Share

Sep 6, 2016

விதார்த், குரு சோமசுந்தரம், விக்ரமாதித்யன்


2008ல் சென்னையில் வெள்ளம் வந்த போது கழுத்தளவு தண்ணீரில் தலையில் உணவை வைத்துக் கொண்டு ந.முத்துசாமியின் வீட்டிற்குள் சிரமப்பட்டு நுழைந்திருக்கிறார் சோமு.
முத்துசாமி சார் என்னிடம் சொன்ன இந்த விஷயத்தை இங்கே கூத்துப் பட்டறைக்கு மூன்று மாதங்களுக்கு முன் சோமு
ஒரு நாடகம் பார்க்க வந்திருந்த போது நான் அவரிடமே சொன்னேன். அப்போது கூத்துப் பட்டறையின் முன்னாள் மாணவரும் ”ஈட்டி” படத்தில் வில்லன் ரோல் செய்தவருமான பாபு உடனிருந்து அதை ஆமோதித்தார்.
தன் குருவுக்கு அப்படி வெள்ளத்தில் போராடி உணவு கொண்டு வந்த சோமு தான் இன்று ’ஜோக்கர்’ படத்தின் நாயகன்
குரு சோமசுந்தரம்!

போன மாதம் முத்துசாமி சாருடன், நடேஷ் சாருடன் ’ஜோக்கர்’ படம் பார்த்தேன்.

இப்போது கூத்துப்பட்டறையின் இன்னொரு நடிகர் விதார்த்
கதாநாயகனாக நடித்துள்ள ’குற்றமே தண்டனை’ முத்துசாமி சாருடன் பார்க்க வாய்த்தது. இந்தப்படத்திலும் குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையின் இன்னொரு நடிகர் ஜார்ஜும்!

……………………………………………….

தற்செயலாக அருணாச்சலம் சாலையில் நம்பிராஜன் என்ற கவிஞர் விக்ரமாதித்யனை சந்தித்தேன். இவ்வளவு காலத்தில் முதல் முறையாக சந்தித்தேன். ’நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’வில் கலக்கிய விக்ரமாதித்யன்!
…………………………………………….

’சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே’ என்ற பாடல் ’அம்பிகாபதி’ படத்தில் சிவாஜி பாடுவதாக அமைந்தது. 

இந்தப் பாடலை சிவாஜி பாடுகிற காட்சியில் அந்தப் பாடல் வரிகளை ஏ.கருணாநிதி உடனே பதிவெடுப்பதாக இருக்கும். பாடல் வரிகளை கவனித்து உடனே எழுதும்
ஏ. கருணாநிதியின் gesture, expression! ஆஹா! குழந்தைத்தனமான காமெடியன்! பக்கத்தில் டனால் தங்கவேலு!

https://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ

……………………………………..............


எம்.எஸ்.வி பழைய டி.வி நிகழ்ச்சியொன்றில் பாடல்கள் பாடகர்கள் பாட, பல சுவாரசியத் தகவல்கள் சொல்லுவதை சில மாதங்கள் முன் பார்க்க முடிந்தது.
எம்.எஸ்.வி அப்படி உதிர்த்த வார்த்தைகள் : ”கண்ணதாசனும் வாலியும் என் இரண்டு கண்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக்கண்.
பாரதி தாசன் சொல்வார் ‘ என்னுடைய பாட்டிலேயே மெட்டு இருக்குப்பா’
பாரதி தாசன் மெட்டுக்கு பாட்டு எழுதவே மாட்டார்.
எஸ்.பி.பி பாடிய பாடல் ’தேரோட்டம், ஆனந்த செண்பக பூவாசம், காவிரி பொங்கிடும் நீரோட்டம், கண்டதும் நெஞ்சினில் போராட்டம்’
இந்தப்பாடல் சந்தத்துக்கே எழுதப்படவில்லை”
அந்த நிகழ்ச்சியில் இந்தப் பாடலை அனந்து பாடினார்.
மறு நாள் இங்கே அனந்துவை அய்யப்ப நகரில் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டு அந்தப்பாடல் பிரமாதமாக பாடியிருப்பதற்காக பாராட்டினேன்.
அப்புறம் பார்த்தால் இந்த அனந்து கபாலி படத்தில் “மாய நதி” பாடி இப்போது மிகவும் பிரபலம்.

மீண்டும் சமீபத்தில் அவரை அய்யப்ப நகரில் சந்திக்க வாய்த்த போது “என்ன சார்! அன்று நான் உங்களிடம் பேசிய போது ரஜினி படத்தில் பாடியிருப்பது பற்றி சொல்லவேயில்லையே!”
“ தானாய் தெரியட்டும் என்று தான் சொல்லவில்லை.” என்றார் அனந்து.
……………………………………………..

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_5112.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.