Share

Aug 1, 2016

கு.அழகிரிசாமியின் யுக்தி


நிறை மாத கர்ப்பிணிகளை நிறைய பார்க்கிறேன்.

’பத்து மாசம் சுமந்திருந்து பெற்றாள்’ பாட்டு இருக்கிறது.
’ முன்னூறு நாள் சுமந்தாள்’ – இப்படியும் ஒரு டப்பா பாட்டு நான் சிறுவனாயிருக்கும் போது கேட்டிருக்கிறேன்.
அப்போது நினைத்திருக்கிறேன். அடுத்து ‘7200 மணி நேரம் வயிற்றில் அன்னை என்னை வைத்திருந்தாளே!’ பாட்டு அடுத்து வரப்போகிறது!

வில்லன் பிரகாஷ் ராஜ் வசனம் ஒரு படத்தில் இந்த மாதிரியிருந்தது. டி.வியில் ஓடிக்கொண்டிருந்ததை ஒரு நிமிஷம் கவனிக்க நேர்ந்த போது. – “என் அம்மா செத்துட்டா. அவ இப்ப உயிரோடு இருந்தா ஏண்டி என்ன பத்துமாசம் உள்ள வச்சிருந்தேன்னு கேட்டு அவள கொன்னுடுவேன்!”
………………………………………………..


கி.ரா வயது தொண்ணூற்று நான்கு. கடந்த ஆறு மாதங்களாக அவருடன் தொலைபேசுவது நடப்பதில்லை. மணிக்கணக்காக என்னுடன் எப்போதும் அளவளாவுவார். எனக்கு இது ஒரு இழப்பு. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறது. அவரால் இப்போதெல்லாம் யாரையும் சந்திக்க இயலவில்லை. மணிக்கணக்காக என் போன்றவர்களுடன் பேச முடியவில்லை. முதுமையின் அயர்ச்சி.
சென்ற வாரம் என் ப்ளாக்கில் 2008ம் வருடம் நான் பதிந்திருக்கிற “ ஆன வயதிற்கு அளவில்லையெனினும் தெளிவே வடிவாம் கி.ரா.” மிக அதிக ஹிட் பெற்றிருந்தது. எனக்கு உடனே பதற்றம். திடீரென்று இது அதிக பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்றால்………. இதை கி.ராவின் 85 வயதில் அவருக்காக வெளியிடப்பட்ட ’கி.ரா- 85’ நூலுக்காக எழுதியிருந்தேன். அதை நான் ப்ளாக் ஆரம்பித்த 2008ம் வருடம் பதிந்திருக்கிறேன்.
நல்ல வேளை கி.ராவுக்கு எதுவும் ஆகி விடவில்லை என்பது தெரிந்து கொண்டேன்.
………………………………………………….

ஞாயிற்றுக்கிழமை பெசண்ட் நகர் முத்தமிழ் பேரவை அரங்கத்தில் ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம். 

ந.முத்துசாமி சாருடன் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். 
அவர் முகம் கு.அழகிரிசாமியை நினைவுறுத்தியது. புகைப்படத்தில் பார்த்திருக்கிற அழகிரிசாமியின் முகம். அவருடைய ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’, ’சுயரூபம்’ போன்ற அற்புத கதைகளெல்லாம் வரிசை கட்டி நினைவுக்கு வந்தன.
அழகிரிசாமிக்கு மௌனியைப் பிடிக்காது.
அவர் கருத்து - ’சும்மா பம்மாத்து செய்கிறார்’.
க.நா.சு சொன்னார்:”மூக்கறையர்களுக்கு மௌனியை புரியாது.”
ஆனால் மௌனியின் சிறுகதைகளுக்கான முன்னுரையிலேயே அன்று தமிழின் ஒன்பது எழுத்தாளர்களில் ஒருவராக கு.அழகிரிசாமியை கனப்படுத்தினார். ’கு.அழகிரிசாமி பாரதி வரிசையில் வைத்து போற்றப்படவேண்டியவர்.’- இதை சொன்னதும் க.நா.சு. தான்!
அழகிரிசாமியின் மகன் சாரங்கன் மௌனி பற்றி நல்ல டாகுமெண்டரி படம் எடுத்தார்! காலம் காலமாக தலைமுறை இடைவெளி!

நாற்பத்தைந்து ஆண்டுகள் முன் மறைந்து விட்ட கு.அழகிரிசாமி. தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் கு.ப.ரா வை நினைத்தால் ந.பிச்சமூர்த்தியை நினைக்காமல் இருக்க முடியாது. கு.அழகிரிசாமியை நினைத்தால் கி.ராஜநாராயணன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

கொஞ்ச நேரத்தில் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு முத்தமிழ் பேரவை அரங்கத்திற்குள் ’கடலோடி’ நரசய்யா நுழைந்தார். மணிக்கொடி சிட்டியின் மருமகன்.முத்துசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அழகிரிசாமி தோற்றம் கொண்டவர் வந்து முத்துசாமியை சேவித்தார். அவர் அழகிரிசாமியின் மகனே தான்! மூத்தமகன் ராமச்சந்திரன்.
இளைய மகன் சாரங்கனை அந்தக்காலத்தில் திலகர் மருது (ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி) மூலமாக எனக்கு அறிமுகமுண்டு. 2007ம் ஆண்டு கோவையில் நடந்த ’காலச்சுவடு’ விழாவில் மீண்டும் சாரங்கனை சந்தித்திருக்கிறேன்.
ராமச்சந்திரனிடம் அவரைப் பார்த்தவுடன் எனக்கு கு.அழகிரிசாமி ஞாபகம் வந்ததைப் பற்றி சொன்னேன்.
கி.ரா பேசும்போது அழகிரிசாமி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார். 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இதை ராமச்சந்திரனிடம் நான் சொன்னபோது அவர் “அப்பா பற்றி இந்த செருப்பு விஷயம் எனக்கே இப்போது தான் தெரிய வருகிறது!”
எனக்கு சந்தோஷம் தான். என்னால் அழகிரிசாமி பற்றிய ஒரு சுவாரசியம் அவர் மகனுக்கு இவ்வளவு காலங்கழித்து இப்போது தெரிய வந்திருக்கிறது.
........................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.