ஆற்றை ஒட்டி வீடு.
வசதியான தனி காம்பவுண்ட் வீடு. தூசி தான் பெரும் பிரச்னை. எங்கிருந்து தான் அவ்வளவு தூசி வருமோ? சில மாதங்கள் அங்கிருக்க வேண்டியிருந்தது.
இப்போது நினைத்துப் பார்க்கும் போது என்று இல்லை அப்புறம் பல வீடுகளில் பல ஊர்களில் குடியிருந்த போதும் அம்மா எப்போதும் அந்த வீட்டை 'தூசி வீடு' என்றே குறிப்பிடுவது வழக்கம்.
வீட்டின் எதிராக தெருவைப்பார்த்த ஐந்து சின்ன சின்ன வீடுகள். கூரை வீடுகள் அல்ல.
வீடுகள் என்றால் ஒற்றை அறை மட்டுமே கொண்ட தீப்பெட்டி போல வறியவர்களுக்கான வீடுகள். காலைக்கடன் முடிக்க ஆற்றுப்பக்கம் ஒதுங்குவார்கள்.
ஒட்டியே பத்து பதினைந்து தென்னை மரங்கள்.
முதல் வீட்டில் சாண்டில்யன் கதாநாயகி போல உயரமான பெண் இருந்தாள். அவள் சாண்டில்யன் போல இருந்தாள் என்பதே சாண்டில்யன் படித்திருந்த சப்பக்காலன் சொல்லித்தான் தெரிய வந்தது. சாண்டில்யன் தொடர்கதையில் முக்கிய பெண் கதாபாத்திரம் இவள் போல் தான் இருப்பாளாம்.கருப்பில்லாத மாநிறம். இவள் புருஷன் முகம் ஞாபகமில்லை. அதிகாலையில் கூலி வேலைக்கு போய் விட்டு இருட்டிய பின் வருவான் போல.
அதை ஒட்டிய அடுத்த வீட்டில் சினிமா கதாநாயகி போலவே படு ஸ்டைலாக நல்ல சிவப்பாக இருந்தாள். நிலா.
தனி நிலவு தான்.
மூன்றாவது வீட்டில் இருந்த குடும்பத்தில் மோகனா - ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மோகனா மட்டும் இப்போது நினைவில். மோகனா துறு துறு குழந்தை.
மாலை இருட்ட ஆரம்பிக்கும் போது ஐந்து சின்ன சின்ன வீட்டு பெண்களும் குழந்தைகளும் மோகனா பாட்டுக்கு ரசிகர்கள்.
"இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா...
இளமை தரும் இனிய பலா..
பார்க்கட்டும் இன்ப உலா..."
முழு பாடலையும் ரசித்து அந்த சிறுமி சுதியோடு பாடும் அழகு விசேடம்.
தினமும் மாலையில் மோகனா சொர்க்கத்தின் திறப்பு விழா முதலில் பாடி இன்னும் சில சினிமா பாட்டு பாடுவாள்.
நிலாவைப் பார்க்க வாராவாரம் எங்கிருந்தோ காரில் வரும் நபர் பற்றி எதுவும் தெரியாது. அந்த ஆள் வந்தவுடன் நிலாவின் ஒற்றை அறை வீட்டின் கதவு மூடிக்கொள்ளும். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க அந்த நபர் தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். நிலாவே சொன்ன தகவல் என தான் தகவலே.
இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து நிலாவை உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப சொன்னார்கள். அவமரியாதையுடன் அவர்கள் விகாரமாக பார்த்து அழைத்த போது அவமானம் தாங்கவே முடியாமல் நிலா அழுதாள்.
அதன் பிறகு அந்த வீட்டில் அவள் இல்லை.
சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஆகி அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் ஏறும் போது
டான்ஸ் அசிஸ்டெண்ட் ஆக பார்த்த போது
நிலா நிறம் மங்கி பொலிவிழந்து தேய்ந்து..
"நீங்க மதுரையில இருந்தீங்கல்ல?"
முகம் இறுகி கண்கள் தவிக்க மறுத்து
தலையாட்டினாள்.
விரிவாக ஆற்றை ஒட்டிய ஏரியா,
தெரு பெயர் எல்லாம் சொன்னபோதும்
அதே மறுத்த மௌன தலையாட்டல்.
ரயில் ஏற வந்த ஹேர் டிரஸ்ஸர் சுசிலா
" நிலா, இந்த படத்தில நீங்களும் ஒர்க் பண்றீங்களா?"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.