Share

Jun 19, 2008

விலங்கும் நாணிக் கண் புதைக்கும்!

தி.ஜானகிராமனின் பரம ரசிகன், அசோகமித்தரனின் சீடன், காலச்சுவடின் ஒற்றன் என்று கடந்த காலங்களில் என் மீது முத்திரைகள் குத்தப்பட்டிருக்கிறது. What a piece of work is a Man !
 
~ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை கட்டுரை திண்ணை இதழில் கடுமையாக எடிட் செய்யப்பட்டு வெளியான பின் காலச்சுவடிகள் 42வது இதழில் திண்ணையில் பிரசுரமாகாத பகுதிகள் பிரசுரமானது. Two Different Edited Versions என்னுடைய கட்டுரை திண்ணையில் வெளியாவதற்கு முன் ஊட்டி தளைய சிங்கம் கருத்தரங்கம் பற்றி ஏழு கட்டுரைகள் பிரசுரமாகின. அதேநேரத்தில் 'காலம்' ஏ.ஜே.கனகரத்னா சிறப்பிதழிலும் தளைய சிங்கம் கருத்தரங்கம் பற்றி யந்திரத் தனமான கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. திண்ணையில் விரிவாகக் கருத்தரங்க நடவடிக்கை பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளிலும் 'காலம்' இதழில் வந்த கட்டுரையிலும் 'ஆர்.பி.ராஜநாயஹம் சர்ச்சை' பற்றி ஒரு குறிப்புமே கிடையாது. எட்டாவது கட்டுரையாகத் திண்ணையில் 'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' வெளியானது. The Wounded deer leaped highest. எட்டாவது ஆண் வெட்டும் புலி!
இந்தக் கட்டுரை முன் வைத்த முக்கிய பிரச்சினை தளையசிங்கம் மரணம் பற்றிய சர்ச்சை 'தளைய சிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லப்பட்டார்' என்ற ஜெயமோகனின் பொய் இதன் மூலம் அம்பலமானது. திண்ணையில் இந்த பிரச்னைக்கு மு.பொன்னம்பலம் முத்தாய்ப்பாக எழுதிய குறிப்பில் சுந்தர ராமசாமியின் 'தளைய சிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்' கட்டுரையில் தகவல் பிழை எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம் ஜெயமோகன் ஊட்டி கருத்தரங்கம் நடைபெறுவதற்கு முன்னதாக எனக்கு எழுதிய கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதியது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிவிட்டது.

'இவை குறித்துக் கனடா என்.கெ.மகாலிங்கம் (தளைய சிங்கத்தின் இளைய தோழர்) என்னிடம் நிறையப் பேசியுள்ளார். (மு.பொன்னம்பலம் இக்காலத்தில் கொழும்பில் மாணவர்) கைது செய்யப்பட்டு இருநாட்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். காவல் நிலையத்திலேயே உடல்நலம் குன்றி அங்கிருந்தே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டுப் படுத்த படுக்கையாகி மீளாமலேயே மரணமடைந்தார்' இந்தப் பொய்யைப் பற்றி இதை R.P. ராஜநாயஹம் கட்டுரை பேசியதைப் பற்றி ஏன் இந்தக் கூட்டம் மெளனம் சாதிக்கிறது. ஆனால் என்னைப் பற்றி அவதூறு கட்டுரைகள் சரவணன் எழுபத்தெட்டு, நாஞ்சில் நாடன், மோகனரங்கன் மூலமாகப் புறப்பட்டன. 'சொல் புதிது' 10வது இதழில் தலையங்கம் 'காலச்சுவடால் அனுப்பப்பட்ட ஒற்றன் R.P. ராஜநாயஹம்' என்று எழுதப்பட்டது. முற்பகலில் எனக்கு இன்னா செய்ததற்கு ஜெயமோகனுக்கு இன்னா பிற்பகல் பொ, வேல்சாமி மூலமாக விளைந்தது.

'அருண்மொழி நங்கை - 1978 கம்பைன்ஸ்' சொல் புதிது 9வது இதழில் செய்த ஊழல் பின்னர் பொ. வேல்சாமியால் வெளிச்சமாகி கவிதா சரண் மூலமாகச் சந்தி சிரித்து நாறிப்போனது. எப்படி தண்டனை கிடைத்தது பாருங்கள். இப்போது கூட ஜெயமோகன் குழாம் என்ன பேசுகிறது தெரியுமா? 'கோடீஸ்வரன் இரண்டு ரூபாய் பிக்பாக்கெட் அடித்தாகப் பழி போடுகிறார்கள்' என்று நாக்கூசாமல் குழையடிக் கிறார்கள். வெட்கக் கேடு!

'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை வெளியானவுடன் திருமாலன் அவர்கள் தளைய சிங்கம் மரணச் சர்ச்சையைத் தொட்டு ஒரு கட்டுரை எழுதினார். தொடர்ந்து '1978' என்ற பெயருடையவர் என்னை அவதூறு செய்து, மாலனை அவதூறு கட்டுரை எழுதியதாகத் திட்டி எழுதினார். மாலன் இதற்கு 1978 மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வாதிட்டார். இதே நேரத்தில் பல வாசகர் கடிதங்கள் (!?) வேறு. அப்போது 'திண்ணை என்ன சொல்கிறது?' என்று ஆசிரியர் குழுவின் கட்டுரை வெளியாயிற்று. அதில் தளைய சிங்கம் மரண பிரச்சனை கவனமாக மறைக்கப்பட்டது.


"ராஜநாயஹத்தின் கட்டுரையை ஆசிரியர் குழு விவாதித்த போது" தொழுகை பற்றி விவாதம் எழுந்தது. எங்கள் விவாதம் செல்லம்மாளின் மீறல் அலங்காரத் தம்மாளின் மீறலோடு ஒப்பிடப்படுவதில் மையம் கொண்டது. இது எழுப்பும் கேள்விகள் பல 'லேடி சேட்டர்லி'ஸ்வருடன் ஒப்பிட்டு ஒரு குறிப்பு விவாதத்தில் வருகிறது. இது ஒரு சரியான புரிதல் என்று கருதினோம்.

வர்க்கங்களை மீறிய காமமாய் லேடி சேட்டர்லியின் மீறல் சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டதால் தான் இது தடைசெய்யப்பட வேண்டும் என்று இங்கிலாந்தில் கோ¡¢க்கை எழுந்தது. அதுபோலவே சாதீயத்தை மீறியது செல்லம்மாளின் செயல். ஆனால் இந்த ஒப்பீட்டில் கோபம் பற்றியும் ராஜநாயகம் பேசுகிறார். செல்லம்மாளின் குழந்தைகள் எப்படி பாதிக்கப்படும், மீறல்கள் செல்லம்மாவைக் கடந்து குடும்ப நபர்களைக் காயப்படுத்துமா? எனில் இந்தப் பயத்தை முன் வைத்துத் தானே சமூகம் இயல்பான உணர்ச்சிகளுக்கு தடை விதிக்கிறது? குடும்பம், சாதிக்கு விசுவாசமாய் இரு. உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே என்பது தானே?

மீறல் என்று சொன்னவுடன் ராஜநாயஹத்தின் நினைவிலி மனத்தில் அலங்காரத்தம்மாள் வருவது சிந்தனைக்குரியது. சாதீயத்திற்கான மீறல் என்று வெளிப்படையாய் தி. ஜானகிராமனால் சொல்லப்படாவிட்டாலும் மிக மெல்லிய குறிப்பு சிவசுவின் மீசை வடிவில் வருகிறது. ஆனால் விவாதத்திற்குரிய விஷயம் என்னவென்றால், செல்லம்மாள் உடனடியாக அலங்கதாரத் தம்மாளை நினைவிற்குக் கொண்டு வருமெனில், முத்துவேலரை (ஜெயகாந்தனின் 'சமூகம் என்பது நாலுபேர்') தி.ஜானகிராமனின் மரப்பசுவில் வரும் கோபாலியை ஏன் நினைவுக்குக் கொண்டு வரவில்லை. ஆணாதிக்க மனம் மீறலைப் பார்க்கும் ஒரு பார்வையாகக் கொள்ளலாமா? ஆனால் நாங்கள் எங்களுக்குள் விவாதித்த இவை எதுவுமே விவாதத்தில் முன் வைக்கப்படவில்லை" என்று "திண்ணை என்ன சொல்கிறது?" என்ற கட்டுரையில் எழுதப்பட்டது.

இதற்கு என்பதில் 'அம்மா வந்தாள்; அலங்காரத் தம்மாளை விட அன்பே ஆரமுதே ருக்கு மேலானவர். ஏனென்றால் ருக்கு கற்பில் சிறந்தவள்' என்று முன்னர் திருப்பூர்க் கிருஷ்ணன் எழுதியதற்கு நான் கோபப்பட்டவன். ஒழுக்க வாதம், அறவியல் நோக்கில் பார்க்கிற எண்ணமெல்லாம் எனக்கு அறவே கிடையாது. ஆனால் அலங்காரத்தம்மாளும் செல்லம்மாளும் இப்படி இருக்கிறார்கள். இருப்பு முக்கியமல்ல. காரண இருப்பு இலக்கியத்திற்கு வேண்டும். அந்தக் காரண இருப்பு அலங்காரத்தம்மாளிடமும் செல்லம்மாளிடமும் இருக்கிறதா? செல்லம்மாள் விஷயம் ரொம்ப விசித்திரம். கரிய சாணான் முத்துவோடு பத்து நாளாகத் தான் அறிமுகம். அதோடு 'உன்னைப் போல் ஒருவன்' கதையில் வரும் தொப்பையனும் அம்மா வந்தாளில் வரும் அப்புவும் ஆண் பிளளைகள். செல்லம்மாளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பத்தாவது நாள் தான் கதை என்பதால் அந்தப் பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படப் போகும் விபரீதங்கள் பற்றியும் யோசிக்க வேண்டி நேர்ந்தது. தொழுகை கதை பற்றி விவாதித்தால் நிறையப் பேசவேண்டும். ஆனால் எங்கே விவாதிக்க விட்டார்கள்.

நினைவிலி மனம் எப்போதும் Similarity யான விஷயங்கள் சம்பந்தப்பட்டது. ஒரு வேளை முத்துவேலரை பற்றிய விவாதமாயிருந்திருந்தால் 'மரப்பசு' கோபாலியும் 'அடி' செல்லப்பாவும் ராஜநாயஹத்தின் நினைவிலி மனத்தில் நிச்சயம் வந்திருப்பார்கள். 'மு.தளைய சிங்கம் விமர்சனக் கூட்டம் பதிவுகள்' என்று ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளில் என் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டவும் விரும்புகிறேன். 4-5-2002 மாலை 2வது அமர்வு விவாதத்தில் ஆர்.பி. ராஜநாயஹம் பேசியதாக 'புத்தரைப் பற்றிச் சொன்னீர்கள். என் நண்பர் ஒருவர் அவர் ஒரு முஸ்லீம். மதுரைக்கு அருகேயுள்ள ஒரு சங்கிலிக் கருப்பனை பற்றி ஆய்வு செய்தார். ஏழடி உயரமுள்ள சிலை அது. வெள்ளியில் மீசையும் கண்களும் செய்து பதிந்திருப்பார்கள். வருடத்தில் இரண்டாயிரம் ஆடுகளாவது பலிவிழாமல் இருக்காது. தேவர் சாதிக்கு முக்கியமான கோயில். நண்பருக்குச் சிலையின் அமைப்பைப் பார்த்துச் சந்தேகம், பூசாரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஒருநாள் உள்ளே நுழைந்து மீசையையும் கண்களையும் எடுத்துப் பார்த்து விட்டார்.

அவர் சந்தேகப்பட்டது சரிதான். அது ஒரு புத்தர் சிலை! வெளியே சொல்ல முடியுமா? தலை காணாமல் போய் விடும் என்றா' என்று எழுதப்பட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இந்த விஷயம் நான் பேசியதில்லை. மற்றொருவர் பேசியது. நான் பேசியதாக ஜெயமோகனால் எழுதப்பட்டிருக்கிறது. அதே அமர்வில் நான் பேசியதாக எழுதப்பட்டுள்ள விஷயம். வெங்கட்சாமிநாதன் எப்பேர்பட்ட தத்துவத்தையும் ஸ்தாபனம் என்ற அமைப்பில் கொண்டு வரும் போது மனிதனின் சின்னத்தனம் சேற்றில் புரட்டி எடுத்து விடும் என்று சொன்னபோது நான் கி.ரா.வின் நண்பர் ஒருவருக்கு வினோபா ஆசிரமத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தைச் சுட்டிக் காட்டினேன். வினோபாவே அதிர்ச்சியடைந்து கடைசியில் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார் என்று கி.ரா.வே என்னிடம் சொன்னார் என்று தெளிவாக நான் பேசிய விஷயம். (வினோபா ஆசிரமக் காமகளியாட்டங்களைப் பேசிக் கொண்டிருந்தார் என்று என் மீது இவர்களால் பின்னால் குற்றச்சாட்டாகவே வைக்கப்பட்டது) இந்த என்பேச்சு இவர்கள் கருத்தரங்க விவாதத்தைச் செழுமைப்படுத்தும்படி நான் பேசியதாக ஜெயமோகனால் (கி.ரா.வின் நண்பர் என்று தெளிவாக நான் குறிப்பிட்ட விஷயம்) 'என் சொந்தக்காரர் ஒருவர் வினோபாவேயின் ஆசிரமத்தில் இருந்தவர்' என்பதாகப் பதிவாகியிருக்கிறது.
மு.தளைய சிங்கம் விமர்சனக் கூட்டம் பதிவுகள் இரண்டாம் பகுதி என்ற ஜெயமோகனின் கட்டுரையில் அந்தச் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிட்ட கூட்டம்! அந்த மூன்றாவது அமர்வு. Attentiveness கொஞ்சமும் இல்லாத இநதக் கூட்டத்தில் தான் ஜெயமோகனோடு மோதல் ஏற்பட்டு நான் வெளிநடப்புச் செய்ய நேர்ந்தது. பின்னால் சொல் புதிது தலையங்கத்தில் தொடர்ந்து கருத்தரங்கத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ராஜநாயகம் ஈடுபட்டார் என்று எழுதிய கை இந்தக் கட்டுரையில் அது பற்றிய கப்... சிப்... மூச் ஒரு வார்த்தை எழுதவில்லை. மாறாக இடது சா¡¢கள் அவதூறுக்கு அஞ்ச மாட்டார்கள் என்ற ஜெயமோகனின் கருத்தைச் செழுமைப்படுத்த ராஜநாயஹம் பேசியதாக கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறது.

ஆர்.பி.:சதங்கையில் முருகேச பாண்டியன் ஒரு விஷயம் எழுதியிருக்கிறார். எண்பதுகளில் அவர் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த சமயவேல் சட்டென்று குரலைத் தாழ்த்தி 'உறுதியான ஆதாரம் கிடைச்சுட்டது. நான் இப்ப கோவில் பட்டியிலிருந்து வாறேன். வெங்கட் சாமிநாதன் சி.ஜ.ஏ. உளவாளி தான்' என்றாராம். அந்தப் பிரச்சாரம் அப்போது மிகப் பலமாக இடது சாரிகளால் முன் வைக்கப்பட்டது.

உண்மையில் இந்த விஷயத்தை இப்படி நான் அந்தச் சர்ச்சைக்குள்ளான கருத்தரங்கக் கூட்டத்தில் பேசவேயில்லை. மாறாகக் கருத்தரங்க அமர்வுக்கு 2மணி நேரத்திற்கு முன் வெங்கட் சாமிநாதன், வேதச் சகாயகுமார் தேவகாந்தன் ஆகியோர் முன்னிலையில் நான் இப்படிப் பேசியதற்கு ஒரு காரணம் உண்டு. ஊட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாள் ஒருவர் தன்னுடைய கணவருக்கு வெ.சா.வை ரொம்பப் பிடித்திருப்பதாகக் கூறினார். வெ.சாவைப் பார்த்தால் C.B.I. Officer போல இருப்பதாகத் தன் கணவர் அபிப்ராயப்பட்டதாக சொன்னார். உடனே நான் C.B.I. Officer என்றும் சொல்வார்கள், C.I.A. Agent என்றும் கூறுவார்கள் என்று கூறிச் சதங்கையில் வந்ததைத் தெளிவாக மேற்கோள் காட்டினேன். '1977 -ம் ஆண்டு சமய நல்லூருக்கு முருகேச பாண்டியன் வீட்டுக்கு வந்த சமயவேல் நான் இப்ப திருநெல்வேலியிலிருந்து வாறேன். விஷயம் கன்பார்ம் ஆயிடுச்சு. வெங்கட் சாமிநாதன் சி.ஜ.ஏ. ஏஜென்ட்தானாம்' என்று கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் நான் பேசியதைக் கூட்டத்தில் பேசியதாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த இடத்தில் அப்போது இல்லவே இல்லை. தான் இல்லாத இடத்தில் பேசப்பட்ட விஷயத்தை எப்படி இவரால் கருத்தரங்கத்தில் பேசப்பட்ட கருத்தாக எழுத முடிகிறது.

மேற்கண்ட தவறான பதிவுகள் திண்ணை மே 26, 2002 இதழிலும் திண்ணை ஜ_ன் 2, 2002 இதழிலும் இணையத்தில் பிரசுரமாகியுள்ளது. இப்போதும் திண்ணை இணைய இதழில் 'முந்தைய இலக்கியக் கட்டுரைகள்' பகுதியில் பார்க்க முடியும். நான் உண்மைகளைக் கட்டுரையாக வடித்தபின் அவதூறுகள் திண்ணையிலும் காலச்சுவடியிலும் பிரசுரமாகின. அப்போது எனக்கு வந்த மூன்று ஈமெயில்களை இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.

மாலன் : Express my sympatheies and solidarity to you. As for the humiliation heapedon you in the Ooty meet, I feel sorry for it. But this will enable you understand People better than through any of Literary works.

சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayaham, I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks. I am being inflicted with peril and mental Agony For the past fifty years by this type of irresponsible remarks.

இந்திரா பார்த்தசாரதி :: I am not surprised that you were treated badly in Ooty. You are too honest to get Along with those who succeed in Life

2002-ம் ஆண்டில் திருச்சியில் விஜயா வேலாயுதம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்தினார். நாஞ்சில் நாடன் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டதால் அந்த நிகழ்ச்சியை நான் புறக்கணித்தேன். ஒரு பொய்யனை நான் நேரில் பார்க்க நேர்ந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. என்னுடைய நண்பர் அப்போது BSNL Divisional Engineer ஆக இருந்த திரு. கோவிந்தராஜீவும் 'அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் போக வேண்டாம்' என்று என்னைத் தடுத்தார்.

இந்த நாஞ்சில் நாடன் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எந்தக் கட்டுரை எழுதினாலும் தமிழ் இலக்கிய உலகைச் சார்ந்தவர்கள் பலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் Good Booksல் இடம் பெறுபவர். ஒருமுறை சாகித்திய அகாதெமி பரிசு பெறத் தகுதியானவர்கள் என்று தமிழின் அனைத்து விமர்சகர்கள் பெயரையும் குறிப்பிட்டார். இந்த குயுக்தி புரிகிறதா?

திண்ணையில் என் கட்டுரைக்கு எதிர்வினையாக இவர் எழுதிய 'தன்படை வெட்டிச் சாதல் வேண்டாம்' கட்டுரையில் இவர் குறிப்பிட்ட பெயர்கள் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 24 இலக்கியப் படைப்பாளிகள்! எவ்வளவு விபரம் பாருங்கள். இதுபற்றிச் சென்ற ஆகஸ்ட் மாதம் சேலத்தில் எம்.ஜி. சுரேஷிடம் நான் சொன்ன போது இந்த 'நாஞ்சில் நாடன் தந்திரம்' பற்றி சுரேஷ் அடித்த கமெண்ட் 'ஒட்டு போடுகிறார்!' எம்.எஸ் பற்றி காலச்சுவடில் இவர் எழுதிய கட்டுரையில் கூடச் சிலருக்கு ஓட்டு போட்டிருக்கிறார். உயிர்மை ஆகஸ்ட் இதழில் 'முலை' பற்றி இவர் எழுதிய கட்டுரையில் கூட ஒரு பத்து பேருக்கு ஓட்டு போட்டிருக்கிறார். பார்த்துக் கொள்ளுங்கள்.

நாஞ்சில் நாடனின் 'தன் படை வெட்டிச் சாதல் வேண்டாம்' என்ற தலைப்பில். யாரோ ஒரு ராஜநாயஹத்துக்காக நாமெல்லாம் வெட்டி சாக வேண்டுமா என்ற மேட்டிமை தொனிக்கிறதைக் கவனிக்கவேண்டும்.

சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்' என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூரித்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாகத் துப்பறிந்து எழுதியது ஜெயமோகக் கோமாளியின் உச்சக்கட்ட கொனஸ்டை.

சுந்தர ராமசாமி அப்போது கலிபோர்னியாவிலிருந்து 'திண்ணைக்கு ஒரு குறிப்பு' என்று ஒரு கடிதம் எழுதினார். (தற்போது சு.ராவின் 'இறந்த காலம் பெற்ற உயிர்' நூலில் இந்தக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது) அதில் என் கட்டுரையை மேற்கோள்காட்டி ஆர்.பி. ராஜநாயஹம் பெயரை மூன்று முறை குறிப்பிட்டார். இதற்குப் பதிலாக ஜெயமோகன் 'சுந்தர ராமசாமிக்கு அன்புடன்' என்று அளித்த பதிலிலும் மூன்று முறை ராஜநாயஹம் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். 'நாங்கள் நடத்திய மூன்று நாள் அரங்கு, மற்றும் அதன் பதிவுகளான ஏழு கட்டுரைகளைப் படிக்க மறுக்கிறீர்கள். ஆர்.பி. ராஜநாயஹத்தின் பதிவையே அனைத்து விவாதங்களுக்கும் ஆதாரமாகக் கொள்கிறீர்கள்' என்று எல்லோ¡¢டமும் சீறிவிட்டுப் 'பல கருத்துக்களை அவசரப்பட்டு நான் சொல்லி விடுகிறேன். பலவற்றைக் கவனமில்லாமல் சொல்லியிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டு இருக்கிறேன்' என்று சரணாகதி அடைந்த தமாஷை என்னவென்பது?

சொல் புதிது 10வது இதழ் தலையங்கத்துக்கு எதிர்வினையாக மனுஷ்ய புத்திரன் 'ராஜநாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள். வெகு ஜன ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற்றி எனக்குத் தெரியும். என்னுடையப் பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனேயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம்' என்று எழுதி ஜெயமோகனின் அரசியல் பற்றிக் கட்டுரை முடிவில் 'இவரை ஜெயலலிதாவோடு மட்டுமே ஒப்பிட முடியும்' என்றும் 'ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒருவிதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும்' என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 'ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை' என்று கடுமையாக மனுஷ்ய புத்திரன் சாடியிருந்தார்.

காலச்சுவடு 43வது இதழில் காலச்சுவடு கண்ணன் எழுதிய எதிர்வினை ஜெயமோகன் குழாமின் இரட்டை வேட அரசியலைத் தோலுரித்துக் காட்டியது. இதற்கெல்லாம் இவர்களிடமிருந்து சா¢யான பதில் வரவேயில்லை. திருப்பூரில் மத்திய அரிமா சங்கத்தில் 'கனவு' சார்பாக 'நெடுங்குருதி' நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு 11-04-2004 அன்று நான் தலைமை தாங்கி நாவல் பற்றிப் பேசினேன். எஸ். ராமகிருஷ்ணன் முன்னதாகத் திருச்சியில் என்னுடைய 'ஊட்டி தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரை பற்றி 'உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டிங்க இந்த ஒரு கட்டுரையில் - தளைய சிங்கத்தை நினைத்தால் இனி யாரும் ராஜநாயஹத்தை நினைக்காமல் இருக்க முடியாது. நீங்கப் பாட்டுக்கு உண்மையெல்லாம் எழுதிட்டீங்க அவன் (ஜெயமோகன்) இன்னமும் உங்களைக் கண்டபடி திட்டி தாறுமாறாக இலங்கை பத்திரிகைகளில் கூடப் பேட்டி தருகிறான்' என்று என்னிடம் சொன்னார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

தொடர்ந்து 11-7-2004 அன்று திருப்பூரில் சாகித்திய அகாதெமி சார்பில் 'கதை அனுபவம்' என்பதாக நடந்தவைபவத்தில் நாஞ்சில் நாடன் நிகழ்ச்சி முடிந்தபின் வலிய வந்து எனக்கு வணக்கம் சொன்னார். குற்றமுள்ள நெஞ்சு. நெஞ்சுவலிக்காரர் என்பதால் நான் அமரிக்கையாக அவருடைய அவதூறுகள் பற்றிக் கேட்டேன். யார் மீதும் சேறடிக்காத எழுத்துத் தன்னுடையது என்று பிரச்சாரம் செய்பவராயிற்றே என்று ஒரு நான்கைந்து கேள்விகள் கேட்டேன். நாஞ்சில் நாடன் 'என்னை மன்னிச்சிக்கங்க ராஜநாயஹம்' என்று கெஞ்சினார்.

'திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான் நான் தர மறுத்துவிட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. நான் ஒண்ணுக்கு போகனும்' என்று தவித்தவிக்க ஆரம்பித்தார். காலச்சுவடில் கண்ணன் இவருடைய கட்டுரையை எடிட் செய்ததற்கும் கோபப்பட்டார். இவர் இருபத்தி நாலுபேருக்கு ஓட்டு போட்ட விஷயத்தை எடிட் செய்தால் இவருக்குக் கோபம் வராதா என்ன? தொடர்ந்து அவர் செய்த பெரிய சேவை பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். நாச்சார் மட விவகாரம் போல இன்றும் ஆறு வெர்சன் ஜெயமோகன் குழாமிடம் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடக் கூடாது என்று நாஞ்சில் நாடன் தான் தடுத்தாட் கொண்டார். அப்படி மட்டும் தப்பித்தவறி இவர் செய்யலைன்னு வச்சுக்குங்க இவர் தடுத்தாட் கொள்ளலைன்னு வச்சுக்குங்கக்க... எங்கப்பா... அடேங்கப்பா.
ஒரு சீனியர் எழுத்தாளன் தன்னுடைய கட்டுரையை ஒரு ஜூனியர் திருத்தி எழுதிவிட்டான் ஒப்புதல் கடிதமும் கேட்டான் என்று சொல்வதைப் பற்றி இலக்கிய உலகம் சிந்திக்க வேண்டுகிறேன். விலங்கும் நாணிக் கண் புதைக்கும் இந்நிகழ்வைக் கேளுங்கள் நண்பர்களே! நாஞ்சில் நாடன் இதற்கு அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? பகிரங்கப் படுத்தியிருந்தால் யார் மீதும் சேறடிக்காத எழுத்து என்று நிரூபித்திருக்கலாம். பதிலாக என்ன செய்கிறார். ஜெயமோகனோடு ஆறுமாதம் பேசாமலிருக்கிறார். பின்னர் ஜெயமோகன் நூல்கள் வெளியிட்டு விழாவில் ''ஜெயமோகன் என்னய்யா கொலையா செய்துவிட்டார். கூட்டம் சேர்ந்து கிட்டு தாக்குறீங்க" என்று கொக்கரக்கோ கூவல் விடுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடன் நெஞ்சில் நஞ்சு!

இப்படி இன்னொருவர் எழுதியதைத் திருத்தி எழுதிவிட்டு ஜெயமோகன் 'என் நேர்மை ஒருபோதும் ஜயத்துக் குள்ளானது இல்லை' என்று துண்டறிக்கையில் பீற்றிக் கொள்ளுவதை என்னவென்று சொல்வது? இதுதான் அறிவார்ந்த கயமையா? படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஜயோவென்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறான். எழுத்தாளனையும் சேர்த்துத் தான்.

ஊட்டி கருத்தரங்கத்தில் நடந்தவைகளை அப்படியே சத்தியமாக நான் எழுதிய பின் இவர்களால் என்ன பதில் தரமுடியும் என்று தான் நினைத்தேன். ஆனால் 'கழுதைப் புணர்ச்சி பற்றிய செயல்முறை விளக்கம். எல்லோரிடமும் தான் குறியிருக்கிறது. அதை எப்போது கையிலெடுத்துக் கொஞ்சுவது கிடையாதா' என்று புளுகி அவதூறு செய்தபோது நான் உடைந்து போனேன். அங்கே அந்தக் கூட்டத்தில் எனக்கு 'Alienation' ஏற்பட்டுச் சொல்லேர் உழவர்களின் பகைக்கு நான் ஆளானதோடு இப்படி ஒரு கடுமையான அவதூற்றையும் தாங்கும்படியானதற்கு நாஞ்சில் 'நாடன் நானில்லே ஜெயமோகன் தான் இப்படி இஷ்டத்துக்கு எழுதினான்' என்று சாவகாசமாகச் சொல்வதைப் பாருங்கள். இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? முட்டாள்தாசாக நான் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... முட்டாள்தாசுக்கு Sexually Transmitted  Disease என்ற வார்த்தை தெரியாது. அதனால் மதுரை வட்டார வழக்கில் 'பொம்பளைசீக்கு' என்கிறான். வட்டார வழக்கில் ஒரு பாத்திரம் பேசுவதற்கு எழுதுபவன் பொறுப்பா? பெண்ணியத்திற்கு எதிராக ராஜநாயஹம் பேசியதாக எழுதியதாகக் குற்றச்சாட்டு.

முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பாதித்திருக்கிறது - 'வடக்குமுகம்' நாடகத்திலும் 'காடன் விளி' சிறுகதையிலும் மிருகப் புணர்ச்சியைக் கொண்டு வருகிறார். 'வடக்கு முகம்' நாடகத்தில் ஒரு குதிரை 'என் தசைகளைக் கண்டு காமம் கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை' என்று சொல்கிறது. இது தான் பெண்ணியத்திற்கு எதிரான வார்த்தை. பீஷ்மரிடம் அம்பைக் காதலுடன் 'குதிரைகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது தனது முதுமையிலும் சளைப்பதில்லை' என்று கூறி பீஷ்மருக்கு குதிரை முகமூடி அணிவித்து அணைத்துக் கொள்கிற காட்சி, 'காடன் விளி கதையில் வரும் எருமைப் புணர்ச்சி' - ஜெயமோகனை முட்டாள் தாஸின் கழுதைப் புணர்ச்சி ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகள்.

'உங்களைப் பார்த்தால் என் சங்கரன்கோவில் நண்பர் நினைவுக்கு வருகிறார்' என்று அரட்டையின் போது என்னிடம் நெகிழ்ந்து போய் நாஞ்சில் நாடனின் வாய் சொல்கிறது. அதே அரட்டை பற்றித் தாறுமாறாய்க் கை எழுதுகிறது. அது எப்படி? காலச்சுவடில் சுருக்கப்பட்டு என் கட்டுரை வெளியான போது அ. மார்க்ஸ் அவர்களிடமிருந்து இரண்டு கோபமான போன் மிரட்டல் வந்தது மார்க்ஸ் கோபப்பட வேண்டியது வேதசகாயக்குமாரிடம் தான். வேதசகாயக் குமார் அப்படி அ.மார்க்ஸ் பற்றிக் கூறியபோது அங்கே இருபது பேர் இருந்தார்கள். அந்த இருபது பேரும் இதை மறுக்கவே முடியாது. வேதச் சகாயகுமார் என்பவர் எப்போதுமே சில பொய்களைத் திரும்பத் திரும்ப மற்றவர்களிடம் பேசி, கொஞ்ச நாளில், தானே கூட அவற்றை உண்மையென்றே நம்பி விடும் விசித்திரத் தன்மை கொண்டவர் என்பது அவருடன் பழகியவர்கள் அறிந்து சொல்லும் உண்மை. He cannot explain a Prejudice without Getting Mad. மார்க்ஸின் கோபம் தனக்குப் பிடிக்காத காலச்சுவட்டில் ~ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை வெளியானது என்கிறதிலும் மையம் கொண்டது. ஊட்டியில் என்னிடம் 'சிநேகாவின் உதட்டைக் கடிச்ச நடிகர் யார் சார்? என்று கேட்ட ஒரு செக்கு மாட்டு விமர்சகனும் சமீபத்தில் என்னிடம் 'காலச்சுவட்'டில் இது பிரசுரமாகாமல் 'கனவு' பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது என்று அபிப்ராயப்பட்டான். வெளவால் போல மிருகங்களுடனும் பறவைகளுடனும் சொந்தம் கொண்டாடும் இந்த ஆள் 'வாசகனாக இருப்பதே துரதிருஷ்டம்' என்ற மேட்டிமை குணம் கொண்டவன். நாஞ்சில் நாடன் கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதி, பின் ஒப்புதல் கடிதம் கேட்ட விஷயமும் தனக்குத் தெரியும் என்று என்னிடம் சொன்னான்.

சாப்பிடும் இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டே சப்பாத்தி மாவு பிசையும் இயல்புடைய வினோத மிருகம் வினயசைதன்யா "If you say you are a Tamil Ezhava I will F-- you. I will F-- the bloody Ezhavas' என்று என்னிடம் கூப்பாடு போட்ட போது அங்கே சமையல் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரமவாசி 'அருள்' என்பவரும் மற்றொரு ஆசிரமவாதியும் மட்டுமே இருந்தனர். தர்ம சங்கடத்துடன் நெளிந்தனர். இந்த விஷயத்தை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் எப்படி மறுத்து எழுத முடிந்தது என்பதும் வினோதம் தான்.

முழுக்க நான் சத்தியத்தைச் சார்ந்து நிற்பதால் மேற்சொன்ன விஷயங்களும் காலச்சுவடிலும் திண்ணையிலும் பகுதி பகுதியாக வெளியான விஷயங்களும் 'நீதியான செயல்' தான் என்பதிலும் இதன் வெளியீட்டு நேர்த்தியிலும் எனக்கு முழு உடன்பாடு உண்டு. THE BEAUTY OF A MORAL ACT DEPENDS ON THE BEAUTY OF ITS EXPRESSION, - JEAN GENET.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.