Share

Feb 12, 2013

ஜெமினி கணேசன்




 தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம். மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா ஆகியவர்கள்.



19 வயதில் பாப்ஜியைத் திருமணம் செய்துகொண்டவர். அதன் பிறகு நடிகைகள் புஷ்பவல்லி, சாவித்திரி இருவருடனும் வாழ்ந்து குழந்தைகள் தந்தவர். பின்னும் ராஜஸ்ரீயோடு affair. 78 வயதில் ஜூலியானாவை மணந்து பிரிந்து இப்போது 85 வயதில் வாழ்க்கையின் சலிப்பைத் தாங்க முடியாமல் மூச்சை நிறுத்திக் கொண்டவர்.



‘ உங்கள் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதட்டுமா? ‘ என்று ஒரு சினிமா பத்திரிக்காசிரியர் ஜெமினி கணேசனிடம் கேட்டார். “நீ எதுக்குடா எழுதணும்? Even a Rickshaw Wala in the street corner knows my whole history"  – ஜெமினியின் பதில் இது!

தன்னுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜெமினி. "My life is a open book. You should read it to know what not to do."

1947இல் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் 1953ஆம் ஆண்டுதான் – தன்னுடைய 33 வயதில் – கதாநாயகனானார். அன்றைய பிரபல நடிகைகள் அனைவருடனும் நடித்தார். சாவித்திரி, அஞ்சலிதேவி, வைஜயந்தி மாலா, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, ஜெயந்தி, காஞ்சனா என்று எல்லோருக்கும் பொருந்துகிற மாதிரியான கதாநாயகன்.

நாடகப் பின்னணி கொண்டவர்களே சினிமாவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் அத்தகைய பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவர். அன்றைய காலத்தில் நன்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த மிகச்சிலரில் ஒருவராக இவரைச் சொல்லலாம். அபாயமான காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். நடிகராவதற்கு முன்னரே, கல்லூரி மாடியிலிருந்து குதிப்பாராம். ‘ எப்படிக் குதித்தாய்? “ என்று பிரின்சிபால் பதறிக் கேட்டபோது மீண்டும் மாடியேறி குதித்து ‘இப்படித்தான்’ என்றாராம். புதுக்கோட்டை மகாராஜா இவர் தலையில் ஆப்பிளை வைத்துக் குறிபார்த்து ஆப்பிளைச் சுடும் பயிற்சிக்கு அடிக்கடி ஒத்துழைத்த தைரியசாலி.

சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர் இதைக் குறிப்பிட்டு ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார். ஆனாலும் தன்னை விடச் சாதாரண நடிகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களில் கூட நடித்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவர் நடித்திருந்தார்.

எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் எம்.ஜி.ஆரிடமும் சிவாஜியிடமும் அவர்களது பிரம்மாண்ட இமேஜ் அவர்களுடைய மாறுபட்ட பாணியையும் மீறி மறைக்க முடியாத விஷயமாயிருந்தது. ஆனால் ஜெமினியால் சராசரி மனிதனை மிக இயல்பாகத் திரையில் காட்ட முடிந்தது.

சரித்திரப் படங்கள், சமூகப் படங்கள் என்று பல வகைப் படங்களைத் தந்தவர். எந்த அளவுக்கு ‘ கல்யாணப் பரிசு’, ‘சுமை தாங்கி’ என்று சோகமான படங்களில் நடித்தாரோ அதே அளவு ‘மிஸ்ஸியம்மா’, ‘யார் பையன்’ என்று நகைச்சுவைப் படங்களிலும் நடித்தவர் ஜெமினி.  இவருடைய ‘சாந்தி நிலையம்’, ‘ சங்கமம்’ அந்தக் காலத்தின் மற்ற வண்ணப் படங்களை விட வண்ணத்தில் தரமானவை.

‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக இவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.

ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் அவருக்காகப் பாடிய பாடல்கள், அவர் நடித்த படங்கள் ஆகியவை எப்போதும் இந்தக் காதல் மன்னனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

ஜெமினி கணேசனுக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்த பின் ( மூன்றாவது பெண்ணுக்கு ஹிந்தி நடிகை ரேகா வயது தான் . சர்ச் பார்க் கான்வென்டில் இருவரும் ஒன்றாக படித்தார்கள்.நான்காவது பெண் ’ஜிஜி’ கூட ரொம்ப பின்னால் தான் பிறந்தவர் ) புஷ்பவல்லியுடன் affairஏற்பட்டது .புஷ்பவல்லிக்கு முன் மனைவி பாப்ஜி தவிர வேறு பெண்களை தொட்டதே கிடையாது என ஜெமினி சொன்னார்.

1940களின் பின்பகுதியில் புஷ்பவல்லி பெரிய திரை நட்சத்திரமாய் இருந்த காலத்தில் ஜெமினி அவர் பெயருக்கு காரணமான ஜெமினி ஸ்டுடியோவில் உத்தியோகம் பார்த்தவர்.அதோடு சினிமாவில் (புஷ்பவல்லி கதாநாயகியாய் நடித்த படத்தில் கூட)அப்போது ஜெமினி கணேசன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்.

1951ல் செப்டம்பர் 22தேதியில் பீச்சில் ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமுள்ள நடிகை புஷ்பவல்லியை சந்திக்க நேர்ந்தது அவர் வாழ்வையே புரட்டிப்போட்டது. புஷ்பவல்லி ஜெமினியிடம் தன் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினார். (புஷ்பவல்லிக்கு ஏற்கனவே அப்போதே ஒரு மகன் பாபுஜி.இந்த பாபுஜி பின்னால் குட்டி பத்மினியின் அக்காவை மணந்தார் . வியட்நாம் வீடு படத்தில் சிவாஜியின் மகளுக்கு காதலனாக நடித்தார்.)
ஜெமினியின் காரை புஷ்பவல்லி ஓட்டிப் பார்க்க விரும்பினார். காரை ஓட்டிப் பார்த்த புஷ்பவல்லியுடன் அன்றே சரீரத்தொர்பு ஏற்பட்டு விட்டது. இதை ஜெமினியே கூறினார்.


அதிகாலை மனைவி பாப்ஜி வீட்டில் திண்ணையில் குற்ற உணர்வுடன் வந்து படுத்துக்கிடந்தார் . பாப்ஜி வெகுளியாய் ஜெமினியின் தாயாரிடம் " அம்மா! உங்க பிள்ளைய பாருங்க இங்கே!"
தான் மெம்பராய் இருந்த கிளப் ஒன்றிற்குப் போய் மூன்று நாட்கள் அங்கேயே கிடந்தார். புஷ்பவல்லி அவரை தேடி அழுதுகொண்டே வந்தார்."உங்களை எங்கே எல்லாம் தேடுவது?"
அப்படி ஏற்பட்ட உறவில் தன் தாய், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளோடு ஒரு Distance வந்துவிட்டது . புஷ்பவல்லி Very possessive lady!

புஷவல்லிக்கு இரண்டு பெண்குழந்தைகள். ரேகா,ராதா. சாவித்திரியை வீட்டுக்கு கூட்டிவந்த போது விளையாட்டாக புஷ்பவல்லி " சாவித்திரியையும் கட்டிக்கங்க " என்று சொன்னபோது வானத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் "ததாஸ்து " என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் விஷயம் சீரியஸ் ஆகி சாவித்திரி ஜெமினியுடன் இணைந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் புஷ்வல்லி தான். வாகினி ஸ்டுடியோவில் சாவித்திரி மீது காரை ஏற்ற முயற்சிக்கிற அளவில் கடுமையான கோபம். சாவித்திரி பிணைப்பு அதிகமானவுடன் புஷ்பவல்லி குடும்பத்தை விட்டு ஜெமினி ஒதுங்கினார். ஒதுங்குதல் என்பதை விட புஷ்வல்லிக்கும் ஜெமினிக்கும் கடும்பகை அப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.



சாவித்திரிக்கு இரண்டு குழந்தைகள். விஜயசாமுண்டீச்வரி , சதீஷ். சாவித்திரியுடன் கருத்து வேறுபாடு வந்த பின் வந்த 'பாமா விஜயம் ' ராஜஸ்ரீ கொஞ்சம் வித்தியாசமாக ஒரு நிபந்தனை விதித்தார். ' உங்கள் முதல் மனைவி பாப்ஜியை விவாக ரத்து செய்து விடுங்கள்.'ஜெமினி இந்த நிபந்தனை ஏற்படுத்திய கடுப்பில் " என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்கு யோக்கியதை கிடையாது " என கடுமையாக ராஜஸ்ரீயிடம் சொல்லி விட்ட பின் அந்த உறவு அறுந்தது.

1970 களின் மத்தியில் ஜெமினியின் வீட்டிற்கு கமல் ஹாசன் தான் ஹிந்தி நடிகை ரேகாவை விருந்தாளி (!)யாக அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சாவித்திரி இறந்த போது புஷ்பவல்லி அந்த சாவுக்கு வந்திருந்தார்.


பாப்ஜியின் நான்கு மகள்கள், புஷ்பவல்லி யின் இரண்டு மகள்கள் , சாவித்திரியின் மகள் எல்லோரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.சதீஷ் ஜெமினியின் வீட்டில் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். ஜெமினி கணேசன் 64வயதில் துப்பாக்கியால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சாவித்திரி மகன் சதீஷ் குறித்த சர்ச்சை தான் காரணம் என்று ஹேஸ்யம் உண்டு .


ராஜஸ்ரீ உறவும் கசந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் சாவித்திரியின் மறைவுக்கும் பின் சிலவருடங்கள் கழிந்து, ஜெமினி ஒரு பேட்டியில் சொன்னார்." இவ்வளவு வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மை புரிகிறது. என் முதல் மனைவி பாப்ஜியைத் தான் நான் மிகவும் காதலிக்கிறேன் என்கிற விஷயம் இவ்வளவு ஆண்டு கால வாழ்வுக்குப் பின் தான் தெரிகிறது ."
ஆனால் அதற்கும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் ஜூலியானா வை திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணிடம் அடியும் வாங்கினார்.

திருமண பந்த சங்கிலி கனமானது என்பதால் தான் அதனை இழுக்க ஆணும் பெண்ணுமாக இருவர் தேவைப் படுகிறது. ஆனால் மிகவும் கனமானது என்பதால் சில சமயம் மூன்றாவது பெண்ணும் வந்து விடுகிறாள் போலும்.சில சமயம் பெண்ணுக்கு கூட ஒரு ஆணோடு இன்னொரு ஆண் வர நேரிடுகிறது.

The chain of Matrimony is so heavy, it takes two to carry it.
Sometimes ...three.. four.. five!
ஜெமினியுடன் திருமண பந்த சங்கிலியை இழுத்த ஐந்து பெண்கள்!
ரோஹித் அம்மா விஷயம் உண்மையென்றால் ஆறு பெண்கள்.


தி.ஜானகிராமன் எழுத்து?படைப்புகள்?
தத்துவம், ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
இப்படி திஜாவின் கதைகளுக்கு சுந்தரராமசாமி விளக்கம் தந்திருக்கிறார்.
'திஜா தத்துவம்,ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று நம்பியவர். மனிதனின் பிறழ்வையும் ,தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். இன்று வரை வந்த எழுத்தாளர்களில் வசீகரமானவர் தி ஜானகிராமன் ' என ஜானகிராமனின் எழுத்தைப் பற்றி மதிப்பிட்டார்.

'ரஷிய கம்யூனிசம்' என்பது கார்ல் மார்க்சுக்கு பிறந்த illegetimate child என்று அந்நாளில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் ஆட்லீ தாக்கினார்.

பழைய ஹாலிவுட் படம் “A man for All Seasons.” இதில் ஒரு Witty dialogue.
“Every second bastard born is fathered by a priest.”
தேவ குரு என்ற பிரகஸ்பதி தன் சகோதரன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டதன் மூலம் பிறந்தவர் தான் பரத்வாஜ முனிவர். துரோணரின் மூதாதை பரத்வாஜ முனிவர்.

தாஸ்தயேவ்ஸ்கி யின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இந்த சகோதரர்களின் அப்பா பியோதருக்கு ஒரு illegetimate sonஉண்டு. பியோதரிடம் சமையல் வேலை செய்கிற வேலைக்காரனாக இருப்பான் அந்த முறை தவறிப் பிறந்த மகன் பாவல் ஸ்மார்டியாகோவ் .

சமீபத்தில் ஆந்திர playboy கவர்னர் 'என்.டி. திவாரியின் illegetimate child நான் ' என 29வயது டெல்லி லாயர் ஒருவர் தன்னைப் பற்றி கூறினார். அவர் பெயர் ரோஹித். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.


இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஒரு இளைஞன் ' ஒரு மாணவி என் காதலி ' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தான். அந்த இளைஞனின் பெயர் கூட ரோஹித் தான் ! அந்தப் படம் வெளி வரவே இல்லை. ஆனால் அவன் வேறு ஒரு விதமாக பிரபலமானான். " ஜெமினி கணேசன் என் தந்தை. என் தாயார் லண்டனில் ஒரு டாக்டர். அவருடன் ஜெமினி கணேசனுக்கு ஏற்பட்ட காதலில் நான் பிறந்தவன்.ஜெமினி கைவிட்டதால் என் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளானார் " என வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த
' தாய்' பத்திரிகையில் பேட்டி கொடுத்தான். ஜெமினி இதை"அப்பட்டமான பொய்.நான் அவனில்லை " என வன்மையாக மறுத்தார். உடனே அந்த இளைஞன் " சிங்கப்பூரில் எனக்கு நிறைய சொத்து இருக்கிறது. நான் சொத்துக்காக ஜெமினியின் மகன் என பொய் சொல்லவில்லை.என் நண்பர்களிடம் என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள். Rohit is a gemஎன்று சொல்வார்கள். நான் ஜெமினிக்கு பிறந்தவன் என்பது உண்மை " என்று வலியுறுத்தி மீண்டும் சொன்னான். ஏனோ அதன் பிறகு அந்த விஷயம் பற்றி வேறு எந்த செய்தியும் வெளிவரவே இல்லை.

அன்றைக்கு ஜெமினி வாழ்வில் ஒரு ரோஹித். இன்றைக்கு திவாரி வாழ்வில் வேறொரு ரோஹித்! பெயர் ஒற்றுமை ஒரு coincidence!



நாற்பது வருடங்களுக்கு முன் ' சாவன் பாதன் 'இந்தி படத்தில் நடித்த ரேகா பேட்டி கொடுத்தார். " என் தந்தை பிரபல தமிழ் நடிகர். "
இதில் பெரிய ரகசியம் ஏதும் இல்லை. சினிமாப் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் உடனே ஜெமினி கணேசன் நாற்காலியை திருப்பிப்போட்டு உட்கார்ந்து
 " ஆமாம் பிரதர்! புஷ்பவல்லி யும் நானும் காதலித்து ஒன்றாக வாழ்ந்த போது பிறந்தவள் தான் ரேகா! நாங்கள் டைவர்ஸ் செய்துகொள்ளத்தேவையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நானும் புஷ்பவல்லியும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை." என்று கூலாக சொன்னார்!
 

“There are illegetimate parents,
but I don't believe there are any illegetimate children.”
-Rick Warren

................................................................


R.P.Rajanayahem's father with Gemini Ganesh

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.