜநாயஹம்..உங்கள போய் டென்சன்ல ’ஏய்’னு சொல்லிட்டேன்.” என்றார்.
பேக் அப் சொன்னவுடன் அவர் காரில் ஏறி மேட்டூர் செல்லும் போது
“ ராஜநாயஹத்த போய் வாய் தவறி ’ஏய்’னு சொல்லிட்டேன்..சே..” என்று இரண்டு மூன்று முறை வருத்தப்பட்டிருக்கிறார்.
நான் மேட்டூர் திரும்பி லாட்ஜ் வந்து குளித்து விட்டு ரூமில் சரவணன், கடுவனோடு இருந்த போது பாரதி சோமு வந்து என்னிடம் “ டைரக்டர் உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்கிறார் சார்!” என்று இதை சொன்னார். அப்போது அவர் பாக்யாவில் உதவி எடிட்டராக இருந்தார்.
(எட்டு வருடம் கழித்து இந்திரா பார்த்தசாரதி டாகுமெண்ட்ரி மூவி விஷயமாக ரவி சுப்ரமண்யன் என்னிடம் தொலைபேசியில் பேசிய போது ” நான் உங்கள பாத்திருக்கேன் ராஜநாயஹம். பாக்யா ஆஃபிஸில் பாரதி சோமுவை பார்க்க வந்திருந்த போது உங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்” என்று சொன்னது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது. )
ஒரு நாள் மேக்அப் டிபார்ட்மெண்ட் டெக்னிசியன் ஒருவன் என்னிடம் வந்து ஒரு விஷயம் சொன்னான். “ நேத்து நைட் டிஸ்கஸன்ல அஸிஸ்டெண்ட்கள் ’சார்! ராஜநாயஹத்துக்கு டைரக்ஷன்ல இன்ட்ரெஸ்ட் இல்ல. எப்பவும் கல்யாண்குமார், மௌனிகா என்று ஆர்ட்டிஸ்ட்களோடு தான் பேசிக்கிட்டு இருக்கார். அவர ஆர்ட்டிஸ்டா மட்டும் வச்சுக்கலாமே’ன்னு போட்டு விடுறானுங்க சார்!’ என்றான்.
………………………………………………….
http://rprajanayahem.blogspot.in/2017/06/blog-post_25.html
http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_9.html
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html
http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html
http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html
http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…