Share

Aug 30, 2016

எம்.ஜி.ஆர் கட்சியில் அந்தக்கால சில நடிகர்கள்


அகில உலகிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இல்லையென்பது உண்மை தான்.ஆனாலும் திருச்சி சௌந்தர் ராஜன் அந்தக்காலத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் தலைவராகத்தான் இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் நடத்தும் கட்சிக்கூட்டங்களில் சிறப்புப்பேச்சாளராக பேசிக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான மன்றங்களைப்பற்றி எண்ணும் போது சிலர் நினைவுக்கு வருவர். ஒருவர் திருச்சி சௌந்தர்ராஜன். இன்னொருவர் முசிறி புத்தன். அப்புறம் கவர்ச்சி வில்லன் கே.கண்ணன்.
அதே போல சிவாஜி ரசிகர் மன்றங்களுக்குத் தலைமை என்றால் சின்ன அண்ணாமலையும் தளபதி சண்முகம் என்பவரும் தான்.
ம.பொ.சியின் தமிழரசு கழகம் கட்சியில் இருந்தவர் சின்ன அண்ணாமலை. பண்ணைப் புத்தகாலயம் அதிபர். இவர் எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” படிக்க சுவாரசியமாயிருக்கும்.

திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் நடிப்பார். பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக, அப்பாவாக, கொள்ளைக்கூட்டத்தில் ஒருவனாக.
ரகசிய போலீஸ் 115ல் உயர் போலீஸ் அதிகாரியாக, கண்ணன் என் காதலனில் ஜெயலலிதாவுக்கு அப்பாவாக …இப்படி..இப்படி..
டி.ஆர் ராமண்ணாவின் ”நான்” படத்தில் கதாநாயகனின் தந்தை பெரிய ஜமின்தாராக வந்து ஆரம்பத்தில் செத்துப் போவார்.
திருச்சி சௌந்தர்ராஜன் முன்னதாக கதாநாயகனாக சொந்தப் படம் எடுத்து நடித்திருக்கிறார். டப்பாவிற்குள் போனது என்று சொல்லவும் வேண்டுமோ?
1965ல் வெளி வந்த “பணம் தரும் பரிசு”.
 பணம் தரும் பரிசு படத்தில் கதாநாயகி வி.ஆர் திலகம். ரமண திலகம் இரண்டாவது நாயகி. இந்த ரமண திலகம் திரையுலகு கண்ட பெரிய கவிஞரான வாலிக்கு மனைவியானார்!
திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் மந்திரியாக ஆனவர். என் மாமனாரின் நண்பர் இவர்.
எம்.ஜி.ஆர் படங்களில் சின்ன ரோல் செய்தவர் மந்திரியானார்.
இவர் மற்ற மந்திரிகள் போல சம்பாத்திய புத்திசாலியாக இருக்கவில்லை என்று ஒரு செய்தி. உண்மையோ என்னவோ?
வேலன் நாடகமொன்றில் நடிக்கும்போது மற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது அவர்களை மாற்றி,மாற்றிப் பார்த்து ’அது சரி’ என்ற வார்த்தையை தலையை ஆட்டி ஆட்டி ‘ஐசரி!’ ‘ஐசரி!’ என்று உச்சரித்ததால் ஐசரிவேலன் ஆனவர்.
சாதாரண சிரிப்பு நடிகர் ஐசரி வேலனும் கூட ராதாகிருஷ்ண நகர் எம்.எல்.ஏ வாக மந்திரி செயலர் என்பதாக ஒரு விசித்திர பதவியில் இருந்தார்.
இந்த ஐசரி வேலன் மகன் ஐசரி கணேஷ் இன்று பல்கலைக்கழகமொன்றின் வேந்தரா?


இவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் கட்சியில் பதவி பெற்றவர்கள் எனும்போது ஏன் நட்சத்திர வில்லன் நடிகர் நம்பியார் அதிமுகவில் சேர்ந்து ஜொலிக்கவில்லை?

 இதற்கு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலங்களில் புன்னகையையே பதிலாகச் சொன்ன நம்பியார் சில வருடங்களுக்கு முன் சொன்னார்: ”எம்.ஜி.ஆருக்கு சந்தேகக் குணம் அதிகம். கட்சியில் யாராவது நம்பியார் பற்றி பொல்லாங்காக சொன்னால் அதை உடனே நம்பி விடுவார். அவருடைய சந்தேகக்குணம் தாங்கவே முடியாதது. படாத பாடு படுத்தி விடுவார். நட்பு கெட்டுப்போகும். அதனால் தான் நான் எம்.ஜி.ஆர் கட்சியில் சேரவேயில்லை.”
திருச்சி சௌந்தர்ராஜன், கே.கண்ணன், ஐசரிவேலன், எஸ்.எஸ்.சிவசூரியன் போன்ற நடிகர்களால் மட்டும் ஆரம்ப கால அதிமுக அலங்கரிக்கப்பட்டது.


Aug 29, 2016

காரணச் செறிவு


திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை!”

நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.
பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.
“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”
பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!
மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய பாலகுமாரனை நான் அவர் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

ஞானக்கூத்தன் பத்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். 

அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில் நான் நினைவு கூர்ந்தேன். “ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு!”
தமிழ் நாட்டில் ராஜநாயஹத்தைத் தவிர மற்றவர்கள் எல்லோரும், எல்லோருமே கவிஞர்கள் தானே!
………………………………….


கலாப்ரியாவால் இப்படி திகட்டவே திகட்டாத கவிதைகளை தொடர்ந்து எழுத முடிகிறது.
எவ்வளவு முறை நாதஸ்வர வாசிப்பு பார்க்கவும் கேட்கவும் கிடைக்கிறது.
எவ்வளவு முறை இரட்டை நாதஸ்வரக் கச்சேரி பார்த்திருக்கிறோம்.
’இசை மழையில் நனைவது’ கூட cliché தான். கவிஞனுக்குத் தானே அபூர்வ விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது.
இனி நாதஸ்வரம், தவில் வாசிக்கக்கேட்கும்போதும் நாதஸ்வர வித்வான்களோ, தவில் வித்வான்களோ வியர்வை துடைத்துக்கொள்ளும்போதெல்லாம் கலாப்ரியாவின் இந்த கவிதை நினைவில் வரும்.
அந்த வியர்வையும், வியர்வை துடைக்கும் துண்டும்!
“ இரட்டை நாதஸ்வரம்
வாசிக்கிறார்கள்
ஒருவர் சற்றே நிறுத்த
மற்றொருவர் தொடர
துடைத்துக்கொள்கிறார்கள்
மாற்றி மாற்றி
அவை மட்டும் இசை
மழையில் தொடர்ந்து
நனைந்து கொண்டு”
இன்னொரு கலாப்ரியா கவிதை
“விதையின் ஒற்றைக்
கலவியை நாள் தோறும்
காற்றிடம் கிசுகிசுக்கிறது
ரகசியமாய் மரம்
வெட்கமின்றி அவற்றை
வானெங்கும் பிதற்றித் திரிகின்றன
ஒட்டுக்கேட்ட பறவைகள்”
…………………………….

Aug 27, 2016

ஸ்வர ராக சுகம்


நாரதர் ஒரு நாள் தியாகப் பிரும்மம் முன் தோன்றினார்.'ஸ்வரார்ணவம் ' என்ற சங்கீத இலக்கண நூலை தியாகராஜருக்கு அளித்து விட்டு பின் மறைந்தே போனார். கர்நாடக சங்கீதத்துக்கு நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள் 'ஸ்வரார்ணவம்' கிடைக்கப் பெற்ற தியாகராஜா மூலம் அதன் பின் கொடையாக கிடைத்தன. இது ஐதீகம்.
சங்கீதம் ஐந்தாவது வேதம்.கந்தர்வ வேதம்.சாஸ்திரீய சங்கீதம் நாரதருக்கே கூட அத்தனை எளிதாக கைகூடி விடவில்லை. Not a cakewalk for Him even. Classical Music is not an easy accomplishment. ரொம்ப அவமானப் பட்டிருக்கிறார்.

மிகவும் பெருமையாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார் நாரதர். பனி சூழ்ந்து வீணையை மீண்டும் எடுக்கவே முடியவில்லை. ஹனுமான் பாடிய ராமகீர்த்தனை தான் பனியை உருகவைத்து வீணையை திரும்பவும் நாரதர் கையில் எடுக்க வகை செய்தது.
சங்கீத கலாநிதி நாரதருக்கு சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத ஹனுமான் பாடிய கீர்த்தனை தான் உதவியது என்பது ருசிக்கவில்லை.நாரதருக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
ஒருமுறை சிவன்,பார்வதியோடு சங்கீத சாம்ராட் நாரதர் ஒரு சின்ன ' வாக் ' போகும்போது எதிரே சப்தஸ்வரங்களும் கை வேறு, கால் வேறு, தலை வேறு பிய்ந்த நிலையில் பார்க்க நேர்ந்து விட்டது.
ஏழு ஸ்வரங்களும் தேம்பியழுதவாறு பார்வதியிடம் முறையிட்டன " எங்கள் கதியை பார்த்தீர்களா? நாரதன் எங்களை அக்கறையின்றி அலட்சியமாக கையாண்டு விட்டதால் இப்படி சின்னா பின்னப் பட்டுபோய் விட்டோம். தேவி! நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி அருளினால் நாங்கள் முழு உருவம் பெறுவோம்."
பார்வதி நாரதரை முறைத்து " என்ன நாரூ! இதெல்லாம்.. ?" என்று கடிந்து கண்டித்து விட்டு சப்தஸ்வரங்களையும் ஆசீர்வாதித்து ஒவ்வொரு ஸ்வரமும் முழு உருவமாக மீண்டும் வழி வகை செய்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தும்புருவுடன் சங்கீத சவாலுக்குப்போனபோது கூட போட்டி என்பதால் நாரதர் சங்கீதத்தை பதற்றத்துடன் கையாள நேர்ந்து விட்டது. அப்போதும் சப்தஸ்வரங்கள் படுகாயப் பட்டு சிதைந்து குற்றுயிரும் குலையுயிரும் ஆகிப் போனதை கண் கூடாக நாரதரே காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போனது.
அவமானத்தால் குன்றிப் போய்விட்ட நாரதரை மகாவிஷ்ணு தான் " கொஞ்சம் பொறுப்பா பாடனும்ப்பா நாரூ! சரி சரி விடு.இனியாவது சாஸ்த்ரீய சங்கீதத்தை ஒழுங்கா நல்லா பயிற்சி செய்து ஆலாபனையிலிருந்து கவனமா செய்யப் பாருப்பா. "என்று தேற்றினாராம்.
பிறகு நாரதர் மனிதனாகவே பிறக்கிறார்! எங்கே? பிருந்தாவனத்தில்.
கிருஷ்ணாவதார யுகம்.கிருஷ்ணனின் கைடன்சில் முறைப்படி முழுமையாக லாங் ட்ரைனிங் மூலம் தான் சாஸ்த்ரீய சங்கீதத்தில் விற்பன்னர் ஆகி அங்கீகாரம் பெற முடிகிறது.
......................................
ஒரு பிரபல வித்துவான் கச்சேரி நடக்கையில்,திஜாவின் நண்பரும் குபராவின் சிஷ்யர்களில் ஒருவருமாகிய சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் பாபநாசம் சிவன் அருகில் அமர்ந்திருந்தாராம்.
சிவன் சொன்னாராம் "கீர்த்தனைகளுக்கும் ஜாதகம் உண்டு "சுவாமிநாத ஆத்ரேயனுக்கு முதலில் புரியவில்லை. பாபநாசம் சிவன் என்ன சொல்லவருகிறார்? சிவன் தொடர்ந்தாராம் " இந்த கீர்த்தனை எந்த வேளையில் இயற்றப் பட்டதோ பாவம். இந்த வித்துவான் வாயில் என்ன பாடு படுகிறது பாருங்கள்! "
உண்மை தான். ஹம்சத்வனியை இப்போது ஹிம்ச த்வனியில் பாடுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சுப்புடு சொல்வார் : ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . "உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை " என்பது போல.
………………………
விளாத்திகுளம் சுவாமிகள் இவர் காடல்குடி ஜமின்தார். மேலும் இவருக்கு மூன்று மனைவிகள். கம்பள நாயக்கர் இனம். கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர் . ஆனால் கச்சேரி செய்பவர் கிடையாது . நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார் .கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது . எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக பல நாட்கள் பாடுவார் .தன் ரசிகர்களுக்காக பாடியவர் . ஒரு ரசிகர் இருக்கிறார் . அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார் .குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார் . தாள ஞானம் இவருக்கு கிடையாது . ஸ்வர ஞானம் உண்டு . ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது .
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி சொல்லக் கேட்பது சுகம் ! கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் !" இதே போல கு . அழகிரி சாமி ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார் !"
விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர் . பெரிய மீசை உண்டு . ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது .
இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில் நாகஸ்வர மேதை காருக்குரிச்சியின் சகளைபாடியான பொன்னுசாமி அவர்களை ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள் . அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது, மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார் .
விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி ரா சுவாரசியாமாக சொல்வார் : சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன் சாமி வருவது போல காருக்குரிச்சியின் ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார் . நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது . ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து !
சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன் களையும் சேர்க்க வேண்டும் என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை . சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் ,
கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் .
................................................
கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள் , ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம் ,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது. இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார் .
ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை . அதாவது தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல , பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல இனி நடக்குமா ? நடத்திக்காட்ட முயற்சிகள் , இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும் . கிராவும் இப்படி ஏங்கிசொல்வார் .
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம் .ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும் !
'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம் . கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான் . ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும் . ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார் .
ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம் ?
…….
அநேக கீர்த்தனைகளை பாடாந்தரமாக கேட்டு கற்றுகொண்டவர் . விளாத்திகுளம் சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி . இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று கிட்டப்பா பாடினார் .அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா .
இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி ஒரு முக்கிய தகவல் . வயிற்று வலி வேதனையால் சொல்லொணா துன்பத்தை மாரியப்ப சுவாமிகள் அனுபவித்து துடித்திருக்கிறார் .
கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார் . வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார் .
தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார் !
தன் சங்கீதத்தை ,பாடும் திறனை தியாகம் செய்திருக்கிறார் .
தோடி சீத்தாராமையர் என்று ஒருவர் . விளக்கம் தேவையில்லை .தோடி யை அடகு வைத்து தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று குடும்பம் நடத்தியிருக்கிறார் .அடகில் தோடி இருக்கும்போது கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார் . சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான் . சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார் .
அப்படி ஒரு காலம் ! அப்படிப்பட்ட பிறவிகள் !!
…………………………………………..


தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது . அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு ஏற்படும் .
19 வது நூற்றாண்டில் மகா வைத்யநாத பாகவதர் இந்த சஹானா "கிரிபை" யை அனுபவித்து பாடுவாராம் . ஒவ்வொரு கச்சேரியிலும் விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார் . ரசிகர்களும் அவர் மறந்தாலும் ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள் .
ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர் இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார் . நெகிழ்ந்து கண்ணீர் மல்க சுப்பையர் அவர்களை இவர் தழுவிக்கொண்டாராம் .
அதன் பிறகு எந்த கச்சேரியிலும் அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது .
கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம் . "அது பிச்சாண்டார் கோவில் சொத்து " என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது.
தேவாம்ருதவர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் பெரியவர்கள் சொல்வார்கள் . "எவரனி"தேவாம்ருத வர்ஷினி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அப்போது பிரபலமாயிருந்த வாக்கேயக்காரருமான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்( எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ) ஒரு ரிகார்டிங் கம்பெனி க்காக பாடி பதிவாகியிருந்த சூழ்நிலையில் அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே "எவரனி" யின் மற்றொரு பதிவை கேட்ட முத்தையா பாகவதர் , கிட்டப்பாவின் பாட்டில்
சொக்கிப் போய் தன்னுடைய பதிவை உடனே நீக்கி கொள்ளும்படி ரிகார்டிங் நிறுவனத்திடம் அட்வான்சை திருப்பிகொடுத்து விட்டாராம் ." கிட்டப்பா பாடியது தான் "எவரனி" –மிக பெருந்தன்மையோடு ஹரிகேச நல்லூர் பூரித்துப்போனாராம்!

……………………………………………………………

Aug 25, 2016

அசந்தர்ப்ப நிர்ப்பந்தம்


அப்போது தி.மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர் ’நீரும் நெருப்பும்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஷூட்டிங்.
யூனிட்டில் ஒரு டெக்னீஷியன் வேலை விஷயமாக எதற்கோ கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு…
அந்த ஆள் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து எழுந்து, மீண்டும் விழுந்து அழுது தன் நிலை மிகவும் சிக்கலாகியிருப்பதாக சொல்லி அழுதிருக்கிறார்.

சிலர் அழும்போது பார்த்தால் சற்று விசித்திர நடவடிக்கைகளுடன் இருப்பார்கள். இயல்பாக சில கெட்ட வார்த்தைகள் கூட வாயிலிருந்து விழும். அழுகை, கோபம் கலந்து சற்று சத்தமாக உரக்க பேசுவார்கள்.
அப்படித்தான் அந்த ஆள் புலம்பியிருக்கிறார்.
ஆனால் வதந்தி ஒன்று எப்படியோ எம்.ஜி.ஆரை அடித்து விட்டான் என்பதாக பரவி விட்டது. 

ஸ்டுடியோ காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்து ரசிகப் பட்டாளம் உள்ளே நுழைந்து….. ஒரு ஆயிரம் பேர் என்ற அளவில்… எழவு வீடு போல எல்லோரும் அழுது பதறிக்கொண்டு…
”அண்ணே! அண்ணே!”
”யார் அவன்? அவனக்கொல்லாமல் விட மாட்டோம்…”


ஷூட்டிங்கிலிருந்த எம்.ஜி.ஆருக்கு கோபம். செட்டை விட்டு வெளியே வந்து “….ங்கோத்தா, யார்ரா சொன்னா? என்னை எவன்டா அடிக்க முடியும்… ஏன்டா இப்படி ஸ்டுடியோவுக்குள்ள ஏறிக்குதிச்சி கலாட்டா பண்றீங்க? ….ங்கோத்தா…அஞ்சி நிமிஷம் உங்களுக்கு டைம்.. மரியாதயா எல்லாரும் ஓடிடுங்க.. எவனும் இங்க இருக்கக்கூடாது…ஒருத்தன் கூட இங்க இருக்கக்கூடாது.”
When Caesar says ‘Do it’, it is performed!

மிரண்டு, பணிந்து, பம்மி மூன்று நிமிடங்களுக்குள் ரசிகப்பட்டாளம் சிட்டாகப் பறந்து அங்கிருந்து மறைந்து விட்டார்கள். ஒரு ஈ, காக்கா இல்லை…ஸ்டுடியோ அமைதியாகி விட்டது.
……………………………………………

எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதலமைச்சர் ஆகியிருந்த நேரம். சென்னையில் ராதாகிருஷ்ண நகர் நீங்கலாக மீதி பதின்மூன்று தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தது. சென்னை தி.மு.க கோட்டையாக கருதப்பட்ட சமயம்.
வெற்றிகொண்டானும், தீப்பொறி ஆறுமுகமும் கட்சித்தலைமையின் ஆசியுடன் தி.மு.க மேடைகளில் தமிழகமெங்கும் மிக,மிக கடுமையாக எம்.ஜி.ஆரை வறுத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
சென்னை மவுண்ட் ரோட்டில் ஏதோ ஒரு கட்டிடத்திற்கு எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். மாடியில் ஒரு அறையில் அமர்ந்திருக்கிறார். கீழே எதிர்க்கட்சி தி.மு.க காரர்கள் ஒரு கும்பலாகக் கூடி விட்டார்கள். அந்த நேர தி.மு.க காரனின் வழக்கமான அர்ச்சனை. ஒரே கூப்பாடு. “டேய் குல்லாக்காரப்பயலே..மலையாளத்தான்..கிழட்டுப்பயலே… மலட்டுப்பயலே..”
மாடியில் இருக்கும் எம்.ஜி.ஆருக்கு தெளிவாக இந்த வசவுகள் கேட்கின்றன.
கூட இருந்தவர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடம்.
எம்.ஜி.ஆர் கோபத்தின் உச்சத்திற்குப் போக அதிக நேரமாகவில்லை.
ஆவேசமாகி ‘ங்கோத்தா, என்ன நினைச்சிக்கிட்டுருக்கானுங்க..ங்கோத்தா..’ என்று எழுந்து விட்டார்.
சுற்றியிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த சிரமப்பட வேண்டியிருந்தது. “உட்காருங்க….சூரியனப் பாத்து நாய்ங்க கொரைக்கிதுக….”

Aug 21, 2016

R.P.ராஜநாயஹம் இயக்கத்தில் ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’


R.P.Rajanayahem's interview on Shri .Na.Muthuswamy's Vandichodai in 'The Hindu' (Tamil) daily
21.08.2016

தி இந்து நாடக விழா
தி இந்து – ஞாயிறு ஆகஸ்ட் 21, 2016

அவநம்பிக்கையை உடைத்தெறியும் கற்பனை
-    என்.கௌரி

தி இந்து நாடக விழாவில் இடம்பெற்றிருக்கும் மூன்று தமிழ் நாடகங்களில் ‘வண்டிச்சோடை’ நாடகத்துக்கு ஒரு சிறப்புண்டு. தமிழின் சமகால நாடக ஆளுமைகளில் முக்கியமானவரான ந.முத்துசாமி 1968ல் எழுதிய நாடகம் இது. கூத்துப்பட்டறைக்குழுவின் சார்பாக ஆகஸ்ட் 28 அன்று இந் நாடகம் முதன்முறையாக ‘தி இந்து’ நாடக விழாவில் மேடையேறவிருக்கிறது.

’வண்டிச்சோடை’  நாடகத்தைத் திரிபான தர்க்கங்களைப்
( Perverted Logic) பேசும் நாடகம் என்று சொல்லலாம். தொடக்கத்திலிருந்து முடிவு வரை இந்த நாடகம் புதிர்களுடன் அற்புதமான கற்பனை வெளியில் பயணப்படுகிறது.
“ மருத்துவத் துறை இப்போது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகி விட்டது. பாரம்பரியமான இந்திய நாட்டு வைத்தியம் ஒரு காலத்தில் செழிப்பானதாக இருந்தது. அது குரு – சிஷ்ய அமைப்பால் எப்படிச் சரிவைச் சந்தித்தது என்பதை இந் நாடகம் பதிவு செய்கிறது.” என்கிறார் இந்நாடகத்தின் இயக்குனர் R.P.ராஜநாயஹம்.

குரு – சிஷ்ய அமைப்பு மட்டுமல்லாமல் கடைமட்டத் தொழிலாளர்கள் வழிவழியாக எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் ‘வண்டிச்சோடை’ நாடகம் அலசுகிறது. தார்ச்சாலை போடும் தொழிலாளர்கள், போரில் பலிகொடுக்கப்படும் சிப்பாய்கள், கட்சிக்காக உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள் போன்றவர்களை விழிப்படைய வைக்கும் கேள்விகள் இந்நாடகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தனிமனித வழிபாடு என்பது எப்படி இந்தச் சமூகத்தைப் பாதிக்கிறது என்பதை இந்நாடகம் வலிமையுடன் பேசியிருக்கிறது.

“பொதுவாக எதிர்காலத்தை நோக்கி வயதடைவதைப் பற்றி நாம் யோசிப்போம். இறந்த காலத்தை நோக்கி வயதடைந்தால் என்ன என்ற பயணத்தை ‘ வண்டிச்சோடை’ மேற்கொள்ளவிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ‘கலைடாஸ்கோப்’ அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு இந்நாடகம் கொடுக்கும்.” என்கிறார் ராஜநாயஹம்.

உருமாற்றம் என்னும் அம்சம் இந்த நாடகத்தின் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ஓர் ஆடு, ஆட்டுக்காரனாக மாறுகிறது. மூலிகைச் செடிகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆடு மனித சிரஞ்சீவியாக மாறி விடுகிறது. “இப்படி, இந்த நாடகத்தில் எழுதப்பட்டிருக்கும் கற்பனை என்பது நம்முடைய அவநம்பிக்கையை உடைத்தெறிவதாக இருக்கும். இந்த நாடகம் நேரடியாக எந்தவொரு விஷயத்தைய்ம் விளக்கியிருக்காது. ஆனால், மறைபொருளாக இந்நாடகத்தில் பல விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. பார்வையாளர்களுக்கு ஒரு விஷேசமான அனுபவத்தை ‘ வண்டிச்சோடை’ நாடகம் அளிக்கும் என்கிறார் ராஜநாயஹம்.
……………………………………………………………………..





...................................................


'Vandichodai' Brochure
The Hindu Theatre fest

..............................................................................





Taj Coramondel Hotel - Hindu theatre festival Dinner
18.08.2016

.................................................................................


அப்பா  ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’க்கு மகன்
மு. நடேஷின் ஓவியம் இது.

....................................................................................................




http://rprajanayahem.blogspot.in/…/an-email-interview-by-hi…



Aug 18, 2016

An email interview by 'The Hindu'

An email interview by 'The Hindu' on 16th August,2016
Na.Muthuswamy's Vandichodai play is staged in Egmore Museum Theatre on 28th August, 2016.
Time : 7.30.PM



.....................................................................

"Once upon a Tale"

From the school of the master of avant – garde Na.Muthuswamy, comes an abstract production, Vandichodai. Directed by R.P.Rajanayahem, the play is being staged for the first time since it was written in 1968.
Edited Excerpts from an email interview with the director.
‘Tell us about the experience of working with Na.Muthuswamy.’

“I consider myself fortunate to work in Koothuppattarai and direct Na.Muthuswamy’s play. It is exciting that his son M.Natesh is doing the sets and lighting. The playwright practises good values and ethics. I’m learning a lot from him and developing confidence as a director.”

‘What Kind of theatre appeals to you?’

“Theatre is not a place for just seeing or listening to a performance. Good theatre should create an emotional exchange between the performer and the audience. I’m always fond of experimental plays. Theatre of the absurd appeals to me. “

‘Tell us about your background in Theatre.’

‘’I’m a keen observer of Modern Plays. I enjoy plays such as Becket’s Waiting for Godat, Edward Albee’s ‘Zoo story’ and Lorca’s ‘Play without a title’. I’m an Shakespearean scholar, an actor, a singer and a writer. Vandichodai is the first play I’m directing.’’

‘What advantage, according to you , do abstract productions have over realistic ones?’

“ Theatre ofabsurd has a sense of metaphysical anguish towards the absurdity of the human condition.People should learn to appreciate such productions.”
.............................




Aug 12, 2016

’வண்டிச்சோடை’க்கு மு. நடேஷ் ஓவியம்



 அப்பா  ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’க்கு மகன்
மு. நடேஷின் ஓவியம் இது.




நாடகத்தின் விசேஷமான சில வசனங்கள்  கீழே:

 இந்த சம்பிரதாய முதல்வர் சொன்ன அதே வார்த்தைகளோட என் குருவும் துவங்கினார். ’அனேகமா எனக்குத் தெரிஞ்சது எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்துட்டேன். நீங்க போகலாம். குருகுலவாசம் இதோட முடிஞ்சி போச்சு.
சிஷ்யர்கள் எல்லாம் எழுந்து போய்ட்டாங்க. நான் மட்டும் உட்கார்ந்துக்கிட்டிருந்தேன். குரு ’என்ன விஷயம்’னு என்னைப் பார்த்துக் கேட்டார். நான் சொன்னேன், ’நீங்க சொன்னது எனக்கு விளங்கலே’ன்னு.
‘ என்ன விளங்கலே?’

’வைத்தியம் செஞ்சு பொழைக்க இது போதும்னீங்களே, அது’

‘ஆமாம். வைத்தியம் செஞ்சி பொழைக்க இது போதும்’
‘இல்லே. போதாது’

’போதும்’

’போதாதுங்காணும் ஓய். போதாது. நான் தொழில் செஞ்சு பொழைக்கப் போறதில்ல. அதனாலே போதாது’

‘பின்னே என்ன செய்யப் போறே?’

’வைத்தியம் செய்யப் போறேன்’

‘அப்படின்னா? வைத்தியம் தொழில் ’இல்லையா..உனக்குத்தெரிஞ்சவரைக்கும் செய் போ’

திடீர்னு எம்பி நான் அவர் சிண்டே புடிச்சுக்கிட்டேன். அவர் அற்பமா போயிட்டார். ’விடுடா சிண்டை விடுடா’ன்னார்.

‘ நான் வைத்தியம் செய்யப் போறேன். அது தொழிலா இருக்கப் போறதுங்கறது உண்மை தான். ஆனா அது தொழில் இல்லைங்காணும் ஓய். அது வைத்தியம். ஒமக்குத் தெரிஞ்ச வரைக்கும் எனக்கும் தெரியணும். அந்த உபகாரத்தை நீர் செய்யணும்.’
அவர் சொன்னார்; ’என் குருவுக்குத் தெரிஞ்ச அளவுக்கு எனக்குத்தெரியாதுடா’ன்னு.

‘அதுக்கு நான் என்ன செய்யறது? அது உம்ம குற்றம். எட்டி அவர் சிண்டைப் பிடிச்சிருக்கறது? அது என்னவோ? உமக்குத் தெரிஞ்ச அளவு எனக்குத் தெரிஞ்சாகணும். நீர் வெளிக்கு வாசலுக்குப் போறது. பொண்டாட்டிக்கிட்டே படுத்துக்கறது ஆகிய நேரத்தைத் தவிர மற்ற நேரத்துலே நான் உம்மோட இருப்பேன். எனக்குச் சொல்லித்தந்தாகணும்’

……………….

தார்ச்சாலைத் தொழிலாளி : போதும். போதும். எனக்காக யாரும் வாரிசு அவதாரம் எடுக்கப் போறதில்லே. என் முடியைக் காண அன்னப்பறவையா யாரும் மாறப் போறதில்லே. என் முண்டாசில் தாழம்பூ இல்லே. தார்க்கறை தான் இருக்கு.

………………………………………………………………………………………………………………………………..



ந.முத்துசாமி சார், நடேஷ் சார் மேற்பார்வையில் பிரமாதமாக ‘வண்டிச்சோடை’ நாடக ஒத்திகை நடந்து கொண்டு இருக்கிறது.

Performance has permission to make mistakes.That is called Rehearsal!
      Rehearsal -  ‘learning through mistakes’

  ’வண்டிச்சோடை’க்காக ஹிந்துஸ்தானி க்ளாசிக்கல் மெட்டில்  நாடக வசனங்களாலேயே சாரம் தெளித்து ராஜநாயஹம் தயாரித்திருக்கும் பாடல் ஒன்று!



’வண்டியின் சோடை வண்டி சென்ற பாதையே
காளை வண்டி மண்ணில் ஓடி
அதனால் சோடை தோன்றலாச்சு

போருக்கு வீரன், தேருக்கு ஆளு,
கட்சிக்குத் தொண்டன் தேவை
பெத்து தான் கொடுத்து இடுப்பு நொந்து போச்சு
விந்து சிந்தி முளைச்சது ஆளாய்
நாற்றங்காலாய் ஆனாள்
சேரி ஒப்பாரி பத்தி இங்கே எரியுது
எரியுது பாரு

சிரஞ்சீவி ஆடு மூலிகை மேஞ்சி
மனுஷனா மாறுது பாரு
கசாப்புக்கு தப்பி மூலிகை மேஞ்சி
மனுஷனா மாறுது பாரு
அடையாளம் கெட்டு அத்தனை பேரும்
ஒத்த சாயலில் ஒத்தனே போலும்
அப்பாவென்று எவனையும் எவனும்
அழைக்க அடையாளம் ஒத்துப் போச்சு’
…………………………………………………………………………………………………..


 ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’ நாடகம்
R.P.ராஜநாயஹம் இயக்கத்தில்
ஹிண்டு நாடக விழாவிற்காக
சென்னை எக்மோர் மியூசியம் தியேட்டரில்
ஆகஸ்ட் 28ம் தேதி, 7.30 pm

அரங்க அமைப்பும் ஒளியமைப்பும் : மு. நடேஷ்
……………………………………………………………….


 (Shri N.Muthuswamy's younger son shri Ravi - a strong pillar of Koothuppattarai)

..................................




Aug 11, 2016

ஜோதிலட்சுமி


கனவுத்திரை ஒரு ’செல்ல தேவதை’யை இழந்திருக்கிறது.
A cute Cinderalla!
அந்தக்காலத்தில் ஸ்டில் நாகராஜராவ் நடிகைகளில் சிறந்த அழகிகளாக புஷ்பவல்லி, சாவித்திரி, வைஜயந்திமாலா ஆகியோர் வரிசையில் ஜோதிலட்சுமியையும் நிறுத்தினார். கூடுதலாக ஜோதிலட்சுமி ஒருவர் தான் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய ஒரே நடிகையாக எப்போதுமே நாகராஜ ராவ் உறுதிபடுத்தி சொன்னார்!
இந்த சாமுத்ரிகா லட்சண விஷயத்தில் பலரும் ஜோதிலட்சுமி பற்றியே அன்று குறிப்பிட்டார்கள்.
Body structure துவங்கி ஒவ்வொரு உறுப்புமே அம்சமானது.
 ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தால் மிகப்பெரிய க்ளாமர் நடிகையாகியிருப்பார்.
”கட்டோடு குழலாட, ஆட” பாடலில் எம்.ஜி.ஆரோடு துவங்கி பின்னர் அவர் பல படங்களில் ஆடிய ஆட்டம் விஷேசமானது.
”காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ”
“ ஆடாத உள்ளங்கள் ஆட, ஒரு அச்சாரம் தந்தாலென்ன ”
“பட்டம் விட்டது போல பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போல சுற்றுதும்மா உன் பாவாடை”
பாடல்களில் அவருடைய க்ளாமர்!
’உன்னழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்’ இப்படி ஒரு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு ’பூவும் பொட்டும்’ படத்தில் இவர் அழகை வர்ணிப்பதாகவே இருக்கிறது!
நின்றால் கோயில் சிலை அழகு, நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு, நடந்தால் அன்னத்தின் நடையழகு, நாடகமாடும் இடை அழகு ….

1960,70களில் விஜயலலிதா(விஜயசாந்தியின் சித்தி), ஜோதிலட்சுமி இருவர் தான் தமிழ்,தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிகைகளாக கொடி கட்டியவர்கள்.
1990களில் பிரபலமான ரம்பாவின் தொடைகளுக்கு முன் 1960களில் ஜோதிலட்சுமியின் கால் தொடைகள் மிகவும் கவனிக்கப்பட்டவை.


பாலாவின் ”சேது”வில்  கச்சேரிக்கு வர்றியா என கூப்பாடு போட்ட ஜோதிலட்சுமியின் ’ரிஎண்ட்ரி’ கண்டு அந்தக்கால பெருசுகள் விட்ட பெரு மூச்சு அக்கினிக்குழம்பு ரேஞ்சுக்கு இருந்தது.
காலம் கடந்த பின்னே, காட்சிப்பட்ட அந்த ஆட்டத்தில் தான் என்ன ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி!


..................................