Share

Sep 13, 2016

குறுக்கும் நெடுக்குமாய்


ஹேமாமாலினியை திருமணம் செய்வதற்காக தர்மேந்திரா மதம் மாறவேண்டியிருந்தது.அவருடைய மதம் மாற்றப்பெயர் திலாவர்கான்.
இது போல தமிழ் நடிகர் ரவிச்சந்திரனுக்கு கூட ஷீலாவைத் திருமணம் செய்வதற்காக அப்துல்லா என்ற பெயர் தேவைப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு.

ரவிச்சந்திரன் சொந்தப்படம் ’மஞ்சள் குங்குமம்’ தோல்வியடைந்தது.
ஷீலாவே தான் இயக்கினார்.
இதில் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் ஒரு பாட்டு
”என் காதல் கண்மணி, ஏதேதோ நினைத்தாளோ,
சொல்ல நாணம் வந்ததோ,
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா, ராதா, ராதா,
என் வீட்டுத் தோட்டத்துப் புது மல்லிகை
என்னாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே, தேயாத நிலவே
எந்நாளும் மாறாத மனமுண்டு வா
எந்நாளும் கலையாத புது வண்ணமே,
நெஞ்சோடு விளையாடும் கலை அன்னமே
கடல் வானம் யாவும் இடம் மாறினாலும்
மாறாது அன்பென்று உறவாட வா”
சில வருடங்களில் ஷீலாவிடமிருந்து ரவிச்சந்திரன் பிரிந்து விட்டார்.
………………………………………..
இன்றைக்கு இண்டெர்னெட், மொபைல் மூலம் எவ்வளவோ வேண்டாத விஷயங்கள் சிறுவர் சிறுமியர் பார்க்கக் கிடைக்கிறது.

ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னெல்லாம் மஞ்சள் பத்திரிக்கை
’இந்து நேசன்’ பத்திரிக்கை விலைக்கு வாங்கி படிக்கவேண்டிய தேவையில்லாமலே பத்திரிக்கை கடைகளில் தொங்குகின்ற இந்து நேசன் வால் போஸ்டரிலேயே பல ’பலான’ செய்திகள் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று சிறுவர்களுக்குக் கூட இருந்தது. பள்ளிகளில் ஒவ்வொரு இந்து நேசன் இதழ் செய்தியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
அப்படி மனதில் பதிந்த செய்திகள் கால காலமாக அந்தக் கால சிறுவர்கள் நினைவை விட்டு அகலவே செய்யாது.
’கே.ஆர் விஜயாவுடன் ’லூஸ்’ சந்திரபாபு ஜல்சா!’
பெண்ணோடு பெண் உடலுறவு – ’வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் எஸ்.என்.லட்சுமி ஜல்சா!’
கே.பாலச்சந்தருக்கு முதல் படம் நீர்க்குமிழி 1965ல் வந்தது. இந்து நேசன் பத்திரிக்கை 1968,1969லெல்லாம் கே.பாலச்சந்தர் பற்றி ’கர்ப்பதான டைரக்டர்’ என்றே குறிப்பிட்டு எழுதியது. இதற்கு காரணம் அவருடைய பட நாயகிகள் கர்ப்பத்தை கலைக்க அடிக்கடி அபார்ஷன் செய்ய வேண்டியிருந்ததாக இந்து நேசன் எழுதியது. சௌகார் ஜானகி, ஜெயந்தி இருவரையும் தான் பாலச்சந்தருடன் இணைத்து இந்து நேசன் எழுதியது.
இந்து நேசனின் Soft target ஆக அன்று கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இருந்தார். அவருடைய தம்பி கே.எஸ்.சபரிநாதன் பற்றி கூட இப்படி போட்டுத் தாக்கியது.
…………………………………………

மிஷ்கின் ‘பிசாசு’க்கு அப்பாவாக நடிப்பவர் தம்பி ராமையா என்றே நினைக்க வேண்டியிருந்தது. ஆனால் அப்புறம் ராதா ரவி என்று தெரிந்த பிறகும் தம்பி ராமையா நடிப்பு மாதிரி தான் தோன்றியது.
……………………………………..

”ஒரிய எழுத்தாளரான பிரதிபா ரேயுடைய ’யக்ஞசேனி’ மகாபாரதத்தை மாறு பட்ட கோணத்தில் சொல்கிறது. திரௌபதியாகப்பட்டவள் கர்ணன் மீது மட்டுமல்ல, கண்ணன் மீதே காதல் கொண்டதாக இவரது பார்வை கூறுகிறது.” என்று சிற்பி பாலசுப்ரமண்யம் சென்ற வருடம் ‘தி இந்து’வில் எழுதியிருந்ததை படித்த போது கிரா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது “கதைக்கு ஆயுள் கூடக் கூட சுவாரசியம் அதிகமாக வளர ஆரம்பித்து விடும். இப்படித் தான் மகாபாரதம் விரிந்து கொண்டே இருக்கிறது.”
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பிள்ளைகளாக பிள்ளையாரையும்,முருகனையும் தான் தெரியும்.
திருச்சூர் குட்டிச்சாத்தான் கோவில் பற்றி அறிந்த விஷயம். சிவனுக்கும் பார்வதிக்கும் தான் குட்டிச்சாத்தான் பிறந்தானாம்! பெற்றோர் ஏன் குழந்தையை கை விட்டார்கள். எதனால் குட்டிச் சாத்தான் பிறந்ததை மறைக்க வேண்டும்.
திருச்சூர் குட்டிச் சாத்தானுக்கு ’விஷ்ணு மாயா’ என்று பெயர். பெயர்க்காரணம் சுவாரசியமாயிருக்கிறது. குட்டிச்சாத்தான் தன் ஏழாவது வயதில் தன் பெற்றோர் யாரென்று கண்டு பிடிக்க வேண்டி மஹா விஷ்ணு வேடம் பூண்டு சிவன் பார்வதியிருக்கிற கைலாசத்திற்கே வந்து விட்டானாம்! அதனால் தான் பெயர் விஷ்ணு மாயா!
………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/…/contempt-disdainscorn.ht…



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.