Share

Aug 27, 2016

ஸ்வர ராக சுகம்


நாரதர் ஒரு நாள் தியாகப் பிரும்மம் முன் தோன்றினார்.'ஸ்வரார்ணவம் ' என்ற சங்கீத இலக்கண நூலை தியாகராஜருக்கு அளித்து விட்டு பின் மறைந்தே போனார். கர்நாடக சங்கீதத்துக்கு நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள் 'ஸ்வரார்ணவம்' கிடைக்கப் பெற்ற தியாகராஜா மூலம் அதன் பின் கொடையாக கிடைத்தன. இது ஐதீகம்.
சங்கீதம் ஐந்தாவது வேதம்.கந்தர்வ வேதம்.சாஸ்திரீய சங்கீதம் நாரதருக்கே கூட அத்தனை எளிதாக கைகூடி விடவில்லை. Not a cakewalk for Him even. Classical Music is not an easy accomplishment. ரொம்ப அவமானப் பட்டிருக்கிறார்.

மிகவும் பெருமையாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார் நாரதர். பனி சூழ்ந்து வீணையை மீண்டும் எடுக்கவே முடியவில்லை. ஹனுமான் பாடிய ராமகீர்த்தனை தான் பனியை உருகவைத்து வீணையை திரும்பவும் நாரதர் கையில் எடுக்க வகை செய்தது.
சங்கீத கலாநிதி நாரதருக்கு சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத ஹனுமான் பாடிய கீர்த்தனை தான் உதவியது என்பது ருசிக்கவில்லை.நாரதருக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
ஒருமுறை சிவன்,பார்வதியோடு சங்கீத சாம்ராட் நாரதர் ஒரு சின்ன ' வாக் ' போகும்போது எதிரே சப்தஸ்வரங்களும் கை வேறு, கால் வேறு, தலை வேறு பிய்ந்த நிலையில் பார்க்க நேர்ந்து விட்டது.
ஏழு ஸ்வரங்களும் தேம்பியழுதவாறு பார்வதியிடம் முறையிட்டன " எங்கள் கதியை பார்த்தீர்களா? நாரதன் எங்களை அக்கறையின்றி அலட்சியமாக கையாண்டு விட்டதால் இப்படி சின்னா பின்னப் பட்டுபோய் விட்டோம். தேவி! நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி அருளினால் நாங்கள் முழு உருவம் பெறுவோம்."
பார்வதி நாரதரை முறைத்து " என்ன நாரூ! இதெல்லாம்.. ?" என்று கடிந்து கண்டித்து விட்டு சப்தஸ்வரங்களையும் ஆசீர்வாதித்து ஒவ்வொரு ஸ்வரமும் முழு உருவமாக மீண்டும் வழி வகை செய்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தும்புருவுடன் சங்கீத சவாலுக்குப்போனபோது கூட போட்டி என்பதால் நாரதர் சங்கீதத்தை பதற்றத்துடன் கையாள நேர்ந்து விட்டது. அப்போதும் சப்தஸ்வரங்கள் படுகாயப் பட்டு சிதைந்து குற்றுயிரும் குலையுயிரும் ஆகிப் போனதை கண் கூடாக நாரதரே காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போனது.
அவமானத்தால் குன்றிப் போய்விட்ட நாரதரை மகாவிஷ்ணு தான் " கொஞ்சம் பொறுப்பா பாடனும்ப்பா நாரூ! சரி சரி விடு.இனியாவது சாஸ்த்ரீய சங்கீதத்தை ஒழுங்கா நல்லா பயிற்சி செய்து ஆலாபனையிலிருந்து கவனமா செய்யப் பாருப்பா. "என்று தேற்றினாராம்.
பிறகு நாரதர் மனிதனாகவே பிறக்கிறார்! எங்கே? பிருந்தாவனத்தில்.
கிருஷ்ணாவதார யுகம்.கிருஷ்ணனின் கைடன்சில் முறைப்படி முழுமையாக லாங் ட்ரைனிங் மூலம் தான் சாஸ்த்ரீய சங்கீதத்தில் விற்பன்னர் ஆகி அங்கீகாரம் பெற முடிகிறது.
......................................
ஒரு பிரபல வித்துவான் கச்சேரி நடக்கையில்,திஜாவின் நண்பரும் குபராவின் சிஷ்யர்களில் ஒருவருமாகிய சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் பாபநாசம் சிவன் அருகில் அமர்ந்திருந்தாராம்.
சிவன் சொன்னாராம் "கீர்த்தனைகளுக்கும் ஜாதகம் உண்டு "சுவாமிநாத ஆத்ரேயனுக்கு முதலில் புரியவில்லை. பாபநாசம் சிவன் என்ன சொல்லவருகிறார்? சிவன் தொடர்ந்தாராம் " இந்த கீர்த்தனை எந்த வேளையில் இயற்றப் பட்டதோ பாவம். இந்த வித்துவான் வாயில் என்ன பாடு படுகிறது பாருங்கள்! "
உண்மை தான். ஹம்சத்வனியை இப்போது ஹிம்ச த்வனியில் பாடுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சுப்புடு சொல்வார் : ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . "உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை " என்பது போல.
………………………
விளாத்திகுளம் சுவாமிகள் இவர் காடல்குடி ஜமின்தார். மேலும் இவருக்கு மூன்று மனைவிகள். கம்பள நாயக்கர் இனம். கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர் . ஆனால் கச்சேரி செய்பவர் கிடையாது . நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார் .கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது . எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக பல நாட்கள் பாடுவார் .தன் ரசிகர்களுக்காக பாடியவர் . ஒரு ரசிகர் இருக்கிறார் . அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார் .குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார் . தாள ஞானம் இவருக்கு கிடையாது . ஸ்வர ஞானம் உண்டு . ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது .
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி சொல்லக் கேட்பது சுகம் ! கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் !" இதே போல கு . அழகிரி சாமி ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார் !"
விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர் . பெரிய மீசை உண்டு . ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது .
இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில் நாகஸ்வர மேதை காருக்குரிச்சியின் சகளைபாடியான பொன்னுசாமி அவர்களை ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள் . அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது, மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார் .
விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி ரா சுவாரசியாமாக சொல்வார் : சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன் சாமி வருவது போல காருக்குரிச்சியின் ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார் . நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது . ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து !
சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன் களையும் சேர்க்க வேண்டும் என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை . சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் ,
கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் .
................................................
கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள் , ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம் ,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது. இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார் .
ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை . அதாவது தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல , பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல இனி நடக்குமா ? நடத்திக்காட்ட முயற்சிகள் , இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும் . கிராவும் இப்படி ஏங்கிசொல்வார் .
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம் .ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும் !
'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம் . கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான் . ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும் . ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார் .
ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம் ?
…….
அநேக கீர்த்தனைகளை பாடாந்தரமாக கேட்டு கற்றுகொண்டவர் . விளாத்திகுளம் சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி . இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று கிட்டப்பா பாடினார் .அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா .
இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி ஒரு முக்கிய தகவல் . வயிற்று வலி வேதனையால் சொல்லொணா துன்பத்தை மாரியப்ப சுவாமிகள் அனுபவித்து துடித்திருக்கிறார் .
கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார் . வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார் .
தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார் !
தன் சங்கீதத்தை ,பாடும் திறனை தியாகம் செய்திருக்கிறார் .
தோடி சீத்தாராமையர் என்று ஒருவர் . விளக்கம் தேவையில்லை .தோடி யை அடகு வைத்து தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று குடும்பம் நடத்தியிருக்கிறார் .அடகில் தோடி இருக்கும்போது கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார் . சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான் . சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார் .
அப்படி ஒரு காலம் ! அப்படிப்பட்ட பிறவிகள் !!
…………………………………………..


தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது . அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு ஏற்படும் .
19 வது நூற்றாண்டில் மகா வைத்யநாத பாகவதர் இந்த சஹானா "கிரிபை" யை அனுபவித்து பாடுவாராம் . ஒவ்வொரு கச்சேரியிலும் விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார் . ரசிகர்களும் அவர் மறந்தாலும் ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள் .
ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர் இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார் . நெகிழ்ந்து கண்ணீர் மல்க சுப்பையர் அவர்களை இவர் தழுவிக்கொண்டாராம் .
அதன் பிறகு எந்த கச்சேரியிலும் அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது .
கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம் . "அது பிச்சாண்டார் கோவில் சொத்து " என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது.
தேவாம்ருதவர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் பெரியவர்கள் சொல்வார்கள் . "எவரனி"தேவாம்ருத வர்ஷினி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அப்போது பிரபலமாயிருந்த வாக்கேயக்காரருமான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்( எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ) ஒரு ரிகார்டிங் கம்பெனி க்காக பாடி பதிவாகியிருந்த சூழ்நிலையில் அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே "எவரனி" யின் மற்றொரு பதிவை கேட்ட முத்தையா பாகவதர் , கிட்டப்பாவின் பாட்டில்
சொக்கிப் போய் தன்னுடைய பதிவை உடனே நீக்கி கொள்ளும்படி ரிகார்டிங் நிறுவனத்திடம் அட்வான்சை திருப்பிகொடுத்து விட்டாராம் ." கிட்டப்பா பாடியது தான் "எவரனி" –மிக பெருந்தன்மையோடு ஹரிகேச நல்லூர் பூரித்துப்போனாராம்!

……………………………………………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.