Share

Sep 1, 2016

தீப்பொறி ஆறுமுகம்


மருத்துவ மனையில் வயிறு ஊதிப்போய் இருக்கும் தீப்பொறி ஆறுமுகம் பேட்டி இரண்டு ஜூனியர் விகடன் இதழ்களில் பார்க்கக் கிடைத்தது.

தீப்பொறி ஆறுமுகம் இரண்டு விஷயங்களை மறைக்கிறார். காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பேச்சாளராக தீப்பொறி இருந்த விஷயம். மற்றொன்று 15 வருடங்களுக்கு முன் அதிமுகவுக்கு தாவியதைப் பற்றி.. காலம் காலமாக அவர் தி.மு.கவிலேயே இருந்து கொண்டு இருப்பது போல இந்த பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

ஸ்தாபன காங்கிரஸில் தீப்பொறி பேச்சாளராக இருந்த போது “பெருந்தலைவர் எப்போதும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் “டேய்…பேச்ச கொறை. அடாவடியா பேசாதேன்னு திட்டறாரு”ன்னு பேசியதை அறிந்தவர்கள் இன்றும் உண்டு.

அவர் அதிமுகவுக்கு தாவுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவு திருச்சி உறையூரில் “என் தலைவன் கலைஞர்” என்று உரக்கக்கூறும்போதெல்லாம் தன் தலையை இரண்டு கைகளால் அழுந்தப்பிடித்தவாறு கூப்பாடு போடுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படி அவர் தலையைப் பிடிக்கும்போது இந்த வார்த்தைகளைச் சொல்வது ஏதோ மலையைப் புரட்டுகிற விஷயமாக்கும் என்ற ஒரு தோரணையும் பிரயாசையும் தெரியச் செய்வார்.

ஜூவி முதல் பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்ப்பார் என்கிறார்.
அடுத்த பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்த்து பொருளுதவி செய்த விஷயம் தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த காலத்தில் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் போக மற்ற பொழுது போக்குகளில் தீப்பொறி ஆறுமுகம் பேச்சும் முக்கிய இடம் பெற்று இருந்தது.

தீப்பொறியார் ஒரு ஊரில் பேசுகிறார் என்றால் கடையை சற்று முன்னதாகவே அடைத்து விட்டு வியாபாரிகள் மீட்டிங்கிற்கு அவசர,அவசரமாக ஓடுவார்கள். இரவு ஒன்பது மணிக்கே ஊரில் பரபரப்பு தெரியும். அன்று சினிமா தியேட்டர்களில் செகண்ட் ஷோவுக்கு கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
எல்லா ஊர்களிலும் தீப்பொறி பேச்சுக்கு நல்ல கூட்டம் கூடும்.

எம்.ஜி.ஆரை கிழித்த கிழி….

1977ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆகியிருந்த போது…
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்து விட்டுப்போனார். ஒரு வேளை சென்னைக்கு கார்ட்டர் வர நேர்ந்திருந்தால்… என்ன நடந்திருக்கும்? என்று தீப்பொறி காட்சிப்படுத்திய விதம்!

கார்ட்டர், இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து இறங்குகிறார்கள். எம்.ஜி.ஆர் வரவேற்கிறார். மொரார்ஜி தமிழக முதலமைச்சரை கார்ட்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்குகிறார்.

கார்ட்டர்,தேசாய்,எம்.ஜி.ஆர் மூவரும் ஒரே காரில். கார் வெளியே வருகிறது. அங்கே எதிரே எம்.ஜி.ஆர் நடித்த ’மீனவ நண்பன்’ கட் அவுட். லதாவின் தொடையில் தன் தலையை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்!

கார்ட்டர் அந்த கட் அவுட்டை பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறார். கட் அவுட்டைப்பார்க்கிறார். எம்.ஜி.ஆரை உற்றுப்பார்க்கிறார். மீண்டும் கட் அவுட் பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பதற்றத்துடன் பார்க்கிறார். எம்.ஜி.ஆர் புன்னகைக்கிறார். மொரார்ஜி நெளிகிறார். பிரதமருக்கு தர்மசங்கட நிலை. கார்ட்டர் அதிர்ச்சியுடன் மொரார்ஜியிடம் கட் அவுட்டை காட்டி காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரையும் விரலால் சுட்டி கேட்கிறார்: ’என்ன இது?! அவன மாதிரியே இவன் இருக்கிறான்! இவன மாதிரியே அவன் இருக்கிறான். அவன மாதிரியே இவன்! இவன மாதிரியே அவன்!’
பெருமையான புன்னகையுடன் காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு பாரதப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்கிறார் : ’இவன் தான் அவன்…. அவன் தான் இவன்….’

கார்ட்டர் காறித்துப்பியிருக்க மாட்டானா? நல்ல வேளை அவன் தமிழ் நாட்டுக்கு வரல!

இதை வார்த்தைகளால் எப்படி எழுதினாலும் ஆறுமுகம் இதைச் சொல்லுவதும், செய்யும் கொணஷ்டைகளும் நேரில் பார்த்தால் தான் புரியும். எழுதியெல்லாம் விளக்க முடியவே முடியாது.


மேட்டூர் டேமில் தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போய் விட்டதை தீப்பொறி விளக்குவது – “ டேம்ல தண்ணீ கொறஞ்சி..கொறஞ்சி.. 100 அடி… அதுவும் கொறைஞ்சி 80 அடி.. அப்புறம் 50 அடி.. 30 அடி உயரம் தான் தண்ணி… அதுவும் வத்தி 10 அடி..5 அடின்னு ஆகி கடைசியில டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. டேய்.. டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. புரிஞ்சா புரிஞ்சுக்க..புரிஞ்சா புரிஞ்சிக்க… புரியலன்னா பக்கத்தில ஒக்கார்ந்திருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..”

’எம்.ஆர்.ராதா சுத்தமா வேல செய்யத்தெரியாதவன்…அரை குறையா…….அவன் மட்டும் சரியா இவன் தொண்டயில போட்டிருந்தான்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்! தமிழ் நாடு தப்பிச்சிருக்கும்.’

(ஒரு விஷயம். எம்.ஆர் ராதா சிறையில் இருந்த போது ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு ரத்தக்கண்ணீர் நாடகம் போடுவார். தி.மு.கவில் உறுப்பினராக இருந்த வாசு ரத்தக்கண்ணீர் வசனம்பேசும்போதே சொல்வது: ’சுடத்தெரியாதவனெல்லாம் சுட்டுப்புட்டு உள்ள போய் ஒக்காந்துகிட்டான்!’)

அ.தி.மு.கவிலும் மதுரை லோக்கல் பேச்சாளன் தீப்பொறிக்கு மதுரையிலேயே கொடுத்த பதிலடி: “ டேய்! தீப்பொறி.. பாவம்டா நீ… நீ பாட்டுக்கு மீட்டிங்,மீட்டிங்னு ஊர் ஊரா போயிடுற..ஒன் பொண்டாட்டிய பக்கத்து வீட்டு கோனான் டொல்த்திக்கிட்டு இருக்கான் அது தெரியுமாடா உனக்கு?!”


இன்று விக்கிரகங்களாக ஆகி விட்ட இளையராஜா, ரஜினி காந்த் பற்றியெல்லாம் மிக ஏளனமான தொனியில் தான் தீப்பொறி பேசுவார்.
“ ’ஏய்..ஆத்தா.. ஆத்தோரமா வாறியா…’ டேய் ஆத்தாளயே ஆத்தாரமா வான்னு கூப்புடுறியேடா …….உங்கோத்தாளயெ கூப்பிடிறியெ…நீ விளங்குவியா..”

ரஜினிய ‘இந்த மெண்டல் பய பேச்ச, நடிப்ப படத்துல எப்படிடா ரசிக்கிறீங்க..’
’எனக்கு ஒரு ஆச.. இந்த மெண்டல் பய ரஜினிக்கும், கொன்னவாயன் நெடுமாறனுக்கும் (பழ.நெடுமாறன்) பேச்சி போட்டி வைக்கணும்..ரெண்டு பயல்ல எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்.’

இடது கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி கால் ஊனமுற்றவர். அதிமுக முசிறிபுத்தன் வீல் சேரில் தான் இருப்பவர்.
“ எனக்கு ஒரு ஆச… இந்த பி.ராமமூர்த்திக்கும் முசிறிபுத்தனுக்கும் ஓட்டப் பந்தயம் வெக்கணும்.. எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்”

முசிறி புத்தன் கொந்தளித்து அதிமுக மேடையில் “ தீப்பொறி ஆறுமுகம் என் வீட்டுக்கு வந்தப்ப வெள்ளி டம்ளர்ல பால் கொடுத்தோம்…குடிச்சான்.. டம்ளரை காணல… திருடிட்டுப்போயிட்டான். திருட்டுப்பய..”
இதற்கு தீப்பொறியின் பதில் “ நான் முசிறிபுத்தன் வீட்டுக்குபோனது நிஜம்.. பால் குடிச்சதும் நிஜம்…பால் குடிச்சேன்…பால் குடிச்சேன்.. ஆனா டம்ளர்ல இல்ல… டம்ளர்ல இல்ல..டம்ளர்ல இல்ல! புரிஞ்சுக்க..கூட்டத்தில இருக்கிறவன் புரிஞ்சா புரிஞ்சிக்க… புரிஞ்சா புரிஞ்சிக்க… இல்லன்னா பக்கத்தில இருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சி போயிடுவன்டா”


சினிமாக்காரர்கள் யாரையும் பற்றி நையாண்டி தான்.
விசு படங்கள் “மணல் கயிறு”, ”குடும்பம் ஒரு கதம்பம்” வந்திருந்த நேரம்.
”இப்ப ஒர்த்தன் வந்திருக்கான்யா..! விசு… நல்ல வேளை! அவன் பேரு ’குசு’ இல்ல..!”

மக்வானா மத்திய அமைச்சராயிருந்தவர். அவர் பெயரை தீப்பொறி சொல்லும்போது ”மக்வானா, மக்குவானா, நக்குவானா, நக்குவானா”

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று ஒரு கட்சியை குமரி அனந்தன் நடத்திக்கொண்டிருந்தார். கா.கா.தே.கா!
குமரி அனந்தன் கட்சிப்பெயரை பழைய சினிமா பாட்டாகத்தான் ஆறுமுகம் பாடுவார்! _ “ஈனா, மீனா, டீகா, காகா காகா தேகா, ஈனா, மீனா, டீகா! காகா காகா தேகா! (இந்த பொன்ன கண்டதும் போத உண்டாகுதே!)”

”இந்த கம்யூனிஸ்ட்காரன் இருக்கானே.. விஞ்ஞானி தகரத்தை என்னக்கி கண்டுபிடிச்சானோ அன்னக்கே…அன்னக்கே..அன்னக்கே தகரத்தை இப்படி நெளிச்சி..அப்படி நெளிச்சி கம்யூனிஸ்ட்காரன் உண்டியல கண்டு பிடிச்சுட்டான்யா.. உடனே உண்டியல ஆட்டி ஆட்டி குலுக்கி..” உண்டியல் குலுக்குவதை மேடையில் தீப்பொறி நடித்தே காட்டும்போது கம்யூனிஸ்ட்களே அடக்க முடியாமல் சிரிக்க வேண்டியிருக்கும்.

சட்ட சபையில் உறுப்பினராய் இருந்தார் பழ நெடுமாறன்.
கேரளாவுக்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதை பேசிய
நெடுமாறன் பற்றி ” சட்ட சபையில இவன்.. இந்த கொன்னவாயன் பேசறான் – ’கே…கே..ஏ…ரளாவுக்கு எ…எ..எ..எருமை மாட்ட… க..க..கடத்துறாங்கே..’ எரும மாட்டுப்பய… சட்டசபையில இதயாடா பேசுறது?”

மதுரை முன்னாள் மேயர் மதுரை எஸ்.முத்து பற்றி “ நான் அவன மதிக்கிறேன். முத்துக்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. தண்ணியடிக்க மாட்டான்…சிகரெட் கிடையாது.. சூதாட மாட்டான்.. பொம்பள விஷயத்துலயும் சுத்தமானவன். ஆனா ஒன்னு.. பக்கத்தில ஒர்த்தன் பாக்கெட்ல ஒரு பத்து ரூபா வச்சிருந்தான்னா எப்படியாவது அத அடிச்சிடுவான்.பத்து ரூபாய லவட்டாம விட மாட்டான். விடவே மாட்டான்.”

"ராஜீவ் காந்திய நல்லா கவனிச்சுப்பாருங்க..உத்துப்பாருங்க… சோன் பப்டி விக்கிறவன் மாதிரியே இல்ல!?"

ஜெயலலிதா ஓவர் கோட் போட்டிருந்த சமயத்தில் “ இடுப்புல தான பாவாட. ஆனா கழுத்துல பாவாடைய கட்டிக்கிற ஒரே பொம்பள ஜெயலலிதா தான்.”

இன்று கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளை எப்போதும் பலரும் பேசி, நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் இல்லையா? அது போல அன்று நாகேஷ், சுருளிராஜன் ஜோக்குகளை உரையாடல்களில் நினைவு கூர்ந்து ரசிப்பது போல தீப்பொறி ஜோக்குகளும் திரும்பத்திரும்ப பேசி ரசிக்கப்பட்ட நிலை. Indecent, improper, bawdy pleasantries!
தீப்பொறி ஆறுமுகத்துக்கு நடிகர்களுக்கு ஈடான நட்சத்திர அந்தஸ்து இருந்தது.
………………………………………..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.