பிரபஞ்சம் என்பது எங்கிருந்து வந்தது?எப்படி,ஏன் துவங்கியது? அது ஒரு முடிவுக்கு வருமா? எனில் எவ்வாறு முடிவு என்பது நிகழும்? என்ற கேள்விகளை முன் வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய மிகப் பிரபலமான
'A Brief History of Time' நூலில் அவர் ஐன்ஸ்டின், ஐசக் நியூட்டன், கலிலியோ பற்றி எழுதியுள்ளவை பற்றி..
ஐன்ஸ்டின் வாழ்க்கை என்பது அவரே சொன்னது போல சம நிலைக்கும் அரசியலுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது. ந்யூட்ரா பாம் அரசியலுக்கும் அவருக்குமான தொடர்பு அறியப்பட்ட விஷயம்.
ஐன்ஸ்டினுடைய ஆரம்ப அரசியல் நடவடிக்கை முதல் உலகப்போர் போது அவர் பெர்லினில் பேராசிரியராய் இருந்த போதே துவங்கியது. மனித உயிர் விரயமாவதைக் கண்டு வெறுப்புற்று உலகப்போருக்கெதிரான அவருடைய ஒத்துழையாமை போராட்டம்.
ந்யூட்ரா பாம் என்பதற்கடுத்து அவருடைய இரண்டாவது கவனம் யூதராக அவருடைய யூத ஆதரவு, யூதர்களுக்கு தனி நாடு. அவர் யூதராக இருந்தாலும் பைபிள் காட்டிய கடவுளுக்கு எதிரான கருத்துடையவர். யூத வெறுப்புக்கெதிரான அவருடைய கோட்பாடுகள் அவரை முழு யூத ஆதரவாளராக மாற்றியது.
அவருடைய தியரிகள் மீது கடும் தாக்குதலுக்குள்ளானது. ஐன்ஸ்டினுக்கு எதிரான அமைப்பு கூட நிறுவப்பட்டது. ஐன்ஸ்டினை கொலை செய்ய மற்றவர்களைத் தூண்டியதாக ஒரு ஆள் மீது குற்றம் சாட்டப்பட்டு ஃபைன் எவ்வளவு என்றால் ஆறு டாலர் !
ஐன்ஸ்டின் உணர்ச்சிவசப்படாமல் தான் அமெரிக்கையாக எதிர்ப்புகளை எதிர்கொண்டார். "100 Authors against Einstein" - இப்படி ஒரு புத்தகம் வெளி வந்த போது அவர் சொன்னார்: "If I were wrong , then one would have been enough!"
அவருடைய யூத ஆதரவு நிலை காரணமாக 1952ம் ஆண்டு இஸ்ரேல் ஜனாதிபதி பதவி தேடி வந்த போது ஐன்ஸ்டின் நிராகரித்தார். அரசியல் தனக்கு ஒத்து வராது என்றார். ஆனால் உண்மைக்காரணம் அவரே முன்னர் சொன்னது தான். " Equations are more important to me, because politics is for the present , but an equation is something for eternity."
.....
சர்.ஐசக் நியூட்டன் சுவாரசியமான ஒரு விஞ்ஞானி. அவருடைய 'பிரின்சிப்பியா மாத்தமேட்டிகா' தான் பிஸிக்ஸ் சப்ஜெக்டை ஆக்கிரமித்த முக்கிய தியரி. ராயல் சொசைட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். The first scientist ever to be knighted.
நியூட்டன் அவ்வளவு சிலாக்கியமான சந்தோஷகரமான மனிதப்பண்புகள் பெற்றவரல்ல.
தனது நோக்கத்திற்கு எதிரான ' இல்லை என்ற பதிலை அவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.
ஜான் ஃபளாம்ஸ்டீட் என்ற சக விஞ்ஞானியை அவர் படுத்திய பாடு.
அடுத்து கால்குலஸ் தியரி விஷயத்தில் மற்றொரு சகாவான கோட்ஃப்ரைட் லீப்னிஸ் மீது நியூட்டன் காட்டிய வன்மமும், துவேசமும் அவர் மீதான நீங்காத கறை.
நியூட்டனை காப்பாற்ற பிறரால் எழுதப்பட்டதாக பிரசுரிக்கப்பட்ட ஆதரவு கட்டுரைகள் அனைத்தையும் எழுதியவர் நியூட்டனே தான்!
லீப்னிஸ் மனமுடைந்து இறந்த போது நியூட்டனுக்கு வக்கிரமான திருப்தி!
கேம்பிரிட்ஜை விட்டு விலகிய பின் ராயல் மின்ட் வார்டன் பதவியை தன் நேர்மையற்ற நடவடிக்கைக்கும் பிறர் மீதான் கடும் அவதூறுக்கும் பயன் படுத்தியவர். இந்தப் பதவி மூலம் பலரை தூக்கு மரத்திற்கு அனுப்பியவர்.
......................
உலகம் எப்படி செயல்படுகிறது என்பதை உலகின் மீதான உன்னிப்பான கவனம் மூலம் புரிந்து கொள்ளமுடியும் என நம்பியவர் கலிலியோ.
சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்ற காப்பர்னிகன் தியரியை லத்தீனில் எழுதியவர். கடவுள்,மத நம்பிக்கை மிகுந்த கலிலியோவிற்கு வாழ்வு சவாலாகி விட்டது. கலிலியோ வாதிட்டார் : "பைபிள் என்பது விஞ்ஞான கோட்பாடுகள் பற்றி சொல்வற்கானது அல்லவே அல்ல. "
ஆனால் 1616ல்கத்தோலிக்க சர்ச் காப்பர்னிகானிஸம் தப்பானது.தவறானது என்று தடை விதித்து நிராகரித்து விட்டது.
1623ல் கலிலியோவின் நீண்ட நாள் நண்பர் ஒருவர் போப் ஆண்டவர் ஆன போது காப்பர்னிகானிஸத்திற்கு எதிரான தடையை நீக்க கலிலியோ முயற்சித்தார். ஆனால் முடியவேயில்லை. ஆனால் அரிஸ்டாட்லியன் - காப்பர்னிகன் தியரிகள் பற்றி ஒரு புத்தகம் எழுத வாட்டிகனின் அனுமதியை கலிலியோ வாங்கி விட்டார். 1632ல் பிரசுரமான அந்தப் புத்தகம் " Dialogue concerning the two chief world systems" உடனடியாக ஐரோப்பாவின் மகத்தான இலக்கிய, தத்துவ நூலாக பாராட்டப்பட்டது. போப் இந்தப் புத்தகம் வெளி வர அனுமதி தந்ததற்கு வருந்தி உடனே கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து காப்பர்னிகானிஸத்தை கை விடும்படி நிர்ப்பந்தித்தார்.
கலிலியோ ஒரு விசுவாசமான கத்தோலிக்கராகவும் இருந்தார். அதே நேரம் விஞ்ஞான சுதந்திரம் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் வீட்டுக்காவலில் இருந்த நிலையில் அவருடைய மற்றொரு நூல் ஹாலந்துக்கு கடத்தப்பட்டு பிரசுரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நூல் " Two New Sciences " தான் நவீன பௌதீகத்தின் ஆதியாகமம்!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.