சைதை துரை சாமியின் ஒரே மகன் திருமண நிச்சய தார்த்தத்தின் போது (06-06-2010)அவருடன் பேசும்போது அவர் தன் செல்போனைக் காட்டிச்சொன்னார்: ”தலைவரின் 80 பாடல்கள் இந்த மொபைலில் இருக்கிறது. எப்போதும் நேரம் கிடைக்கும்போது கேட்டுக்கொண்டிருப்பேன்.”
அன்று அந்த விஷேசத்தில் பெண் வீட்டார் சார்பாக நான் கலந்துகொண்டிருந்தேன். சைதை துரைசாமி அப்போது மேயர் கிடையாது. எம்.ஜி.ஆர் பாடல்களை யாரும் கேட்டதில்லையோ என்ற ஒரு பந்தாவான தோரனணயில் அவர் படகோட்டி பட ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்”பாடலை பரவசத்துடன் விளக்கி சொன்னார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனான சிறுவன் ஒருவன் எந்த அளவுக்கு உற்சாகமாக பிரமிப்புடன் பேசுவானோ அப்படி சைதை துரைசாமி பேசினார். தனக்கு 59 வயது என்றார்.
......................
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
(என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் சம்பத் அன்று ”பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா ” பாடலின் பிரத்யேக விசேஷத்துவம் பற்றி சொல்வார் “ ’பேசுவது கிளியா’ பாடலில் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளின் இனிமையும் Sychronize ஆனது போல எந்த பாட்டுக்கும் ஆனதேயில்லை.”
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!
........
http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_20.html