Share

May 31, 2021

சினிமா எனும் பூதம் பற்றி மீரா கதிரவன்

 சினிமாவில் நாம் பார்த்து வியந்த  பிரபலங்கள் பலருடைய இன்னொரு பக்கத்தைப் புரட்டிக் காட்டுகிறது இந்த நூல் .


விந்தைக் கலைஞன் சந்திரபாபு நூறு ரூபாய்  கடன் கேட்டு ஹிந்து ரங்கராஜனிடம் வந்து நிற்கிறார்.  பத்தாயிரம் முன் பணம் கொடுத்து சந்திரபாபுவை தன்னுடைய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வந்திருந்த முன்னணி தயாரிப்பாளரிடம் பணம் வாங்க மறுத்த  சந்திரபாபுவை பணம் தர முடியாது என ரங்கராஜன் துரத்துகிறார். வறூமையிலும் தன் தகுதிக்கான சம்பளத்தை தர மறுக்கும் தயாரிப்பளரிடமிருந்து அந்த முன் தொகையை வாங்க மறுக்கும் சந்திரபாபு  மேல் மரியாதை கூடுகிறது. ஹிந்து ரங்கராஜன் சொல்லியது போலவே'' He is a man of principles" தான்.


தன் அம்மாவிற்குத் தெரிந்தே மூத்த இயக்குனர் ஒருவருக்கு   கொடுப்பதற்காய் ரகசியமாய் எழுதி  வைத்திருந்த நடிகையின் காதல் கடிதம் உதவி இயக்குனராக இருந்த 'ராஜநாயஹம்  கையில் தவறூதலாகக் கிடைக்கிறது  அவர் அந்த நடிகையிடமே திரும்பிக் கொடுக்கிற போது அதற்கு  நடிகையும் அம்மாவும் பாராட்டுகிற நன்றியுண்ர்வு.. 


ஒரு காலத்தில் மிகவும் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் சமாதியை ஒருவன் தினமும் கழிவறையாகப் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டு 'R. P. ராஜநாயஹம்' அங்கு சென்று பார்க்கிறார். அவருக்கு உருவாகும்  வலி மிகுந்த அனுபவத்தை விவரிக்கும் போது நம்முடைய மனமும் கலங்கிப் போகிறது.


தன்னை வைத்து"":இது நம்ம ஆளு:" படத்தை இயக்கிய  எழுத்தாளர் பாலகுமாரனைப் பற்றி   பாக்யராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சியான தகவல்..


இப்படி நாம் அறிந்திராத  சிறு சிறு தகவல்களுடன் மெல்லிய சிரிப்பையும் வலியையும் வரவழைக்கும் பல சுவாரஸ்யமான சினிமாக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.. கட்டுரைகள் என்பதைக் காட்டிலும்  தகவல்கள் மற்றும் செய்திகளின் ஆவணம். 


புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான இன்னொரு கட்டுரை "அசிஸ்டெண்ட் டைரக்டர் அப்துல்லா" அறிவியலும் தகவல் தொழில் நுட்பமும் கூடுதல் சலுகையாகக் கிடைக்காத அப்துல்லா போன்ற சென்ற தலைமுறை உதவி இயக்குனர்கள் ஒரு வகையில் பரிதாபத்திற்குரியவர்கள். சபிக்கப்பட்டவர்கள். அப்துல்லாவும் அப்படி ஒருவராக இருக்கிறார். இப்போதும் அப்துல்லா போன்ற  உதவி இயக்குனர்களைக் காண முடிகிறது. படப்பிடிப்புத் தளத்தில் சக உதவி இயக்குனர்களால் "கிளாப் பாய்" என்று கிண்டலடிக்கப் படும் அப்துல்லா சார்மினார் சிகரெட் அட்டைகளை தூக்கியெறிய மனமில்லாமல் அவற்றில் திரைக்கதைகளை எழுதி ரப்பர் பேண்ட்டால் கட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். இன்னும் இரண்டே வருஷத்தில் பீல்டின் ட்ரெண்டையே மாற்றியமைக்கப் போகும் என நம்பி அவன் வைத்திருக்கும் கதைகளூம் தலைப்புகளூம் கேலிக்குரியவையாக இருந்தாலும் மனதில் வலிக்கிறது. இன்றும் இப்படியான பலரை பார்க்கத்தான் செய்கிறோம். அப்துல்லாவை  நடிகர்  திரு. சிவாஜி கனேசன் என்ன சொல்லி அழைப்பார் என்பதையும் வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்.  நம் எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் ஆதர்சமாக இருக்கிற பல பிரபலங்களினூடான திரு. 'R. P. ராஜநாயஹம் அவர்களின்  அனுபவங்கள்   நூறு வருட கால தமிழ் சினிமா குறித்த  புரிதலை மேலும்  விசாலமாக்குகிறது.  மிகவும் எளிமையான , சுவாரஸ்யமான, அனுபவங்களின் பகிர்தலாக எழுத்து நடை இருப்பதால்  பல இடங்களில் நம் மனதோடு நெருக்கமாக இப்புத்தகம்  உரையாடுகிறது. ஒரு முழுமையான ஆவணமாகவும் வெளிப்பட்டிருக்கிறது.


வாசிக்க வேண்டிய புத்தகம். 


எழுத்து பதிப்பகம் வெளியீடு.

வாழ்த்துகள் R.p. Rajanayahem

மணல் கோடுகளாய் பற்றி கார்த்திகேயன் வெங்கட்ராமன்

 மணல் கோடுகளாய்


R.P.ராஜநாயஹம் சாரின் வாழ்பனுபவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பே "மணல் கோடுகளாய்" என்னும் இந்த கட்டுரை நூல். 


R.P.ராஜநாயஹம் சாருக்கு தனியாக அறிமுகம் தேவையில்லை. சில வருடங்களுக்கு முன்பாக டி.எஸ்.பாலையா அல்லது பானுமதி யாரோ ஒருவர் என்று நினைவு, குறித்த தகவல்களுக்காக இணையத்தில் தேடியபோது சாருடைய வலைப்பூவின் சுட்டி வந்து விழுந்தது. அதைப்படிக்கத் துவங்கி அப்படியே தொடர்ச்சியாக பிரம்மிப்புடன் சினிமா குறித்த அவரது அற்புதமான பதிவுகளை வாசிக்கத் துவங்கினேன். அப்படியே "மு.தளையசிங்கமும் தொழுகையும்" எனும் கட்டுரை தொடங்கி அவரது இலக்கிய வாசிப்பு மற்றும் ரசனை என மற்றொரு தளம் கண்முன்னால் விரிந்தது. நடுநடுவே அவரது வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான பதிவுகளும் தலைகாட்டி அவர்மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்தது.


நாம் எல்லோருக்குமே இந்த வாழ்வில் எத்தனையோ அனுபவங்கள் கிடைத்திருக்கும். எத்தனையோ விஷயங்களை, கசப்புகளைக் கடந்து வந்தருப்போம். ஆனால் எவ்வாறு அதனை ஏற்றுக் கடந்து வருகிறோம் என்பதும், அது நம்மீது என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதும் முக்கியம். R.P.ராஜநாயஹம் சாருக்கும் அதுபோலவே நிகழ்கிறது. நல்ல வளமான பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்கிறார். தந்தையார் அரசுப்பணியில் இருப்பதால் கல்லூரிப் படிப்பு, திருமணம் என நல்லகாலம் தொடர்கிறது. அதன்பிறகு மாமனார் வழியாக பிராந்திக்கடை (கோல்கொண்டா இரண்டு புல் வாங்கும் மு.க. அழகிரி!), கெமிக்கல் பேக்டரி, வட்டி பிஸினஸ் என நகரும் வாழ்க்கையில் தடுமாற்றம் தலைகாட்டுகிறது. திருச்சி வாசம்,

பிறகு வேறுசில முயற்சிகள் செய்து பலனளிக்காமல் பிழைப்புக்காக குடும்பத்துடன் திருப்பூர் செல்கிறார். அங்கும் தொடரும் சிரமங்களையடுத்து சென்னைக்கு வந்து கூத்துப்பட்டறை பணியில் சேர்ந்து வாழ்க்கை அப்படியே நகர்ந்து வருகிறது.


அவ்வாறு நகர்ந்து கொண்டு செல்லும் வாழ்வில், தனது விதவிதமான

அனுபவங்களை, வாசகரது பார்வைக்கு பெரிய judgemental views இல்லாமல் எழுதிச் செல்வது அவரது பெரும்பலம். இந்தக் கட்டுரைகளில் அநேகமாக அவரது முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டவை. அவைதவிர்த்த பிற கட்டுரைகளும் தொகுப்பில் உண்டு! அதுதரும் அலாதியான அனுபவங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பது சரியாக இராது என்பதால் உங்களுக்காக சில குட்டி டீஸர்கள் மட்டும் இங்கே..


கவுண்டமணி ஒரு படத்தில் வீட்டுவாசலில் பிச்சை கேட்கும் பிச்சைக்காரனுக்கு மனைவி இல்லை என்று சொல்லி அனுப்புவதைக் கண்டு கோபத்துடன் அவளைத் திட்டி விட்டு, அவனைத் தான் கூப்பிட்டு சாப்பாட்டு இல்லை என்று அனுப்புவார். அதுபோல R.P.ராஜநாயஹம் சாரின் ஆச்சிக்கும் - அம்மாவிற்கும் நடக்கும் ரணகள எபிசோடுடன் நூல் துவங்குகிறது. அதேபோல 'சமயக்கார பாய்க்கு' சினிமா ஆசைக்கு தூபம் போடும் பகுதியை வெடித்துச் சிரிக்காமல் உங்களால் கடக்க இயலாது. அதேசமயம் ஆசைப்பட்டு புதுவை சேதாரப்பட்டு இண்டஸ்ட்ரி  எஸ்டேட்டில் அவர் உருவாக்கிய கெமிக்கல் பேக்டரியை கைமாற்றுவதும், நடுரோட்டில் அந்த எலக்ட்ரீசியன் கேவி அழுவதும், அதற்குப்பின் அவர் புதுவைக்கே போகாத வரலாறையும் படிக்கும்போது நெஞ்சம் தழும்பி விடும். :-( 


சினிமா உலகில் இரண்டு படங்களில் அவர் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளதை வாசிக்கும் போதும் சரி, கடைசியாக 'ராசுக்குட்டி' திரைப்பட டைட்டில் குறித்து கசந்து போன நெஞ்சம் குறித்து அவர் சொல்லும்போதும் சரி, அவர் கடந்து வந்த மனிதர்களை நினைத்து நமக்கும் கசப்பு மனதில் எழும்பி மறைகிறது. 'individual choice' என்ற தலைப்பிலான கட்டுரையில் திருச்சி இலக்கியக் கூட்டம் ஒன்றில் மோசமாக நடந்துகொண்ட 'பேராசிரியன்' ஒருவனுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இலக்கிய உலகின் இப்படிப்பட்ட அரசியல்களுக்கு தேவைதான் என்று சொல்ல வைக்கிறது. 


அவரது மூத்த மகன் கீர்த்தி திருப்பூரில் பதின்ம வயதில் வேலைக்குச் சென்றதைப் பற்றிய கட்டுரையில், 'கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா" என்ற வரியை முதன்முறை முகநூலில் படித்தபோதும் மனசு கனத்துதான் போனது. அத்தோடு ஜோதிடம் பார்க்க கற்றுக்கொண்டு அவரடைந்த பலவித அனுபவங்கள் ஒருவகை என்றால், திருப்பூரில் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றிய தருணங்களில் குழந்தைகள் சார்ந்த பதிவுகள் நெஞ்சைத் தொடும் வேறொரு வகை! சென்னையில் கூத்துப்பட்டறையில் ரஜினி பேரனோடு அவரது உரையாடல்  குறித்த சிறு பதிவு ஒன்றும் உண்டு. :-)


இத்தனை அனுபவங்களில் அவரது துல்லியமான ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கும். அதுகுறித்த பதிவும் ஒன்று உண்டு. அவரைப் பற்றி மறைந்த கி.ரா அய்யா மற்றும் சாரு நிவேதிதா எழுதிய பதிவுகளும் போனஸ். இதையெல்லாம் வாசிக்கும் போது அவர் எழுத வாய்ப்புள்ள (எழுத வேண்டுமென்று நான் விரும்புகிற) சுயசரிதைக்கான டீஸர் என்று கூட

இந்த நூலைக் கருதலாம். :-) மொத்தத்தில் நிறைவான வாசிப்பு அனுபவம் தரும் பிரதி! ❤️


மணல் கோடுகளாய்

R.P.ராஜநாயஹம்

யாவரும் பப்ளிஷர்ஸ்

ரூ. 190.

May 30, 2021

சுந்தர ராமசாமி பிறந்த நாள்

 இன்று சுந்தர ராமசாமி பிறந்த நாள். 


எழுதுவதை யோகமாக, யோகமாக, தவமாய் பாவித்தவர். 

எழுதுவதை ஏதோ பிரம்ம பிரயத்தனம் என்ற தோரணையில் சுந்தர ராமசாமி எப்போதும் மேற்கொள்வார். மிகுந்த கவனத்துடன் எழுது பொருட்களை தேர்ந்தெடுப்பார். 

திரும்ப திரும்ப மாற்றி எழுதுவார். 

எழுத்தில் மேற்கோள்களை தவிர்ப்பார். 


சுந்தர ராமசாமி எழுத்தை பிற எழுத்தாளர்கள்      மேற்கோள் காட்டுவது ஸ்டேட்டஸாக இருந்தது.


சுந்தர ராமசாமி சொல்வது போல,

சுந்தர ராமசாமி சொல்வார், 

சுந்தர ராமசாமி சொன்னதைப் போல 


இப்படி.. இப்படியெல்லாம்


"ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை" கட்டுரை நான் எழுதிய போது அதையொட்டி

 பல அதிர்வுகளை நான் சந்திக்க நேர்ந்த போது 


சுந்தர ராமசாமி : "Dear R.P. Rajanayahem, I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks. I am being inflicted with peril and mental Agony For the past fifty years by this type of irresponsible remarks. " 


https://m.facebook.com/story.php?story_fbid=3066192660260846&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3050139905199455&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2741056216107827&id=100006104256328

May 29, 2021

மூனு எளனி

 2018 


மினி பஸ், சிட்டி பஸ், ஷேர் ஆட்டோ என்று 

ஸ்ரீ ஐயப்ப நகர் ஸ்டாப்பில் இறங்கியவுடன்

 இளநீர் ஒரு வண்டியில். 

இளனிக்கார ஆளை காணவில்லை. 


பார்வையை ஓட்டுகிறேன். 


பக்கத்தில் ஆட்டோக்காரர் சவாரி ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர் 

எழுந்து வந்தார்.


“சார்,அவன் டீ சாப்பிட போயிருக்கிறான்.”


சரி, வெய்ட் பண்றேன்.


ம்ஹும். ஆளக்காணோம்.


என்னை விட அந்த ஆட்டோக்காரர் 

ரெஸ்ட்லெஸ் ஆகி விட்டார்.

“இருங்க சார், நான் போய் கூட்டி வர்றேன்.”


இருபது கடை தாண்டி இருக்கும் ஐயப்பநகர் மெயின்ரோட்டு முனையில் இருக்கும்

 டீக்கடைக்கு ஓடுகிறார்.


அவரையும் கொஞ்ச நேரம் காணோம். 

சரி வேண்டாம்னு எனக்கு கிளம்ப மனசில்லை.


 எனக்காகவும் இளனிக்காரருக்காகவும் 

இப்படி சம்பந்தமேயில்லாத ஆட்டோக்காரர் மெனக்கெடும்போது 

நான் பொறுமை காப்பது தான் நியாயம்.


ஷேர் ஆட்டோக்களும், மினி பஸ்ஸும், சிட்டி பஸ்களும், ஃபாஸ்ட்ராக், ஓலா, உபர் கால்டாக்ஸிகளும் இருக்கும் ஊரில் 

ஒரு ஆட்டோக்காரரின் தொழில் தான் எத்தனை போராட்டமானது?


கொஞ்ச நேரத்தில் ஆட்டோக்காரர் ஓடி வருவது தெரிந்தது. வரும்போதே என்னைப் பார்த்து 

கை காட்டிக்கொண்டே தான் வந்தார்.


“சார், டீ குடிச்சிட்டு இருக்கான். 

நான் சொல்லிட்டேன். இப்ப வந்துடுவான். போயிடாதீங்க”


“ அதெப்படிங்க நான் போக முடியும். நீங்க இப்படி எனக்கு ஒரு எளனி குடிக்க, 

அந்தாளுக்கு ஒரு எளனி விக்க வேண்டி சிரமப்படுகிற போது 

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலே.”


கொஞ்ச நேரம் கழித்து எளனி வண்டிக்காரர் 

ஓடி வந்தார். வரும்போதே இங்கே ஆட்டோக்காரர் ‘எளனி குடிக்க ஆள் இன்னமும் நிக்கிறார்’ என்று கையால் சிக்னல் செய்தார்.


நான் சொன்னேன் “ ஆட்டோக்காரர் பாரு, எவ்வளவு நல்ல மனசு. ஒன் வியாபாரத்துக்கு எவ்வளவு மெனக்கிடுறார்.”


பரிதாபமான பஞ்ச தோற்றத்தில் எளனிக்காரர்.


 காலை சாப்பாடே அந்த டீயாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்.


”ஆட்டோக்காரருக்கும் ஒரு எளனி கொடு.

 நான் காசு கொடுத்திடுறேன்.”


ஆட்டோக்காரர் வேண்டவே வேண்டாம் 

என்று மறுத்தார். 

நான் ஆட்டோக்காரரும் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து எளனி வாங்கிக்கொடுத்தேன்.


“ ஒரு எளனிக்கு ஒனக்கு என்ன கிடைக்கும்?”


“ நாலு ரூபா சார். ஓனருக்கு ஒரு எளனிக்கு

 ஐந்து ரூபா”


நான் ரெண்டு எளனி காசை கொடுத்து விட்டு இன்னொரு நாலு ரூபா சேர்த்துக்கொடுத்தேன்.


’எதுக்கு சார்?’


”ஒனக்கு மூனு எளனி வித்த லாபம் 

கிடைச்சதா இருக்கட்டும்.”


..

May 27, 2021

சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்' சிறுகதை தொகுப்பு

 '2004 டிசம்பர் மாதம்

 'சௌந்தர சுகன்' பத்திரிகையில்

 R. P. ராஜநாயஹம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி' 


கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்.

 ஜெயகாந்தன் எழுத்தை முழுமையாக படித்திருந்தேன். ஜெயகாந்தனை விட

 பெரிய எழுத்தாளன் இருக்க முடியாது என்று நம்பியிருந்தேன். 


நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது 

என் தம்பியொருவன் அப்போது ‘பிரசாதம்’ என்று ஒரு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். (இந்த தம்பி தான் சென்ற வருடம் கொராணாவிற்கு பலியான

 நாகை சன் டிவி ரிப்போர்ட்டர்) 


‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது.


 அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன்.

 முன்னுரையை வாசித்தேன்.

 ‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே 

என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’

 என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை 

என்னைச் செயலோயச் செய்துவிட்டது. 


முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது.

 ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் தான் கிணற்றுத் தவளை. என்னுடைய நம்பிக்கை உடைந்து விட்டது. 

அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். 

கிடாரி, 

ஒன்றும் புரியவில்லை,

வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை

அந்த வயதில் ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன.


 எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், 

சீதை மார்க் சீயக்காய்த் தூள்,

 மெய்+பொய்=மெய் எல்லாமே 

ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.


SERENDIPITIOUS HAPPY DISCOVERY!

 யார் இந்த சுந்தர ராமசாமி? 

ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை

 ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி.

 ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத 

LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக 

இவரிடம் தெரிகிறது. 


இப்போது நினைக்கிறேன். எனக்கு வாசகனாக       ஒரு TRANSFORMATION சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.


அப்புறம்  ஜானகிராமன் 'மோகமுள்' 'செம்பருத்தி'   'உயிர்த்தேன்',  'அம்மா வந்தாள்' என்று வாசிக்க ஆரம்பித்து

 ஒரு ரவுண்டு வந்தேன்.

May 26, 2021

வேப்பிலை சாறு

 2018 அக்டோபர் 24 தேதியில் ந.முத்துசாமி                                 மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில்                                 இன்று வரை காணாதது.   

நொறுங்கிய நிலை.

வேறெந்த சாவும் இன்று வரை 

அந்த அளவுக்கு என்னைப் பாதித்ததில்லை 


வேப்பிலை சாறு குடித்தால் இழப்பின் பெருந்துக்கம் குறையும் என்று 

பலமுறை குடிக்க வேண்டியிருந்தது.

He left a great void in me. 

ஒரு பெரியவர் ”இப்படி தாங்க முடியாத துயரம்                    ஆறு மாதம் வரை மனதை ரொம்ப வருத்தும்.              அதற்கு பிறகு நிவாரணம் உண்டு” என்றார்.


துக்கம் கொஞ்சமும் நீங்கிய பாடில்லை. 

இழப்பின் துயரம் அகலவில்லை.

உதாரணப்படுத்திக்காட்டவே முடியாத அளவிற்கு, எவரோடுமே ஒப்பிட்டு காட்ட முடியாத

 ஒரு அற்புத மனிதர். 


Muthuswamy's death leaves a heartache no one can heal.

His special face, his special smile ...


 https://rprajanayahem.blogspot.com/2018/11/blog-post.html

"இலைய்யா பர்ருவத்திலே"

 "இலைய்யா பர்ருவத்திலே" ன்னு ஆரம்பிச்சு 

கபில் தேவரும் நவாஸ்ஸுதின் சித்திக்காரும் 

என்னத்தையோ 

சொல்றாங்க..

திருப்பூர் கிருஷ்ணனின் புத்திர சோகம்


 கொராணாவின் கோரப்பிடிக்கு மகன் அரவிந்தனை பறி கொடுத்துள்ள திருப்பூர் கிருஷ்ணன், அவருடைய மனைவி இருவரும் கொராணாவினால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

“ ராஜநாயஹம், நீங்களும் எனக்கு மகன் மாதிரி தான். நீங்க கவனமா, பத்திரமா இருங்க “ என்கிறார்.
சத்குரு...
அவர் அதிகம் பேசக்கூடாது.
கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் சொல்வது போல
திருப்பூர் கிருஷ்ணனுக்கு ஆயிரம் கைகள் இருந்தாலும் போதாது. அவருடைய நண்பர் வட்டம் மிகப்பெரிது.
அவருக்கு இப்போது யாரும் செல்பேசியில் தொடர்பு கொள்ளவேண்டாம். அவரால் பேசவே முடியாத உடல்நிலையோடு மனநிலையும்.
I confess, I have disturbed him.

May 25, 2021

Federico Garcia Lorca

 Federico Garcia Lorca's Drawings


Although Lorca's drawings dont receive attention,

 he was also a talented artist.


ஸ்பானிய ஃப்ராங்கோவின் தேசீயவாத சக்திகளால் 1936ல் 

லோர்க்கா கைது செய்யப்பட்ட 

சில மணி நேரத்திலேயே 

சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். 

அவர் உடல் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.


38 வயது தான் அப்போது.


Federico Garcia Lorca 

met the violent fate he had foreseen 

when he wrote: 


"Then I realized I had been murdered

They looked for me in cafes, cemetaries and churches

But they did not find me

They never found me?

No, they never found me!"


நம்முடைய மகாகவி பாரதியை விடவும் 

இளைய வயதில் மறைந்திருக்கிறார் லோர்க்கா.


ஸ்பானிஷ் கவிஞன் லோர்க்கா 

 நாடகாசிரியர், இயக்குனரும் கூட. 


.......


http://rprajanayahem.blogspot.in/2016/05/blog-post_23.html

May 21, 2021

இடைசெவலா? புதுவையா?

 

பெரிய எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை, எழுதுவதைக் கேட்க ஆசைப்படுவார்கள். 

தன்னைப்பற்றிய சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். 


கி. ரா பதினஞ்சு  வருஷங்களுக்கு முன்னே 'என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்' என்று நான் அவருக்கு போன் போட்டு பேசும் போது ஆரம்பித்தார். 

ஆரம்பித்தார் என்று நான் சொல்லக் காரணம்,  அவருக்கு அடுத்தடுத்து போன் போட்ட போதெல்லாம் அவர் இதை தொடர்ந்து

 மீண்டும் மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்தார். 


கே. எஸ். ராதாகிருஷ்ணன்  வெளியிடப் போகும்                                                'கி. ரா. எனும் கதை சொல்லி - 85'

எனும் நூலில் நான் எழுதும் ஒரு கட்டுரையும் சேர்க்க தான் விரும்புவதாக விளக்கினார். 

நடிகர் சிவகுமார் கூட ஒரு கட்டுரை எழுதித் 

தந்து விட்டார் என்றார். 


1990 துவங்கி 2005 வரை ஒரு இருபது கட்டுரைகள்  இலக்கிய சம்பந்தமாக ' மேலும் ', கணையாழி, காலச்சுவடு, சௌந்தர சுகன், கனவு பன்முகம் ,  இணைய இதழ்கள் என்று  பத்திரிக்கைகளில் சொற்பமாக எழுதியதுண்டு. அதற்கே ஒரு திரைப்பட இயக்குநர் 'ராஜநாயஹம் பேனாவை எடுக்க மாட்டார். எடுத்தா பூகம்பம் தான்' என்றாராம். 


'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை'யெல்லாம் அந்த கணக்கில் தான். 


 நான் அதிகம் எழுதுபவன் அல்ல என்பதோடு என்னுடைய வேலைப்பளு,  சொந்த வாழ்க்கை பொருளாதார துயரங்கள்  அப்போது 

எழுதுகிற ஆர்வத்திற்கு பெருந்தடை. புத்தக வாசிப்பு எப்போதும் போல  உச்சத்தில் தான் இருந்தது. 


' ஆன வயதிற்கு அளவில்லையெனினும் தெளிவே வடிவாம் கி. ரா '

என்று தலைப்பிட்டு எழுத ஆரம்பித்தேன். 


இப்போது நினைத்துப் பார்க்க விசித்திரமாக இருக்கிறது. 

வாரம் ஒரு பத்து வரி எழுதுவது பெரும்பாடாக இருந்தது. 

ஒரு பாதி எழுதிய நிலையில் திருப்தியின்றி தூக்கிப் போட்டு விட்டேன். 

மனசுக்கு சங்கடமாயிருந்தது. 


கி. ரா கதைசொல்லி பத்திரிகையில் 

அப்ப மூனு வருஷத்துக்கு முன் ராஜநாயஹம் பற்றி டைரியில் ஒரு பக்க குறிப்பு எழுதியிருந்தார். பதிலுக்கு நான் அவர் பற்றி எழுத வேண்டாமா என்று மனசாட்சி தொந்தரவு செய்தது. 


கி. ரா "என்னய்யா ராஜநாயஹம், சீக்கிரம் அனுப்புங்க. என்னய பத்தி சீக்கிரமா 

எழுதி அனுப்புங்க"  என்றார். 


ஒரு வழியாக மீதியையும் எழுதி முடித்து, எழுதியதில் ஒரு திருத்தம் கூட செய்யாமல் அவருக்கு அனுப்பி வைத்தேன். 


படித்து விட்டு அவர் சந்தோஷமாக சொன்னார் 

 ' ஒங்க கட்டுரை ரொம்ப நல்லா வந்துருக்குய்யா'

 

' கி. ரா எனும் கதை சொல்லி- 85' நூலில் ராஜநாயஹம் எழுதியதும் 2007ல வெளி வந்தது. 


அந்த கட்டுரை கீழே :


"ஆன வயதிற்களவில்லை எனினும் 

தெளிவே வடிவாம் கி. ரா. "


மதுரை ரீகல் தியேட்டர் அருகிலிருந்த

 சர்வோதய இலக்கியப் பண்ணையில் தி.ஜானகிராமனின் ‘மரப்பசு' நீலபத்ம நாபனின் ‘பள்ளிகொண்ட புரம்' இரண்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டு கிளம்பவிருந்த நேரம் 

அங்கே புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு நின்றிருந்த ஒருவர்

 ‘கி.ராவின் கதவு' சிறுகதைகள் நூலையெடுத்து 

” இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் “ என்றார்.


”கதவு கதையை முதலில் படித்துப் பாருங்கள், அதன்பின் வாங்குங்கள் "


' லாலாக்கடைக்காரன் சொல்லுவதில்லையா? சாம்பிள் சாப்பிட்டு பார்த்துவிட்டுப் பலகாரம் வாங்குங்கள் ' . 

இத்தனைக்கும் அந்த நபர் புத்தகக் கடையோடு சம்பந்தப்பட்டவரும் அல்ல.

நான் அந்தக் கடையில் புத்தகங்கள் பார்த்து வாங்கிய நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருந்தவர் அந்த மனிதர். 


நான் புன்னகையுடன் கதவு சிறுகதைகளுக்கும் பில் போடச் சொன்னேன்.


” வாங்க காலேஜ் ஹவுஸில் காப்பி சாப்பிடுவோம்” என்று 'கதவை' சிபாரிசு செய்த நபரை

 அன்போடு அழைத்தேன்.


”என் பெயர் கோணங்கி. நான் ஒரு எழுத்தாளன்”.


'தச்சன் மகள்' ஞாபகத்திற்கு வந்தது.


”அந்தக் கதையை நீங்கதானே எழுதியிருக்கீங்க”


“ஆமாம்”


டிபன், காப்பி சாப்பிட்டு விட்டு விடைபெற்றார் கோணங்கி. 

கோணங்கி அறிமுகமான அதே நாளில்தான் கி.ராவையும் எனக்கு தெரிய வந்தது. 

தொடர்ந்து கி.ராவின் அனைத்து நூல்களையும் வாங்கிப் படித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டு என் நண்பன் சரவணன் மாணிக்கவாசகத்திடம் சொன்னேன். 'தி.ஜானகிராமனுக்கும் கி.ராஜ நாராயணனுக்கும் ஒரே மாதிரி மனவார்ப்பு. இரண்டு பேருமே வாழ்க்கையின் ரசிகர்கள்.' 


அ. மாதவன் கதைகளுக்கு சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரையில் கி.ரா.வை தி.ஜா.வின் குடும்பத்தைச் சேர்ந்தவராக குறிப்பிட்ட போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.


கதை சொல்லுவதில் கி.ரா. மன்னன். 

கி.ரா. கதை சொன்னால் பிரமாதமாயிருக்கிறது. கி.ரா.வின் எழுத்துமுறையே

 ‘ கதை சொல்லுவது ‘ தான்.


1984ம் ஆண்டு கி.ராவுக்கு மதுரையில் அவருக்கு அறுபது வயது நிறைந்ததையொட்டி விழா எடுக்கப்பட்டது. 

அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 

நன்கொடை அனுப்பினேன்.

 ‘ விழாவுக்கு வர இயலவில்லை. கி.ரா. வை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்தேன் ‘

 என்று எழுதியிருந்தேன்.


ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இடைசெவல் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நனவாகவில்லை. 

காலத்தின் கணக்கு எப்போதும்

 வேறாக இருக்கிறது. 


1989ம் ஆண்டு புதுவையில் தொழில் நிமித்தமாகக் குடியேறிய போதுதான் 

கி.ரா.வைப் புதுவைப் பல்கலைக்கழக 

வருகை தரு பேராசிரியராக அவருடைய அலுவலகத்தில் சந்தித்து தடாலென்று காலில் விழுந்தேன். கி.ரா. தன் சட்டைப் பையைத் தடவி

 ” காசு எதுவும் என்னிடம் இல்லையே ” என்றார்.


” காசு எனக்கு வேண்டாம். ஆசிர்வாதம் வேண்டும் ” என்றேன்.


 அவ்வப்போது அவருடைய அலுவலகத்திற்குப் போய் அவரைச் சந்தித்து வந்தேன். ஒரு நாள் மாலை “ வாங்க என் வீட்டுக்குப் போவோம் “


 நான் சந்தோஷமாக அவருடன் சென்றேன்.


வீட்டில் மகாலட்சுமி மாதிரி கணவதியம்மா. 


“ இவர் தான் ராஜநாயஹம் “ கி.ரா அறிமுகப்படுத்தினார். 

சற்றே ஆச்சரியத்துடன், “இவர்தானா ராஜநாயஹம் ” கணவதியம்மா கேட்டார்கள்.


 ” இவரைப் பத்தி நான் என்ன சொன்னேன் சொல்லு “ என்றார் கி.ரா.


” ராஜநாயஹத்தைக் கூட்டிக் கொண்டுபோய் 

டிரஸ் எடுக்கணும்னு சொன்னீங்க “


என்னுடைய உடைகளைக் கி.ரா. ரசித்திருக்கிறார். என்னுடைய பேச்சையும் ரசித்திருக்கிறார் என்பதைப் பதினைந்து வருடங்கள் கழித்து 2004ல்

 ' கதை சொல்லி ‘ கி.ரா டைரியில் குறிப்பிட்டார்.


கி.ராவைப் பற்றி எழுத எண்ணும் போது தி.ஜாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

 ' தவளைகளை தராசில் நிறுத்தி எடை போடுவது போல ‘ சிரமமான விஷயம்தான்.


வற்றாத ஊற்று போல அவருக்குச் சொல்லவும் எழுதவும் நிறைய நிறைய இருக்கிறது. 

அப்போது கூட கணவதியம்மாவிடம் 

ஏதேனும் ஒரு விஷயம் சொல்லும்போது

 ‘ இவ்வளவு நாளா நீங்க அதை சொன்னதேயில்லையே ‘ அம்மா பிரமிப்புடன் சொல்வார்களாம். 

அவரோடு ஐம்பத்தைந்து வருடம் குடும்பம் நடத்தும் அம்மாவுக்கே புதிதாய்ச் சொல்ல

 இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.


சுவாரஸியமாகக் கதை சொல்வதைக் கி.ரா பாங்கியம் வீரபாகுவிடம் கிரகித்ததாக சொல்லியிருக்கிறார்.


 கி.ரா. சிறுவனாயிருக்கும் போது இந்தப் பாங்கியம் வீரபாகு என்ற கதை சொல்லி இடைசெவல் கிராமத்திற்கு வருவார்.


 ஊரார் கூடிக் கதை கேட்பார்களாம்.

 பாங்கியம் என்பது ஒரு தாள வாத்தியம். தோலினால் மூடப்பட்ட வெங்கலத்தினால் 

ஆன மரக்கால். தோலில் நடுவில், எருமை நரம்பில் முடுக்கப்பட்டிருக்கும்.

 தவுல் குச்சியால் பிடித்துக் கொண்டு 

வலது கையால் விரல்களால் மீட்டிக் கொண்டே பாடி வீரபாகு கதை சொல்லும்போது 

கி.ராவுக்குக் கதை சொல்லுவது எப்படி 

என்பது பிடிபட்டிருக்கிறது. 

அதனால்தான் அவரது எழுத்துமுறையே 

கதை சொல்லுவதாய் ஆகிப் போனது.


ஆசிரிய நடையைப் பேச்சு நடையில் எழுதக் கூடாது ‘ என்று 

ரகுநாதன், கு.அழகிரிசாமி துவங்கி சிவபாதசுந்தரம் வரை 

பலரும் கடுமையாக ஆட்சேபம் செய்த போதும் கூட கி.ராவிடம் பலிக்கவில்லை.


..... 


சந்தோஷ் குமார் 'விமர்சனம் இணைய தளம்' வெளியிட்டுள்ள R. P. ராஜநாயஹம் பதிவு

ராஜநாயஹம் பதிவுகள் தொடர்ந்து திருடப்படுகின்றன

 மீண்டும் ஈயடிச்சான் காப்பி 


என்னுடைய எம். ஜி.ஆர் பற்றிய பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து Mahesakumar Tavarayan என்கிற நபர் தன் முகநூல் பக்கத்தில் போட்டுக்கொண்டுள்ளதாக Murugan RD தகவல் தருகிறார். 

இதை தட்டிக் கேட்ட Murugan RD க்கு மகேசகுமார் தவராயன் திமிரான பதில் 

"தெரியும். இப்ப அதுக்கென்ன". 


Mahesakumar Tavarayan முகநூல் பக்கத்தில் என்னால் நுழைய முடியவில்லை. 


இந்த மகேசகுமார் தவராயனை கண்டிக்க வேண்டும். நான் எழுதிய 'என்னத்த கன்னையா' பதிவைக்கூட இந்த நபர் திருடியிருக்கிறார்.


'Tamil Images (yester year) தமிழ்' என்ற குரூப்பில் ராஜநாயஹம் பதிவுகளை மகேசகுமார் தவராயன் காப்பி பேஸ்ட் செய்வதாக தெரிகிறது


சௌந்தரம் ஸ்ரீநிவாசன் சில மாதங்களுக்கு முன்பு 

சரோஜா தேவி பதிவை காப்பியடித்து Muktha films குழுவில் போட்டுக்கொண்ட போது 

நல்ல நண்பர்கள் பலர் 'ராஜநாயஹம் பதிவு' என சுட்டிக் காட்டியவுடன் அங்கே பதிவு நீக்கப்பட்டதை அறிவீர்கள். 


கீழே  உள்ள என் லிங்க் களை தயவு செய்து பாருங்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=2964218407124939&id=100006104256328


http://rprajanayahem.blogspot.com/2021/02/blog-post_14.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2016/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_12.html


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_07.html

May 20, 2021

துவேஷம்



விகடன் தடம் 2017 மே மாத இதழில் ”இன்னும் சில சொற்கள்”.


 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு ஒவ்வொரு இதழிலும் பழுத்த எழுத்தாளர்  ஒருவர் பதில் சொல்லும் பகுதி. 


 சிற்பியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி

’அசோகமித்திரன்?’  

பதில் –  ’இருபது வருடங்களாக இறந்து கொண்டிருந்தவர்.’


விசித்திரமாக இப்படி கூடவா ட்ரிப்யூட்?


கடந்த இருபது வருடங்களிலேயே எவ்வளவோ நல்ல படைப்புகளை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். 


.......


”எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே  கவிதைகள் மேல  ஈடுபாடு இல்லை” என்று எப்போதும் அசோகமித்திரன் சொல்லிக்கொண்டிருந்தவர். 

ஞானக்கூத்தன், ஆத்மா நாம் கவிதைகளையாவது  கொஞ்சம் பாராட்டியிருந்திருப்பார். 


சிற்பி ஒரு கவிஞர். வானம்பாடி தானே? பொறவு. 


..............................................


http://rprajanayahem.blogspot.in/2017/03/ashokamitrans-letter-to-rprajanayahem.html


http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_27.html


http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html


http://rprajanayahem.blogspot.in/2014/08/hollow-eye-and-wrinkled-brow.html

தகவல் பிழை

 தகவல் பிழை


ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின்         முன்னாள் முதல்வர் லட்சுமி நாராயணன். 


நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது 

என் பக்கத்து வீட்டுக்காரர். 

வைஷ்ணவத்தில் 

ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.


இவருடைய மனைவி (பெயர் ஜெயலட்சுமி என்று நினைவு.) குற்றாலம் பராசக்தி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மகளிர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.


லட்சுமி நாராயணன் தென்காசியில் சொந்த வீட்டுக்காரர். அவ்வப்போது தென்காசிக்கு ஒரு சில நாட்கள் செல்ல வேண்டியிருக்கும். 

அந்த சமயங்களில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்த

 என் இளைய மகன் அஷ்வத் தான் 

மாமியோடு கூட துணைக்கு படுத்துக்கொள்வான். சுட்டிப்பயல். 

ஒரு சில நாட்களில் பெட்டிலயே 

ஒன் டாய்லட் போய் விடுவான். 

ஆனால் மாமி அதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்.


லட்சுமி நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் போது கூட அவரிடம் அஷ்வத்

 “ நீங்க எப்ப ஊருக்கு போவீங்க?

நீங்க ஊருக்கு போங்க. 

நான் மாமியோட படுத்துக்கிறேன். 

நீங்க ஊருக்கு போங்க.. 

நான் மாமியோட படுத்துக்கிறேன்.” 

என்று அனத்துவான். 


“டேய், என்ன இங்க இருக்க விட மாட்டியா..

என்னடா என் பொண்டாட்டி கூட படுத்துக்கிறேன்னு ஏங்கிட்டவே சொல்றே… சரி… நான் போகும்போது சொல்றண்டா..” 

என்று ஜாலியாக அவர் பதில் சொல்வார்.


எங்கள் வீட்டிலும் அவர் வீட்டிலும் சீனியம்மா என்ற அருந்ததியப் பெண் வேலை பார்த்தாள். 

வீட்டு வேலை பார்க்கும்போது அவளுடைய குழந்தையை தூங்க வைப்பது, கவனித்துக்கொள்வது எல்லாம் 

லட்சுமி நாராயண அய்யங்கார் தான். சீனியம்மாவின் குழந்தையை சீராட்டுவார்.


என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மணோன்மணியம் சுந்தரனார் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோருடைய வகுப்புத்தோழராக லட்சுமி நாராயணன் தன்னைப் பற்றி சொல்வார். 

க.ப.அறவாணன் இவருடைய பெயரை 

தூய தமிழில் மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாராம். இவர் மறுத்து விட்டாராம்.


 அப்போது பாப்பையா தன் பெயரை ‘வளவன்’ என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டிருந்தாராம்.


லட்சுமி நாராயணன் என்னிடம் பேசும்போது அடிக்கடி ஒரு விஷயம் குறிப்பிட்டதுண்டு.

 ‘ஜெமினி கணேசன் மனைவியும் லா.ச.ராமாமிருதம் மனைவியும் கஸின்ஸ்.'

 ஜெமினி பற்றி லா.ச.ரா ‘ நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பதில்லை ’ என்று சொல்வார்.


இதனை என் பதிவுகளில் லட்சுமி நாராயணன் சொன்னதாகவே நான் எழுதியிருந்தேன்.


இப்போது ஜெமினி மனைவி பாப்ஜியும் லா.ச.ரா மனைவியும் உறவினர்கள் அல்ல என்று 

எனக்கு உறுதியாக தெரிய வந்தது. 


உடனே அதை என் பதிவில் இருந்து நீக்கி விட்டேன். 


என் பதிவுகளில் தகவல் பிழை இருப்பது உறுதியாக தெரிந்தால் 

நான் எப்போதும் அதை திருத்திக்கொள்வேன்.


முன்பு எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய உறவினன் ஒருவன் 2002ல் என்னிடம் அவருக்கு 80 வயது என்று சொன்னான். 

என்னால் நம்ப முடியவே இல்லை. 

ஆனால் அவன் எஸ்.எஸ்.ஆர் வயது எண்பது

 தான் என அடித்து சொன்னான்.


2008ல், 2013ல் என் பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆனால் பின்னர் அவன் சொன்னது உண்மையல்ல என்பது உறுதியாக தெரிய வந்தது.


 உடனே அதனை என் பதிவுகளிலிருந்து நீக்கியிருக்கிறேன்.


எஸ்.எஸ்.ஆர் இறந்த போது நான் தான் ’இந்தியா டுடே’யில் இரங்கல் எழுதியிருந்தேன்.


அதற்கு முன் ஜெமினி மறைந்த போது ’காலச்சுவடு’ அஞ்சலி நான் எழுதியது தான்.


அது எப்படி லட்சுமி நாராயணன் என்னிடம் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை பேசியிருக்க முடியும். அப்படியென்றால் லட்சுமி நாராயணன் 

என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் 

என்று தான் 

முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.


தென்காசியில் லா.ச.ரா வங்கி ஒன்றில் பணி புரிந்த போது தான் லட்சுமி நாராயணன் 

அடிக்கடி சந்தித்திருக்கிறார். 

இன்னொன்றும் தோன்றுகிறது. 

ஒரு வேளை லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லவில்லை. ராமாமிருதம் சொன்னதைத் தான் சொன்னார் என்றால் லா.ச.ரா 

ஏன் அப்படி அவரிடம் பொய் சொல்ல வேண்டும். குழப்பமாயிருக்கிறது. இருவரும் இப்போது உயிருடன் இல்லை. 


ஜெமினி கணேசனும் தான் இல்லை. அவருடைய முதல் மனைவி பாப்ஜியும் தான்.


இதையொட்டி ஒரு மூத்த கவிஞர் ஒருவர் 1970களையொட்டிய ஒரு முக்கிய தகவல் ஒன்றை என்னிடம் சொன்னார். 'ஓஹோஹோ, ஓஹோன்னானாம்' என்று புதிர் விலகி நான் புரிந்து கொண்டேன். 


லட்சுமி நாராயணன் சொன்ன மற்றொரு விஷயம் பற்றி என் “ உண்டிங்கு ஜாதி எனில்” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.


என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.


ஆனால் அதனை ஒரு எள்ளலோடு வேடிக்கையாக தாமரை இலை தண்ணீராக அந்த விஷயத்தில் ஒட்டாமல் எழுதியிருந்தேன்.


ஏனென்றால் நம்மாழ்வார் காலத்தில் அவர் ஜாதி பற்றி இப்படி உறுதிப்படுத்துவதெல்லாம் அபத்தம்.


எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்கு அருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என் தாத்தா செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக நம்மாழ்வார் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ? என்றெல்லாம் புல்லரித்து, செடியரித்து, மரமரித்து……


……………


மீள் பதிவு

May 18, 2021

ஒரே சம்பவம், ஏகப்பட்ட ஸ்கிரிப்ட்

 ஒரு நிஜமான சம்பவம் நடந்ததாக கேள்வி.


 ஏதோ ஒரு எம்ஜியார் பட ரிலீஸ் போது கைக்குழந்தையுடன் படம் பார்க்க வந்த பெண் சிரமப்பட்டு கூட்ட நெரிசலில் நசுங்கி 

பெண்கள் வரிசையில் டிக்கெட் எடுத்து விட்டு தியேட்டருக்குள் நுழைந்து, பார்க்கிறாள். குழந்தையிடம் மூச்சு இல்லை.

 படம் பார்க்கிற ஆர்வத்தில் இருந்த அவள்

 இறந்த குழந்தையை மடியில் போட்டுக்கொண்டே படத்தை முழுமையாக பார்த்தாளாம். 

எந்த ஊரு, எப்ப, எந்தப் படத்தின் போது தியேட்டர் எது என்பதெல்லாம் தெரியவில்லை. 


இந்த சம்பவத்தை வைத்து பல ஜோடிப்பு கதைகள். 


மதுரையில், திருச்சியில்,

 திருநெல்வேலியில் நடந்ததென்று,

 இல்லை இந்த ஊரில், அந்த ஊரில் தான் என்றும், இந்த எம்ஜியார் பட ரிலீஸ் போது என்றும், இல்லையில்லை அந்த பட ரிலீஸ் போது 

நடந்த கோர சம்பவம் இது என்பதாகவும்,

 கண்ணை அகல விரித்து, 

இந்த தியேட்டர்ல, அந்த தியேட்டர்லன்னு 

நேரில் பார்த்தது போலவும் அள்ளி விடுவார்கள்.


ஏகப்பட்ட ஸ்கிரிப்ட் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

May 17, 2021

எம். வி. வெங்கட்ராம்

 எம்.வி. வெங்கட்ராம்

- R. P. ராஜநாயஹம் 


"ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது "

- 'என் இலக்கிய நண்பர்கள்' நூலில் எம்.வி.வெங்கட்ராம்


" மோகமுள் " நாவலில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு கதாபாத்திரமாகவே வருவார். 

பாபுவின் கல்லூரித்தோழனாக. 


திஜா மோகமுள்ளில் எம்விவி பற்றி : "பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான்.எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத,தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ?

 யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை."


அசோகமித்திரன் " மானசரோவர் " நாவலில் மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனை

 " கோபால் " என்ற அற்புதமான கதாப்பாத்திரமாக உருவாக்கியிருந்தார். 

( மானசரோவர் 'சத்யன்குமார்' பாத்திரம்

 இந்தி நடிகர் திலீப்குமார்)


ஒரு பிரபல எழுத்தாளரை இன்னொரு பிரபல எழுத்தாளர் தன் நாவலில் கதா பாத்திரமாக்கியது - அமெரிக்க பெண் எழுத்தாளர் கேத்தி ஆக்கர் எழுதிய

“Blood and Guts in High school” நாவலில் பிரஞ்சு எழுத்தாளன் ழான் ஜெனே ஒரு முக்கிய பாத்திரம். 


மௌனியின் கதைகள் பலவற்றை எம்.வி .வி திருத்தி செப்பனிட்டிருக்கிறார்.


இவருக்கும் மௌனிக்குமான இலக்கிய சர்ச்சை ஒன்று அந்த காலத்தில் ரொம்ப பிரபலம்.


எம்.வி வெங்கட்ராம் தான் எழுத்தாளனாக இல்லாமலிருந்தால் பெரிய கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும் என்று சொல்வார்.

சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர். 


அவருடைய "வேள்வித்தீ " " நித்தியகன்னி"

நாவல்கள் அவருக்கு இலக்கிய அந்தஸ்தை கொடுத்தன. 

ஆனால் அவர் கடைசி காலத்தில் எழுதிய

 " காதுகள் " நாவல் அவருடைய அமர சாதனை 

என சொல்லப்பட வேண்டும். 


எம்.வி.வி அவருடைய மத்திய வயதில் வினோத வியாதி ஒன்றிற்கு ஆளாக நேர்ந்தது. 

அவர் காதுகளில் படு ஆபாசமான வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பித்தன. இந்த ஹிம்சையிலிருந்து அவர் மீள முடியவே இல்லை. 

அதை " காதுகள் '' நாவலாக்கினார். 


அந்திம காலத்தில் அவர் காதுகள் டமார செவுடு ஆகி, பிறர் பேசுவதை கேட்க மிகவும் சிரமப்பட்டார்                  என்பது Irony. 


வாழ்வில் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளால் புதையுண்டு மீண்டும், மீண்டும் தான் உயிர்த்தெழுந்தவன் என்றும் வெங்கட்ராம் எழுதியுள்ளார். 


கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரையில்

 முதல் எழுத்தாளர் எம். வி. வெங்கட்ராம். 

தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், கவிஞர் கம்பதாசன், அ.கி. ஜெயராமன் 

என்று நீளும் கு. ப. ரா சிஷ்யர்கள் வரிசை. 


... 


மீள் பதிவு 2009

May 16, 2021

சான்ஸே இல்ல வேற லெவல்

 சான்ஸே இல்ல வேற லெவல் 


பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன 'சான்ஸே இல்ல' ன்ற வார்த்தை பேச்சு மொழியில், அதன் காரணமாக எழுத்திலும் ரொம்ப உபயோகத்தில் வர ஆரம்பித்து இன்ன வரைக்கும் புழக்கத்தில் தான் இருக்கிறது. நானே 'சான்ஸே இல்ல' ன்னு ஒரு ஆர்ட்டிக்கிளில் 2008ல் பயன்படுத்தினேன். 


இப்ப "வேற லெவல்" என்கிற வார்த்தை மிக, மிக அதிகமாக பிரயோகம் செய்யப்பட்டு  cliche ஆகியிருக்கிறது. 

'ராஜநாயஹம் எழுத்து வேற லெவல்'னு ஒருவர் யாருடைய பதிவிலோ குறிப்பிட்டதை படித்த போது தான் 'வேற லெவல்' ன்றதை முதல்ல கேள்விப்பட்டேன். 


டி. வியில் ரியாலிட்டி ஷோக்களில் இந்த 'வேற லெவல்' சகட்டுமேனிக்கு ஜட்ஜெல்லாம் கூட எப்பவும் வாய் நெறய்ய.. 


இனி அடுத்து என்ன வார்த்தை பிரபலமாகி வரப்போகுதோ?

May 13, 2021

ராஜநாயஹம் பற்றி திருஞானம்

 Thirugnanam Thiru 


நண்பர் திருஞானம் பதிவு - 13.05.2018 


"R.p. Rajanayahem எனும் அசுரன்.


ராஜநாயஹம் என்ற பெயரை கலை இலக்கியம் என்ற‌ ஒற்றைத் தளத்தில் அடக்கி விட முடியாது. பன்முக ஆளுமை. எழுத்தும் அப்படித்தான்.


 வாழ்வின் நேரடி பட்டறிவு அனுபவங்கள்.                      கடுமையான நெருக்கடிகள். 

ஆனால் வாழ்க்கையின் மீது 

   குறைகள் இல்லையென்கிறார். 


கல்லூரி காலத்தில் மரத்தடி மகாராஜாக்களின் நாயகன். மனதிற்கு உகந்ததல்ல 

என்றே காரணம் சொல்லி 

மத்திய அரசு வேலையை விட்டு  வெளியேறியவர். 

ஆனால் அவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். 

கலை இலக்கிய அத்தனைக் கூறுகளிலும் 

கால் பதித்திருக்கிறார். 

பாடகர்.

பேச்சாளர்.

எழுத்தாளர்.

நாடக இயக்குனர்.

சினிமா, பாடகர், பயிற்சியாளர்.....

அவர் எழுத்து வகை 

கட்டுரையிலிருந்து மாறுபட்ட ஒரு கூறு முறை...

வித்தியாசமானது...

 பொதிகை டி.வி அவரின் நேர்காணலை ஒளிபரப்பியது.

நல்ல அனுபவம் நேர்காணல்.

பாருங்கள் நண்பர்களே...

உங்களுக்கும் பிடிக்கும்."


https://m.youtube.com/watch?v=4w69gJg5ojc&t=417s


May 10, 2021

புகைப்பழக்கம், குடிப்பழக்கம்

 புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இல்லாமலே,

 இந்த வாழ்வென்பது எப்போதுமே 

கடுமையான போராட்டமாக இருக்கிறது. 

இந்த பழக்கங்கள் உள்ளவர்களால்

 எப்படி சமாளிக்க முடிகிறது?

என் அப்பாவும் அம்மாவும்

 என் அப்பாவும் அம்மாவும் 


அப்பா அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் 

'துயிலாத பெண்ணொன்று கண்டேன். '


அம்மாவை குரலெலுப்பி "பத்ரகாளி" என்று தான் 

கிண்டலாக, செல்லமாக கூப்பிடுவார். 


வீட்டிற்குள் நுழையும் போதே "பத்ரகாளி, பராசக்தி" என்று அழைப்பார். 


என்னிடம் அம்மாவைப் பற்றி எப்போதும் "பத்ரகாளி" என்றே குறிப்பிடுவார். 


"டேய் தொர, உங்கம்மா பத்ரகாளிய கூப்பிடு "


"பத்ரகாளி கிட்ட இத குடு, "


" பத்ரகாளி கிட்ட வெளிய போக வேண்டியிருக்கு, அவள கிளம்பனும்னு சொல்லு "


"பத்ரகாளி"


https://m.facebook.com/story.php?story_fbid=3050672915146154&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3050821401797972&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3051594861720626&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=3050630105150435&id=100006104256328

May 8, 2021

சித்ர குப்தன்

 எம தர்ம தர்பாரில் கணக்கு முடிக்கிற சித்ரகுப்தன். இவன் தான் மனித ஜென்மங்களின் 

ஏட்டை வைத்துக்கொண்டு ஆராய்ந்து 

ஆயுள் கணக்கை முடிக்கிறவன்.


எனக்குத் தெரிஞ்சி ரெண்டு முருக பக்தர்கள்.

 ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம்        மாதா மாதம் செய்பவர்கள். 


ரெண்டு பேருமே பரம எதிரிகள். 

’இவன் விளங்காத பய’ என்று அவனும் 

“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள். 


ஒவ்வொரு தடவையும் ஒரு புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். 

முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள்.

 ‘தெங்கு’வார்கள்! 

நெம்புகோலின் தத்துவ விளக்கம்.


மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள். 

ஒரு தடவயாவது முருகக்கடவுள் “ ஏம்ப்பா… 

இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் 

புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. 

இது நல்லாவா இருக்கு..”

 என்று கேட்க மாட்டாரா?


இந்த ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு  சித்ரகுப்தன் மேல பயங்கரமான obsession. 

தினமும் திரும்பத் திரும்ப

 சித்ரகுப்தன பத்தியே பேசிட்டே இருப்பான்.


சிலருக்கு தாங்கொண்ணா துயரம், இழிவு, சிறுமை கண்டு புழுவாய்த் துடிப்பார்கள். ஏன்?


சித்ரகுப்த பக்தனின் விளக்கம் 


’ஏன்னா அவிங்க ஏட்டை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சித்திர குப்தன். வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். 

ஆயுள் பங்கம் இல்லைன்னாலும்

 30 வயதிலிருந்து, 40 வயதிலோ, 50 வயதிலோ எல்லா வயதிலும், எந்த வயதிலோ நொம்பலப்பட்டுக்கொண்டு இருக்கிறாங்கென்னா இவனுங்க ஏட்டை கையில் எடுத்து உத்துப் பாக்கிறான்னு அர்த்தம். 

சித்திரவதை தாங்க முடியாது.


யாரெல்லாம் நல்லா இருக்கானோ அவன் ஏடு சித்திர குப்தன் கையில சிக்கலன்னு அர்த்தம். அதெ போல ஒருத்தன் சாவு தள்ளிப்போனால் சித்ரகுப்தன் அவன் ஏட்டை நிச்சயமா தொலைச்சிட்டான்.’


இந்த ஃப்ராடுக்கு நகைக்கடை வியாபாரத்தில் 

தன் யுக்தி பலிக்கவில்லை என்றால்

புலம்பல் இப்படித்தான் ‘ சித்ரகுப்தன் என் ஏட்டை கையில எடுத்துட்டான். நிம்மதியே இல்ல.

 எனக்கு வாச்சவ சரியில்ல. 

எங்கப்பன உதைக்கப் போறென்.’ 


சரியான சாமியார் பைத்தியம்.

 சாமியார்களை தேடி அலைவான். 

சித்தர், புதையல் ஏக்கம் தான்.

இந்த சித்ரகுப்தன் கதை கூட 

எவனாவது சாமியார் தான் 

இவன் கிட்ட சொல்லியிருப்பான். 


அப்போது நான் தந்த பெருந்தொகைக்கு 

பல மாதங்களாக இந்த நகைகடை முதலாளி

 வட்டி தரவே இல்லை.

 முதலும் திரும்பி வரவில்லை.


கேட்கப்போன என்னிடம் இவன் சொன்ன பதில்

" மைனர் வாங்க உட்காருங்க. ஐயோ மைனர்...  

காபி, கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேனு பிடிவாதமா இருக்கீங்களே.  

திருச்சி வயலூர் முருகனை போய் கும்பிட்டேன். அப்பிடியே சமயபுரம் ஆத்தாளுக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டேன்.

 கேரளாவிலே ஒரு விஷேசமான கோவில்னு சொன்னாங்க. அங்கேயும் போய் என்ன எழவு செய்யனுமோ செஞ்சிட்டு வந்துட்டேன் பாத்துக்கங்க. 

ஐயோ மைனர்! திருச்செந்தூர் முருகனுக்கு 

என் முடி, என் பிள்ளைகள் முடி எல்லாத்தையும் காணிக்கையா கொடுத்துட்டேன் போங்க...

முந்தா நாள் தினத்தந்தியிலே ஒரு விளம்பரம்.

ஒரு தாயத்து..ரொம்ப விஷேசமான தாயத்தாம். அதை கையில வச்சிகிட்டா 

அஷ்ட லக்ஷ்மியும் கிடைக்குமாம். 

அதற்கும் மணி ஆர்டர் நூறு ரூபா அனுப்பிட்டேன். நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க. 


சித்திரகுப்தன் என் ஏட்ட கையில எடுத்துட்டான். என் ஏட்டத்தான உத்துப்பாக்கிறான்."


ரோட்டில இவனுக்குப் பிடிக்காத ஒரு வசதியான பெரிய மனிதர் அப்போது போனார். உடனே அசூயையுடன் கத்தினான் “ இவன் ஏட்ட சித்ரகுப்தன் கையில எடுக்க மாட்டேன்றானே. இவன்  ஏட்ட தொலச்சிட்டான்னு நெனக்கிறேன்.”


....

May 3, 2021

ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா

 ராஜநாயஹம் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய                            ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல

அவர் மாதிரி ஆட்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்க வேண்டியவர்கள்.

எனக்கு ஷேக்ஸ்பியரில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்குத்தான் போன் போட்டுக் கேட்பேன்நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தியும் ஞானமும் கொண்டவர்

லௌகீகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு என்று நினைத்துக் கொள்வேன்ஆனால் ராஜநாயஹத்தைப் பார்த்தால் நானெல்லாம் லௌகீகத்தில் ஜாம்பவான் என்றே சொல்லிக் கொள்ளலாம்லௌகீகத்தில் ஒரு மண்ணும் தெரியாது

பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்து விட்டு இப்போது அந்தக் கால பாரதியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

இரண்டு பையன்களுக்கும் திருமணம் செய்து விட்டார் என்பதுதான் அவரது லௌகீக சாதனைதிருப்பூரில் அவர் வசித்த போது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னையிலிருந்து திருப்பூர் போய் பார்த்தேன்.

ராஜநாயஹம் ஒரு நடமாடும் நூலகம்அவரிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும்எழுதுங்கள் எழுதுங்கள் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் நான் என்பதால் இதையெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.

  ராஜநாயஹம் தமிழின் சொத்து

மேலும் ஒரு விபரம், தி.ஜானகிராமனை நான் ஒரு refined பாலகுமாரன் என்று முட்டாள்தனமாகத் திட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொறுமையாகஉங்கள் வாழ்நாளில் ஒருநாள் தி.ஜா.வை கடவுள் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடப் போகிறீர்கள்; அதை நான் பார்க்கத்தான் போகிறேன்’ என்று முப்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார்இப்போது அவர் வாக்கு பலித்து விட்டது.

….

 

May 1, 2021

2021 சட்டசபை தேர்தல் முடிவு?

 சீமான் கட்சிக்கும், தினகரன், விஜய் காந்த் கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் ஒரு சீட்டு கூட கிடைக்க வாய்ப்பேயில்லை. 

கமல் கட்சிக்கும் அதே நிலை தான். படுதோல்வி உறுதி.

சென்ற தேர்தலில் விஜய் காந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி

 தி. மு.க விற்கு எதிராக செய்த வேலையை 

இந்த தேர்தலில் கமல் கட்சி செய்தது. 


 ஆனால் கமல் மட்டும் அவசியம் ஜெயித்து

 சட்ட சபைக்கு போக வேண்டும். 


தி. மு. க வெற்றி பெற்று

 ஆட்சி அமைக்கப் போவது உறுதி. 

பத்து வருடத்திற்கு மேல் ஒரு கட்சிக்கு மூன்றாவது வெற்றி வாய்ப்பு என்கிற துயர சோதனை நடக்கவே கூடாது. 


நாளை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து 

முதல் மூன்று, நான்கு மணி நேரம் வரும் முன்னணி நிலவரங்கள் பார்த்து பரவசம், குதூகலம், கவலை அதிர்ச்சியடைய வேண்டியதேயில்லை. டி. வி சேனல்களைப் பார்க்கத் தேவையில்லை. 

ஆளுங்கட்சி, எதிர் கட்சி அந்த நேர முன்னணி நிலவரங்கள் பிற்பகலுக்கு மேல் முற்றாக மாறி விடும் வாய்ப்பு உண்டு. 


நிதானமாக மதியம் மூன்று நான்கு மணி போல தேர்தல் ரிசல்ட் பார்க்க 

டி. வியை 'ஆன்' செய்பவர்கள்

 ஸ்திதப்ரக்ஞை மிக்கவர்கள். 

ஓரளவு முன்னணி, தேர்தல் முடிவின் போக்கு பற்றி உணர முடியும். 


வழக்கம் போல தேர்தல் முடிவுகள் சிலவற்றில் ஆச்சர்யமும் இருக்கும். 


சென்ற 2016ல் மக்கள் நலக்கூட்டணிக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது என்று நான் ஒரு மாதத்திற்கு முன்பே உறுதி படக் கூறிய போது பலரும் கோபமாக அதை மறுத்தார்கள். 

கருணாநிதியை விட விஜய்காந்த் மேலாக கம்யூனிஸ்டுகளுக்கும், திருமாவளவனுக்கும் ஏன் தெரிய வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். 


பல நிறுவனங்களின் தேர்தல் கணிப்புகளில் 

தி. மு. க  வெற்றி பெறும் என்று சொல்லப்பட்ட போது, 

அதற்கு முன்னரே 'தி. மு.க  ஆட்சியமைக்க வாய்ப்பேயில்லை. அண்ணா திமுக ஜெயிப்பது சந்தோஷப்படுகிற விஷயம் இல்லை' என்று நான் எழுதியிருந்தேன். 


சென்ற 2016 தேர்தல் பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகள் லிங்க் கீழே 

https://rprajanayahem.blogspot.com/2016/05/2016.html?m=0

https://rprajanayahem.blogspot.com/2016/05/blog-post.html?m=0