Share

Jun 9, 2008

ஆன வயதிற்கு அளவில்லை எனினும் தெளிவே வடிவாம் கி.ரா


மதுரை ரீகல் தியேட்டர் அருகிலிருந்த சர்வோதய இலக்கியப் பண்ணையில் தி.ஜானகிராமனின் ‘மரப்பசு' நீலபத்ம நாபனின் ‘பள்ளிகொண்ட புரம்' இரண்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டு கிளம்பவிருந்த நேரம் அங்கே புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு நின்றிருந்த ஒருவர் ‘கி.ராவின் கதவு' சிறுகதைகள் நூலையெடுத்து ” இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் “ என்றார்.

”கதவு கதையை முதலில் படித்துப் பாருங்கள், அதன்பின் வாங்குங்கள் "


' லாலாக்கடைக்காரன் சொல்லுவதில்லையா? சாம்பிள் சாப்பிட்டு பார்த்துவிட்டுப் பலகாரம் வாங்குங்கள் ' . இத்தனைக்கும் அந்த நபர் புத்தகக் கடையோடு சம்பந்தப்பட்டவரும் அல்ல.

நான் அந்தக் கடையில் புத்தகங்கள் பார்த்து வாங்கிய நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருந்தவர், நான் புன்னகையுடன் கதவு சிறுகதைகளுக்கும் பில் போடச் சொன்னேன்.

” வாங்க காலேஜ் ஹவுஸில் காப்பி சாப்பிடுவோம்” என்று 'கதவை' சிபாரிசு செய்த நபரை அன்போடு அழைத்தேன்.

”என் பெயர் கோணங்கி. நான் ஒரு எழுத்தாளன்”.

'தச்சன் மகள்' ஞாபகத்திற்கு வந்தது.

”அந்தக் கதையை நீங்கதானே எழுதியிருக்கீங்க”

“ஆமாம்”

டிபன், காப்பி சாப்பிட்டு விட்டு விடைபெற்றார் கோணங்கி. கோணங்கி அறிமுகமான அதே நாளில்தான் கி.ராவையும் எனக்கு தெரிய வந்தது. தொடர்ந்து கி.ராவின் அனைத்து நூல்களையும் வாங்கிப் படித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டு என் நண்பன் சரவணனிடம் ( தற்போது கரூர் வைஸ்யா பேங்க் மேனேஜர் ) சொன்னேன். தி.ஜானகிராமனுக்கும் கி.ராஜ நாராயணனுக்கும் ஒரே மாதிரி மனவார்ப்பு. இரண்டு பேருமே வாழ்க்கையின் ரசிகர்கள்.

முன்னுரையில் கி.ரா.வை தி.ஜா.வின் குடும்பத்தைச் சேர்ந்தவராக குறிப்பிட்ட போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

கதை சொல்லுவதில் கி.ரா. மன்னன். கி.ரா. கதை சொன்னால் பிரமாதமாயிருக்கிறது. கி.ரா.வின் எழுத்துமுறையே ‘ கதை சொல்லுவது ‘ தான்.

1984ம் ஆண்டு கி.ராவுக்கு மதுரையில் அவருக்கு அறுபது வயது நிறைந்ததையொட்டி விழா எடுக்கப்பட்டது. அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து நன்கொடை அனுப்பினேன். ‘ விழாவுக்கு வர இயலவில்லை. கி.ரா. வை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்தேன் ‘ என்று எழுதியிருந்தேன்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இடைசெவல் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நனவாகவில்லை. காலத்தின் கணக்கு எப்போதும் வேறாக இருக்கிறது. 1989ம் ஆண்டு புதுவையில் தொழில் நிமித்தமாகக் குடியேறிய போதுதான் கி.ரா.வைப் புதுவைப் பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியராக அவருடைய அலுவலகத்தில் சந்தித்து தடாலென்று காலில் விழுந்தேன். கி.ரா. தன் சட்டைப் பையைத் தடவி ” காசு எதுவும் என்னிடம் இல்லையே ” என்றார்.

” காசு எனக்கு வேண்டாம். ஆசிர்வாதம் வேண்டும் ” என்றேன். அவ்வப்போது அவருடைய அலுவலகத்திற்குப் போய் அவரைச் சந்தித்து வந்தேன். ஒரு நாள் மாலை “ வாங்க என் வீட்டுக்குப் போவோம் “ நான் சந்தோஷமாக அவருடன் சென்றேன்.

வீட்டில் மகாலட்சுமி மாதிரி கணவதியம்மா !

“ இவர் தான் ராஜநாயஹம் “ கி.ரா அறிமுகப்படுத்தினார். சற்றே ஆச்சரியத்துடன், “இவர்தானா ராஜநாயஹம் ” கணவதியம்மா கேட்டார்கள். ” இவரைப் பத்தி நான் என்ன சொன்னேன் சொல்லு “ என்றார் கி.ரா.

” ராஜநாயஹத்தைக் கூட்டிக் கொண்டுபோய் டிரஸ் எடுக்கணும்னு சொன்னீங்க “

என்னுடைய உடைகளைக் கி.ரா. ரசித்திருக்கிறார். என்னுடைய பேச்சையும் ரசித்திருக்கிறார் என்பதைப் பதினைந்து வருடங்கள் கழித்து 2004ல் ' கதை சொல்லி ‘ கி.ரா டைரியில் குறிப்பிட்டார்.

கி.ராவைப் பற்றி எழுத எண்ணும் போது தி.ஜாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

 ' தவளைகளை தராசில் நிறுத்தி எடை போடுவது போல ‘ சிரமமான விஷயம்தான்.

வற்றாத ஊற்று போல அவருக்குச் சொல்லவும் எழுதவும் நிறைய நிறைய இருக்கிறது. அப்போது கூட கணவதியம்மாவிடம் ஏதேனும் ஒரு விஷயம் சொல்லும்போது ‘ இவ்வளவு நாளா நீங்க அதை சொன்னதேயில்லையே ‘ அம்மா பிரமிப்புடன் சொல்வார்களாம். அவரோடு ஐம்பத்தைந்து வருடம் குடும்பம் நடத்தும் அம்மாவுக்கே புதிதாய்ச் சொல்ல இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.



சுவாரஸியமாகக் கதை சொல்வதைக் கி.ரா பாங்கியம் வீரபாகுவிடம் கிரகித்ததாக சொல்லியிருக்கிறார். கி.ரா. சிறுவனாயிருக்கும் போது இந்தப் பாங்கியம் வீரபாகு என்ற கதை சொல்லி இடைசெவல் கிராமத்திற்கு வருவார். ஊரார் கூடிக் கதை கேட்பார்களாம். பாங்கியம் என்பது ஒரு தாள வாத்தியம். தோலினால் மூடப்பட்ட வெங்கலத்தினால் ஆன மரக்கால். தோலில் நடுவில், எருமை நரம்பில் முடுக்கப்பட்டிருக்கும். தவுல் குச்சியால் பிடித்துக் கொண்டு வலது கையால் விரல்களால் மீட்டிக் கொண்டே பாடி வீரபாகு கதை சொல்லும்போது கி.ராவுக்குக் கதை சொல்லுவது எப்படி என்பது பிடிபட்டிருக்கிறது. அதனால்தான் அவரது எழுத்துமுறையே கதை சொல்லுவதாய் ஆகிப் போனது. ‘

ஆசிரிய நடையைப் பேச்சு நடையில் எழுதக் கூடாது ‘ என்று ரகுநாதன், கு.அழகிரிசாமி துவங்கி சிவபாதசுந்தரம் வரை பலரும் கடுமையாக ஆட்சேபம் செய்த போதும் கூட கி.ராவிடம் பலிக்கவில்லை.


' கி.ரா. 85 காலத்தை வென்ற கதை சொல்லி ' நூலில் எனது கட்டுரை. முதல் பதிப்பு செப்டம்பர் 2007ல் வந்தது.

1 comment:

  1. கிராவினைப் பற்றிய நல்லதொரு அறிமுக இடுகை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.