Share

Mar 26, 2022

முத்துக்குமார் சங்கரன் கவிதை

"தீப்பெட்டியை திறந்து பார்த்தேன்.
அத்தனையும் பிஞ்சு விரல்கள் "
என்பது
குழந்தை தொழிலாளர்கள்
பற்றிய
மிக பிரபலமான கவிதை.
கந்தர்வன் கவிதை தானா??
என்ற கேள்வியுடன்
2009ம் ஆண்டு
என் பதிவொன்றில் 'நினைவில் நின்ற' இதை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
என் 'இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்' நூலில் இந்த பதிவு இடம்பெற்றதுண்டு.

'குழந்தையும் காலமும்'
என்ற தலைப்பில் நான் எழுதிய
அந்த பதிவு கீழே:

குழந்தையும் காலமும்
- R.P. ராஜநாயஹம்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று .

 வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. 
குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். 
அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.
வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.

காலச்சக்கரம் சுற்றியது.
காலம் நகர்கிறது , 
காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது.
காலம் ஓடிவிட்டது.
 காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.

சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது

"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை

சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................

பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????

சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . 
ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .

" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய்"

...

முத்துக்குமார் சங்கரன் எழுதிய கவிதை என்பது இன்று தெரிய வந்தது.

அவர் பின்னூட்டம் கீழே:

 "கணையாழி ஹைக்கூ சிறப்பிதழில் பிரசுரமான என் கவிதை இது
பல்வேறு தளங்களில் என் பெயர் குறிப்பிடாமல் எடுத்தாளப்பட்டது.
தமுஎச கலை இரவு பேனர்களில் தவறாமல் இடம் பெறும். அது என்னை வார்த்தெடுத்த இயக்கம்.
1983இலேயே கவியரங்கங்களில் நான் பாடிய வரிகளே இவை"

ராஜநாயஹம்: 

ஓ, அப்படியா முத்துக்குமார் சங்கரன்.

இது உங்கள் கவிதை தானா?
மிகவும் மகிழ்ச்சி சார்.
இவ்வளவு காலமாக நான் குழம்பிக் கொண்டு இருந்திருக்கிறேன். எவ்வளவோ பேரை கேட்டு பார்த்தும் பதில் கிடைக்கவில்லை.
A serendipitous discovery!

"தீப்பெட்டி திறந்தால் பிஞ்சு விரல்கள்"

உங்கள் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பு இப்போது அதிகரிக்கிறது.

உங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.