Share

Sep 30, 2016

துற...



என் பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்’ஸ்.
சேசு சபை பாதிரிகள் தான் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ், சென்னை லொயோலா ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்.
பாதிரியார்களின் டைனிங் ஹாலில் எட்டிப்பார்த்திருக்கிறேன். பழங்கள் வித,விதமாக டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும்.
சிறுவனாக ஆர்வத்துடன் ஒரு பாதிரியாரிடம் அவர்களின் உணவுப் பழக்கம் பற்றி விசாரித்திருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை மட்டன், திங்கள்கிழமை சிக்கன், செவ்வாய்க்கிழமை போர்க், புதன்கிழமை பீஃப், வியாழக்கிழமை மீண்டும் மட்டன், சனிக்கிழமை மீண்டும் சிக்கன்.
வெள்ளிக்கிழமை மெனு?

பாதிரியார் சற்றே சோகம் ததும்ப சொன்னார்.”வெள்ளிக்கிழமை ஆண்டவர் சேசு இறந்த நாள். ஆனதால் மாமிசம் சாப்பிடவே மாட்டோம். துக்கம் அனுஷ்டிப்போம். அன்று மீனும் முட்டையும் மட்டும் தான் சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்வோம்.”

Two great European narcotics, Alcohol and Christianity.
- Nietzshe

……………………………………………………………………

மத்தாயுட பிரார்த்தனா!

ஞான ரதம் பத்திரிகையில் வந்த கவிதைஒன்று .
" சைத்தான்" எழுதியது !

ஜி நாகராஜன் எழுதிய நாவல் "நாளை மற்றுமொரு நாளே " இந்தபத்திரிக்கையில் தான் தொடராக வந்தது . சுந்தர ராமசாமியின் பிரபலமான 'சில கெட்ட உறுப்புகள்" ( முலையை மட்டும் வெட்டிடுரெனே.. எந்த முலை?) ஞானரதம் பத்திரிகையில் தான் பிரசுரமானது .

மத்தாயுட பிரார்த்தனா!

எண்ட கர்த்தாவே !
மத்தாயு கள்ளும் குடிக்கும்
பெண்ணும் பிடிக்கும் .
கர்த்தர் ரட்சிக்கனும் .
ரட்சிச்சிலேங்கில் மத்தாயுக்கு மயிரானு ..

- "சைத்தான் "

ஞானரதம் ஜூலை ,1973

...................................................................



பிரார்த்தனை

அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி . நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார் . மதத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது .அவர் எழுதிய குட்டி கதை ஒன்று .

' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார் . அப்போது மழைக்காலம். அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம் .

பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன என எண்ணி அயர்ச்சியாடைகிறார் .

“Quiet . I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார் .

தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன . பயங்கர அமைதி !

பாதிரி சந்தோசமாக உரக்க கூவி பிரார்த்திக்கிறார் .

“My Father! Who art in heaven!”

வானத்திலிருந்து ஒரு அசரிரி

“OK! I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?!”

..........................................

Ailing Popes are not unusual

82 வயது போப் பெனடிக்ட் இத்தாலியில் விடுமுறையை கொண்டாட சில நாட்களுக்கு முன் சென்றிருந்த போது கீழே விழுந்து கை மணிக்கட்டில் எலும்பில் அடி பட்டு கீறல் ஏற்பட்டு சுகவீனம் ஏற்பட்டதாக ஒரு செய்தி .

A Pope is not ill until He is dead என்பது வாட்டிகன் விதிமுறை . மருத்துவ விதிமுறை Ailing Popes are not unusual. சுகவீனம் ஏற்பட்டு விடும்போது போப் கூட நோயாளி தான் .
முன்னாளில் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஒருபோப் ' பயஸ் ' என்று பெயர் . 'சேசு சபை பாதிரிகள் சிகரட் பிடிக்கக்கூடாது' . என்றார். இது பரவாயில்லை. தப்புன்னு சொல்லமுடியுமா ? பாதிரிகள் என்று இல்லை யாருக்குமே சிகரட் குடிப்பது உடம்புக்கு தொந்தரவு தான் .சுகக்கேடு தான் .ஆனால் இந்த போப் ' விதவைகள் மறுமணம் செய்வது கூடாது ' என்று வேறு சொன்னார் . கடைசி காலத்தில் அவருக்கும் சுகவீனம் ஏற்பட்டது . 'மெண்டல் பிரச்சினை '.மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை . Ailing Popes are not unusual.
ஆல்பெர் காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் சொன்னார் '' போப் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஜெபிப்பதை நிறுத்தி விட்டு மோசமான தீயவர்கள் மத்தியில் வந்து வாழவேண்டும்.''
சேரியில் வந்து வசிக்கும் போப் நமக்கு வேண்டும். வாட்டிகன் அரண்மனையை விட்டு போப் சேரிக்கு வந்து வாழ வேண்டும்.

'But who today is the enemy of the people of god ? Louis the emperor or John XXII the Pope ?'
-Umberto Eco in 'The name of the Rose'

...............................

பாதிரி ஒருவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்றவர் விருந்தை முடித்துக்கொண்டு விச்ராந்தியாக 'சின்ன வாக் ' போக ஆரம்பித்தவர் ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு காட்டின் உள்பகுதிக்கு சென்று விட்டார் . திடீரென்று எதிரே ஒரு சிங்கம் . நடுங்கிபோய் முழந்தாளிட்டு ' தேவனே ! காப்பாற்று !' என கண்மூடி பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார் . 
சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தால் இவர் முன் சிங்கமும் கண் மூடி ,முழந்தாளிட்டு கை கூப்பி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது . பாதிரியார் பரவசமாகி வான் நோக்கி '' தேவனே ! உம்முடைய வல்லமை அளப்பரியது !! சிங்கத்தைக்கூட மனம் திரும்ப செய்து விட்டீரே !!! என்னே உம்முடைய பெருமை !!!" என கூவினார் . சிங்கம் கண் திறந்து " சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி ஜெபம் சொல்கிறேன் . இன்றைய உணவுக்காக கடவுளுக்கு நன்றி.தேயா கிராசியஸ் !" என்று அதே பரவசத்துடன் சொல்லி " ஜெபம் செய்யும்போது கூப்பாடு போடக்கூடாது " என்று கண்டிப்புடன் பாதிரியாரை அதட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

.....................................

Photo
R.P.Rajanayahem

http://rprajanayahem.blogspot.in/2008/10/trichi-st.html


http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

Sep 27, 2016

காருக்குறிச்சி அருணாச்சலம்


’சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம்!



தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’  என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார். ‘காருக்குறிச்சி அருணாச்சலம்’ என்று குறிக்கப்படவேண்டும் என்பார். 


ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது!
தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.


1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.
 மாரடைப்பால் இறந்தார்.

கோவில்பட்டியில் காருக்குறிச்சிக்கு உள்ள சிலை ஜெமினி கணேசன் உபயம். மகா கஞ்சன் என்று ஜெமினி கணேசன் பற்றி சொல்வார்கள். ஆனால் அவர் தேவையான, நியாயமான காரியங்களுக்கு நல்ல நன்கொடை கொடுத்ததுண்டு.

கி.ராஜநாராயணனிடம் பேசும் போது காருக்குறிச்சி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார்.
காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.
முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி உடனே மறைந்திருக்கிறார். ஆனதால் முதல் மனைவியின் உறவினரான மற்றொரு    பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.
 பின்னர் நடிகை ஈ.வி.சரோஜாவின் ஒன்று விட்ட சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சாவூர்க்காரர்.

“கச்சேரிகளுக்கு செல்லும்போது பல மாதிரி கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். அதனால் இந்த  மனைவியைக் கூட அழைத்துப் போய் சோதனைகளைத் தவிர்க்க முடியும்.”
இவருக்கும் குழந்தைகள் உண்டு.

எல்லா குழந்தைகளையும் மூத்த முதல் மனைவி அன்போடு வளர்த்து ஆளாக்கினார்.
‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.


காருக்குறிச்சியின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் இந்திரா பழனியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன் தகப்பனுக்காக அங்கு ஒரு மணி மண்டபம் கட்டினார் இந்த இந்திரா.
காருக்குறிச்சிக்கு  சரவண பவன் என்று ஒரு மகன். அந்தப் பையன் ஒரு எஞ்ஜினியர்.
டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.

கி.ரா பழைய நினைவில் மூழ்கி என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.
காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தியிருக்கிறார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மறுத்துத்தலையை ஆட்டினார். ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.

காரு குறிச்சியின் 'சகானா' வாசிப்பு கேட்கும்போது ஒரு தடவை 
எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா' என ஒரு நிறைவு ஏற்பட்டது.




Sep 19, 2016

Tom Hanks in “Sully”


அல் பாசினோ, ராபர்ட் டி நீரோ, டாம் ஹாங்க்ஸ் நடிப்பதெல்லாம் பார்க்கும்போது ’இது நடிப்பே இல்லை, ரொம்ப இயல்பாக வாழ்வை நிகழ்த்தி காட்டி விடும் கலை எப்படியோ இவர்களுக்கு சாத்தியமாகிறது’ என்பதாக ஒரு பிரமிப்பு தோன்றுகிறது. மூவருமே முற்றிலும் ஒருவரொருவரிலிருந்து ‘உடல்மொழி’ வேறுபட்ட வித்தியாசமானவர்கள். அல் பாசினோ உட்கார்ந்த நிலையில் நிமிரிந்து வித விதமாக பார்ப்பது, (அந்த பார்வை எத்தனை சாத்தியக்கூறுகளை காட்டி விடுகிறது!)ராபர்ட் டி நீரோ சிரிப்பது, பார்ப்பது, பேசுவது தலையை ஆட்டுவது. டாம் ஹாங்க்ஸ், சிரிப்பது, பார்ப்பது, பேசுவது, அதிர்ச்சியை மெலிதாய் காட்டுவது எல்லாமே அசாத்தியமான எவ்வளவோ உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய மேன்மையான தரத்தில் அமைந்திருக்கிறது.


இந்த “Sully” ஹாலிவுட் படம் டாம் ஹாங்க்ஸ் நடித்திருப்பதால் அந்த நடிகரை ஞாபகப்படுத்துகிறதா என்றால் இல்லை. ஒரு நிஜ பைலட் ஆஃபிசர் தான் கண்ணுக்குத்தெரிகிறார். டாம் ஹாங்க்ஸ் நடித்த ஒரு இருபத்தைந்து படங்களுக்கு மேல், (பல படங்கள் பல முறை) இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பார்த்திருந்தும் இந்த படத்தில் அவரை ஒரு ஹாலிவுட் நடிகராக நினைக்கவே முடியவில்லை என்றால் அந்த நடிப்பைப் பற்றி சொல்ல என்ன தான் இனி இருக்கிறது. சாதனை!
விமானத்தை தரையிலேயே நாற்பது வருடங்களாக இறக்கி நிறுத்திய ஒரு பைலட் ஆற்றில் இறக்கி விட நேர்கிறது. ஹட்சன் நதியில் இறங்கும் விமானத்திலிருந்த 155 பேரும், குழந்தை உட்பட உயிர் பிழைத்த அதிசயம் அமெரிக்காவில் 2009 ம் ஆண்டு நிஜமாக நடந்த சம்பவம்.
As passengers begin to panic, the pilots and flight attendants do all they can to keep everyone safe.
"People call you a hero."
" I don't feel like a hero."
இதனால் அந்த பைலட் ஒரு ஹீரோவாக உயர்த்தப்பட்ட போதும், மீடியா வெளிச்சத்தில் பாப்புலாரிட்டி அவரை நனைத்த நிலையிலும், அவர் விமானத்தை ஏழு மைல் தூரத்தில் உள்ள நகர விமான தளத்தில் இறக்கியிருக்க சாத்தியம் இருப்பதாக விசாரணை நடத்தி அவரை நோகடிக்கிறார்கள்.
"When was your last drink, Captain Sullenberger? Have you had any troubles at home? Simulation showed that you could make it back to the airport."
It's not a crash. It's a forced water landing."
"I've had 40 years in the air but in the end, I'm going to be judged by 208 seconds."
"Everything is unprecedented until it happens for the first time."


அதோடு அந்த பரபரப்பான நிகழ்வால் சல்லி மன நிலை பாதிப்புக்கும் உள்ளாகும் நிலை. Post traumatic stress with disturbing thoughts, feelings and nightmares.

பைலட், ஃபர்ஸ்ட் ஆஃபிசர் இருவரின் மீதும் இறுகும் விசாரணை முடிச்சு பிரமாதமாக அவிழ்ந்து விடுகிறது.

அந்த ஃபர்ஸ்ட் ஆஃபிசர் அசத்தியிருக்கிறார். Aaron Eckhart.
"You did everything you could. It was more than enough."


பைலட் தன் மனைவி Laura Linney
யுடன் தொலைபேசியில் பேசுவதாக மட்டுமே காட்சிகள். 

ஆனால் இருவருக்குமிடையிலான உணர்வுப் பூர்வமான பந்தம் அருமையாக கவிதையாக பதிவாகி விட்டது.
"I want you to know, I did the best I could."
" Of course you did, you saved everyone. There were 155 people on that plane and you were one of them."



கதை முடிந்தபின் அந்த 2009 ஹீரோ நிஜ பைலட்டையும் காட்டுகிறார்கள்.



Clint Eastwood is the Director of the movie!

Sep 17, 2016

’கல’


வேதங்களில் இருந்து ஏதாவது ஒரு கதை பற்றி சொன்னால் உடனே பலரும் “ அது அப்படியில்லை. இது எப்படின்னா…’’ என்று ஆரம்பித்து வேறு கதை சொல்வார்கள்.
மகாபாரதம் செவிவழியாக பல கதைகளாக பெருகியிருப்பதால்
“ அது அப்படியில்ல, இப்படித்தான்..’’ என மறுத்து வேறு மாதிரி சொல்வார்கள்.
தொன்மங்களை எவ்வளவோ எழுத்தாளர்கள் தங்கள் புனைவுகளால் நிரப்புவதுண்டு தான்.
ப்ரதீபா ரே என்ற ஒரிய எழுத்தாளரின் ‘யக்ஞசேனி’ நூலில் மகாபாரதத்தை ஒரு மாறுபட்ட கோணத்தில் திரௌபதி கர்ணன் மேல் மட்டுமல்ல, கண்ணன் மீதே காதல் கொண்டதாக எழுதியிருக்கிறார் என சிற்பி பாலசுப்ரமண்யம் ‘தி இந்து’வில் சென்ற வருடம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இங்கே உள்ள மகாபாரத பண்டிதர்கள் “ ச்சீ..ச்சீ.. என்ன இது முறைகெட்டத்தனம்” என்று முகம் சுழிக்க வேண்டியது தான்.
இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”



நான் சிறுவனாக இருக்கும்போது கரூரில் ’டாக்கி டாக்கிஸ்’ தாண்டி மார்க்கெட் அருகில் திராவிட கழகக்கூட்டம் ஒன்று நடந்தது. கறுப்புச் சட்டை அணிந்து பெரியார் ஒரு கட்டிலில் அமர்ந்தவாறு பேசிய போது பிள்ளையார் பிறந்த கதை பற்றி கீழ்கண்டவாறு சொன்னார்.
“ பரமசிவனும் பார்வதியும் ஒரு காட்டில் சரசமாக பேசிக்கொண்டு இருந்திருக்காங்க. கொஞ்ச தூரத்தில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் ‘கல’ பண்ணிக்கிட்டு இருந்திருக்குதுக. இதப்பார்த்த பரமசிவன் பார்வதியிடம் அந்தக் காட்சியைக் காமிச்சிருக்காரு. ரெண்டு பேருக்கும் உடனெ நாமளும் ‘கல’ பண்ணுவோமேன்னு ஆசை வந்திருச்சி. அந்த யானைங்களப் பார்த்துக்கிட்டே ‘கல’ பண்ணதால குழந்தை யானை முகத்தோட பிறந்திருக்கு!”
கலை என்பதை அய்யா ‘கல’ என்று உச்சரித்தார்.
பெரியார் உடலுறவைப் பற்றி ‘கலை’ என்ற வார்த்தையாலேயே அன்று பேசும்போது குறிப்பிட்டார்.
…………………………………….

Sep 16, 2016

"அத்தக்கி சக்கர நை!"


குழந்தையாய் இருக்கும்போது நான் மற்றக்குழந்தைகள் போல் மழலைப்பேச்சு பேசவில்லை. என் செல்லப்பெயர் ’துரை’. தொர என்று தான் அழைப்பார்கள். பேசாமல் ஊமையாக இருந்ததால் குடும்ப அளவில் எனக்குப்பெயர் ’ஊமத்தொர’. மூன்றரை வயதுக்கு மேல் தான் கொஞ்சம் புரியும்படியாக மழலை பேசினேனாம்.
ஆண் குறியை ’சக்கரை’ என்பார்கள். எனக்கு ’குறி’ பெயர் தெரிந்து விட்டது. சக்கரை! என் குறியை காட்டி ‘சக்கர’ என்பேன்.
பக்கத்து வீட்டு அத்தை வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அந்த அத்தை குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு மூன்று வயது பையனாக நான் வருவதைக் கண்டு அவர் கலவரப்பட ஏதுமில்லை அல்லவா? அவர் இயல்பாக குளிக்கும்போது நான் curious child என்பதால் இரண்டு தொடைக்கு இடைப்பட்ட பகுதியை உற்றுக் கவனித்து அத்தைக்கு என்னிடம் இருப்பது போல ’சக்கரை’ இல்லை என்பதை உணர்ந்து திருவாய் மலர்ந்திருக்கிறேன். ‘ அத்தக்கி சக்கர நை!’. அந்த பக்கத்து வீட்டு அத்தை புரிந்து கொண்டு செல்லமாக ‘ போடா! படுக்காளிப்பையா!’ என்று சொல்லி விட்டு தலையைத் துவட்டியிருக்கிறார்.
நான் வீட்டிற்கு வந்து சொன்னேன்.
‘ அம்மா! அத்தைக்கு சக்கர நை!’ என் அப்பா ஆஃபீஸ் விட்டு வந்தவுடன் அவரிடமும் ‘அத்தக்கி சக்கர நை’ என்றேன்.
பக்கத்து வீட்டு அத்தையைப் பார்க்கும்போதெல்லாம் வாயில் வலது கை ஆள் காட்டி விரலை விட்டு கன்னத்தின் உள் தொட்டுக்கொண்டு, மறுகை விரல்களை விரித்து, லேசாக ஆடியவாறு ‘அத்தக்கி சக்கர நை!’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். அத்தையின் கணவரிடம் “மாமா, அத்தக்கி சக்கர நை!”…அத்தையின் என் வயதேயான மகனிடம் சொன்னேன் - ”அத்தக்கி சக்கர நை!”… தெருவில் என் வயது குழந்தைகளிடம், என்னை தன் பள்ளிக்கு ஒரு நாள் அழைத்துக்கொண்டு போன, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எதிர்த்த வீட்டு கமலாக்காவிடம் கூட இதை சொன்னேன்.
அக்கம்பக்கத்து பெண்கள் எல்லோரும் எப்போதும் என்னை இதை சொல்லச்சொல்லி கேட்டு விட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.
……………………………………………………………………….

வயதுக்கு வராமலே வாழ் நாள் பூராவும் முதிர்கன்னியாக இருக்கும் சில பெண்கள்…

இந்த அபூர்வமான உடல் ரீதியான பெண் சிக்கல் பற்றி 1975ல் ’தென்னங்கீற்று’ திரைப்படம் கோவி.மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. நடிகை சுஜாதா கதாநாயகியாக நடித்திருந்தார்.
அந்தக் கால நடிகைகள்  இருவர் இப்படி மாதவிலக்கு ஆகாமல் இருந்தவர்களாக சொல்லப்பட்டதுண்டு.
பெண் எழுத்தாளர்களில் ஒருவர் இப்படி ’சடங்கு’ ஆகாமல் வாழ்ந்ததாக ஒரு செவி வழிச் செய்தி.

இது போன்ற விஷயங்கள் பெரிய ரகசியமாக இருக்க முடியாது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கவலை, ஆதங்கம் மூலமாகவே விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்புண்டு. சம்பந்தப்பட்ட பெண்களே கூட வேதனையுடன் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்ல நேரும். இதற்கான மருத்துவ ஆலோசனை காரணமாகவும் இதை மற்றவர்கள் அறியக்கூடும்.

இது ஒரு குறைபாடு. ஊனம் போலவே வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தும் பிரச்னை. வகைப்படுத்த வேண்டிய கடும் நெருக்கடி. கௌரவ பங்கம் இதில் என்ன இருக்கிறது? சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இதனால் இழுக்கு, அவமானம் எதுவும் கிடையாது.

........................................................................................



"சடங்காகாத வயதான பெண்களை இங்கே 'இருசி' என்பார்கள்... “ இருசி காட்டேரி இத்துன்ப சேனையும்... என்ற கவசப்பாட்டில் வருவது என்பார்கள்."
கலாப்ரியா
……………………………………………….

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post.html


Sep 13, 2016

குறுக்கும் நெடுக்குமாய்


ஹேமாமாலினியை திருமணம் செய்வதற்காக தர்மேந்திரா மதம் மாறவேண்டியிருந்தது.அவருடைய மதம் மாற்றப்பெயர் திலாவர்கான்.
இது போல தமிழ் நடிகர் ரவிச்சந்திரனுக்கு கூட ஷீலாவைத் திருமணம் செய்வதற்காக அப்துல்லா என்ற பெயர் தேவைப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு.

ரவிச்சந்திரன் சொந்தப்படம் ’மஞ்சள் குங்குமம்’ தோல்வியடைந்தது.
ஷீலாவே தான் இயக்கினார்.
இதில் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் ஒரு பாட்டு
”என் காதல் கண்மணி, ஏதேதோ நினைத்தாளோ,
சொல்ல நாணம் வந்ததோ,
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா, ராதா, ராதா,
என் வீட்டுத் தோட்டத்துப் புது மல்லிகை
என்னாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே, தேயாத நிலவே
எந்நாளும் மாறாத மனமுண்டு வா
எந்நாளும் கலையாத புது வண்ணமே,
நெஞ்சோடு விளையாடும் கலை அன்னமே
கடல் வானம் யாவும் இடம் மாறினாலும்
மாறாது அன்பென்று உறவாட வா”
சில வருடங்களில் ஷீலாவிடமிருந்து ரவிச்சந்திரன் பிரிந்து விட்டார்.
………………………………………..
இன்றைக்கு இண்டெர்னெட், மொபைல் மூலம் எவ்வளவோ வேண்டாத விஷயங்கள் சிறுவர் சிறுமியர் பார்க்கக் கிடைக்கிறது.

ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னெல்லாம் மஞ்சள் பத்திரிக்கை
’இந்து நேசன்’ பத்திரிக்கை விலைக்கு வாங்கி படிக்கவேண்டிய தேவையில்லாமலே பத்திரிக்கை கடைகளில் தொங்குகின்ற இந்து நேசன் வால் போஸ்டரிலேயே பல ’பலான’ செய்திகள் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று சிறுவர்களுக்குக் கூட இருந்தது. பள்ளிகளில் ஒவ்வொரு இந்து நேசன் இதழ் செய்தியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
அப்படி மனதில் பதிந்த செய்திகள் கால காலமாக அந்தக் கால சிறுவர்கள் நினைவை விட்டு அகலவே செய்யாது.
’கே.ஆர் விஜயாவுடன் ’லூஸ்’ சந்திரபாபு ஜல்சா!’
பெண்ணோடு பெண் உடலுறவு – ’வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் எஸ்.என்.லட்சுமி ஜல்சா!’
கே.பாலச்சந்தருக்கு முதல் படம் நீர்க்குமிழி 1965ல் வந்தது. இந்து நேசன் பத்திரிக்கை 1968,1969லெல்லாம் கே.பாலச்சந்தர் பற்றி ’கர்ப்பதான டைரக்டர்’ என்றே குறிப்பிட்டு எழுதியது. இதற்கு காரணம் அவருடைய பட நாயகிகள் கர்ப்பத்தை கலைக்க அடிக்கடி அபார்ஷன் செய்ய வேண்டியிருந்ததாக இந்து நேசன் எழுதியது. சௌகார் ஜானகி, ஜெயந்தி இருவரையும் தான் பாலச்சந்தருடன் இணைத்து இந்து நேசன் எழுதியது.
இந்து நேசனின் Soft target ஆக அன்று கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இருந்தார். அவருடைய தம்பி கே.எஸ்.சபரிநாதன் பற்றி கூட இப்படி போட்டுத் தாக்கியது.
…………………………………………

மிஷ்கின் ‘பிசாசு’க்கு அப்பாவாக நடிப்பவர் தம்பி ராமையா என்றே நினைக்க வேண்டியிருந்தது. ஆனால் அப்புறம் ராதா ரவி என்று தெரிந்த பிறகும் தம்பி ராமையா நடிப்பு மாதிரி தான் தோன்றியது.
……………………………………..

”ஒரிய எழுத்தாளரான பிரதிபா ரேயுடைய ’யக்ஞசேனி’ மகாபாரதத்தை மாறு பட்ட கோணத்தில் சொல்கிறது. திரௌபதியாகப்பட்டவள் கர்ணன் மீது மட்டுமல்ல, கண்ணன் மீதே காதல் கொண்டதாக இவரது பார்வை கூறுகிறது.” என்று சிற்பி பாலசுப்ரமண்யம் சென்ற வருடம் ‘தி இந்து’வில் எழுதியிருந்ததை படித்த போது கிரா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது “கதைக்கு ஆயுள் கூடக் கூட சுவாரசியம் அதிகமாக வளர ஆரம்பித்து விடும். இப்படித் தான் மகாபாரதம் விரிந்து கொண்டே இருக்கிறது.”
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பிள்ளைகளாக பிள்ளையாரையும்,முருகனையும் தான் தெரியும்.
திருச்சூர் குட்டிச்சாத்தான் கோவில் பற்றி அறிந்த விஷயம். சிவனுக்கும் பார்வதிக்கும் தான் குட்டிச்சாத்தான் பிறந்தானாம்! பெற்றோர் ஏன் குழந்தையை கை விட்டார்கள். எதனால் குட்டிச் சாத்தான் பிறந்ததை மறைக்க வேண்டும்.
திருச்சூர் குட்டிச் சாத்தானுக்கு ’விஷ்ணு மாயா’ என்று பெயர். பெயர்க்காரணம் சுவாரசியமாயிருக்கிறது. குட்டிச்சாத்தான் தன் ஏழாவது வயதில் தன் பெற்றோர் யாரென்று கண்டு பிடிக்க வேண்டி மஹா விஷ்ணு வேடம் பூண்டு சிவன் பார்வதியிருக்கிற கைலாசத்திற்கே வந்து விட்டானாம்! அதனால் தான் பெயர் விஷ்ணு மாயா!
………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/…/contempt-disdainscorn.ht…



Sep 9, 2016

இருவேறு பத்தி


சாலி கிராமம் அருணாச்சலம் ரோட்டில் நம்பிராஜன் அண்ணாச்சி (கவிஞர் விக்ரமாதித்யன்)யை எதேச்சையாக முதன் முறையாக சந்தித்தேன். என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம்- நான் 1989ல் வெளியிட்ட ’தி.ஜானகிராமன் நினைவு மதிப்பீட்டு மடல்’ இன்னமும் விக்ரமாதித்யன் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்பது!

கலாப்ரியா இதை சில மாதங்களுக்கு முன் என்னுடைய அந்த தி.ஜா நினைவு மதிப்பீட்டு மடலை ஃபேஸ்புக்கில் படமெடுத்துப் போட்டு விட்டிருந்தார் என்பதை அவரிடம் சொன்னேன்.

அந்த நேரத்தில் அந்த ஒரு பக்க மடலை கவரில் ஒரு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி ஆயிரம் பேருக்கு அனுப்பி வைத்தேன்.
முன்னதாக 1988ம் வருடமும் இப்படி ஒரு மடல் இன்லெண்ட் லெட்டர் வடிவில் தி.ஜா நினைவைப் போற்றும் விதமாக எல்லோருக்கும் அனுப்பி வைத்திருந்தேன்.
ஆத்மார்த்தமாக, மிகுந்த நெகிழ்ச்சியுடன் தி.ஜாவுக்கு இப்படி ஒரு மரியாதை செய்தேன்.

அப்போது அசோகமித்திரன் ரீயாக்ஸன் - ’அட,ராமச்சந்திரா! என்ன இது? இப்படியெல்லாம்..?!’

கோணங்கி அவனுடைய பாணியில் ட்ராட்ஸ்கி மருதுவிடம் சொன்னானாம் “ மேலேயிருந்து ஜானகிராமன் ’டேய் ராஜநாயஹம்! போதும்டா. இதோட நிறுத்திக்க போதும்’னு சொன்னா தான் இதை இவன் நிறுத்துவான் போலருக்கு” என்று சொன்னவுடன் மருதுவும், உடன் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்களாம். இதை கோணங்கியே என்னிடம் பின்னர் சொன்னான். சொல்லும்போதே, அவனுடைய பாடி லாங்வேஜ் எனக்கு தெரியும் என்பதால் இதை எப்படி சொல்லியிருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். எந்த நேரம் இப்படி சொன்னானோ, நான் அந்த இரண்டாவது மடலுடன் நிறுத்தி விட்டேன்.

திருப்பூர் கிருஷ்ணன் 1989 டிசம்பர் கணையாழியில் “தி.ஜானகிராமனின் பரம ரசிகரான ராஜநாயஹம்” என்று
ஒரு முத்திரை குத்தினார்.
………………………………………………………………………………

A storm in the tea cup.
மதுரை விளையாட்டுப்பருவ நினைவு ஒன்று.

அமெரிக்கன் கல்லூரியில் இருந்து வெளியே வந்து ராஜாஜி அரசு மருத்துவமனை அருகிலுள்ள பஸ் ஸ்டாப் வந்து வீட்டுக்கு பஸ் ஏறுவோம். 

கோரிப்பாளையத்தில் எம்.சி.ஹெச் எனப்படும் மெட்ராஸ் சிட்டி ஹோட்டலில் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிட்டு விட்டு கிளம்பி வந்து நானும் என் சீனியர் ஒருவரும் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம்.

அவர் ஆரப்பாளயம் க்ராஸில் இறங்க வேண்டும். நான் அடுத்த ஆரப்பாளையம்.
7A பஸ் வருகிறது. அதில் தான் ஏறவேண்டும்.

”அண்ணே! இன்னும் கொஞ்ச நேரத்தில் மீனாட்சி காலேஜ் (லேடிஸ் காலேஜ்) விட்டுடுவாங்கெ… ’மசை’ங்க எல்லாம் வந்துடுங்க.. ஜாரிங்க இருந்தா தானே பஸ் நல்லா கலர்ஃபுல்லா இருக்கும்! வெயிட் பண்ணுவோமே. இந்த பஸ்ல ஏறவேண்டாம். சொன்னா கேளுங்க. வேண்டாண்ணே…”

ச்சீ..பறவைகளில்லாத வானம் தானே மசைகள் இல்லாத பஸ்!

சீனியர் மனிதாபிமானமிக்கவர். ஜூனியர் கண் கலங்க சம்மதிக்கவே மாட்டார். அவர் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு சீனியர் என்பதோடு என் கஸின். “சரிப்பா…” என்றார்.

ஜாரி, மசை என்பது பெண்பிள்ளைகளைக் குறிக்கும் மதுரை slang.
அரை மணிக்கும் மேலாக ஆகிவிட்டது.
மீனாட்சி காலேஜிலிருந்து ஒரு ஈ, காக்காய் கூட இன்னும் வரவேவில்லை.

புராண கால ஒழவையார் அல்லது… சங்க கால ஒழவையாரா.. யாரோ ஒருவர் தான் சொன்னார் இந்த ஆத்தி சூடி வரிகள் – ’பொறுத்தார் சைட் அடிப்பார்’
நான் மட்டும் என்றால் இது துயரமில்லை. ஆனால் சீனியர் பொறுமையிழந்து விடக்கூடாது. மீனாட்சி காலேஜ் மசைகள் சீக்கிரம் வரவேண்டும். அப்போது தான் பஸ் என்பது joyful, colorful ஆக இருக்கும்.

பழனி,செந்தூர்,திருத்தணி முருகா! இந்த அற்ப ஆசை கூட ஈடேறக்கூடாதா?
முருகா! சண்முகா! வேலாயுதா! கே.ஆர் விஜயா புருஷா!
(கே.ஆர்.விஜயாவின் புருஷன் பெயர் வேலாயுதம்)

அடுத்த 7A பஸ் வருவது தெரிந்தது. சீனியர் என்னிடம் சொன்னார் “ தொர! ரொம்ப பசிக்குது…” பரிவுடனும்,வாத்சல்யத்துடனும், வாஞ்சையுடனும் கூட தொடர்ந்தார் “ சொன்னா கேளு… வர்ற பஸ்ல எப்படியும் சில மெடிக்கல் காலேஜ் ஜாரிகள் இருக்கும். இருக்குற மசைகள வச்சி இன்னக்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குவமே!”
அடுத்த பஸ்ஸில் வேகமாக தொற்றிய சீனியருடன் நானும் அரை மனதுடன் ஏறினேன்.
……………………………………………………….................

Sep 6, 2016

விதார்த், குரு சோமசுந்தரம், விக்ரமாதித்யன்


2008ல் சென்னையில் வெள்ளம் வந்த போது கழுத்தளவு தண்ணீரில் தலையில் உணவை வைத்துக் கொண்டு ந.முத்துசாமியின் வீட்டிற்குள் சிரமப்பட்டு நுழைந்திருக்கிறார் சோமு.
முத்துசாமி சார் என்னிடம் சொன்ன இந்த விஷயத்தை இங்கே கூத்துப் பட்டறைக்கு மூன்று மாதங்களுக்கு முன் சோமு
ஒரு நாடகம் பார்க்க வந்திருந்த போது நான் அவரிடமே சொன்னேன். அப்போது கூத்துப் பட்டறையின் முன்னாள் மாணவரும் ”ஈட்டி” படத்தில் வில்லன் ரோல் செய்தவருமான பாபு உடனிருந்து அதை ஆமோதித்தார்.
தன் குருவுக்கு அப்படி வெள்ளத்தில் போராடி உணவு கொண்டு வந்த சோமு தான் இன்று ’ஜோக்கர்’ படத்தின் நாயகன்
குரு சோமசுந்தரம்!

போன மாதம் முத்துசாமி சாருடன், நடேஷ் சாருடன் ’ஜோக்கர்’ படம் பார்த்தேன்.

இப்போது கூத்துப்பட்டறையின் இன்னொரு நடிகர் விதார்த்
கதாநாயகனாக நடித்துள்ள ’குற்றமே தண்டனை’ முத்துசாமி சாருடன் பார்க்க வாய்த்தது. இந்தப்படத்திலும் குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையின் இன்னொரு நடிகர் ஜார்ஜும்!

……………………………………………….

தற்செயலாக அருணாச்சலம் சாலையில் நம்பிராஜன் என்ற கவிஞர் விக்ரமாதித்யனை சந்தித்தேன். இவ்வளவு காலத்தில் முதல் முறையாக சந்தித்தேன். ’நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’வில் கலக்கிய விக்ரமாதித்யன்!
…………………………………………….

’சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே’ என்ற பாடல் ’அம்பிகாபதி’ படத்தில் சிவாஜி பாடுவதாக அமைந்தது. 

இந்தப் பாடலை சிவாஜி பாடுகிற காட்சியில் அந்தப் பாடல் வரிகளை ஏ.கருணாநிதி உடனே பதிவெடுப்பதாக இருக்கும். பாடல் வரிகளை கவனித்து உடனே எழுதும்
ஏ. கருணாநிதியின் gesture, expression! ஆஹா! குழந்தைத்தனமான காமெடியன்! பக்கத்தில் டனால் தங்கவேலு!

https://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ

……………………………………..............


எம்.எஸ்.வி பழைய டி.வி நிகழ்ச்சியொன்றில் பாடல்கள் பாடகர்கள் பாட, பல சுவாரசியத் தகவல்கள் சொல்லுவதை சில மாதங்கள் முன் பார்க்க முடிந்தது.
எம்.எஸ்.வி அப்படி உதிர்த்த வார்த்தைகள் : ”கண்ணதாசனும் வாலியும் என் இரண்டு கண்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக்கண்.
பாரதி தாசன் சொல்வார் ‘ என்னுடைய பாட்டிலேயே மெட்டு இருக்குப்பா’
பாரதி தாசன் மெட்டுக்கு பாட்டு எழுதவே மாட்டார்.
எஸ்.பி.பி பாடிய பாடல் ’தேரோட்டம், ஆனந்த செண்பக பூவாசம், காவிரி பொங்கிடும் நீரோட்டம், கண்டதும் நெஞ்சினில் போராட்டம்’
இந்தப்பாடல் சந்தத்துக்கே எழுதப்படவில்லை”
அந்த நிகழ்ச்சியில் இந்தப் பாடலை அனந்து பாடினார்.
மறு நாள் இங்கே அனந்துவை அய்யப்ப நகரில் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டு அந்தப்பாடல் பிரமாதமாக பாடியிருப்பதற்காக பாராட்டினேன்.
அப்புறம் பார்த்தால் இந்த அனந்து கபாலி படத்தில் “மாய நதி” பாடி இப்போது மிகவும் பிரபலம்.

மீண்டும் சமீபத்தில் அவரை அய்யப்ப நகரில் சந்திக்க வாய்த்த போது “என்ன சார்! அன்று நான் உங்களிடம் பேசிய போது ரஜினி படத்தில் பாடியிருப்பது பற்றி சொல்லவேயில்லையே!”
“ தானாய் தெரியட்டும் என்று தான் சொல்லவில்லை.” என்றார் அனந்து.
……………………………………………..

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_5112.html


Sep 4, 2016

சில மின்னல்கள் சிறு சிறு இடியுடன்


’கர் மண் யே வாதிகா ரஸ்தே
மா பலே ஷுக் தாசன’
இதற்கு அர்த்தம் எல்லோரும் அறிந்தது தான்! பிரபலமான வரிகள் - ”கடமையை செய். பலனைப் பற்றி நினைக்காதே.”
Do your duty. Do not look for the consequences.
நான்கைந்து நாட்களாக இதை நினைக்க வேண்டியிருந்தது.


”தெரிந்த சில நட்சத்திரங்களை விட
தெரியாத பல சூரியன்கள் இன்னும்
கொட்டிக் கிடக்கின்றன
யுகங்களின் மறைவில்.”
இந்த எஸ்.வைதீஸ்வரன் கவிதைக்கும் 

“ ஒற்றைக்காலில் நடக்குது சரித்திரம்
பார்க்க வாரும் சகத்தீரே” எனும் ஞானக்கூத்தனின் கவிதைக்கும் ஒரு சங்கிலித்தொடர்பு இருக்கிறது.
ஒற்றைக்காலில் நொண்டி நடக்கும் சரித்திரத்தின் Authenticityயில் நம்பிக்கையில்லாமல் தான் வண்டிச்சோடை நாடகத்தில் ந.முத்துசாமி சொல்கிறார்.

“ நிகழ் காலத்தைப் புரிஞ்சிக்க இறந்த காலத்தைப் புரிஞ்சிக்க வேண்டியது அவசியம்னு தோணுச்சு. நமக்கு எங்கே எழுதப்பட்ட வரலாறு இருக்கு? அதான் நேரே வரலாற்றுக் காலத்துக்குப் போக வேண்டியது அவசியமாச்சு.”
…………………………………………………………………

மாயவரம் முனிசிபல் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் காலத்திலேயே ந.முத்துசாமி தி.மு.கவிலும் ஞானக்கூத்தன் தமிழரசு கழகத்திலும் மிகுந்த பற்று கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு கருத்து வேறுபாடும் அதன் காரணமாக நெருக்கமின்றியும் இருந்திருக்கிறார்கள்.

தமிழரசு கழகம் ம.பொ.சி ஸ்தாபித்த கட்சி.
ம.பொ.சி கட்சியில் இருந்த பிரமுகர்கள் என்றால் கவி.கா.மு.ஷெரிப், ஏ.பி. நாகராஜன், சின்ன அண்ணாமலை ஆகியோர். ஞானக்கூத்தனும் தமிழரசு கழகத்தில் இருந்தவர் தான்.
ஞானக்கூத்தனின் உவமான வரி ஒன்று. ’வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்தது’. இப்படி ம.பொ.சி எனும் வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்துப்போன காலமும் உண்டு.

1970களில் ம.பொ.சிக்கு துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன்களில் டவுசர் தான் மாட்டி விட்டிருப்பார். சின்னப்பையனாகத் தான் மீசை தொங்க துக்ளக் கார்ட்டூன்களில் தோற்றப்படுத்தப்பட்டிருந்தார். ம.பொ.சி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பெரிய ஜால்ராவாக இருந்ததால் இந்த நிலை. கருணாநிதிக்குப் பக்கத்தில் டவுசர் போட்டு கைகளை ஆட்டிக்கொண்டு, அவரை பரவசமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு சந்தோஷமாக ஆடும் சிறுவனாக ம.பொ.சி நிற்பார்.சட்டையில்லாமல் வெறும் உடம்போடு டவுசர் போட்ட சிறுவனாய் சிலம்புச் செல்வர்! 
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் இவருக்கு டவுசர் தான்.
இது பற்றி ஒருவர் சோவிடம் கேட்ட கேள்வி “என்ன இப்படி செய்கிறீர்கள். ம.பொ.சி எவ்வளவு பெரியவர். அவருக்கு இப்படி டவுசர் மாட்டி சின்னப் பையனாக கார்ட்டூனில் சித்தரிப்பது நியாயந்தானா?”

சோ பதில்“ அவருக்கு வேட்டி கட்டி ப்ரமோஷன் கொடுக்க நானுந்தான் தவிக்கிறேன். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் டவுசர் மாட்டி கார்ட்டூன் போடுமளவுக்குத்தான் இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்!”
ஹண்டே சுதந்திரா கட்சியில் இருந்தவர். இவர் ராஜாஜியின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பின் ஹண்டேக்கும் துக்ளக் கார்ட்டூனில் அப்போது டவுசர் தான்!

ஹண்டேயிடம் ஒரு ரோஷம் இருந்தது. எம்.ஜி.ஆர் அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் கையில் கட்சிக்கொடியை பச்சை குத்திக்கொள்ள வற்புறுத்திய போது நாஞ்சில் மனோகரன் கூட பச்சை குத்திக்கொண்டார். ஆனால் ஹண்டே மறுத்து விட்டு வெளியேறினார். ஆனால் 1977ல் பாராளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் மீண்டும் இணைந்து உற்சாகமாக பிரச்சாரம் செய்தார்.
1980ல் பாராளுமன்றத்தில் அதிமுக படுதோல்வியைத் தழுவிய நிலையில் சட்டசபை தேர்தலில் ஹண்டே அண்ணா நகரில் கருணாநிதியை எதிர்த்துப்போட்டியிட்டு கதி கலங்க வைத்தார். கருணாநிதி மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் ஜெயித்தார். ’கான முயலெய்த அம்பினும் யானை பிழைத்த வேல் அரிது’ என்ற நிலையில் ’வென்றிலன் என்ற போதும்’ ஹண்டேக்கு அமைச்சர் பதவி. அமைச்சர் பதவியேற்க கலைவாணர் அரங்கில் ஹண்டே எழுந்த போது மட்டும் மிக பலத்த கரகோஷம். எம்.ஜி.ஆர் வாய் நிறைய சிரிப்புடன் இதை ரசித்தார்.
……………………………………………………………….

Sep 2, 2016

கடல்


 கடல் தன் காதலை பூமிக்கு சொல்வதற்காக திரும்ப திரும்ப தழுவி செல்கிறது . பூமி அதை உதாசீனம் செய்து மறுக்கும்போது பெரும் சத்த இரைச்சலோடு கல் பாறைகள் மீது அறைந்து சொல்கிறது . சமாதானமாகாமல் சூறைக்காற்றாக வீசி தன் மனதை வெளிப்படுத்துகிறது . கடலின் அலைகள் காதலின் கைகள் !'

பாப்லோ நெருடா முக்கிய கதாப்பாத்திரமாக வரும் Il Postino ( The Postman) படத்தில் பாப்லோ நெருடா கடல் பற்றி சொல்வதாக இந்த வசனம் வரும். ஆஹா !
அருமையான படம் . 

யமுனா ராஜேந்திரன் இந்த ' போஸ்ட்மேன்' படம் பற்றி நல்ல கட்டுரை எழுதியுள்ளார்!
நேர் எதிர்மறையாக ஜோசப் கான்ராட் சொல்கிறார் .

சுனாமியை பார்த்து விட்டோம் .அனுபவித்தவர்கள் கான்ராட் சொல்வது சரி என்று தான் சொல்ல முடியும் .மனிதனின் 'நிம்மதியின்மை ' யின் கூட்டுக்களவானி தான் கடல் என்று கான்ராட் அபிப்பராயபடுகிறார் . கடல் மனிதனுடன் சிநேகமாக இருந்ததில்லை .
The sea has never been friendly to man.
At most it has been the accomplice of human restlessness.
தி.ஜானகிராமன் கடலையும் மௌனத்தையும் இணைத்து அலையோசையை விவரிக்கிறார் .

' நிசப்தமாய் இருந்தது . கடலலை மட்டும் அந்த மௌனத்தின் மீது மோதி ஏறி , கலைந்து விழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது '
'குழந்தை ஷேக்ஸ்பியர்' ஆர்தர் ரைம்போ வின் மிக பிரபலமான பிரஞ்சு கவிதை கடலை சூரியனுடன் இணைத்து ' சாசுவதம் ' என்பதை விளக்குகிறது .

It Has been found again! What?
Eternity.
It is the Sea mingled with the Sun.
…………………………………

எஸ்.வைதீஸ்வரன் பூமியின் இடுப்பை சுற்றி குலுங்கி ஆடும் நீலப்பாவாடை கடல்
என்பார்.
கடல்
பூமியின் இடுப்பை சுற்றிக்
குலுங்கி ஆடும்
நீலப்பாவாடைக்குள்
ஓயாமல் விளையாடும் மீன்களுக்கு
ஏன் சலிக்கப் போகிறது?
………………………………………………………………
மீன் கூடையில்
கடல் வாசனை வருகிறது
கடலுக்கு சென்றேன்
அது மீன் வாசனை என்றறிய…..
……
அலைகள் சமுத்திரமல்ல
அலைகளின்றி
சமுத்திரமில்லை.

Sep 1, 2016

தீப்பொறி ஆறுமுகம்


மருத்துவ மனையில் வயிறு ஊதிப்போய் இருக்கும் தீப்பொறி ஆறுமுகம் பேட்டி இரண்டு ஜூனியர் விகடன் இதழ்களில் பார்க்கக் கிடைத்தது.

தீப்பொறி ஆறுமுகம் இரண்டு விஷயங்களை மறைக்கிறார். காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பேச்சாளராக தீப்பொறி இருந்த விஷயம். மற்றொன்று 15 வருடங்களுக்கு முன் அதிமுகவுக்கு தாவியதைப் பற்றி.. காலம் காலமாக அவர் தி.மு.கவிலேயே இருந்து கொண்டு இருப்பது போல இந்த பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

ஸ்தாபன காங்கிரஸில் தீப்பொறி பேச்சாளராக இருந்த போது “பெருந்தலைவர் எப்போதும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் “டேய்…பேச்ச கொறை. அடாவடியா பேசாதேன்னு திட்டறாரு”ன்னு பேசியதை அறிந்தவர்கள் இன்றும் உண்டு.

அவர் அதிமுகவுக்கு தாவுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவு திருச்சி உறையூரில் “என் தலைவன் கலைஞர்” என்று உரக்கக்கூறும்போதெல்லாம் தன் தலையை இரண்டு கைகளால் அழுந்தப்பிடித்தவாறு கூப்பாடு போடுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படி அவர் தலையைப் பிடிக்கும்போது இந்த வார்த்தைகளைச் சொல்வது ஏதோ மலையைப் புரட்டுகிற விஷயமாக்கும் என்ற ஒரு தோரணையும் பிரயாசையும் தெரியச் செய்வார்.

ஜூவி முதல் பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்ப்பார் என்கிறார்.
அடுத்த பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்த்து பொருளுதவி செய்த விஷயம் தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த காலத்தில் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் போக மற்ற பொழுது போக்குகளில் தீப்பொறி ஆறுமுகம் பேச்சும் முக்கிய இடம் பெற்று இருந்தது.

தீப்பொறியார் ஒரு ஊரில் பேசுகிறார் என்றால் கடையை சற்று முன்னதாகவே அடைத்து விட்டு வியாபாரிகள் மீட்டிங்கிற்கு அவசர,அவசரமாக ஓடுவார்கள். இரவு ஒன்பது மணிக்கே ஊரில் பரபரப்பு தெரியும். அன்று சினிமா தியேட்டர்களில் செகண்ட் ஷோவுக்கு கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
எல்லா ஊர்களிலும் தீப்பொறி பேச்சுக்கு நல்ல கூட்டம் கூடும்.

எம்.ஜி.ஆரை கிழித்த கிழி….

1977ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆகியிருந்த போது…
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்து விட்டுப்போனார். ஒரு வேளை சென்னைக்கு கார்ட்டர் வர நேர்ந்திருந்தால்… என்ன நடந்திருக்கும்? என்று தீப்பொறி காட்சிப்படுத்திய விதம்!

கார்ட்டர், இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து இறங்குகிறார்கள். எம்.ஜி.ஆர் வரவேற்கிறார். மொரார்ஜி தமிழக முதலமைச்சரை கார்ட்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்குகிறார்.

கார்ட்டர்,தேசாய்,எம்.ஜி.ஆர் மூவரும் ஒரே காரில். கார் வெளியே வருகிறது. அங்கே எதிரே எம்.ஜி.ஆர் நடித்த ’மீனவ நண்பன்’ கட் அவுட். லதாவின் தொடையில் தன் தலையை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்!

கார்ட்டர் அந்த கட் அவுட்டை பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறார். கட் அவுட்டைப்பார்க்கிறார். எம்.ஜி.ஆரை உற்றுப்பார்க்கிறார். மீண்டும் கட் அவுட் பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பதற்றத்துடன் பார்க்கிறார். எம்.ஜி.ஆர் புன்னகைக்கிறார். மொரார்ஜி நெளிகிறார். பிரதமருக்கு தர்மசங்கட நிலை. கார்ட்டர் அதிர்ச்சியுடன் மொரார்ஜியிடம் கட் அவுட்டை காட்டி காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரையும் விரலால் சுட்டி கேட்கிறார்: ’என்ன இது?! அவன மாதிரியே இவன் இருக்கிறான்! இவன மாதிரியே அவன் இருக்கிறான். அவன மாதிரியே இவன்! இவன மாதிரியே அவன்!’
பெருமையான புன்னகையுடன் காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு பாரதப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்கிறார் : ’இவன் தான் அவன்…. அவன் தான் இவன்….’

கார்ட்டர் காறித்துப்பியிருக்க மாட்டானா? நல்ல வேளை அவன் தமிழ் நாட்டுக்கு வரல!

இதை வார்த்தைகளால் எப்படி எழுதினாலும் ஆறுமுகம் இதைச் சொல்லுவதும், செய்யும் கொணஷ்டைகளும் நேரில் பார்த்தால் தான் புரியும். எழுதியெல்லாம் விளக்க முடியவே முடியாது.


மேட்டூர் டேமில் தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போய் விட்டதை தீப்பொறி விளக்குவது – “ டேம்ல தண்ணீ கொறஞ்சி..கொறஞ்சி.. 100 அடி… அதுவும் கொறைஞ்சி 80 அடி.. அப்புறம் 50 அடி.. 30 அடி உயரம் தான் தண்ணி… அதுவும் வத்தி 10 அடி..5 அடின்னு ஆகி கடைசியில டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. டேய்.. டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. புரிஞ்சா புரிஞ்சுக்க..புரிஞ்சா புரிஞ்சிக்க… புரியலன்னா பக்கத்தில ஒக்கார்ந்திருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..”

’எம்.ஆர்.ராதா சுத்தமா வேல செய்யத்தெரியாதவன்…அரை குறையா…….அவன் மட்டும் சரியா இவன் தொண்டயில போட்டிருந்தான்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்! தமிழ் நாடு தப்பிச்சிருக்கும்.’

(ஒரு விஷயம். எம்.ஆர் ராதா சிறையில் இருந்த போது ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு ரத்தக்கண்ணீர் நாடகம் போடுவார். தி.மு.கவில் உறுப்பினராக இருந்த வாசு ரத்தக்கண்ணீர் வசனம்பேசும்போதே சொல்வது: ’சுடத்தெரியாதவனெல்லாம் சுட்டுப்புட்டு உள்ள போய் ஒக்காந்துகிட்டான்!’)

அ.தி.மு.கவிலும் மதுரை லோக்கல் பேச்சாளன் தீப்பொறிக்கு மதுரையிலேயே கொடுத்த பதிலடி: “ டேய்! தீப்பொறி.. பாவம்டா நீ… நீ பாட்டுக்கு மீட்டிங்,மீட்டிங்னு ஊர் ஊரா போயிடுற..ஒன் பொண்டாட்டிய பக்கத்து வீட்டு கோனான் டொல்த்திக்கிட்டு இருக்கான் அது தெரியுமாடா உனக்கு?!”


இன்று விக்கிரகங்களாக ஆகி விட்ட இளையராஜா, ரஜினி காந்த் பற்றியெல்லாம் மிக ஏளனமான தொனியில் தான் தீப்பொறி பேசுவார்.
“ ’ஏய்..ஆத்தா.. ஆத்தோரமா வாறியா…’ டேய் ஆத்தாளயே ஆத்தாரமா வான்னு கூப்புடுறியேடா …….உங்கோத்தாளயெ கூப்பிடிறியெ…நீ விளங்குவியா..”

ரஜினிய ‘இந்த மெண்டல் பய பேச்ச, நடிப்ப படத்துல எப்படிடா ரசிக்கிறீங்க..’
’எனக்கு ஒரு ஆச.. இந்த மெண்டல் பய ரஜினிக்கும், கொன்னவாயன் நெடுமாறனுக்கும் (பழ.நெடுமாறன்) பேச்சி போட்டி வைக்கணும்..ரெண்டு பயல்ல எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்.’

இடது கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி கால் ஊனமுற்றவர். அதிமுக முசிறிபுத்தன் வீல் சேரில் தான் இருப்பவர்.
“ எனக்கு ஒரு ஆச… இந்த பி.ராமமூர்த்திக்கும் முசிறிபுத்தனுக்கும் ஓட்டப் பந்தயம் வெக்கணும்.. எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்”

முசிறி புத்தன் கொந்தளித்து அதிமுக மேடையில் “ தீப்பொறி ஆறுமுகம் என் வீட்டுக்கு வந்தப்ப வெள்ளி டம்ளர்ல பால் கொடுத்தோம்…குடிச்சான்.. டம்ளரை காணல… திருடிட்டுப்போயிட்டான். திருட்டுப்பய..”
இதற்கு தீப்பொறியின் பதில் “ நான் முசிறிபுத்தன் வீட்டுக்குபோனது நிஜம்.. பால் குடிச்சதும் நிஜம்…பால் குடிச்சேன்…பால் குடிச்சேன்.. ஆனா டம்ளர்ல இல்ல… டம்ளர்ல இல்ல..டம்ளர்ல இல்ல! புரிஞ்சுக்க..கூட்டத்தில இருக்கிறவன் புரிஞ்சா புரிஞ்சிக்க… புரிஞ்சா புரிஞ்சிக்க… இல்லன்னா பக்கத்தில இருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சி போயிடுவன்டா”


சினிமாக்காரர்கள் யாரையும் பற்றி நையாண்டி தான்.
விசு படங்கள் “மணல் கயிறு”, ”குடும்பம் ஒரு கதம்பம்” வந்திருந்த நேரம்.
”இப்ப ஒர்த்தன் வந்திருக்கான்யா..! விசு… நல்ல வேளை! அவன் பேரு ’குசு’ இல்ல..!”

மக்வானா மத்திய அமைச்சராயிருந்தவர். அவர் பெயரை தீப்பொறி சொல்லும்போது ”மக்வானா, மக்குவானா, நக்குவானா, நக்குவானா”

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று ஒரு கட்சியை குமரி அனந்தன் நடத்திக்கொண்டிருந்தார். கா.கா.தே.கா!
குமரி அனந்தன் கட்சிப்பெயரை பழைய சினிமா பாட்டாகத்தான் ஆறுமுகம் பாடுவார்! _ “ஈனா, மீனா, டீகா, காகா காகா தேகா, ஈனா, மீனா, டீகா! காகா காகா தேகா! (இந்த பொன்ன கண்டதும் போத உண்டாகுதே!)”

”இந்த கம்யூனிஸ்ட்காரன் இருக்கானே.. விஞ்ஞானி தகரத்தை என்னக்கி கண்டுபிடிச்சானோ அன்னக்கே…அன்னக்கே..அன்னக்கே தகரத்தை இப்படி நெளிச்சி..அப்படி நெளிச்சி கம்யூனிஸ்ட்காரன் உண்டியல கண்டு பிடிச்சுட்டான்யா.. உடனே உண்டியல ஆட்டி ஆட்டி குலுக்கி..” உண்டியல் குலுக்குவதை மேடையில் தீப்பொறி நடித்தே காட்டும்போது கம்யூனிஸ்ட்களே அடக்க முடியாமல் சிரிக்க வேண்டியிருக்கும்.

சட்ட சபையில் உறுப்பினராய் இருந்தார் பழ நெடுமாறன்.
கேரளாவுக்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதை பேசிய
நெடுமாறன் பற்றி ” சட்ட சபையில இவன்.. இந்த கொன்னவாயன் பேசறான் – ’கே…கே..ஏ…ரளாவுக்கு எ…எ..எ..எருமை மாட்ட… க..க..கடத்துறாங்கே..’ எரும மாட்டுப்பய… சட்டசபையில இதயாடா பேசுறது?”

மதுரை முன்னாள் மேயர் மதுரை எஸ்.முத்து பற்றி “ நான் அவன மதிக்கிறேன். முத்துக்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. தண்ணியடிக்க மாட்டான்…சிகரெட் கிடையாது.. சூதாட மாட்டான்.. பொம்பள விஷயத்துலயும் சுத்தமானவன். ஆனா ஒன்னு.. பக்கத்தில ஒர்த்தன் பாக்கெட்ல ஒரு பத்து ரூபா வச்சிருந்தான்னா எப்படியாவது அத அடிச்சிடுவான்.பத்து ரூபாய லவட்டாம விட மாட்டான். விடவே மாட்டான்.”

"ராஜீவ் காந்திய நல்லா கவனிச்சுப்பாருங்க..உத்துப்பாருங்க… சோன் பப்டி விக்கிறவன் மாதிரியே இல்ல!?"

ஜெயலலிதா ஓவர் கோட் போட்டிருந்த சமயத்தில் “ இடுப்புல தான பாவாட. ஆனா கழுத்துல பாவாடைய கட்டிக்கிற ஒரே பொம்பள ஜெயலலிதா தான்.”

இன்று கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளை எப்போதும் பலரும் பேசி, நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் இல்லையா? அது போல அன்று நாகேஷ், சுருளிராஜன் ஜோக்குகளை உரையாடல்களில் நினைவு கூர்ந்து ரசிப்பது போல தீப்பொறி ஜோக்குகளும் திரும்பத்திரும்ப பேசி ரசிக்கப்பட்ட நிலை. Indecent, improper, bawdy pleasantries!
தீப்பொறி ஆறுமுகத்துக்கு நடிகர்களுக்கு ஈடான நட்சத்திர அந்தஸ்து இருந்தது.
………………………………………..