Share

Jan 1, 2013

பரோட்டா, புரோட்டாஎங்கள் வீட்டிலே எப்போதும் கீர்த்தியும் அஷ்வத்தும் குழந்தைகளாக இருந்த காலம் தொட்டு இன்று வரை புரோட்டா சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். காலை,மதியம், இரவு மூன்று வேளையும் புரோட்டா சாப்பிடுவது என்றாலும் சரி.சலிக்கவே மாட்டார்கள். மற்ற உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளிலும் குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் எல்லோருக்கும் பிடித்த பட்சணம் புரோட்டா தான் என்று அறிய வந்தேன். வெளியே சாப்பிடப்போனால் புரோட்டா சாப்பிடுவது தான் முதல் சாய்ஸ்.வீடுகளில் பெண்களுக்கு சமையல் ஓய்வு கொடுக்கவேண்டுமென்றால் ஹோட்டலில் வாங்குவது புரோட்டா.
ஆஹா மதுரை புரோட்டா! சொல்லப்போனா மதுரையும் மதுரைக்கு அந்தப்பக்கம் தான் புரோட்டான்னா புரோட்டா
திருநெல்வேலி, விக்கிரம சிங்கபுரம் ,தூத்துக்குடி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்,  போன்ற ஊர்களில் சாப்பிட்ட புரோட்டா, சால்னா,மட்டன் வருவல் ருசி தான் எப்போதும் நாவில் ஏக்கமாய் நிறைந்திருக்கிறது.இங்கே நான் புரோட்டா சாப்பிட்ட ஊர்களைத் தான் சொல்லியிருக்கிறேன். அங்கெல்லாம் புரோட்டா கடைகள் கலைநுட்பத்துடன் 
(வேறு வார்த்தை என்ன இருக்கிறது?) ரொம்ப ரசனையுடன் நடத்துகிறார்கள்.

எம்.டி.முத்து குமார சுவாமி என்ற சில்வியா எழுதிய சிறுகதை “தமிழ் மகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை”
அதில் “ ‘பரோட்டா’,’பரோட்டா என்றழைக்கப்படும் விசித்திர வடக்கத்திய மைதா வஸ்து தமிழரின் உணவுப் பொருளாகியது. ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, தேசீய நெடுஞ்சாலைக்கு தேசீய நெடுஞ்சாலை என முளைத்த எண்ணற்ற டீக்கடைகளில் பரோட்டா செய்யப்படுவதைக் காண்பது கண் கொள்ளாக் காட்சி. கறு கறுவென்று கட்டுமஸ்தான உடம்புடனும் புஜ பலத்துடனும் விளங்கும் ஒரு தமிழரே பரோட்டா செய்யத் தகுதியானவர். அவர் மைதாவுடன் தண்ணீரும் எண்ணெயும் கலந்து இரண்டு கால்பந்துகள் இணைந்திருக்கும் அளவில் உருண்டையாக உருட்டி டமீர் டமீரெனக் கல்லில் அடித்து மாவைப் பக்குவப்படுத்துவார். பின் அதை மென்மையாக வசியப்படுத்தி லாவகமாக காற்றில் வீச, மந்திரத்தால் கட்டுண்டது போல துணியென விரியும் மாவு. இவ்வாறாக அது காஷ்மீரப் பட்டின் மெல்லிசான தன்மையை அடைந்தவுடன் அதை லேசாக மடித்து வட்டமாகச் சுற்றி வைப்பார். இவ்வளவு நுணுக்கமாக செயற்பாடுகளுக்கு பரோட்டா சிருஷ்டியில் உட்பட்டாலும் அதை உண்பதற்கு அசுரபலம் வேண்டும்.பரிசாரகரே பெரும்பாலும் பரிமாறும்போது பரோட்டாவை பிய்த்துப் போட்டு பேருதவி செய்வார்.பசித்த வயிற்றில் கல்லென நிறையும் பரோட்டாவை சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பழகிப் போன தமிழர்களுக்கு ஐயகோ வீட்டில் இப்பலகாரத்தை ருசிக்கும் வாய்ப்பு லபிக்கவே இல்லை. ஏனெனில் புஜகீர்த்தியற்ற தமிழ் மறமகளிரால் இவ்வடக்கத்திய உணவுப்பண்டத்தை செய்ய முயற்சித்த போதெல்லாம் ஏமாற்றமும் தோல்வியுமே மிஞ்சியது.பெரும்பான்மையான நேரங்களில் வெந்த மைதா களியையே அவர்களால் உருவாக்க முடிந்தது. “

ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை
நான் தமிழ புரோட்டா
நீங்கள் என்னை தூள்தூளாக்குங்கள்
மீண்டும் நீர் ஊற்றிச் சேர்த்து
உருட்டிப் பிசைந்து
மூர்க்க பலத்தால் என்னை
அடித்துத் துவைத்தெடுங்கள்
பாலியெஸ்டர் துணிபோல்
என்னை நெகிழ்வாக்கி
நீட்டி விசிறடித்து
காற்றுதங்கும் பலூன் பந்துகளாக
என்னை மேஜையில் அடுக்குங்கள்.
அப்போதும் ஒளியூடுருவும் கடவுள் போல்
நான் ஒளிர்வேன்.
பின்னர் மீண்டும் தட்டி மடித்து
வட்ட சதுர முக்கோணங்களாக
எண்ணெய் கொதிக்கும்
வாணலியிலோ
கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள்
உங்கள் அரும்பசிக்குச் சுவையான
உணவாய் நான் மாறுவேன்…………………
உங்கள் மாமிசமும் சேர்ந்த
குழம்பில்
நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும்
மடிப்பு மடிப்பாக
தூள்தூளாக கரைந்துபோகக்
காத்திருக்கும்
தமிழ் புரோட்டா தான்
நான்.


8 comments:

 1. சார் நீங்க எங்க மதுரைல புரட்டா சாபிட்டது இல்ல போல அதான் சிவகாசிலாம் புரட்டா நல்ல இருக்குனு சொல்றிங்க புரட்டானா அது மதுர புரட்டா தான் அந்த ருசி வேற எங்கேயும் வராது தூத்துக்குடி,விருதுநகர் அதாலம் வேறtaste தேகுட்டும் sir....சுரி மாதிரி வெளுத்து கட்ட மதுர சைடு புரட்டா தான் லாய்க்கு

  ReplyDelete
 2. அருமை,, எங்க வீட்டுக்காரம்மா புரோட்டா செய்வதில் நிபுணத்துவம் உடையவர் :-)

  ReplyDelete
 3. எனக்கு இப்போ பரோட்டா சாபிடவேண்டும் :-) என்ன ஒரு வர்ணனை! :-)

  amas32

  ReplyDelete
 4. தெற்கே இருந்து சென்னைக்கு வந்து புரோட்டா கடை வைத்திருப்பவர்கள் கூட இங்கு வேகாத,ரோஸ்ட் ஆகாத புரோட்டாக்களை தான் செய்து விற்கிறார்கள்.குழம்பும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.

  ReplyDelete
 5. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்க்கு வெளியே 2-3 கடைகள் இருக்கு, எவ்வளவு சாப்பிட்டாலும் சலிக்கவே சலிக்காது.

  பெண்கள் எங்காவது வெளியூர்களுக்கு போயிட்டு வரும்போது, அங்கே அமர்ந்து சாப்பிட தயங்கினாலும் பார்சல் வாங்கிட்டு போவது நிச்சயம்.

  செங்கோட்டை பார்டர் (ப்ராணூர்) புரோட்டாவும் ரொம்ப நல்லாயிருக்கும்.

  ReplyDelete
 6. மலேசியாவிலிருந்து வரும் கவான் ப்ரோசன் பரோட்டா தான் இங்கு (அமெரிக்காவில்) பலருக்கு பரோட்டா! உண்மையில், நன்றாகவே இருக்கும்!

  ReplyDelete
 7. பரோட்டா புராணம்.படு ஜோர்.ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதையில் காமெடி மணம் கமழ்கிறது.

  ReplyDelete
 8. திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் புரோட்டாவெல்லாம் சுத்த மோசம்! சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பரவாயில்லை. தூத்துக்குடிதான் சூப்பர்... வறுவல் செட், குடல் செட், கோழி செட் என்று எப்போதும் நினைவிலேயே நிற்கிறது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.