Share

Nov 22, 2022

தந்தை ஆதித்தனும் மகன் நிவாஸ் ஆதித்தனும்


'விளக்கேற்றியவள்' ஆதித்தன் தான் "கத்தியைத்தீட்டாதே, உந்தன் புத்தியைத்தீட்டு" டி.எம்.சௌந்தர்ராஜன் பாடலுக்கு படத்தில் நடித்தவர்.
அசோகனுக்கு இந்தப்பாடல் என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

பாடல் காட்சி வீடியோ இல்லை.
விளக்கேற்றியவள் பட பாடல்கள் மட்டுமல்ல. ஆதித்தன் கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் 'தாயும் மகளும்' பாடல்கள் வீடியோவும் கிடையாது. பாடல்களுக்கு ஆடியோ தான் இருக்கிறது. இவர் நடிகர்களில் பாவப்பட்ட ஜீவன் தான்.

'விளக்கேற்றியவள்' மற்ற பாடல்கள்
டி.ஆர்.பாப்பா இசை.
1. முத்தமா, ஆசை முத்தமா
முத்தம்மா, வேணும் மொத்தமா

2. வரிசையா மாப்பிள்ளை வருவாரா
சீர் வரிசைய பார்த்தா சிரிப்பாரு,
சீர்வரிசைய பார்த்தா தான் சிரிப்பாரு

3. தொட்டில் கட்டி ஆடுது குருவி

'தாயும் மகளும்' பாடல்கள்

1. சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊற வைத்து

2. கட்டட்டா, கட்டட்டா 
வெட்டி வெட்டி கட்டட்டா
மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா

3. காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும், கவனத்தில் வையடியோ

இசை பி.எஸ். திவாகர். இவர் இளையராஜாவின் குருநாதர்களில் ஒருவர்.


'காதல் படுத்தும் பாடு' வில்லன்களில்
ஒருவராக ஆதித்தன்.

எம்.ஜி. ஆரின் தனிப்பிறவியில் ஆதித்தன் கொள்ளைக்கூட்ட தலைவனாக ஒரு சிலைக்கடியில் எப்போதும் உட்கார்ந்திருப்பார். சஸ்பென்ஸ்..
மாஸ்க்கை கழற்றி விட்டால்
 சாண்டோ சின்னப்பா தேவர்!

தனிப்பிறவியில் ஆதித்தன் நடித்த காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

தேவரின் மற்றொரு படம் தெய்வச் செயலில் மேஜர் சுந்தர்ராஜனை betray செய்கிற குரங்காட்டி ஆதித்தன் தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சி.ஐ.டி சங்கர் படத்தில் ஆரம்பத்தில் 'பாம்' வைத்து கொல்லப்படுகிற போலீஸ் அதிகாரி ஆதித்தன்.

ஆதித்தன் திருமலை ராயன் பட்டினத்தில் மிராசு மகன்.

மிலிட்டரியில் படாத இடத்தில் குண்டடி பட்டு சொல்லாமல்
 ஓடி வந்திருக்கிறார்.

'கார்கோடகன்' நாடகம் காரைக்கால், திருமலைராயன் பட்டிணம் பகுதிகளில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சினிமா கைவிட்ட பின்னும்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் எப்போதும் காரைக்கால் அம்மையார் கணவர் செட்டியாராக நாடகங்களில்.

கோட்டுச்சேரியில் 'திருமுருகன் திரையரங்கம்' - டூரிங் தியேட்டர் சொந்த இடத்தில் 1970ல் நடத்தியிருக்கிறார். மாட்டுப்பண்ணை வைத்திருந்தார்.

கடும் போராட்டமான வாழ்க்கை.

1980ல் ஆதித்தன் கதாநாயகனாக 'சூரிய நமஸ்காரம்' படம் சொந்த தயாரிப்பு. கதாநாயகி கே.ஆர். விஜயா இவருக்காக குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டும் ஃபைனான்ஸியர் கைவிட்டதால் பெரும் பொருளதார சரிவு.

1986ல் கைதியின் தீர்ப்பு படத்தில் வில்லன் ஆதித்தன்.

காரைக்காலில் டெய்லர் வேலை.
பி.எஸ்.ஆர் தியேட்டரில் வேலை பார்த்திருக்கிறார்.




ஆதித்தனுக்கு இரண்டு மனைவிகள். சந்திரா, பத்மா.
சந்திராவுக்கு ஐந்து பிள்ளைகள்.
பத்மாவுக்கு நான்கு புத்திரங்கள்.

ஒன்பது பிள்ளைகளில் கடைசி நிவாஸ் ஆதித்தன்.

மணிகண்டன் 'காக்காமுட்டை'யில் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக, அந்த இரண்டு சிறுவர்களின் அப்பாவாக நடித்தவர் நிவாஸ் ஆதித்தன்.

முன்னதாக "நாங்கள்" படத்தில் ஐந்து கதாநாயகர்களில் ஒருவர் இந்த நிவாஸ்.

கலைஞர் டிவி 'மானாட மயிலாட' சீசன் 3ல் ஆடி போராடி சீசன் 4ல் செகன்ட் ப்ரைஸ் வாங்கிய நிவாஸ் நல்ல நடனக்கலைஞர்.

இந்த மாதம் வெளிவந்துள்ள  திலீப்பின் 'தட்டச்சேரி கூட்டம்' மலையாளப் படத்தில் வில்லன் நிவாஸ் ஆதித்தன்.

விஷால் 'லத்தி' ஹீரோயின் சுனைனா நடிக்கும் 'ரெஜீனா'வில் நடிக்கிறார்.

ஷார்ட் ஃப்ல்ம் ஒன்று
'குமரேசன் கலெக்டர்'  
நிவாஸ் இயக்கியிருக்கிறார்.

சென்னைக்கு சினிமாவுக்காக வந்து இருபத்தி இரண்டு வருடங்களாக சளைக்காமல் நீண்ட போராட்டத்தில் நிவாஸ்.

2000 ஆண்டில் தந்தை ஆதித்தன் சினிமாவில் மறுபடியும் நுழைய வேண்டும் என பெரு முயற்சி செய்து பார்த்தவர் மகன் நிவாஸ்.
Child is the father of the Man.

காமராஜர் திரைப்படத்தில் நண்பர்களில் ஒருவராக ஆதித்தன் தலை காட்டியிருக்கிறார்.

மனோபாலா பட ஆடிசனுக்கு தகப்பனாரை அழைத்துப் போயிருக்கிறார். ஈடேறவில்லை.

இப்போது தன் திரையுலக எதிர் காலம் குறித்த பெரு முயற்சிகளில்
நிவாஸ் ஆதித்தன்.
விரக்தி அண்ட முடியாத மகிழ்ச்சியான கலைஞன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.