Share

Oct 11, 2016

Kumudam 'Kisu Kisu' Special


It is whispered என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
’கிசுகிசு’ என்ற வார்த்தையை தமிழுக்கு கண்டு பிடித்துக் கொடுத்து பிரயோகம் செய்து பிரபலமாக்கியதே குமுதம் பத்திரிக்கை தான்!
கிசு கிசு உண்மையா பொய்யா?
It can’t all be smoke without fire!
ஹாலிவுட் கிசுகிசு எல்லாம் வேறு ரகம். பெரும்பாலும்
கிசு கிசு என்று சொல்லும்படி ரகசியமும் இருக்காது. யாரெல்லாம் ஹோமோ செக்சுவல், யார் யாரெல்லாம் பைசெக்சுவல், லெஸ்பியன் என்பதெல்லாம் வகை பிரிப்பதே ரசிகனுக்கு பெருங் கடமை!. சம்பந்தப்பட்ட நடிகை, நடிகரே தான் என்ன வகை என்பதைப் பற்றி வெளிப்படையாக சொல்லி விடுவார்கள். இந்தக்குழப்பத்தில் Straight ஆன நடிகர் பற்றி கூட ஹோமோ செக்சுவலா? என்று சந்தேகம் இங்கே வந்து விடுவதுண்டு.

அப்படி டாம் ஹாங்க்ஸ் பற்றி சந்தேகம் வந்த போது “ He is not a homosexual. A straight person” என்று விளக்கினேன்.
காதல், திருமணம் என்று நடிக நடிகையரைப்பற்றி ஹாலிவுட்டில் கிசு கிசு எதுவும் கிடையாது. எதையும் யாரும் பெரும்பாலும் மறைக்க முயல்வதில்லை.
பாலிவுட்டில் tabloid magazines எழுதுவதில் தங்கள் பெயர் கிசுகிசுவில் வரவேண்டும் என்று இந்தி நடிக நடிகர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள்.

அந்தக் கால தமிழ் திரை நடிகர் நடிகைகளில் இப்படி இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்கிற கிசுகிசு செய்திகள் என்பதை விட பச்சை பச்சையாக மஞ்சள் பத்திரிக்கை இந்து நேசன் தான் 1940களில் எழுத ஆரம்பித்தது. அதன் ஆசிரியர் கொலை செய்யப்பட்டு எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், பட்சி ராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மூவரும் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்குப் போக நேர்ந்தது. ’லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ பரபரப்பாக ஆனது. க்ளாரா என்ற நடிகை மாதுரி தேவியின் அண்ணன் ஒரு பிரபல ரவுடி. அந்த ரவுடிக்கு கூட இந்தக் கொலையில் சம்பந்தமுண்டு.

பாகவதர் உச்சத்தில் இருந்த போது இந்த வழக்கில் சிறை சென்றார். விடுதலையான பின் அவர் திரையுலக வாழ்வு சோபிக்கவேயில்லை. மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள்ளானார்.

என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலையான பின் எந்தப்பாதிப்பும் இன்றி உற்சாகமாக,சுறுசுறுப்பாக இயங்கினாலும் பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்கவில்லை.
தியாகராஜ பாகவதர், என்.எஸ் கிருஷ்ணன் இருவருமே ஐம்பது வயதை எட்டாமலே மறைந்து விட்டார்கள்.
சினிமாவில் பல பிரபல ஜோடிகள் பற்றி மக்கள் அறிவார்கள்.
ஜெமினி -சாவித்திரி
எஸ் எஸ் ஆர் - விஜயகுமாரி
ரவிச்சந்திரன் -ஷீலா
பிரபலமான இந்த ஜோடிகள் இணைந்ததும் பிரிந்ததும் தெரியும். ஆனால் அதற்கும் பல ஆண்டுகள் முன் இவர்களுக்கு முன் இதே போலஇணைந்து பிரிந்த ஜோடி ஒன்று பற்றி பலருக்கு தெரியாது.
டி.ஆர் . மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி !

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ யல்லவா ,இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவை கட்டிலில் கட்டிவைத்தேன் போன்ற பாடல்களை பாடிய
எஸ் வரலக்ஷ்மி தான் மகாலிங்கத்துடன் பல காலம் முன் வாழ்ந்தார்.

இருவரும் அப்போது திரையுலக பிரபல ஜோடி என அறியப்பட்டிருந்தார்கள். பாடல்சத்தமாக ஒலிக்கும் நடிகர் மகாலிங்கம் காரில் வரலக்ஷ்மியும் சேர்ந்து ஸ்டூடியோவுக்கு போவதை ரசிகபெருமக்கள் சாலையோரங்களில்நின்றபடி பார்த்து கையசைத்து வாழ்த்துவது தினம் பார்க்க கிடைக்கும் காட்சியாம்.
அப்போது மகாலிங்கத்திடம் 'பிலிம்ரெப்ரசெண்டேடிவ்' வேலை பார்த்தவர் ஏ.எல்.சீனிவாசன் . கண்ணதாசனின் அண்ணன். பின்னாளில் சாரதாஸ்டூடியோ, ஏ.எல்.எஸ் புரடக்சன் என முதலாளியானவர்.

வாழ்க்கை விந்தையானது. பல வினோத திருப்பங்கள் நிறைந்தது.
டி ஆர் மகாலிங்கம் எஸ் வரலக்ஷ்மி நட்சத்திர ஜோடி பிரிந்தது. மகாலிங்கம் தயாரித்த இருவரும் இணைந்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் மன வேறுபாடுக்கு காரணமாக இருந்திருக்கும்.
சில காலத்திற்கு பின் எஸ் வரலக்ஷ்மி நடிகர் மகாலிங்கத்திடம்முன்பு பிலிம் ரெப் வேலைபார்த்த
ஏ எல் சீனிவாசனின் மனைவியானார். அவருடனேயே வாழ்ந்தார்.
கண்ணதாசன் " மாலையிட்ட மங்கை "(1958)படத்தை
டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கி தயாரித்தார்.
வரலக்ஷ்மி சிவாஜியின் ஜோடியாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்தார்.
கே எஸ் ஜி யின் பணமா பாசமா (1968)படம்
எஸ் வரலக்ஷ்மியை 'அம்மா' நடிகையாக பிரபலமாக்கிவிட்டது.
நட்சத்திர ஜோடி டி.ஆர் மகாலிங்கம்-எஸ்.வரலக்ஷ்மி பிரிந்து தலைமுறை காலங்களுக்கு பின்
ஏ பி நாகராஜன் இயக்கத்தில்
ராஜ ராஜ சோழன் படத்தில் டி ஆர் மகாலிங்கமும்
எஸ் வரலக்ஷ்மியும் ஒன்றாக பாடி நடித்தார்கள்.
" நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க " சீர்காழி பாடுவது
" நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க " டி ஆர் மகாலிங்கம்
" தஞ்சமென வந்தோர்க்கு தஞ்சம் வழங்கும் தஞ்சை பெருவுடைய சோழனே நீ வாழ்க " எஸ் வரலக்ஷ்மி தொடர்ந்து பாடுவது,
பின் சீர்காழி,மகாலிங்கம்,எஸ் வரலக்ஷ்மி மூவரும் சேர்ந்து " வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கு விண்ணுயர் பெரியகோவில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க !"
"தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே !"
ஆனால் இந்த படம் வந்த காலங்களில் ஏ.எல்.எஸ் மனைவியாகவே எஸ்.வரலக்ஷ்மி அறியப்பட்டிருந்தார்.
………………..


ஜி. வரலட்சுமியின் சொந்த வாழ்க்கை பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டதுண்டு. இவர் பிரபல இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவின் மனைவி.
ஜி.வரலட்சுமி குலேபகாவலியில் எம்.ஜி.ஆருடன் நடித்தவர். சிவாஜியுடன் நான் பெற்ற செல்வம், அரிச்சந்திரா படங்களில் கதாநாயகி.
அரிச்சந்திரா இவருடைய சொந்தப்படம். இந்தப்படத்தை அவருடைய கணவர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் தான் இயக்கினார்.
பின்னாளில் ஜெய்சங்கரின் ’குழந்தையும் தெய்வமும்’, ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’ படங்களில் வில்லியாக நடித்தவர். மிடுக்கு, கம்பீரமுள்ள நடிகை.
இவருடன் சினிமா கேமராமேன் ஆர்.ஆர். சந்திரன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் ஜி.வரலட்சுமிக்கு குஸ்தி சண்டை மீது மிகுந்த ஆர்வம் வந்தது. தாராசிங், கிங்காங், அஜித்சிங் ஆகியோரின் குஸ்தி சண்டைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமானதோடு நிற்கவில்லை. இவரிடம் வகையாக சிக்கியவர் பயில்வான் அஜித் சிங். அஜித் சிங் மீது மையல் கொண்டு அவருடனேயே சுற்றினார்.அவருடனேயே வாழ்ந்தார். அஜித் சிங் குஸ்தி சண்டையில் தோற்றால் வரலட்சுமி அழுது அரற்றினார். அஜித்சிங் தான் தன் கணவர் என்றே பேட்டி கொடுத்தார்.
Published in Kumudam Kisu Kisu special last week.
............................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.