Share

Jul 28, 2016

எம்.கே.ராதா


எம்.கே.ராதா ’சதி லீலாவதி’யில் கதாநாயகன். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1936ல் ரொம்ப சின்ன கதாபாத்திரம்.
சதி லீலாவதி கதாநாயகியையே தான் எம்.கே.ராதா திருமணம் செய்து கொண்டார். எம்.கே.ராதாவின் அப்பா கந்தசாமி முதலியார் தான் சதி லீலாவதி தயாரிப்பாளர், இயக்குனர்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, தங்கவேலு ஆகியோரும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.

எம்.கே.ராதா கதாநாயகனாய் நடித்த ’சந்திரலேகா’(1948) மிகுந்த பொருட்செலவில் ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ரஞ்சன் வில்லன்.
அபூர்வ சகோதரர்கள் 1949ல் வந்தது. எம்.கே.ராதாவுக்கு இரட்டை வேடம்.
1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா.

சாத்வீகமான நடிகர். கோபத்தைக் கூட அடக்கமாக வெளிப்படுத்திய நடிகர்.
பின்னால் சில படங்களில் கதாநாயகர்களுக்கு அப்பா ரோல் செய்தார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்.கே. ராதாவை பார்க்கப் போயிருந்த எம்.ஆர்.ராதா சொன்னார்: ”அடப் பாவி! எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிற நான் நல்லா இருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நீ நோயாளியாகி விட்டாயே!”
எம்.ஜி.ஆருக்கு எம்.கே.ராதாவின் மீது மிகுந்த மரியாதை. அபூர்வசகோதரர்கள் படத்தை 1971ல் “ நீரும் நெருப்பும்” என்ற பெயரில் எடுத்து எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டார்.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது ஒரு நாள் கோட்டைக்கு போகும் போது திடீரென்று எம்.கே.ராதா வீட்டிற்கு காரை செலுத்தச் சொல்கிறார்.
”அண்ணே! எப்படி இருக்கீங்க” எம்.ஜி.ஆர் ஆரத்தழுவிக்கொள்கிறார்.
முதியவர் ராதா மிகவும் நெகிழ்ந்து போகிறார்.

கிளம்பத் தயாராகும் எம்.ஜி.ஆரைப் பார்த்து “ தம்பி! ராமு! எங்க வீட்டுல சாப்பிட்டு விட்டுப் போகலாமே!”
எம்.ஜி.ஆர் தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறார்:
“ உங்க வீட்டு சாப்பாடு இன்னும் என் வயித்துல இருக்குண்ணே!”
”ராமு..”எம்.கே.ராதா உடைந்து போய் விம்முகிறார்.
………………………………………………………..


1 comment:

  1. sema writeup, Sir.
    //“ உங்க வீட்டு சாப்பாடு இன்னும் என் வயித்துல இருக்குண்ணே!”

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.