Share

Jan 31, 2013

ஏதோ கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கே!



பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ’எனக்கு இந்த பத்ம பூஷன் விருது வேண்டாம்’ என்று நிராகரித்ததை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர் கால தாமதமாக வந்த விருது என்பதால் நிராகரிக்கிறாராம். சரி.அதோடு அவர் நிறுத்தி விடவில்லை. ’பாரத் ரத்னா விருது என்றாலாவது பரவாயில்லை......வாங்கியிருப்பேன்.....’ என்று தொடர்ந்து சொல்கிறார்!

இந்திய அரசாங்க விருதுகள் தேவை தானா என்பது முக்கிய கேள்வி.
 
நிற்க.
 எஸ்.ஜானகி இப்படி பகீரங்கமாக ’பாரத் ரத்னா விருது என்றால் வாங்கியிருப்பேன்’ என்பதன் அபத்தம் பற்றி யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

கமல் ஹாசன் தவிர இன்று இந்திய திரையுலகைச் சார்ந்த வேறு எவருக்குமே பாரத் ரத்னாவுக்கு தகுதியிருப்பதாகத் தோன்றவில்லை.
பாராட்டியவர்கள் யாரும் Janaki Amma ! Please don’t think too much of yourself !” என்று சொல்லவே இல்லை.

இந்தியாவில் பாரத் ரத்னா விருது பெற்ற பெண்கள் நால்வர்.
இந்திரா காந்தி, மதர் தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோர். இவர்களோடு தோளோடு தோள் நிற்க ஜானகி ஆசைப்படுகிற அபத்தம் பற்றி யாருக்கும் உறைக்கவே இல்லை.


 இங்கே பத்மஸ்ரீ விருது கூட உன்னத கலைஞன் நாகேஷுக்கு கிடைத்ததில்லை.
எம்.எஸ்.விக்கு கூட பத்ம விருது கிடைத்ததில்லை.

    இசைக்கலைஞர்கள் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லாகான், பண்டிட் பீம்ஸென் ஜோஷி ஆகியோர். இவர்களோடு ஜானகியை பாரத் ரத்னா வாகப் பொருத்திப் பார்க்கமுடியுமா!

இவர்களில் லதா மங்கேஷ்கர் மட்டும் திரை இசை பின்னனி பாடகி. இதனால் தான் ‘எனக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தால் வாங்கியிருப்பேன்’ என்று ஜானகி சொல்கிறார் போலும். பாவம் பி.சுசிலா! அந்த அம்மா எஸ்.ஜானகிக்கு சீனியர். அதோடு சுசிலா மெல்லிசை திரையிசைப் பாடகி என்ற அளவில் ஜானகிக்கு எந்த வகையிலும் கொஞ்சமும் குறைந்தவரே அல்ல!


தமிழ் நாட்டில் இருந்து பாரத் ரத்னா விருது பெற்றவர்கள் ராஜாஜி( பாரத ரத்னா விருது முதன் முதலில் உயிரோடு இருக்கும்போதே பெற்றவர்) சர். சி.வி.ராமன், திருத்தணிக்காரரை சேர்க்கலாம் என்றால் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், ( ஆந்திராக்காரர் என்று சொல்பவர்கள் சொல்வார்கள் ) காமராஜர், எம்.ஜி.ஆர் ( மலையாளி என்று சொல்லி விடாதீர்கள்.) எம்.எஸ். சுப்புலட்சுமி, அப்துல் கலாம். இந்த வரிசையில் நாம் வேற்று மொழி எஸ். ஜானகியையும் பெருந்தன்மையாக பொருத்திப் பார்க்க முடியுமா? CALIBER ஒத்துப் போகுமா?

இந்த பாரத் ரத்னா விருது வழங்கப்பட்ட ’வரிசை’ பார்த்தால் கூட வேடிக்கையாக இருக்கிறது. இன்று வரை 41 பேர் பாரத ரத்னா என தீர்மானிக்கப்பட்டிருக்கிறார்கள்.(?!) ஒருவர் வெளி நாட்டுக்காரர் நெல்சன் மண்டேலா. மதர் தெரசாவை வெளி நாட்டுக்காரர் என்று சொல்ல முடியுமா?
எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது கொடுத்த பின் இரண்டு வருடம் கழித்து பி.ஆர்.அம்பேத்கரை விட்டு விட்டோமே என்று ஞாபகம் வந்து பாரத் ரத்னா விருதை சட்ட மேதைக்கு கொடுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு கொடுத்து மூன்று வருடம் கழித்துத் தான் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லப் பாய் பட்டேலுக்கு சாவகாசமாக பாரத் ரத்னா விருது கொடுத்திருக்கிறார்கள்!  
………….

 பாலாவின் ’அவன் இவன்’ படத்தைப்பற்றி…
இந்தப் படத்தில் விஷால், ஆர்யா, ஜி.எம் குமார் நடிப்பு பற்றி சொல்ல வேண்டும். 

இந்த மூன்று பேரின் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா கண்ட முழுமையான கதாபாத்திரங்கள் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவை.
ஒரே வார்த்தை தான்.விஷாலுக்கு அந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும். விஷாலின் நடிப்பைப் பற்றி விவரிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ரொம்ப பிரமாதம்! ’தெய்வத்திருமகள்’ விக்ரம் ’அவன் இவன்’ விஷாலுக்கு ஈடாகவே முடியாது.

ஆர்யா ரொம்ப லூஸ் டாக் செய்வது பற்றி சில விமர்சனங்கள் சரியல்ல. அப்படிப் பட்ட நபர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. ஆர்யா பாத்திரத்திற்கு நல்ல நியாயம் செய்திருக்கிறார். அட்டகாசமான நடிப்பு. இந்த கதாபாத்திரத்திற்கும் பாஸ் என்ற பாஸ்கரனுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு!

ஜி.எம்.குமார் பெர்ஃபாமன்ஸ் சூப்பர்ப். ரத்தமும் சதையுமாக அவருடைய கதாபாத்திரத்தை ரொம்ப அற்புதமாக செய்திருக்கிறார். வெள்ளந்தியான அந்த ஹைனஸ்!வாழ்ந்தவர் கெட்டால்! நெஞ்சை விட்டு அகலாத பாத்திரம்.




இந்தப் படத்தில் மிக பரிதாபமான பலிகடா ஆனந்த் வைத்திய நாதன்! இந்த இசையறிஞர் இப்படி ஈனத்தனமான பாத்திரத்தின் மூலம் அறிமுகமாகியிருக்க வேண்டுமா? ஈனமான கதாபாத்திரம் கூட சரியாக வார்க்கப்பட்டு இயக்கப்பட்டிருந்தால் இப்படி மட்டரகமாக ஊசிப்போய் ஊசலாடியிருக்காது. பாலா எப்போதும் பாத்திர வார்ப்பில் கவனமாயிருப்பார். ம்ம்.. Even Homer sometimes nods!
 

என்ன வரம் வேண்டும்
என்கிறார் கடவுள்.
அது தெரியாத
நீர் என்ன கடவுள்?

நீலமணி எழுதிய மேற்கண்ட கவிதை இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்யா தான் கேட்கிறார் “ அது தெரியாத நீ கடவுளா? “



 
  
 




1 comment:

  1. ஜானகி பற்றிய தங்களின் கருத்து மிகவும் சரியானதே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.