Share

Nov 28, 2022

R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' - ஆத்மார்த்தி

நதியும் நிழலும் - ஆத்மார்த்தி 

 R.P.ராஜநாயஹத்தின் 
'சினிமா எனும் பூதம்' நூலை முன்வைத்து

{சினிமா எனும் பூதம் 
“ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 விலை ரூ 375/-}

கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ “ஏன் ப்ரூஸ்லீ என்னை அடிச்சீங்க?” என்று கேட்பது தானே சரி. ப்ரூஸ்லீ குத்து விட்டாற் போல் தான் R.P.ராஜநாயஹம் த்தின் சினிமா என்னும் பூதம் நூலைப் படிக்கத் தொடங்கியபோது எனக்குத் தோன்றியது. சினிமாவைப் பற்றி இப்படி ஒரு நூல் சாத்தியமா என்று கேட்டிருந்தால் இதை வாசிப்பதற்கு முன் இல்லவே இல்லை என்று தான் பதில் சொல்லியிருப்பேன்.

இந்த உலகத்தில் ஜீவித்திருக்கக் கூடிய யாவற்றின் பொதுத் தன்மையே நதியும் நிழலுமாய்ப் பெருகிக் கொண்டே இருப்பது தானே?  என் சினிமாவும் சினிமாவின் நானும் என்று ஒரு நூலை 
எழுதிப் பார்த்திருக்கிறார் 
R.P. ராஜநாயஹம்.

ராஜநாயஹம்  தன் கண்களைக் கொண்டு பார்த்ததை எடுத்து மனத்திலிட்டுக் கழுவிச் சுத்திகரித்து ஏட்டிலிட்டுக் காட்டத் தொடங்கியதைத் தொகுத்துப் பார்க்கையில் அது மாய விளக்கைத் தேய்த்து விட்டது. சினிமா என்னும் பூதம் கிளம்பி வந்திருக்கிறது. இந்தப் பூதத்துக்குப் பொய் பேசத் தெரியாது என்றே தோன்றுகிறது.

எம்ஜி.ஆர் சிவாஜி ஜெய்சங்கர் ஜெமினிகணேசன் போன்ற வெற்றிமனிதர்களின் கதைகளின் பின் திரைக்கப்பால் பேசுவதாகட்டும் சாவித்ரி சந்திரபாபு போன்ற தோல்விமுகங்களின் கதையாழத்தை அலசுவதாகட்டும் தருணங்களை அடுக்கிச் செல்வதன் மூலமாகவே மெல்லியதோர் அதிர்வைத் தொடர்ந்து பராமரித்துச் செல்கிற R.P.ராஜநாயஹம் த்தின் எழுத்துநடை முக்கியமானதாகிறது. ஒரு ரசிகராக அவர் சினிமா மீதும் அதன் உப-நுட்பங்கள் மீதும் கொண்டிருக்கிற புரிதலும் ஞானமும் அபாரமானது. ஆங்காங்கே அவை எந்தவிதமான அலட்டலுமின்றி வெளிப்படுவது அழகு. நேர் சம்பவங்களாய்த் தனக்கு நிகழ்ந்தவற்றைப் பேசுவதும் பிறர் மூலமாய்த் தனக்கு அறியக் கிடைத்தவற்றைச் சொல்வதும் ஒரே டோனில் ஒரே தொனியில் பேசமுடிவது நூல் மீதான நம்பகத்தைப் பெரிதும் ஏற்படுத்திவிடுகிறது.

இலக்கியம் கலை சினிமா அரசியல் என்று எந்தத் துறையாக இருந்தாலும் சரி, கிட்டச் சென்று உற்றுக் கேட்கும் போது பேசுகிறவர்கள் “ஆஃப் த ரெக்கார்டு” என்று ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது சகஜம். R.P.ராஜநாயஹத்தைப் பொருத்தவரை “ஆஃப் த ரெக்கார்டு” என்று ஒன்று கிடையாது. எல்லாக் கால நேர தருணங்களிலும் ஆன் தி ரெக்கார்ட் மட்டுமே சாத்தியமாகும் நீதிமானின் சீசீடீவீ கண்களை இமைக்காமல் பார்த்தும் பதிந்தும் கொண்டிருக்கவல்ல நிஜங்களின் கூட்டுக்குரலாகத் தன் நூலை ஆக்கியிருக்கிறார். இவை எல்லோருக்கும் ஒப்புமை உள்ளவையா எல்லாரும் இதனை ஏற்பார்களா இதை மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதில்லையா இவருக்கு எப்படித் தெரியும் என்பன போன்ற கேள்விகளை மறுப்பதற்கில்லை. அந்தக் கேள்விகளுக்கும் இடமுண்டு என்பது தான் உண்மையே தவிர அதற்கு மாற்றாய் இந்த நூலை ஒட்டுமொத்தமாய் நிராகரிப்பதற்கு இடமில்லை.

நாம் சந்திக்க முடியாத முந்தைய காலத்தின் நட்சத்திர வானைத் திறக்கிறார் R.P.ராஜநாயஹம். 
மகா மனிதர்களை, தகுதி வாய்ந்த கலைஞர்களை தன் எழுத்தின் வாயிலாக தரிசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார் தமிழ் சினிமாவை நேசிக்கிற யாருக்கும் இந்த புத்தகத்தின் ஆய பயன் என்ன என்று கேட்டால் இந்தத் தரிசனம் தான் என்று சொல்வேன். ஒரு வகையில் பார்த்தால் இந்த எழுத்து கேரளத் தன்மையோடு இருப்பதாகப் படுகிறது. மலையாள மனோபாவம் விமர்சனங்களை அதனதன் கடுமையோடு ஏற்க முனைவது மற்ற நிலங்களைக் காட்டிலும் கூடுதலாய் நிகழ்வது. இந்தப் பூதம் கேரளத்தில் பிறந்திருந்தால் இன்னும் கொழுத்துப் பருத்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.
மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் ஒரே ஒரு வெற்றியோடு அல்லாடி அவர்கள் ஒரு வெற்றி கூட கிடைக்காதவர்கள் என்று சினிமா துறையின் பல மனிதர்களை அவர்களது வாழ்க்கையின் உள்ளும் புறமுமாக நிகழ்ந்த நிகழ்த்தப்பட்ட நிகழாமல் போன சம்பவ நிரல்களைத் தொகுத்த வகையில் இந்த புத்தகம் ஒரு புனைவுக்கு சற்றும் குறைவில்லாத சுவாரசியத்தை படிப்பவர்களுக்கு நல்குகிறது ராஜநாயஹத்தின் எழுத்து நடை அபாரமான ஒன்று. ஒரு நிகழ்வை குறிப்பிட்ட பத்திரிகையாளர் எந்தவகையில் அறியத் தருகிறார் என்று பார்ப்பதற்காகவே அந்த பத்திரிக்கையை நாடிச் செல்வோர் பலர் உண்டு தானே இந்த இடம்தான் புனைவும் நிஜமும் கைகுலுக்குகிற இடம். இந்த இடத்தில் இருந்து ஒரு  ஞாபக-ஆவணத் தொகுப்பைத் தந்திருக்கிறார் ராஜநாயஹம்

சினிமா எப்போதும் செல்வாக்கு மிகுந்த ஊடகமாகவே தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது சாதாரண மனிதர்கள் சினிமாவுக்குள் வந்து பெயர் வாங்கி பிறகு  நட்சத்திரமாக வாழ்ந்து தன் பிம்பத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து நிஜமும் புனைவும் கலந்த ஒரு வாழ்வாகவே வாழ்வது சினிமாவின் டிசைன்.ஒரு கறாரான மனிதராக R.P.ராஜநாயஹம் தான் அறியக் கிடைத்த அத்தனை தகவல்களையும் கோர்த்து இந்த நூலில் வாசகர்களுக்கு தருகிறார்.

 எதிர்பாராத இடங்களில் தென்படுகிற நகைச்சுவை இந்த நூலின் அடுத்த பலம். 

பெரிதாக வாழ்ந்தவர்களின் மேல் மலர் தூவுவதைக் காட்டிலும் தடுமாறி வீழ்ந்தவர்கள் மீது மருந்து கலந்த காற்றாக வருடிச் செல்வது தான் R.P.ராஜநாயஹத்தின் மனவிருப்பமாகத் தோன்றுகிறது. அதனை மெய்ப்பிக்கிற பல இடங்கள் இந்த நூலில் இருக்கின்றன. 

பரிவு என்பதும் கடுமை என்பதும் கலந்தே தாங்க வேண்டிய பொறுப்புடன் எழுத முனைந்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் R.P.ராஜநாயஹம் . நல்ல வெர்ஸஸ் கெட்ட வேண்டிய வெர்ஸஸ் வேண்டாத என்கிற பொதுநோக்குமுறையோடு இந்த நூலை அணுகத் தலைப்படுவோர்க்கு ஏமாற்றமே மிஞ்சும். சினிமா என்னும் மகாநிலத்தின் சம்பவங்களை மொத்தமாக்கிச் சாட்சியப்படுத்தியிருக்கிறார்.

இப்படியெல்லாம் நடந்திருக்குமா இதுதான் நடந்ததா என்பதை தாண்டிக் கசப்பும் இனிப்பும் அற்ற துவர்ப்புச் சாக்லேட்டுகளை ருசிக்க தந்துவிட்டு மாயாவி போல் மறைந்து விடுகிறார் ராஜநாயஹம்.

 நூலெங்கும் தன் மன விரிதலாகவே பேசிச்செல்கிற ஆசிரியர் முடிந்து நிறைகிற புள்ளியில் வாசக ரசிகனின் மனச்சமன்  இருளில் கரைவது நூலின் ஆகச்சிறப்பு.

 வாசித்து முடிக்கிற யாருக்கும் அதற்கு முன்பிருந்த சினிமா மீதான ப்ரேமையும் பந்தமும் அப்படியே தொடருமா என்பது கேள்விக்குறியே. அனுபவம் எதுவாகினும் நம்மைக் கலைக்கவும் சிதைக்கவும் மாற்றியமைக்கவும் பூரண உரிமை கொண்டது தானே, அந்த வகையில் ‘சினிமா என்னும் பூதம்’ எனும் நூல் நமக்குள் நிகழ்த்துகிற அனுபவம் அச்சு அசலானது. நெடுங்கால மாற்றங்களை உண்டு பண்ணக் கூடியது. 
சினிமா விரும்பிகளுக்கு இந்த நூல்               ஒரு பெட்டகம்.

 “ரைட்டர்ஸ் ரைட்டர்” என்ற வகைமையில் 
எழுத்தாளர்களின் எழுத்தாளராகவும் R.P.ராஜநாயஹத்தைச் சொல்வதற்கான சாத்தியங்களை இந்த நூல் திறந்து தருகின்றது.

 எனக்குப் பிடித்த நூல்களின் வரிசையில் சினிமா என்னும் பூதத்தை வைப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் R.P.ராஜநாயஹத்தின் பெயர் நிச்சயம் உண்டு.

இன்னும் அடுத்த காலங்களின் நிலங்களின் சினிமா பூதங்களைக் கட்டியும் அவிழ்த்தும் சாட்சிப் படுத்தக் கூடிய நூல்கள் பெருக வேண்டும். R.P.ராஜநாயஹங்கள் எல்லா மொழிகளிலும் நிலங்களிலும் தோன்றவேண்டும். தோன்றுவார்கள்.

காணத் தானே சினிமா?
நதியும் நிழலும் ; 
R.P.ராஜநாயஹம்  'சினிமா என்னும் பூதம்' நூலை முன்வைத்து

"சினிமா என்னும் பூதம் “ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 
விலை ரூ 375

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.