தி. ஜானகிராமன் எழுதிய ஒரு கடிதம்
அன்புள்ள பாலகுமாரன்,
நேற்று நீங்கள் அவ்வளவு அந்தரங்க அன்புடன் விசாரித்து, பலவித (எனக்குப் பிடித்த) பொருள்களை வாங்கி வந்தபோது, எனக்கு
பி. எஸ். ராமையா, இன்னும் மூன்று நாலு பேர் ஞாபகம் வந்தது.
அவர்கள் மிக்க உற்சாகத்துடனும் திறந்த மகிழ்ச்சியோடும் உங்களைத் தழுவி, நன்றி தெரிவிப்பார்கள்.
எனக்கு இந்த மாதிரி செய்ய தைரியம் வருவதில்லை. காரணம் - வெளியே காட்ட பயந்து.
பல பேருக்கு " ஒரு வார்த்தை சொல்லணுமே. இதெல்லாம் இவனுக்கு Due என்று எண்ணம் போலிருக்கிறது" என்று தோன்றும். தோன்றியிருக்கிறது, சிலருக்கு.
ஒரு சினிமா டைரக்டர் இருபது வருஷம் முன் என் கதை ஒன்றைப் படம் எடுக்கிறேன் என்று வந்தவர்,
தாம் படமாக்கப் போகிற, ஆக்கிய இரண்டு கதைகளை - அந்தந்த பாவத்திற்கேற்ப, முக பாவ, அங்க அசைவுகளுடனும், அபிநயங்களுடனும்
சொல்லிக்கொண்டு வந்தார்.
நான் வழக்கம் போல இடித்த புளி போல கேட்டுக் கொண்டிருந்தேன்.
" என்ன இவ்வளவு சொல்றேன். ரீயாக்டே பண்ண மாட்டேங்கறேளே? " என்று despair உடன் சொன்னார்.
எனக்கு வருத்தமாயிருந்தது.
நான் இப்படி placid ஆகவும் prosaic ஆகவும் இருக்கிறேனே என்று.
ஆனால் குருடன் எப்படி ராஜ முழி முழிப்பான்?
நான் அவரிடம் எப்படி என் இயலாமையை விளக்குவது?
அவர் அப்புறம் என் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். ஓரளவுக்கு நீங்களும் என் மாதிரி சங்கோசியாக இருப்பதால், என் placidity யைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு ஒரு ஆச்வாசம். இது சரியான ஊகம் என்று நினைக்கிறேன்.
தேடி வந்தவர்களுக்குத் திருப்தியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கம்.
நாம் நிறையப் பேசவும் இல்லை. புரிந்து கொள்கிறவர்கள் இப்படித் தான் அதிகமாகப் பேசாமல் திளைப்பார்கள் என்று தோன்றுகிறது.
சாந்தாவுக்கு சென்னை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோருக்கும்
என் அன்பு.
நமஸ்காரம்.
தி. ஜா
........
பாலகுமாரன் : " இந்தக் கடிதம் பற்றி எதுவும் சொல்லி அபிப்ராயம் உருவாக்க விரும்பவில்லை.
இது மிகவும் ஆழ்ந்த ஸ்நேகமான கடிதம். மேலோட்டமாய் இதில் ஒன்றும் தெரியாது.
உள்ளே நிறைய பொதிந்திருக்கும், கொழுக்கட்டைப் பூரணமாய்.
மனசும் எழுத்தும் ஒன்றாக இருக்கும் நிலை எல்லோருக்கும் ஏற்படாது.
..........
சாரு நிவேதிதா இந்த கடிதம் குறித்து விசாரித்தார்.
" இந்தக் கடிதம் எப்படிக் கிடைத்தது ராஜநாயஹம்?"
அதற்கு என் பதில் :
முப்பது வருஷம் முந்தி கல்கியில் 'வி. ஐ. பிக்கு வந்த கடிதங்கள்' என்று தொடர்ந்து வாராவாரம் வெளியிட்டு வந்தார்கள்.
அப்பொழுதுதான் இந்த கடிதம் பால குமாரன் குறிப்புடன் வெளியிட்டார்கள். அதை கத்தரித்து நான்
தி. ஜானகிராமன் நள பாகம் நாவலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
இன்று புத்தகங்களை ஒழுங்கு செய்யும் போது கண்டு பிடித்தேன்.
கடிதத்தில் 21.12.1983. தவறாக அச்சுப்பிழையுடன் வருடம் 1983 என்று பிரசுரமாகியிருந்தது. வருடம் 1981 ஆக இருக்கும். ஏனென்றால் தி. ஜானகிராமன் 1982 நவம்பர் 18ம் தேதி இறந்து விட்டார். இதை அப்போதே நான் அதில் மார்க் செய்து வைத்திருந்தேன்.
.........
எப்போதோ கல்கியில், முப்பது வருஷம் முந்தையதாய் இருக்கும். அதில் படித்த விஷயம்.
தி. ஜானகிராமனை சந்தித்த அனுபவம் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்தார்.
பாலகுமாரன் : "இன்றைக்கும் அந்த சந்திப்பு பசுமையாக இருக்கிறது. மிக அரிதாகத் தான் இம்மாதிரியான சந்திப்புகள் நிகழ்கின்றன.
தில்லியிலிருந்து திருவான்மியூருக்கு ஜானகிராமன் குடிபெயர்ந்த நேரம். அவரைப் பார்க்க நானும்
என் மனைவி சாந்தாவும் போனோம்.
மடியில் வைத்து எழுதுகின்ற மரப்பலகை, பேனா, குறிப்பு நோட்டு, ஹார்லிக்ஸ் பாட்டில், அன்று அரைத்த காப்பிப்பொடி, கும்பகோணம் வெற்றிலை, வறுத்த சீவல், பழங்கள் என்று வாங்கிப் போனோம். நமஸ்கரித்தோம்.
ரொம்ப மேலோட்டமான விசாரிப்புகள், மிகச் சுருக்கமாய், அவர் எழுத்து என்னை எப்படி பாதித்தது என்று சொன்னேன். சாந்தாவும் சொன்னாள்.
நான் சினிமாவில் ஆர்வம் காட்டுவது பற்றி எதிர்ப்பாக சொல்லாது, லேசாக கவலைப்பட்டார். அவ்வளவு தான் பேச்சு.
பிறகு வெறுமே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எதுவும் பேசாமல் வெறுமே அருகிருக்கும் நட்பு எல்லாரிடமும் ஏற்படுவதில்லை.
அவர் பேசாதது எனக்கோ சாந்தாவுக்கோ புதிதாயில்லை.
தி. ஜானகிராமன் கண்களால் ஊடுருவார். ஆழ்ந்து மனிதர்களைப் பார்ப்பார். ஓரக்கண் பார்வையோ, பார்த்துப் பார்த்து கண்களை விலக்குவதோயில்லை.
பிறிகொரு சமயம் இப்படி ஆழ்ந்து பார்க்கின்ற பழக்கம் எனக்கு வந்தபோது, கண்களின் வழியே மனதைப் படிக்கிற இயல்பு ஏற்பட்ட போது, தி. ஜானகிராமன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. "