Share

Nov 28, 2022

R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' - ஆத்மார்த்தி

நதியும் நிழலும் - ஆத்மார்த்தி 

 R.P.ராஜநாயஹத்தின் 
'சினிமா எனும் பூதம்' நூலை முன்வைத்து

{சினிமா எனும் பூதம் 
“ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 விலை ரூ 375/-}

கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ “ஏன் ப்ரூஸ்லீ என்னை அடிச்சீங்க?” என்று கேட்பது தானே சரி. ப்ரூஸ்லீ குத்து விட்டாற் போல் தான் R.P.ராஜநாயஹம் த்தின் சினிமா என்னும் பூதம் நூலைப் படிக்கத் தொடங்கியபோது எனக்குத் தோன்றியது. சினிமாவைப் பற்றி இப்படி ஒரு நூல் சாத்தியமா என்று கேட்டிருந்தால் இதை வாசிப்பதற்கு முன் இல்லவே இல்லை என்று தான் பதில் சொல்லியிருப்பேன்.

இந்த உலகத்தில் ஜீவித்திருக்கக் கூடிய யாவற்றின் பொதுத் தன்மையே நதியும் நிழலுமாய்ப் பெருகிக் கொண்டே இருப்பது தானே?  என் சினிமாவும் சினிமாவின் நானும் என்று ஒரு நூலை 
எழுதிப் பார்த்திருக்கிறார் 
R.P. ராஜநாயஹம்.

ராஜநாயஹம்  தன் கண்களைக் கொண்டு பார்த்ததை எடுத்து மனத்திலிட்டுக் கழுவிச் சுத்திகரித்து ஏட்டிலிட்டுக் காட்டத் தொடங்கியதைத் தொகுத்துப் பார்க்கையில் அது மாய விளக்கைத் தேய்த்து விட்டது. சினிமா என்னும் பூதம் கிளம்பி வந்திருக்கிறது. இந்தப் பூதத்துக்குப் பொய் பேசத் தெரியாது என்றே தோன்றுகிறது.

எம்ஜி.ஆர் சிவாஜி ஜெய்சங்கர் ஜெமினிகணேசன் போன்ற வெற்றிமனிதர்களின் கதைகளின் பின் திரைக்கப்பால் பேசுவதாகட்டும் சாவித்ரி சந்திரபாபு போன்ற தோல்விமுகங்களின் கதையாழத்தை அலசுவதாகட்டும் தருணங்களை அடுக்கிச் செல்வதன் மூலமாகவே மெல்லியதோர் அதிர்வைத் தொடர்ந்து பராமரித்துச் செல்கிற R.P.ராஜநாயஹம் த்தின் எழுத்துநடை முக்கியமானதாகிறது. ஒரு ரசிகராக அவர் சினிமா மீதும் அதன் உப-நுட்பங்கள் மீதும் கொண்டிருக்கிற புரிதலும் ஞானமும் அபாரமானது. ஆங்காங்கே அவை எந்தவிதமான அலட்டலுமின்றி வெளிப்படுவது அழகு. நேர் சம்பவங்களாய்த் தனக்கு நிகழ்ந்தவற்றைப் பேசுவதும் பிறர் மூலமாய்த் தனக்கு அறியக் கிடைத்தவற்றைச் சொல்வதும் ஒரே டோனில் ஒரே தொனியில் பேசமுடிவது நூல் மீதான நம்பகத்தைப் பெரிதும் ஏற்படுத்திவிடுகிறது.

இலக்கியம் கலை சினிமா அரசியல் என்று எந்தத் துறையாக இருந்தாலும் சரி, கிட்டச் சென்று உற்றுக் கேட்கும் போது பேசுகிறவர்கள் “ஆஃப் த ரெக்கார்டு” என்று ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது சகஜம். R.P.ராஜநாயஹத்தைப் பொருத்தவரை “ஆஃப் த ரெக்கார்டு” என்று ஒன்று கிடையாது. எல்லாக் கால நேர தருணங்களிலும் ஆன் தி ரெக்கார்ட் மட்டுமே சாத்தியமாகும் நீதிமானின் சீசீடீவீ கண்களை இமைக்காமல் பார்த்தும் பதிந்தும் கொண்டிருக்கவல்ல நிஜங்களின் கூட்டுக்குரலாகத் தன் நூலை ஆக்கியிருக்கிறார். இவை எல்லோருக்கும் ஒப்புமை உள்ளவையா எல்லாரும் இதனை ஏற்பார்களா இதை மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதில்லையா இவருக்கு எப்படித் தெரியும் என்பன போன்ற கேள்விகளை மறுப்பதற்கில்லை. அந்தக் கேள்விகளுக்கும் இடமுண்டு என்பது தான் உண்மையே தவிர அதற்கு மாற்றாய் இந்த நூலை ஒட்டுமொத்தமாய் நிராகரிப்பதற்கு இடமில்லை.

நாம் சந்திக்க முடியாத முந்தைய காலத்தின் நட்சத்திர வானைத் திறக்கிறார் R.P.ராஜநாயஹம். 
மகா மனிதர்களை, தகுதி வாய்ந்த கலைஞர்களை தன் எழுத்தின் வாயிலாக தரிசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார் தமிழ் சினிமாவை நேசிக்கிற யாருக்கும் இந்த புத்தகத்தின் ஆய பயன் என்ன என்று கேட்டால் இந்தத் தரிசனம் தான் என்று சொல்வேன். ஒரு வகையில் பார்த்தால் இந்த எழுத்து கேரளத் தன்மையோடு இருப்பதாகப் படுகிறது. மலையாள மனோபாவம் விமர்சனங்களை அதனதன் கடுமையோடு ஏற்க முனைவது மற்ற நிலங்களைக் காட்டிலும் கூடுதலாய் நிகழ்வது. இந்தப் பூதம் கேரளத்தில் பிறந்திருந்தால் இன்னும் கொழுத்துப் பருத்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.
மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் ஒரே ஒரு வெற்றியோடு அல்லாடி அவர்கள் ஒரு வெற்றி கூட கிடைக்காதவர்கள் என்று சினிமா துறையின் பல மனிதர்களை அவர்களது வாழ்க்கையின் உள்ளும் புறமுமாக நிகழ்ந்த நிகழ்த்தப்பட்ட நிகழாமல் போன சம்பவ நிரல்களைத் தொகுத்த வகையில் இந்த புத்தகம் ஒரு புனைவுக்கு சற்றும் குறைவில்லாத சுவாரசியத்தை படிப்பவர்களுக்கு நல்குகிறது ராஜநாயஹத்தின் எழுத்து நடை அபாரமான ஒன்று. ஒரு நிகழ்வை குறிப்பிட்ட பத்திரிகையாளர் எந்தவகையில் அறியத் தருகிறார் என்று பார்ப்பதற்காகவே அந்த பத்திரிக்கையை நாடிச் செல்வோர் பலர் உண்டு தானே இந்த இடம்தான் புனைவும் நிஜமும் கைகுலுக்குகிற இடம். இந்த இடத்தில் இருந்து ஒரு  ஞாபக-ஆவணத் தொகுப்பைத் தந்திருக்கிறார் ராஜநாயஹம்

சினிமா எப்போதும் செல்வாக்கு மிகுந்த ஊடகமாகவே தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது சாதாரண மனிதர்கள் சினிமாவுக்குள் வந்து பெயர் வாங்கி பிறகு  நட்சத்திரமாக வாழ்ந்து தன் பிம்பத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து நிஜமும் புனைவும் கலந்த ஒரு வாழ்வாகவே வாழ்வது சினிமாவின் டிசைன்.ஒரு கறாரான மனிதராக R.P.ராஜநாயஹம் தான் அறியக் கிடைத்த அத்தனை தகவல்களையும் கோர்த்து இந்த நூலில் வாசகர்களுக்கு தருகிறார்.

 எதிர்பாராத இடங்களில் தென்படுகிற நகைச்சுவை இந்த நூலின் அடுத்த பலம். 

பெரிதாக வாழ்ந்தவர்களின் மேல் மலர் தூவுவதைக் காட்டிலும் தடுமாறி வீழ்ந்தவர்கள் மீது மருந்து கலந்த காற்றாக வருடிச் செல்வது தான் R.P.ராஜநாயஹத்தின் மனவிருப்பமாகத் தோன்றுகிறது. அதனை மெய்ப்பிக்கிற பல இடங்கள் இந்த நூலில் இருக்கின்றன. 

பரிவு என்பதும் கடுமை என்பதும் கலந்தே தாங்க வேண்டிய பொறுப்புடன் எழுத முனைந்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் R.P.ராஜநாயஹம் . நல்ல வெர்ஸஸ் கெட்ட வேண்டிய வெர்ஸஸ் வேண்டாத என்கிற பொதுநோக்குமுறையோடு இந்த நூலை அணுகத் தலைப்படுவோர்க்கு ஏமாற்றமே மிஞ்சும். சினிமா என்னும் மகாநிலத்தின் சம்பவங்களை மொத்தமாக்கிச் சாட்சியப்படுத்தியிருக்கிறார்.

இப்படியெல்லாம் நடந்திருக்குமா இதுதான் நடந்ததா என்பதை தாண்டிக் கசப்பும் இனிப்பும் அற்ற துவர்ப்புச் சாக்லேட்டுகளை ருசிக்க தந்துவிட்டு மாயாவி போல் மறைந்து விடுகிறார் ராஜநாயஹம்.

 நூலெங்கும் தன் மன விரிதலாகவே பேசிச்செல்கிற ஆசிரியர் முடிந்து நிறைகிற புள்ளியில் வாசக ரசிகனின் மனச்சமன்  இருளில் கரைவது நூலின் ஆகச்சிறப்பு.

 வாசித்து முடிக்கிற யாருக்கும் அதற்கு முன்பிருந்த சினிமா மீதான ப்ரேமையும் பந்தமும் அப்படியே தொடருமா என்பது கேள்விக்குறியே. அனுபவம் எதுவாகினும் நம்மைக் கலைக்கவும் சிதைக்கவும் மாற்றியமைக்கவும் பூரண உரிமை கொண்டது தானே, அந்த வகையில் ‘சினிமா என்னும் பூதம்’ எனும் நூல் நமக்குள் நிகழ்த்துகிற அனுபவம் அச்சு அசலானது. நெடுங்கால மாற்றங்களை உண்டு பண்ணக் கூடியது. 
சினிமா விரும்பிகளுக்கு இந்த நூல்               ஒரு பெட்டகம்.

 “ரைட்டர்ஸ் ரைட்டர்” என்ற வகைமையில் 
எழுத்தாளர்களின் எழுத்தாளராகவும் R.P.ராஜநாயஹத்தைச் சொல்வதற்கான சாத்தியங்களை இந்த நூல் திறந்து தருகின்றது.

 எனக்குப் பிடித்த நூல்களின் வரிசையில் சினிமா என்னும் பூதத்தை வைப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் R.P.ராஜநாயஹத்தின் பெயர் நிச்சயம் உண்டு.

இன்னும் அடுத்த காலங்களின் நிலங்களின் சினிமா பூதங்களைக் கட்டியும் அவிழ்த்தும் சாட்சிப் படுத்தக் கூடிய நூல்கள் பெருக வேண்டும். R.P.ராஜநாயஹங்கள் எல்லா மொழிகளிலும் நிலங்களிலும் தோன்றவேண்டும். தோன்றுவார்கள்.

காணத் தானே சினிமா?
நதியும் நிழலும் ; 
R.P.ராஜநாயஹம்  'சினிமா என்னும் பூதம்' நூலை முன்வைத்து

"சினிமா என்னும் பூதம் “ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 
விலை ரூ 375

Nov 22, 2022

தந்தை ஆதித்தனும் மகன் நிவாஸ் ஆதித்தனும்


'விளக்கேற்றியவள்' ஆதித்தன் தான் "கத்தியைத்தீட்டாதே, உந்தன் புத்தியைத்தீட்டு" டி.எம்.சௌந்தர்ராஜன் பாடலுக்கு படத்தில் நடித்தவர்.
அசோகனுக்கு இந்தப்பாடல் என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

பாடல் காட்சி வீடியோ இல்லை.
விளக்கேற்றியவள் பட பாடல்கள் மட்டுமல்ல. ஆதித்தன் கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் 'தாயும் மகளும்' பாடல்கள் வீடியோவும் கிடையாது. பாடல்களுக்கு ஆடியோ தான் இருக்கிறது. இவர் நடிகர்களில் பாவப்பட்ட ஜீவன் தான்.

'விளக்கேற்றியவள்' மற்ற பாடல்கள்
டி.ஆர்.பாப்பா இசை.
1. முத்தமா, ஆசை முத்தமா
முத்தம்மா, வேணும் மொத்தமா

2. வரிசையா மாப்பிள்ளை வருவாரா
சீர் வரிசைய பார்த்தா சிரிப்பாரு,
சீர்வரிசைய பார்த்தா தான் சிரிப்பாரு

3. தொட்டில் கட்டி ஆடுது குருவி

'தாயும் மகளும்' பாடல்கள்

1. சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊற வைத்து

2. கட்டட்டா, கட்டட்டா 
வெட்டி வெட்டி கட்டட்டா
மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா

3. காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும், கவனத்தில் வையடியோ

இசை பி.எஸ். திவாகர். இவர் இளையராஜாவின் குருநாதர்களில் ஒருவர்.


'காதல் படுத்தும் பாடு' வில்லன்களில்
ஒருவராக ஆதித்தன்.

எம்.ஜி. ஆரின் தனிப்பிறவியில் ஆதித்தன் கொள்ளைக்கூட்ட தலைவனாக ஒரு சிலைக்கடியில் எப்போதும் உட்கார்ந்திருப்பார். சஸ்பென்ஸ்..
மாஸ்க்கை கழற்றி விட்டால்
 சாண்டோ சின்னப்பா தேவர்!

தனிப்பிறவியில் ஆதித்தன் நடித்த காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

தேவரின் மற்றொரு படம் தெய்வச் செயலில் மேஜர் சுந்தர்ராஜனை betray செய்கிற குரங்காட்டி ஆதித்தன் தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சி.ஐ.டி சங்கர் படத்தில் ஆரம்பத்தில் 'பாம்' வைத்து கொல்லப்படுகிற போலீஸ் அதிகாரி ஆதித்தன்.

ஆதித்தன் திருமலை ராயன் பட்டினத்தில் மிராசு மகன்.

மிலிட்டரியில் படாத இடத்தில் குண்டடி பட்டு சொல்லாமல்
 ஓடி வந்திருக்கிறார்.

'கார்கோடகன்' நாடகம் காரைக்கால், திருமலைராயன் பட்டிணம் பகுதிகளில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சினிமா கைவிட்ட பின்னும்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் எப்போதும் காரைக்கால் அம்மையார் கணவர் செட்டியாராக நாடகங்களில்.

கோட்டுச்சேரியில் 'திருமுருகன் திரையரங்கம்' - டூரிங் தியேட்டர் சொந்த இடத்தில் 1970ல் நடத்தியிருக்கிறார். மாட்டுப்பண்ணை வைத்திருந்தார்.

கடும் போராட்டமான வாழ்க்கை.

1980ல் ஆதித்தன் கதாநாயகனாக 'சூரிய நமஸ்காரம்' படம் சொந்த தயாரிப்பு. கதாநாயகி கே.ஆர். விஜயா இவருக்காக குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டும் ஃபைனான்ஸியர் கைவிட்டதால் பெரும் பொருளதார சரிவு.

1986ல் கைதியின் தீர்ப்பு படத்தில் வில்லன் ஆதித்தன்.

காரைக்காலில் டெய்லர் வேலை.
பி.எஸ்.ஆர் தியேட்டரில் வேலை பார்த்திருக்கிறார்.




ஆதித்தனுக்கு இரண்டு மனைவிகள். சந்திரா, பத்மா.
சந்திராவுக்கு ஐந்து பிள்ளைகள்.
பத்மாவுக்கு நான்கு புத்திரங்கள்.

ஒன்பது பிள்ளைகளில் கடைசி நிவாஸ் ஆதித்தன்.

மணிகண்டன் 'காக்காமுட்டை'யில் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக, அந்த இரண்டு சிறுவர்களின் அப்பாவாக நடித்தவர் நிவாஸ் ஆதித்தன்.

முன்னதாக "நாங்கள்" படத்தில் ஐந்து கதாநாயகர்களில் ஒருவர் இந்த நிவாஸ்.

கலைஞர் டிவி 'மானாட மயிலாட' சீசன் 3ல் ஆடி போராடி சீசன் 4ல் செகன்ட் ப்ரைஸ் வாங்கிய நிவாஸ் நல்ல நடனக்கலைஞர்.

இந்த மாதம் வெளிவந்துள்ள  திலீப்பின் 'தட்டச்சேரி கூட்டம்' மலையாளப் படத்தில் வில்லன் நிவாஸ் ஆதித்தன்.

விஷால் 'லத்தி' ஹீரோயின் சுனைனா நடிக்கும் 'ரெஜீனா'வில் நடிக்கிறார்.

ஷார்ட் ஃப்ல்ம் ஒன்று
'குமரேசன் கலெக்டர்'  
நிவாஸ் இயக்கியிருக்கிறார்.

சென்னைக்கு சினிமாவுக்காக வந்து இருபத்தி இரண்டு வருடங்களாக சளைக்காமல் நீண்ட போராட்டத்தில் நிவாஸ்.

2000 ஆண்டில் தந்தை ஆதித்தன் சினிமாவில் மறுபடியும் நுழைய வேண்டும் என பெரு முயற்சி செய்து பார்த்தவர் மகன் நிவாஸ்.
Child is the father of the Man.

காமராஜர் திரைப்படத்தில் நண்பர்களில் ஒருவராக ஆதித்தன் தலை காட்டியிருக்கிறார்.

மனோபாலா பட ஆடிசனுக்கு தகப்பனாரை அழைத்துப் போயிருக்கிறார். ஈடேறவில்லை.

இப்போது தன் திரையுலக எதிர் காலம் குறித்த பெரு முயற்சிகளில்
நிவாஸ் ஆதித்தன்.
விரக்தி அண்ட முடியாத மகிழ்ச்சியான கலைஞன்.

Nov 18, 2022

காதல் நிலவே கண்மணி ராதா



Rev.Jeevakani Aruldoss:

'காதல் நிலவே கண்மணி ராதா,
நிம்மதியாக தூங்கு'

"இந்த பாடலை நமது 'கேபி'
( R.P. ராஜநாயஹம்) பாடி அதை அனைவரும் மெய் மறந்து கேட்ட நமது அமெரிக்கன் கல்லூரியில் படித்த இனிமையான நாட்களை பொழுதுகளை மறக்க முடியாது.
P.B.ஸ்ரீனிவாஸும் ஜெமினி கணேசனும் நினைவில் வருவதற்கு முன் 
கேபி ( Rajanayahem R.p. ) தான் 
நமக்கு நினைவுக்கு வருகிறார்.

 அவனது இனிமையான குரலும் இந்த பாடலை பாடும் நளினமும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மறக்க முடியாத சுவையான அனுபவங்கள் அவை."

https://m.facebook.com/story.php?story_fbid=655582319265862&id=100044422989688&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3409253185954790&id=100006104256328&mibextid=Nif5oz

Nov 17, 2022

மலையாள நடிகை கே.வி சாந்தியுடன் க்ரூப் டான்சர் ஆனந்தன் இந்தி பாடல் காட்சியில்

ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த படம் Chori Chori.
1953ல் இந்த இந்திப் படத்தில் சி.எல்.ஆனந்தன் ஒரு பாடலில் க்ரூப் டான்சர்.  மீனவர்களில் ஒருவராக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.

இந்த பாடல் 'உஸ்ஸுபாரு சாஜன், இஸ்ஸு பாரு தாரே' . மலையாள நடிகை கே.வி. சாந்தி ஆடிபபாடும் காட்சி. 


ஆனந்தன் துடுப்பு போட்டுக்கொண்டு எழுந்து நின்று கை நீட்டும் செம்படவர்.
அடுத்த வருடம் தங்கமலை ரகசியத்தில் ஆனந்தன் 'வீராதி வீரன், சூராதி சூரன்' பாடல் காட்சியில் ஆடிப்பாடி நடித்தார்.

கே.வி. சாந்தி தமிழ் படங்களிலும் நடித்தவர்.
ஜெமினி கணேசன் நடித்த 'பெண் குலத்தின் பொன் விளக்கு' 'ஆடிப்பெருக்கு' 
சிவாஜியின் 'மருத நாட்டு வீரன்' போன்ற படங்களில் இந்த சாந்தி உண்டு.

கே.வி.சாந்தி திருவனந்தபுரத்தில் மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவில் நடிகை.
மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ அதிபர் சுப்பிரமணியம் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்கள் தயாரித்தவர். அவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களின் இயக்குநர்.

ஜெமினி கணேசன், பத்மினி நடித்த 'குமார சம்பவம்' முக்கியமான மலையாளப் படங்களில் ஒன்று.

எனக்கு இந்த மெர்ரிலேண்ட், அந்த சுப்ரமண்யம், மலையாள நடிகை கே.வி. சாந்தி பற்றி Associate memory.

மதுரையில் எங்கள் மொசைக் கம்பெனி. இதில் அப்பா, பெரியப்பா, அத்தை பங்கு தாரர்கள்.

என்னுடைய பெரியப்பா மகன் பால்ராஜ் (திருச்சி கிரிமினல் லாயர்),
 அத்தை மகன்கள் சீனிக்குமார் ( ஹைவேஸ் அடிசனல் டிவிசனல் இஜ்சினியர்) செல்லத்துரை ( வி.ஏ.ஓ)

இவர்கள் வேலைக்கு போகும் முன் எங்கள் ஸ்டாண்டர்ட் மொசைக் கம்பெனியை கவனித்து கொண்டார்கள்.
பின்னாளில் ஸ்ரீ கோமதி அம்பிகை ட்ரான்ஸ்போர்ட் அதிபராக சென்னை, தூத்துக்குடி, சங்கரன் கோவிலில் கொடி கட்டிய எங்கள் நெருங்கிய உறவினர் சங்கரன் கோவில்
 மணி கூட இந்த மொசைக் கம்பெனியில் நிர்வாகியாக வேலை பார்த்திருக்கிறார்.

பழனி தேவஸ்தானம், பண்ணைக்காடு அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம் மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவில் மொசைக் டைல்ஸ் நாங்கள் போட்டதுண்டு.

மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ எக்ஸ்டென்ஸன் பில்டிங்கில் மொசைக் வேலையை கவனித்துக் கொண்டிருந்த செல்லத்துரை அத்தான் மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம், இந்த நடிகை கே.வி. சாந்தியையெல்லாம் அப்போது சந்தித்ததைப் பற்றி அப்போது அடிக்கடி சொல்வார்.

இப்போது 2020ல் தான் கே.வி. சாந்தி இறந்தார்.

Nov 16, 2022

கிருஷ்ணா - விஜய நிர்மலா


அலேக் நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா.
இவர் நடித்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்', 'ஜாக்பாட் ஜாங்கோ' டப்பிங் படம் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் முன் போல 1970களில் தமிழ்நாட்டில் பிரபலம். 


விஜய நிர்மலா ' இலந்தப் பயம் ' பாட்டு 'பணமா பாசமா ' 
(1968 )படத்தில் இடம் பெற்று இவரை அலேக் நிர்மலாவாக பிரபலமாக்கியது.

 அலேக் நிர்மலாவுக்கு அப்போதே கல்யாணமாகி பத்து வயதில் 
பெண் குழந்தை இருந்தது.
 ஒரு மகனும் கூட. 

 தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும்
 ( அவருக்கும் கூட திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் )விஜய நிர்மலாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.
முதல் கணவர் பெயர் ராமகிருஷ்ணா.

முதல் கணவருக்கு பிறந்த அந்த மகன் நரேஷ். 
இன்றைய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் step brother.

நரேஷை தெலுங்கு கதாநாயகனாக அலேக் விஜய நிர்மலா 1981லேயே தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார்.

தமிழில் 1985ல் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்து மௌலி இயக்கிய 'பொருத்தம்' படத்தில் கூட நரேஷ் தான் கதாநாயகனாக நடித்ததுண்டு.

2006ல் இவர்  தாயார் பெயரை 
தன் பெயரோடு இணைத்து
 விஜய நரேஷ் என்று மாற்றிக் கொண்டார்.

தினமலர் வாரமலர் இதழ் ஒன்றில் ' கந்தசாமி ' விக்ரம் படம் பற்றி கலைப்புலி தாணு பேட்டி கொடுத்திருக்கிறார். 
அதில் கந்தசாமி படம் பற்றிய பெட்டி செய்தி குறிப்புகளில் ஒன்று. கந்தசாமி படத்தில் விக்ரம் உடன் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சி .பி . ஐ . ஆபீசராக நடித்திருக்கிறார் என்பது. இது சரிதான்.
 தமிழ் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இது பிழையான தகவல். 
 நாற்பது வருடங்களுக்கு முன் பணமா பாசமா வெளி வந்த அதே 1968வருடத்தில் வந்த 'குழந்தைக்காக ' என்ற தமிழ்ப் படத்தில் பேபி ராணிக்கு அப்பாவாக கிருஷ்ணா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

அந்த படம் பார்த்த தமிழ் ரசிகர்கள் இவரை அப்போது"ரவிச்சந்திரன் மாதிரி இருக்கான்" என்றார்கள்.

இப்போது கிருஷ்ணா மறைவுக்கு நடிகை வாணிஸ்ரீ இரங்கல் தெரிவித்திருக்கிறதை தினத்தந்தியில் பார்க்க முடிந்தது.
"அவருடன் நடிக்கும் நடிகைகளை 
ஒரு சகோதரி போல நடத்துவார்."

அலேக் நிர்மலா இவருடனான இரண்டாவது திருமணத்தின் போது பேட்டியொன்றில்  'ஒரு தெலுங்கு படத்தில் கடலில் குளிக்கிற காட்சி படப்பிடிப்பில் கடல்நீரில் கட்டிப்பிடித்து அலைகளில்  உருளும் போது இருவருமே தங்கள் காதலை உணர்ந்ததாக' குறிப்பிட்டிருந்தார்.

ஏ.வி. எம். ஸ்டுடியோவில்
ஒரு தெலுங்கு பட ஷூட்டிங் பார்த்த ஞாபகம் இப்போது வருகிறது.
அலேக் நிர்மலா தன் கணவரை இயக்கிக்கொண்டிருந்தார்.
சுபாஷிணியுடன்
 டூயட் பாடல் காட்சி அது.
சுபாஷிணியை விட இயக்குநர் அலேக் நிர்மலா அழகாக தெரிந்தார்.

அலேக் நிர்மலாவின் நெருங்கிய உறவுப்பெண்கள் ஜெயசுதாவும் சுபாஷினியும்.

நடிகை சுபாஷிணிக்கு தலையில் நிறைய பொடுகு இருப்பதாக 
 ஹேர் ட்ரஸ்ஸர் சுசிலா சொன்னதும் நினைவுக்கு வருகிறது.



விஜய நிர்மலா தமிழ் படங்களில்
 சில பாடல்களால் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

"சந்திப்போமா, சந்திப்போமா
தனிமையில் நம்மைப்பற்றி சிந்திப்போமா?"

"தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம் "

" வாழைத்தண்டு போல ஒடம்புல அலேக்
நீ வாரியணச்சா வழுக்கிறியே நீ
 அலேக் "

"சவாலே சமாளி, தனிச்சி நின்று துணிச்சலோடு சமாளி"

" கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்,
நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்"
....

Photos

1. அலேக் நிர்மலா

2. கிருஷ்ணா

3, 4. அலேக் நிர்மலா மகன் நரேஷ்

Nov 11, 2022

முரசு டிவியில் சினிமா எனும் பூதம் - 50th Episode



Credit goes to 
சின்னவர் உதயநிதி ஸ்டாலின் 


50th episode

R.P. ராஜநாயஹம் 
"சினிமா எனும் பூதம்"
தொடர்

முரசு டிவியில் 

13.11.2022
ஞாயிற்றுக்கிழமை 
காலை எட்டரை மணிக்கு 

50 வது நிகழ்ச்சி
ஒளிபரப்பப்பட இருக்கிறது

.....

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்
முரசு டிவியில் 
 ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
காலை எட்டரை மணிக்கு 
 'சினிமா எனும் பூதம் '
தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

R.P.Rajanayahem cubic portrait

R.P.Rajanayahem cubic portrait 
by Viswa

Video link below

https://youtube.com/shorts/GRyvFr1rHoY?feature=share

....

https://www.facebook.com/100006104256328/posts/2914985668714880/

Nov 3, 2022

எட்டயபுரம் தலப்பா கட்டி -திண்டுக்கல் தலப்பா கட்டி

எட்டயபுரம் தலப்பா கட்டி 
கவிதை.
திண்டுக்கல் தலப்பா கட்டி
பிரியாணி 

“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 

- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’ 

சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.

”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

மனுஷ்ய புத்திரன் நேற்று இரவு எழுதியிருப்பது:

"இந்தக் குளிரில்
தெருவில் தனித்தலையும்
பூனைகளுக்கும் எனக்கும்
ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது

நான் கவிதைகள் எழுதுகிறேன்
அவை எழுதுவதில்லை
அவ்வளவுதான்"

...