Share

Mar 8, 2013

தமிழ்த் திரை கண்ட கதாநாயகிகள்




  'குமுதம் பெண்கள் மலர்' மார்ச் 2013 ல் பிரசுரமாகியுள்ள கட்டுரை.

     பானுமதி,அஞ்சலி தேவி போன்றவர்கள் 1940களிலேயே நடிக்க வந்து விட்டவர்கள்.
பானுமதி தமிழ் திரை கண்ட மாறு பட்ட தன்மை கொண்ட நடிகை.
மன இயல்பில் பானுமதி ஒரு மகாராணி! சொந்தக்குரலில் பாடி நடித்த நடிகை. அஷ்டாவதானி பானுமதி!
எம்.ஜி.ஆரும் சிவாஜியும்  1950களில் ஸ்திரப்பட்ட காலகட்டத்திலேயே ‘ நான் இவர்களுக்கு சீனியர் ‘ என்ற தீர்க்கமான நோக்கில் பானுமதி இயங்கியவர்.

’காதல் கனி ரசமே
சந்ததம் கலாவதி
மதி சேர் சரசே ’
என்று ‘மங்கையர்க்கரசி’யில் பி.யூ.சின்னப்பா சித்த ரஞ்சினி ராகத்தில் அஞ்சலி தேவியைப் பார்த்து பாடுவார்.

பானுமதியும் அஞ்சலி தேவியும் தெலுங்குப்பெண்கள்.



எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு பொருத்தமான ஜோடியாக பானுமதி கருதப்பட்டார். 
 ‘மலைக்கள்ளன்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘தாய்க்குப் பின் தாரம்’,’நாடோடி மன்னன்’,’காஞ்சித்தலைவன்’ ஆகிய படங்கள்.
சிவாஜியுடன் ‘ரங்கூன் ராதா’, ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘அறிவாளி’ ஆகிய படங்களில் பானுமதி நடித்தார்.
’அன்னை’ இவருடைய முக்கியமான படம்.
மிடுக்கு, கம்பீரம் நிறைந்தவர் என்பதால் இவரிடம் ஒரு MANLINESS இருந்தது.
ஜெமினி கணேசனுடன் பானுமதியைப் பொருத்திப் பார்ப்பது சிரமம்.ரொம்ப பின்னால் தான் ஜெமினி கணேசனுடன் பட்டத்து ராணி படத்தில் நடித்தார்.


1951ல் எம்.ஜி.ஆருடன் ‘மர்மயோகி’யில் துவங்கி ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மன்னாதி மன்னன்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தவர் அஞ்சலி தேவி.
சிவாஜியுடன் அஞ்சலி தேவி ’முதல் தேதி’  என்ற சீரியசான படத்தில் இணைந்து நடித்தார்.

ஜெமினி கணேசனுடன் நடித்த ’கணவனே கண் கண்ட தெய்வம்’ பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது. அதே வருடத்தில் ’டவுன் பஸ்’ படத்தில் கண்ணப்பாவின் ஜோடி.
ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’. ரஞ்சனுடன் ‘நீலமலைத்திருடன்’.
அஞ்சலி தேவி நடித்த ’அடுத்த வீட்டுப்பெண்’ தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படம். இவருடைய கணவர் ஆதிநாராயணராவ் தான் முக்கியப்படங்களில் இசையமைப்பாளர்.

1950களில் துவங்கி 1960களை  ஆக்கிரமித்தவர்கள்  சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி. சரோஜா தேவி தான் ஜூனியர்.
பிறமொழி நடிகைகளுக்கிடையே இளவரசியாக வலம் வந்தவர் வைஜயந்தி மாலா. இவர் மட்டுமே தமிழை தாய்மொழியாக கொண்டவர்! டி.ஆர்.ராமச்சந்திரனுடன் ‘வாழ்க்கை’. ஜெமினி கணேசனுடன் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’,’பார்த்திபன் கனவு’, ‘தேனிலவு’ ஆகிய படங்கள். சிவாஜியுடன் ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘இரும்புத்திரை’ ஆகியபடங்கள். எம்.ஜி.ஆருடன் ஒரே படம் ‘பாக்தாத் திருடன்’. ஜெமினி கணேசனுக்குத் தான் தமிழில் பொருத்தமான நடிகையாக அமைந்தார். அன்றைய ஒரே தமிழ் நடிகை வைஜயந்தி மாலா இந்தித் திரையுலகில் பிரபலமாகி அகில இந்திய நட்சத்திரமாகி விட்டார். மிக அழகான ஒரே தமிழ் நடிகையை தமிழ் திரையுலகம் முழுமையாய் பயன்படுத்த முடியாமல் போனது IRONY!


தமிழ் திரையுலகின் நடிகையர் திலகம் ‘தேவதாஸ்’, ‘மனம் போல் மாங்கல்யம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாயாபஜார்’, ‘பெண்ணின் பெருமை’, ‘மஹாதேவி’, ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘காத்திருந்த கண்கள்’, ‘ஆயிரம் ரூபாய்’, ‘கற்பகம்’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘பிராப்தம்’ என கொடி கட்டினார். கேமராவிற்கென்றே வடித்த முகம். இன்று வரை வந்துள்ள எந்த நடிகையாலும் சாவித்திரியின் வியக்கத்தக்க பரிமாணங்களைத் தொட முடிந்ததேயில்லை.


நாட்டியப் பேரொளி பத்மினி ‘இல்லற ஜோதி’, ‘எதிர்பாராதது’, ‘மதுரை வீரன்’, ‘தெய்வப் பிறவி’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’ போன்ற படங்களில் ஆழமான முத்திரை பதித்தவர். அதே நேரத்தில் ஹிந்தியில் ஹிந்தியில் ராஜ்கபூர் படங்களில் நடித்து அகில இந்திய நட்சத்திரம் ஆனார். ‘சித்தி’, ‘பேசும் தெய்வம்’, ‘இரு மலர்கள்’ படங்களைத் தொடர்ந்து பத்மினியின் தமிழ்த் திரை சாதனைப் படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ காணக் கண் கோடி வேண்டும்! ’வியட்நாம் வீடு’ நடித்த பிறகு ராஜ்கபூரின் மேரா நாம் ஜோக்கர் படத்தில் க்ளாமர் ரோலில் பத்மினி நடித்ததைப் பார்த்த தமிழ் ரசிகப்பெருமக்கள் மிரண்டு போனார்கள். பத்மினி தமிழில் சிவாஜிக்கு மிகப்பொருத்தமானவர்.


சரோஜாதேவிக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகள் தமிழில் மிக விசேஷமானவை. எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன்  துவங்கி திருடாதே, தாய்சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால் தான் பிள்ளையா என பல படங்கள். எம்.ஜி.ஆர் நடித்த அத்தனைப் படங்களிலும் சரோஜா தேவியுடன் நடித்தவை தான் விசேஷத்தரமானவை.
கல்யாண பரிசு முதல் பணமா பாசமா தாண்டியும் ஜெமினியுடன் சரோஜா தேவி பொருந்தி நடித்தவர். சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், புதிய பறவையாகி பிரமாதப்படுத்தினார்.


சௌகார் ஜானகி பாக்யலட்சுமி,  படிக்காத மேதை, பார் மகளே பார், புதிய பறவை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, பணம் படைத்தவன், இரு கோடுகள்,ஒளி விளக்கு, காவியத்தலைவி என்று சீராக நடித்தவர். இவர் ஆங்கிலம் பேசும் அழகு நேர்த்தியானது.
கே.பாலச்சந்தரின் ஆரம்ப கால கதாநாயகி சௌகார் ஜானகி தான். இவரோடு ஜெயந்தியையும் தான் சொல்ல வேண்டும். ஜெயந்தியின் நெகிழ வைக்கும் குரல் இரு கோடுகள், எதிர் நீச்சல், புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா ஆகிய படங்களின் தரத்திற்கு மெருகேற்றியது.

பானுமதி, அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, சௌகார் ஜானகி, ஜெயந்தி ஆகியோர் தமிழ் சினிமா சூழல், கதையம்சம், பாத்திர வார்ப்பு இவற்றிலிருந்த அபத்தங்களையும் மீறி தங்கள் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தினார்கள். இவர்களுடைய நாயகர்களிடம் கூடக் காணக்கிடைக்காத மனமுதிர்ச்சியை திரையில் நிறுவியவர்கள்!

ஜமுனா நடித்த மூன்று முக்கிய படங்கள். எம்.ஜி.ஆருடன் தாய் மகளுக்கு கட்டிய தாலி, சிவாஜியுடன் நிச்சயதாம்பூலம், ஜெய்சங்கருடன் குழந்தையும் தெய்வமும்.

ராஜசுலோசனா, எம்.என்.ராஜம் இருவரும் கதாநாயகியாகவும் வில்லியாகவும் தங்கள் நடிப்பால் முத்திரை பதித்த நடிகைகள்.

தமிழில் நடித்த தமிழ்ப் பெண் விஜயகுமாரி. தமிழ் உச்சரிப்பு சிறப்பு பற்றி சொல்லவேண்டும். நாடகபாணி நடிப்பு. சாரதா, குமுதம், போலீஸ்காரன் மகள், நானும் ஒரு பெண், பச்சை விளக்கு, பூம்புகார் இவருடைய திறமையை வெளிப்படுத்திய படங்கள். நடிப்பில், பாடல் காட்சியில் சற்று மிகைத்தன்மை தெரியும். 
தேவிகா ஒரு அற்புத நடிகை. எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த ’முதலாளி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். சிவாஜி கணேசனுக்குப் பொருத்தமான நடிகை. பந்த பாசம், அன்னை இல்லம், அன்புக்கரங்கள், ஆண்டவன் கட்டளை, கர்ணன், முரடன் முத்து, சாந்தி, நீலவானம் போன்ற படங்கள். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சிவாஜியுடன் மட்டும் ஓரே நேரத்தில் 13 படங்கள் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த சாதனையை மற்ற நடிகைகள் முன்னும் பின்னும் முறியடிக்க முடிந்ததில்லை. ஜெமினி கணேசனுடன் இதயத்தில் நீ, சுமை தாங்கி, வாழ்க்கைப்படகு என அருமையான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் ஒரே படம் ‘ஆனந்த ஜோதி’. 
கல்யாண் குமாருடன் நடித்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை காவியங்களாகியவை.


தமிழ்த் திரையுலகில் நல்ல வாய்ப்புகளும் நல்ல அந்தஸ்தும் கிடைக்கப் பெற்ற நடிகை கே.ஆர். விஜயா. நாடக பாணியில் நடித்தவர். சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா விடம் இருந்த GRACE கே.ஆர்.விஜயாவிடம் கிடையாது. செயற்கையான பாவனைகளை வெளிப்படுத்துபவர். கற்பகம் துவங்கி ஜெமினி, சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் நல்ல வாய்ப்புகள் வாய்க்கப்பெற்றவர். முத்துராமனுடன் அதிக படங்கள் நடித்தார். ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் துவங்கி விஜயகுமார், ஜெய்கணேஷ், ராஜேஷ் வரை ஜோடி சேர்ந்தவர்.

’தங்கச்சிலை’ ஜெயலலிதா தமிழ் சினிமாவின் ராஜகுமாரி. பாடல் காட்சிகளுக்காக மிக அதிகமாக  நவீன உடைகள் உடுத்தியவர். ஸ்ரீதரின் வெண்ணிற ஆடையில் அறிமுகமாகி எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் முதலாக எண்ணிலடங்கா படங்களின் கதாநாயகி. சிவாஜியுடன் கலாட்டா கல்யாணம்,எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, பட்டிக்காடா பட்டணமா வாக நிறைய படங்கள். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் என அன்றைய திரை நாயகர்களின் படங்களுக்கு பெருமை சேர்த்தார். நடிக்கிற காலங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தவர். 

நடிகைகளில் வைஜயந்தி மாலாவும் ஜெய லலிதாவும் கதாநாயகியாக மட்டுமே திரையில் தோன்றியவர்கள். பிற பிரபல நடிகைகள் போல பின்னால் அம்மா ரோல் போன்ற துணைக் கதாபாத்திரங்களில் இவர்கள் இருவர் மட்டும் நடித்ததேயில்லை.

வாணிஸ்ரீ, காஞ்சனா, ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, பாரதி போன்றோர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மட்டுமல்லாது ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் ஆகியோருக்கும் ஜோடியாக அன்று பிசியாக இருந்த நடிகைகள்.
’ஜீவனாம்சம்’ படத்தில் அறிமுகமான லட்சுமி தனித்துவமான பாணியில் பல படங்களில் வலம் வந்து ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்காக தேசீய விருது வாங்கினார்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் பிந்தைய கதா நாயகிகளில் சுஜாதா முக்கியமானவர். பெண்ணை மையப்படுத்திய கதைகளின் நாயகி. ரஜினி காந்த், கமல் ஹாசன், முத்துராமன் சிவகுமார், விஜயகுமார், ஜெய் கணேஷ் படங்களோடு சிவாஜி கணேசன் படங்களிலும் அன்று ஈடு கொடுத்த நடிகை. சீனியர் கே.ஆர். விஜயாவை விட சிறந்த நடிகை.

ஸ்ரீவித்யா  ( அந்த கண்கள்! ), ஜெயசித்ரா ( துரு துருவென்று வெடிப்பாக நகைச்சுவையுடன் ) ஆகியோர் அன்று எல்லா கதாநாயகர்களின் படங்களிலும் வலம் வந்ததற்கு கே.பாலச்சந்தர் படங்களில்( சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் ) அவர்களுக்கு கிடைத்த பலமான கதா பாத்திரங்கள் தான் காரணம்.
ஸ்ரீப்ரியா அன்றைய ரசிகனின் கனவுக்கு ஈடு கொடுத்த மிகத்திறமையான நடிகை. பெரும்பாலான பிற நடிகைகளிடம் காணக்கிடைக்காத நகைச்சுவையுணர்வு அதிகம். கமல் ஹாசன், ரஜினி இருவருக்குமே சவாலான கதாநாயகி.
ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ ஸ்ரீப்ரியாவை சாகாவரம் பெற்ற நடிகையாக்கி விட்டது.

தேவதை போல ஸ்ரீதேவி ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாகி பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , ஜானி, வாழ்வே மாயம், மூன்றாம்பிறை என்று தூள் கிளப்பி விட்டு இந்தி திரையுலகத் தாரகையாகி விட்டார்.

1970களில் பாலச்சந்தர் அறிமுகங்கள் தான் தமிழ் திரை நட்சத்திர அந்தஸ்தை எட்டினார்கள். இது ரஜினி, கமல், விஜயகுமார், ஜெய்கணேஷ் என்ற நடிகர்களுக்கும் கூடப் பொருந்தும். அந்த வகையில் பின் பகுதியில் ஷோபா வும் சரிதாவும் நட்சத்திர அந்தஸ்தை எட்டியவர்கள்.
ஷோபா மின்னி மறைந்த அபூர்வ தாரகை. நிழல் நிஜமாகிறது ,முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், பசி, மூடுபனி யாகி பனி போல,மின்னல் போல மறைந்தார். ’பசி’ படத்திற்காக தேசீய விருது வாங்கினார்.

சரிதா தப்புத்தாளங்களில் அறிமுகமாகி பாலச்சந்தரின் ஆஸ்தான கதாநாயகியாக மரோ சரித்ரா, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி என்று திரை சரித்திரத்தில் நின்றவர்.

பாரதி ராஜாவின் அறிமுகமாக எம்.ஆர்.ராதிகா, ராதா, ரேவதி முதலானோர்.மூவருமே தனித்துவமான பாணியில் பிரகாசித்தவர்கள். ராதாவின் சகோதரி அம்பிகாவும் நட்சத்திர நடிகையாக ஜொலித்தவர். சகோதரிகள் இருவருமே சிவாஜி, ரஜினி, கமல், மோகன் வெற்றிப்படங்களில் இடம்பெற்றார்கள். 

’நெஞ்சத்தை கிள்ளாதே’ யில் அறிமுகமாகி ’சிந்து பைரவி’யில் அகில இந்திய சிறந்த நடிகையாகத் தேர்வு பெற்ற சுஹாசினி.


எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, தளபதி படங்களில் வந்த ஷோபனா.


மணிரத்னத்தின் மௌன ராகம், அஞ்சலி ரேவதிக்கு நல்ல வாய்ப்புகள். முதல் மரியாதை ராதாவின் மதிப்பை உயர்த்திய படம். 
வசந்த் படம் கேளடி கண்மணி, பாரதி ராஜாவின் கிழக்குச் சீமையிலே ராதிகாவை கனப்படுத்திய படங்கள்.
முந்தானை முடிச்சு மூலம் அறிமுகமான ஊர்வசி நகைச்சுவை நடிப்பில் ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா வழி வந்தவர். மூவருமே நகைச்சுவையில் வெவ்வேறு பாணி. 
கமல் ஹாசன் சொன்னது -” ஊர்வசி என்ற ராட்சசி! ” மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் படங்களில் இவரது நடிப்பு தனித்துவமானது. நகைச்சுவையில் சிரிப்பு நடிகைகளே தொடாத பரிமாணங்களையெல்லாம் இன்று வரை நடிப்பில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

பூர்ணிமா ஜெயராம் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங், தங்கமகன் படங்களில் நடித்ததன் மூலம் பேசப்பட்டவர்.


பிறமொழி பெண்கள் தமிழ் பேசி நடித்த தமிழ் திரையில் டப்பிங் பிரபலமாகி பல நடிகைகள், நடிகர்கள் சொந்தக்குரல் தெரியாத விசித்திர சூழல் ஏற்பட்டது. டப்பிங் தியேட்டர்கள் பிசியாகி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் பெருகி விட்டனர். 1980களில் ஹேமா மாலினி, அனுராதா என்ற இருவர் பல கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசினர். பின்னர் வந்த பல நடிகைகளுக்கு நிரந்தரமாக டப்பிங் குரல் தான்!

நதியா, குஷ்பு இருவரும் ’செல்வாக்கு’ பெற்ற நடிகைகள். இவர்களிடம் ரசிகப்பெருமக்கள் நெஞ்சைப் பறி கொடுத்தார்கள். நதியா, நதியா, நதியா என்று ஒரு OBSESSION. குஷ்புவுக்கு இருந்த CRAZE பற்றி சொல்ல வார்த்தை கிடையாது. கோயில் பெற்ற நடிகை!
அமலா தமிழ் திரை கண்ட விஷேச தேவதை. A WINSOME ANGEL!
கௌதமி  பானுப்ரியா இருவரின் பங்களிப்பும் ஒரு குறிப்பிட்ட சமயங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியானது.
 கௌதமி மென்மையான நடிகை. ரஜினி, கமல் இருவருக்கும் அந்த நேரங்களில் கதாநாயகி. 
பானுப்ரியா பற்றி சொல்லவேண்டுமானால் சத்யராஜ் வார்த்தைகளில் ’நடிப்பிலே அவள் ஒரு சாவித்திரி! நடனத்தில் அவள் ஒரு பத்மினி!’

காதல் கோட்டை படத்தின் மூலம் ஒரு நல்ல ரவுண்டு வந்தவர் தேவயானி.
இவர்களுக்குப் பின் வந்தவர்களில் தமிழ் திரை உலகின் முக்கிய நடிகைகள் இருவர். சிம்ரன், ஜோதிகா.
விஜய், அஜித், விக்ரம், சூர்யா படங்களில் மட்டுமல்லாமல் கமல் ஹாசனுடன் ஜோடியாக நடித்து உச்சத்துக்கு சிம்ரன், ஜோதிகா இருவரும் சென்றார்கள்.

ஜோதிகா ரஜினி படம் சந்திரமுகியில் பிரபுவுக்கு ஜோடியாக டைட்டில் ரோலில் நடித்து அமர்க்களப்படுத்தினார். கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு இரு படங்கள். விஜயுடன் ’குஷி’, விக்ரமுடன் ’தூள்’,அஜீத்துடன் ’முகவரி’ சூர்யாவுடன் ’காக்க காக்க’, ’பேரழகன்’, ’ஜில்லுனு ஒரு காதல்’ ஆகிய படங்கள் ஜோதிகாவுக்கு முக்கிய படங்கள்.

சிம்ரன் கமலுடன் ’பம்மல் கே.சம்பந்தம்’, ’பஞ்ச தந்திரம்’ இரு படங்கள். விஜயுடன் ’துள்ளாத மனமும் துள்ளும்’, ’பிரியமானவளே’, அஜீத் உடன் ’வாலி’ மறக்கமுடியாதவை.

ஓரளவுக்கு சிம்ரனின் நடிப்பு பாணியை சரோஜா தேவியுடனும் ஜோதிகாவின் நடிப்பை ஜெயலலிதாவுடனும் ஒப்பிட முடியும்.







7 comments:

  1. ஜெயலலிதா பாட்டும் பரதமும் படத்தில் சிவாஜி க்கு அம்மா வாகவும் வருவாரே..[Second half la]

    ReplyDelete
  2. சாரதா தமிழில் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்டவர். ’குங்குமம்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தார். பின் மலையாளத்தில் பிரபலமான இவர் தெலுங்குப்பெண். சிரிப்பு நடிகர் சலம் அவர்களின் மனைவி. மலையாளத்தில் ஹிட் ஆன துலாபாரத்தின் தமிழ்,ஹிந்தி ரீமேக்கிலும் நடித்தவர்.பின்னர் ஞானஒளி படத்தில் சிவாஜி மகளாக, நினைத்ததை முடிப்பவனில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர்.

    கிரிஷ்! மார்க்கெட்டில் இருக்கும்போது கதாநாயகியாய் நடித்த படத்திலேயே அம்மா வேஷம், அக்கா வேஷம் போடுவது வேறு. மார்க்கெட் போன பின் வேறு வழியில்லாமல் அம்மா வேஷம், அக்கா வேஷம் போடுவது,துணைக்கதாபாத்திரங்களில் நடிப்பது வேறு.

    ReplyDelete
  3. எம்.ஜி.ஆர் பானுமதி அம்மாவை “முதலாளி” என்றே அழைத்ததாக படித்துள்ளேன்...உங்கள் அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டேன்..கருத்து வேறுபாடிகளைக் கடந்து வசீகரிக்கிறது ஒவ்வொருப் பதிவும்...

    ReplyDelete
  4. சுஹாசினி,ஷோபனா இருவரையும் பதிவில் சேர்த்து விட்டேன்.

    ReplyDelete
  5. ஒரே பதிவில் தமிழ் திரைப்பட உலகத்தின் முக்கிய கதாநாயகிகளைப் பற்றி அபாரமாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.