தி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்
- R.P. ராஜநாயஹம்
அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர்
கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு
ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.
க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.
'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி.ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக
வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.
விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார். கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார். தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.
பூனைக்கு யார் மணி கட்டுவது ?
பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் அந்த சபையில்.
நான் பேசும்போது இந்த தமிழ் குறிப்பிடாமல் விடவில்லை.
I broke the ice!
" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம் - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.
தனி தமிழ் அன்பர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார்
' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '
தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம். '
விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள்.
"தமிழ் துறை நடத்திய விழாவில் ஒருவன் தமிழை பழிக்கிறான். எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "
டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.
"சாணி உலகம்! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும் "
..............
கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர்.
அவர் புரவலர் ந. கோவிந்தசாமி அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம்.
விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார்.
விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று தவறாக நினைத்திருக்கிறார்.
அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம்.
ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார்.
நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார்.
முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார்.
உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause..
இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது.
புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் '
'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார்.
என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,
கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம்,
கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன்.
கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள்.
திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி.
தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது
என் துணிபு.
விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை.
வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :
" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "
திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன்.
நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்
இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார்.
திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன்.
அன்போடு பதில் கடிதம் எழுதினார்
'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி
"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"
..
ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.
ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு.
காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை.
தி. ஜா பிறந்த ஊர் தேவங்குடி தான். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர்.
தஞ்சை ஜில்லா.
அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருக்கிறார்.
அதனால் தி. ஜா.வின் பால்யமெல்லாம் தஞ்சையில் தான்.
பள்ளிப்படிப்பு காலம்.
கல்லூரி படிப்பு கும்ப கோணத்தில்.
தஞ்சையில் தி. ஜா.வின் தகப்பனார் பிரவச்சனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட் வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து வரி, வரியா விளக்கி தமிழில் ஹரி கதா செய்வது தான் பிரவச்சனம்.
ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார்.
ஜானகிராமனுக்கு அண்ணன் பெயர் ராமச்சந்திரன்.
அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட்.
வேத பாடசாலையில் சம்ஸ்கிருதமும் படித்தவர் இந்த தமிழ் பண்டிட்.
ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன் தான்.
'கமலம்' குறுநாவல் தொகுப்பை
"இந்த குறுநாவல்களில் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் " என்று குறிப்பிட்டிருந்தார்.
மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட போது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது.
இந்த அத்திம்பேர் ராமச்சந்திரன் நிலபுலன்களுடன்
வாழ்ந்த ஊர் தான் 'கீழவிடயல் கருப்பூர்'.
அன்றைய தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர்.
முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில் தான் செட்டில் ஆனார்கள்.
ஜானகிராமன் டெல்லியில் இருந்த காலத்தில் இந்த கீழ விடயல் கருப்பூருக்குத் தான் பெற்றோரை காண்பதற்கு
வர வேண்டியிருந்தது.
ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு, உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர் தான்.
ஜானகிராமன் டெல்லி போகுமுன் சென்னை மயிலாப்பூர் ராக்கியப்ப முதலித் தெருவில் குடியிருந்தார்.
இறக்கும்போது சென்னை திருவான்மியூர் வீட்டு வசதி வாரியம் வீட்டில் குடியிருந்தார்.
தி.ஜானகிராமன் இறந்த போது அவருக்கு வயது அறுபத்திரண்டு தான். இறக்க வேண்டிய வயதா?
ஆனால் ஜானகிராமன் ’வயசானா இருக்கக்கூடாது. அறுபது வயதுக்கு மேல் இருக்கக்கூடாது’ என்று அடிக்கடி சொல்வாராம்.
ஜானகிராமனுக்கு இரண்டு புத்ரர்கள் சாஹேதராமன், ரமணன்.
ஒரு புத்ரி. உமாசங்கரி. உமா சங்கரி மாமியின் கணவர் நரேந்திரநாத்.
தன் கணவர் பற்றி உமா சொல்வார்: ரொம்ப அற்புதமான மனிதர்.
உமா சங்கரியின் அண்ணன்கள் சாஹேத ராமன், ரமணன், கணவர் நரேந்திர நாத் மூவருமே ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டவர்கள். ஆனால் போய்விட்டார்கள்.
There is nothing serious in mortality.
Life is a walking shadow…
- Shakespeare in ‘Macbeth’
ஹைத்ராபாத்தில் இருக்கும் தி.ஜா மகள் உமா சங்கரிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் அமெரிக்காவில். இன்னொருவர் ஹைத்ராபாத்தில்.
...
கூத்துப்பட்டறையில் பயிற்சியாளராக பல முறை ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசியிருக்கிறேன்.
தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.
அடர்த்தியான கதைகள்.
தி.ஜானகிராமனைப்பற்றி, அசோகமித்திரனைப்பற்றி
நிறைய சொல்லியிருக்கிறேன்.
தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.
தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.
நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.
Sorrows find relaxation in solitude.
Every man has his secret sorrows.
மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.
தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.
Charles Dickens, in his novel Great Expectation says
“We need never be ashamed of our tears.”
Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now."
பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள்.
அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?
ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.
வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.
பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.
குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.
அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம்.
உறவு கெட்டுப் போய் விட்டது.
அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.
கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.
விசாலி உடனே தீர்மானிக்கிறாள்.
’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’
கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.
என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.
ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.
என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.
எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.
தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.
..
'தி.ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்'
- எழுத்தாளர் R. P. ராஜநாயஹம்
2021 ஜூன் மாதம் #புரவி இதழில்...
சந்தா மற்றும் விபரங்களுக்கு:
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
புரவி - கலை இலக்கிய மாத இதழ்
#வாசகசாலை