Share

Jul 23, 2016

தூறலாய் சாரல்


வேலைய சரியா செய்யாட்டி
“என்னய்யா திருப்பதி அம்பட்டயன் செரைச்ச மாதிரி”.
இது தேய்ந்த சொலவடை.
கி.ராஜநாராயணனுடன் போனில் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த போது இதற்கு மாற்றாக ஒன்று சொன்னார். மாற்றாக சொல்வதற்காக சொல்லவில்லை. அந்த நேர பேச்சில் சொல்ல வந்த ஏதோ ஒரு விஷயத்துக்கு பொருத்தி இதை சொன்னார்.
”ஊரான் பிள்ளைக்கு ஒரு பொம்பள குண்டி கழுவி விட்ட மாதிரி…” தன் பிள்ளைக்கு கழுவற மாதிரி ஊரான் பிள்ளை குண்டிய அவ சரியா, சுத்தமா கழுவி விட மாட்டா. 


……………………………………………

அகமெம்னான் நாடகம் மொழிபெயர்த்த ஜம்புநாதனுக்கு ஒரு ஓவியம் பெசண்ட் நகரில் பரிசளிக்கப்பட்டது. அந்த ஓவியத்தை வரைந்தவர் மு.நடேஷ்.
அதில் நடேஷ் ஒரு வாக்கியம் எழுதியிருந்தார்.
“சுவாதிகள் இல்லையடி பாப்பா”

நடேஷ் தன் ஓவியங்கள் பற்றி பேசும்போது சொன்ன விஷயம்: ”பிக்காஸோ தான் எனக்கு Reference point.ஆனா அவன் செஞ்சதுக்கு எதிரா தான் நான் செய்யறேன்!”

நடேஷ் சார்த்தரின் ”மீள முடியுமா” நாடகத்தில் நடிக்கும்போது
83 பக்க text ஐ நாலரை மணி நேரத்தில் மனப் பாடம் செய்தவர்!

இங்கே கூத்துப்பட்டறையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி
பரத நாட்டிய மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது நடேஷ் சொன்ன வார்த்தை “தமிழனின் தலையெழுத்துக்கு அண்ணாத்துரையின் மூக்குப்பொடி தான் மூலம்!” 
தமிழ் மண்ணில் திராவிட இயக்க அரசியல் தாக்கம் பற்றிய ரத்தினச் சுருக்க Sarcasm!
………………………………………………………………………

சில விளம்பரங்கள் எப்போதும் மறக்க முடியாதவையாய் மனதில் நிலைத்து விடும்.
ரொம்ப வருடங்களுக்கு முன் ரொம்ப funny ஆக ஒரு விளம்பரம்.
ஒரு கௌபாய் டைப் பாரில் பலர் குடித்துக்கொண்டிருப்பார்கள். Chubby ஆக தலையில் தொப்பி போட்ட ஒருவனை கிண்டலாக மற்ற குடிகாரர்கள் கவனிப்பார்கள். அந்த குண்டு ஆள் “ இந்த ஸ்ட்ராங்க் பீர் மஹாவீருக்கு எந்த சரக்கும் சர்பத் தான்டா!” என்று ஒரு ’மக்’கில் உள்ளதை கட,கட,மட,மடவென்று குடித்து விட்டு ஃப்ளாட் ஆகி விடுவான்.

மூன்று நான்கு வருடங்கள் முன் டி.வியில் அடிக்கடி காட்டப்பட்ட விளம்பரம்.
சிக்னல் நிறுத்தத்தில் ஒரு கார். பக்கத்தில் வியர்த்து விறுவிறுத்து ஒரு பள்ளிச்சிறுவன் சைக்கிளில் வந்து நிற்பான். காரில் உள்ளவர் பையனைப் பார்த்து முகம் சுளிப்பார். சிறுவன் தன் அழுக்கான ஆடையை அவசரமாய் திருத்தி, கழுத்து டையை ஒழுங்கு செய்து கொள்வான். புறப்பட பச்சை சிக்னல் விழும்போது பையன் சைக்கிளை அழுத்திக்கொண்டே காரில் உள்ள பணக்காரரைப் பார்த்து சொல்வான்
”ரெண்டு சக்கரம் தான் வித்தியாசம் அங்க்கிள். ஒரு நாள் அதுவும் வந்திடும்.”

நகைக் கடை விளம்பரங்கள் எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை.அப்படியிருந்தும் ஒரு விளம்பரம் கொஞ்ச நாட்களுக்கு முன் நெகிழ்த்தியது.
தன் அம்மாவுக்கு நகைகள் வாங்கித்தருகிறாள் ஒரு யுவதி. நகைக்கடையில் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு அம்மா அழுகிறாள்.
”அசடாட்டம் அழாதம்மான்னு நான் சொன்னப்ப ‘ம்..ம்..ம்…’னு தலையை ஆட்டிக்கிட்டே அம்மா என் கண்ண துடைச்சி விட்டா…”
……………………………………………………..


மணிகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன்
’சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை’
இந்த மணிகள் கவிதைக்கு என்றில்லை, உரைநடைக்கு மட்டுமில்லை
இன்னும் பலவற்றுக்குமான இலக்கணம் தான்.
…………………………..
photos
1.M.Natesh
2. Ki.Rajanarayanan with Kamal
3.Gnanakoothan
4.R.P.Rajanayahem
..........................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.