Share

Feb 2, 2013

கிருஷ்ணன் நம்பி
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை ’கிருஷ்ணன் நம்பியின் நினைவு’க்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

 சமர்ப்பணம் என்பது ஒரு பக்கத்தில் ஒரு வார்த்தையில் வருகிற விஷயம். ஆனால் இது உள்ளடக்கியுள்ள விஷயம் எப்போதும் பெருங்காவியம்.
கமலம் குறுநாவல் தொகுப்பை தி.ஜானகிராமன் சமர்ப்பணம் செய்திருந்த விதம் இப்படி “ இந்த தொகுப்பில் உள்ள கதையொன்றில் ஒரு பாத்திரமாக வருகிற என் இரண்டு சகோதரிகளின் கணவர் ராமச்சந்திரனுக்கு இந்நூல் சமர்ப்பணம். “
இந்த சமர்ப்பணம் சொல்லிவிடுகிற குடும்ப ரகசியம்! 
இரண்டு வருடம் முன் திருப்பூர் புத்தக கண்காட்சியில் 'உயிர்மை' ஸ்டாலில் சாரு நிவேதிதா எழுதிய ’சினிமா சினிமா’ என்ற நூலை தற்செயலாகப் புரட்டிய போது எதிர்பாராத ஆச்சரியம். சமர்ப்பணம் R.P.ராஜநாயஹத்துக்கு.


சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல்கள் எட்டு படித்திருக்கிறேன். க.நா.சு, ஜீவா, சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, பிரமிள், தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கு. அழகிரிசாமி ஆகிய மகத்தான ஆளுமைகள் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைகள். அரவிந்தன் தொகுத்தவை.கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை படித்த போது உடைந்து போய் அழுது விட்டேன். நம்பியும், சுராவும் பார்த்த ( ஜே.ஜே யில் கூட விவரிக்கப்பட்டிருக்கும் )அந்த சூரியோதயக்காட்சி! இதை சுந்தர ராமசாமியிடம் அப்போது தொலைபேசியில் தெரிவித்த போது இன்னும் சிலர் கூட நம்பி நினைவோடை படித்து விட்டு கலங்கிப் போனதாகத் தன்னிடம் தெரிவித்ததாக சொன்னார்.
“No tears in the writer, no tears in the reader. No surprise in the writer, no surprise in the reader.”-
-Robert Frost ஜே.ஜே சில குறிப்புகளில் எடுத்தவுடனே சு.ரா ஜே.ஜே வின் மரணம் பற்றி ஆல்பெர் காம்யு இறந்ததற்கு மறு நாள் ஜே.ஜே. இறந்ததாகக் குறிப்பிட்டு விட்டு தமிழிலும் நாற்பதை ஒட்டிய வயதில் புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு. அழகிரி சாமி, மு.தளைய சிங்கம் என்று எத்தனை இழப்புகள் என்பார்.
புதுமைப் பித்தன், கு.ப.ரா., கு.அழகிரி சாமியெல்லாம் படித்து முடித்திருந்த நேரம். சுந்தர ராமசாமி மூலம் தெரிய வந்த கிருஷ்ணன் நம்பி, பிரஞ்சு எழுத்தாளன் ஆல்பெர் காம்யூ, இலங்கை எழுத்தாளன் தளைய சிங்கம் இவர்களெல்லாம் யார்?


என் தேடலில் அன்று கிருஷ்ணன் நம்பி, ஆல்பர் காம்யூ, மு.தளைய சிங்கம் இடம் பெற்றது இங்கனம் தான். 


சில வருடங்களுக்கு முன்  எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார்: ”தளைய சிங்கத்தை நினைத்தால் இனி ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது!” 
கிருஷ்ணன் நம்பி கூட காலத்திற்கு முந்தியே நாற்பதையொட்டிய வயதில் தான் மரணமடைந்திருக்கிறார். அப்போது 44 வயதாம்.
தி.ஜானகிராமனின் எழுத்து மீது கிருஷ்ணன் நம்பிக்கு இருந்த ப்ரேமை!
சு.ரா சொல்வது : ’ஜானகிராமன் மீதான அவனது வியப்பு கடைசி வரை நீடித்திருந்தது. ஜானகிராமனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய கனவு. நேரில் பார்த்தால் என்ன பேசுவாய் என்று கேட்டேன். ஒன்றுமே பேச மாட்டேன். அவரைப் பார்க்கப் போவதற்கு முன் ஒரு தங்க மோதிரத்தைச் செய்து ரெடியாக பாக்கெட்டில் வைத்திருப்பேன். அவரைப் பார்த்ததும் கையைக் கொஞ்சம் நீட்டுங்கள் என்று சொல்வேன். அவர் நீட்டுவார். நான் அந்த மோதிரத்தை அவர் கையில் போட்டு விட்டு எதுவும் பேசாமல் அப்படியே வந்து விடுவேன் என்பான். ஆனால் அப்படி தங்க மோதிரத்தைப் போடும் வாய்ப்பு அவனுக்கு வாழ்க்கையில் கிடைக்கவேயில்லை.’கிருஷ்ணன் நம்பி, ஆதவன் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட தி.ஜானகிராமன் சாதனை எழுத்து பற்றி இந்தத் தலைமுறையினருக்கு எவ்வளவோ சொல்லியிருப்பார்களே!


ஜே.ஜே படித்த வேகத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தால் 1964ல்வெளியிடப்பட்டு பதினேழு வருடங்களாக அன்று 1981லும் கூட விற்பனையில் இருந்த 
(எவ்வளவு வருடமாக ஒரே பதிப்பு விற்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது!)கிருஷ்ணன் நம்பியின் ’நீலக்கடல்’ வாங்கிப் படித்து விட்டு நானும் என் நண்பன் M.சரவணனும் அசந்து போய் விட்டோம்.
குழந்தையுலகத்தை அழகாக கண் முன் விரித்துக்காட்டும் அதிசயக்கலைஞன்!  
அந்த சிறுகதைத் தொகுப்புக்கு அழகான சின்ன முகவுரை கிருஷ்ணன் நம்பி எழுதியிருக்கிறார். அந்த முகவுரையை மட்டுமே நாங்கள் எத்தனை முறை அப்போதெல்லாம் படித்திருக்கிறோம் !


கிருஷ்ணன் நம்பியின் முழுத்தொகுப்பு இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இலக்கியக்குறிப்புகள், கட்டுரைகள், கடிதங்கள், என்று எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்ற குறிப்புடன் வெளி வந்துள்ள  இந்த நூலை வாங்கியவுடன் ’நானும் கடவுளும் அறிஞனும்’ தலைப்பிலான  அந்த நீலக்கடல் முகவுரையைத் தான் தேடினேன். 
அதனை இங்கே தந்துள்ளேன்.  கிருஷ்ணன் நம்பி நீலக்கடல் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முகவுரை.

நானும் கடவுளும் அறிஞனும்


நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.


...............................................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_22.html

                    

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.