Share

Nov 29, 2020

புலி வால்

 புலி வால்


ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி ஒன்றேகால் வருடமாகிறது. (ஜூன் 2019). 


யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 

களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 


ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 


போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 


ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 


கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 


மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.


 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 

என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 


ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்

 லைக் கொடுக்காமல்,

 கமெண்ட் போடாமல் 

வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 

படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 


 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்

 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 

ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.

என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 

என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 

 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 

பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.


எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 

கடந்த நான்கு வருடங்களில் போட்டிருக்கிறேன். 


ராஜநாயஹம் blog hit முப்பத்திரெண்டு லட்சத்தை நெருங்குகிறது . Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 


ட்விட்டரில் படிக்கிறார்கள்.


ஃபேஸ்புக் என்பதே 


புலி வால புடிச்ச கத.


தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 

ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 


போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 

பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 


தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 


வீடீயோ தினமும் அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 


எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 

அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 


'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 

உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '


புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே' என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை' என்ற எரிச்சலில். 


ஏதோ நான் கடன் வாங்கி விட்டாற் போல. 


Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 


தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 

வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 

எதிரிகளாகிறார்கள். 


'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 


என் போராட்டமான வாழ்க்கை முறை, 

மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் 

நிலையிலெல்லாம் இல்லை. 


இவர்கள் யாரையுமே' என்னை படியுங்கள் ' என்று நான் கேட்டதேயில்லை. 


எல்லோருமே என்னை படித்தவர்கள். 

பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.


ம்ஹூம். மாட்டேன், போ. 


..

Nov 28, 2020

Words, words, words

 Polonius :What do you read, My Lord?


Hamlet : Words, words, words. 


'பூச்சி டயலாக் ' ஜானகிராமன் கதை. 


ஒரு கரப்பான் பூச்சி ஒரு கறுப்பு எறும்பிடம்

' என்சைக்ளோப்பிடியா பிரிட்டானிக்கா வாசிச்சதுண்டா? 

புக் ஆஃப் நாலெட்ஜ் படிச்சிருக்கியா? ' ன்னு கேட்கும். 


கறுப்பு எறும்பு பீற்றலாக "எங்களை என்ன வேலை மெனக்கெட்ட ஜாதின்னு நெனச்சியா, இப்படிப் புஸ்தகம் புஸ்தகம்னு அலையறதுக்கு? 

நாங்க என்ன கரையானா, ஒன்ன மாதிரி கரப்பானா? இல்ல மனுஷனா?" 


கரப்பு பதிலடி " ஞானசூன்யத்தைக் கௌரவமாச் சொல்லிக்கிற"


.. 


1972ல் டெல்லியில் 

தி. ஜானகிராமனை சந்திக்க வேண்டி செ.ரவீந்திரனை அழைத்துக்கொண்டு போனவர் பொன் ராஜாராம். 


தி. ஜானகிராமன் அப்போது 

ரவீந்திரனை

 கூர்ந்து பார்த்து கேட்டிருக்கிறார்.

 "உங்கள் வயதென்ன?" 


ரவி : "இருபத்தெட்டு" 


தி. ஜா : "முப்பத்தைந்து வயதிற்குள்ள நீங்க

 உலக இலக்கியம் படிச்சி முடிங்க."


..


இந்த புகைப்படம் இந்த 2020 ஜனவரியில். 

என்னுடைய நூல் 'சினிமா எனும் பூதம்' 


2019 புக்ஃபேர்ல சாரு நிவேதிதாவை 

ஏதோ ஒரு சேனலுக்காக காயத்ரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். 


சாரு : பெண்கள் இருந்தாலும் 

உளவியல் நெருக்கடி. 

இல்லாவிட்டாலும் உளவியல் நெருக்கடி. 


காயத்ரி : அது Likewise. 

ஆண்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. 

Likewise.



Nov 26, 2020

தவிட்டெண்ணெயும், தியேட்டர் முதலாளியும்

 1987 


பழனியில் ரைஸ் ப்ரான் ஆயில் ஏஜென்சி எடுத்திருந்த நிலையில் 

தவிட்டெண்ணைக்காரர் என்று தான்                   எனக்குப் பெயர். ஆயில் விளம்பரத்துக்கே பெரும் தொகை செலவழித்தேன். ஓட்டல்கள், பஜார் கடைகள், லாலா மிட்டாய் கடைகள் எல்லாவற்றிற்கும் ராஜநாயஹம் 'தவிட்டெண்ணெய்க்காரர்'. 

பழனி மலை மேல் தேவஸ்தானம் கேண்ட்டீனுக்கு கூட எண்ணெய் கொடுத்திருக்கிறேன். 


நான் குடியிருந்த தெருவில் என் வீடு தான்

 பெரிய வீடு. அதனால் தெருவில்

 ராஜநாயஹம் 'பெரிய வீட்டுக்காரர்'. 

 

What a piece of work is a Man! 

- Hamlet 


பழனி வள்ளுவர் தியேட்டருக்கு போய் 

நான் விற்பனை செய்கிற ரைஸ் ஆயில் 

அங்கே கேண்ட்டீனுக்கு சப்ளை செய்ய முடியுமா என்பதற்காக முதலாளியை சந்தித்தேன். 


பாப்கார்னுக்கு நான் கொடுத்த சாம்ப்பிளை உபயோகப் படுத்தி பாப்கார்ன் பொரித்து எடுக்கச் 

சொன்னார். 


"இது என்ன எண்ணை? புதுசா இருக்கு? "


" அரிசித்தவிட்டிலிருந்து தயாரித்த ரீபைண்ட் ஆயில். 

ரைஸ் ப்ரான் ஆயிலை ரீஃபைன் பண்ணி தயாரான எண்ணெய்ங்க "


" தவிட்டெண்ணெய்யா? என்ன அநியாயம்? தவிட்டெண்ணெய சாப்பிடுற பலகாரங்களுக்கு ஒபயோகிக்கிறதா?" 


அதற்குள் பாப்கார்ன் மிஷினில் பொரிந்து விட்ட பாப்கார்ன் அவரிடம் கொடுக்கப்பட்டது. 


அதை வாயில் எடுத்துப் போட்டு விட்டு 

என்னிடம் வள்ளுவர் தியேட்டர் முதலாளி நடராஜன் கேட்டார். 


" நிலக்கடலைய சாப்பிடுவீங்க. எவ்வளவு ருசியாருக்கு. அதில இருந்து கடலை எண்ணெய். 

தேங்காய் சாப்பிடுறோம். அதிலருந்து தேங்காய் எண்ணெய். எள்ளு பலகாரங்கள்ள சேக்குறோம். நல்லெண்ணெய். 

தவிட்ட நான் ஒங்களுக்கு குடுத்தா சாப்பிடுவீங்களா? புரியுதா?  தவிட்ட மாடு தான் சாப்பிடும். தவிட்ல எண்ணெய்னு விக்க வர்றீங்களே. "


2020

இந்த தியேட்டர் முதலாளி நடராஜன் தான் இப்ப பழனியில துப்பாக்கியால ரெண்டு பேர சுட்டவர். அதில் ஒருவர் இறந்திருக்கிறார். 


பழனிக்காரரான கவிஞர் தேவேந்திர பூபதி சார் இன்று செல்பேசியில் பேசிய போது இதை நினைவு கூர்ந்து சொன்னேன்.


தேவேந்திர பூபதி : " துக்கத்தைக் கூட வலியின்றி கடத்தல். தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. 

அனுபவத்தை மீறின அறிவில்லை.. 

பகிருங்கள். அறிந்து கொள்கிறோம், 

R. P. ராஜநாயஹம் சார். 

Data bank R. P. sir." 


...

Nov 22, 2020

உருளக்கெழங்கு

 அதிகமாக ஒரு பொருள் விற்பனையானால் Selling like hot potato என்றும் சொல்கிறார்கள்.                               (Selling like hot cakes - இப்படியும்) 


அதுவே makes everyone feels uncomfortable எனும்போது அது Hot potatoes. 

Hot potatoes means a controversial topic. 

சிக்கலான அரசியல் பிரச்னை Hot potatoes. 

Political hot potatoes. 


 பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குள் உருளைக்கிழங்கு முதன் முதலாக 

உருண்டு வந்த போதில் 

அது காமத்தை தூண்டும் வஸ்துவாக கருதப்பட்டதாம். 


சேக்ஸ்பியரின் 'மெர்ரி ஒய்வ்ஸ் ஆஃப் வின்சர்' நாடகத்தில் ஃபால்ஸ்டாஃப் பேசும் வசனத்தில் உருளைக்கிழங்கு மழை பொழிய வேண்டும் என்பான். 

"Let the sky rain potatoes "


உருளைக்கிழங்கு எனக்கு பூரியை நினைவு படுத்தும்.

 எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு 

பூரி கிழங்கு. மற்ற பட்சணங்களை விட பூரி கிழங்கு  ரொம்ப பிடிக்கும். 

தோசைன்னா மூனு, இட்லின்னா நாலஞ்சு.

 ஆனா பூரி கிழங்குன்னா

 இப்ப கூட வீட்ல எட்டு சாப்பிட்றுவேன்.                             ஒரு பிடி பிடிச்டுவேன். 


மூன்று வயது குழந்தையாய் இருக்கும்போது

 பூரி கிழங்கு ருசியாக எனக்கு செய்து கொடுத்த 

ஒரு அத்தையை நான் 'பூரியத்தை'  என்று அடையாளமிட்டேன். நான் வைத்த  அந்த பெயர் சாசுவத மதிப்பு பெற்றது. எங்கள் குடும்பங்களில் அவருக்கு பெயரே பூரியத்தை தான். இன்று அவர் இறந்த பின்னும் அவரை குறிப்பிட வார்த்தை 'பூரியத்தை' தான். 


பூரியென்றால் உருளைக்கிழங்கோடு தான் சேர்க்க வேண்டும். 

இப்போது சென்னா மசாலா என்று பூரியோடு சேர்ப்பதை வெறுப்பவன் நான். 

என் மகன்களுக்கு பூரியோடு சென்னா மசாலா வேண்டியிருக்கிறது. Generation gap. 


பெரும் செல்வநதரான தந்தை சவ்வாஸ் சாகுல் ஹமீது ராவுத்தர் பற்றி சவ்வாஸ் அக்பர் "எங்கப்பா முதன்முதலா செய்த பிசினஸ் உருளைக்கிழங்கு 

வியாபாரம். பன்னிரெண்டு வயசிலயே எங்க ஊர்லருந்து மேட்டுப்பாளையம் போய் உருளைக்கிழங்கு வியாபாரத்துல நொழஞ்சார். உருளக்கிழங்குல ரொம்ப காலம் நெறய்ய சம்பாரிச்சவர் எங்க அத்தா" 


கனவுல உருளைக்கிழங்க பாக்குறது ரொம்ப யோகம்னு ஒரு நம்பிக்கை. மன நிம்மதி, வசதியான வருவாய் இரண்டுக்கும் 

'கனவில் உருளைக்கிழங்கு' கியாரண்டி! 


கெழவி ஒருத்தி உருளக்கெழங்கு குமுச்சிப்போட்டு யாவாரத்துக்கு ஒக்காந்திருந்திருக்கா. 

ஒரு எளந்தாரி அவ கிட்ட கேட்டான் "எப்டி உருள?" 


கெழவியின்  sarcastic reply " நீ எப்பிடி வேணாலும் உருளு... இப்டி உருளு. அப்டி உருளு"


....... 

Nov 21, 2020

Don't cry

 கல்யாணம், இழவு எல்லாமே ரொம்ப எந்திரத்தனமான சம்பிரதாயங்கள்.


நிறைய வேஷ விஷயங்கள் நிரம்பியது.

எவ்வளவோ நூற்றுக்கணக்கான கல்யாணங்களுக்கு போய், கிரகப்பிவேசங்களுக்கு, பிறந்த நாள் வைபவங்களுக்கு போனாலும் சரி போகாவிட்டாலும் கூட அளவுக்கதிகமாக மொய் செய்த நான் சென்ற ஆண்டு என் மகன்களின் திருமணங்கள் நடந்த போது ஒருவருக்குமே அழைப்பிதழ் தரவேயில்லை என்பதை அறிய வந்த போது கி. ரா. ரொம்பவே மனதார பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

எவ்வளவோ எழவுகளுக்கு எடுத்தேறி செலவழித்திருக்கிறேன்.

என் தாய், தந்தை சமாதிகளை நான் பார்த்ததில்லை. மதுரையில் எங்கே இருக்கின்றன என்பதும் இன்று வரை தெரியாது.

2013ல் என் தகப்பனார் இறந்த நேரத்தில்   ஏழு மாத  காலமாக வேலையில்லாமல் இருந்தேன்.
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவேயில்லை.
சாவுக்கு போன நான் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளவில்லை.

2014லில் ஆறு மாதம் வேலையில்லாமல், (இதில் பார்த்த வேலைக்கு சம்பளம் இல்லாமல் இரண்டு மாதங்கள்)                     என் அம்மா இறந்த அன்று தான் புதிய வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
'அம்மா எறந்துட்டாங்க. 'அலை பேசி செய்தி. அம்மாவே போன பிறகு யார் முகத்தை போய் பார்க்க வேண்டும்?

வகுப்புக்கு போய் பாடம் நடத்தினேன்.

குழந்தைகள் முன் அம்மா இறந்த அன்றும் கூட பாடினேன்

When I was just a child I asked my mama
What will I be?
Will I be a doctor?
Will I be an actor?

This what she said to me.
'Che Sara, sara
What ever will be,
Future is not ours to see
Che Sara, sara

அடக்க முடியாமல் பீறிட்டு கலங்கியழுத போது குழந்தைகள் 'Why do you Cry sir?' என குழம்பிக்கேட்ட போது நான் 'I have no father and mother'

All the children consoled me : 'Don't cry sir. We are all with you. 
Don't cry sir '


ALBERT CAMUS  'THE OUTSIDER' novel begins with these words - 
"My mother is dead. 
Was it today or yesterday?"
.... 

....

Nov 20, 2020

P. U. சின்னப்பா



ஒரு முழுமையான கச்சேரி பார்த்த திருப்தி 'ஜகதலப் பிரதாபன்' படத்தில்

 பி.யு. சின்னப்பா மூலம் கிடைக்கும்.


" தாயைப் பணிவேன் அன்புடனே தாயை பணிவேன். ஒரு தாயை பணிவேன் "- கல்யாணி ராகம்.

 இந்த பாடலில் விஷேசம் என்னவென்றால் மொத்தம் ஐந்து சின்னப்பாக்கள் இந்த பாடலில்!


 பாடகர் சின்னப்பா.

வயலின் வாசிப்பவரும் சின்னப்பா தான். 

மிருதங்க வித்வானும் சின்னப்பா.

இன்னொரு சின்னப்பா கஞ்சிரா வாசிப்பார். மற்றொரு சின்னப்பா கொன்னக்கோல் பாகவதர்!அமர்க்களம் தான். 

76 வருடங்களுக்கு முன் 

இப்படி புதுமை.


பின்னால் 'திருவிளையாடல் 'படத்தில் 

'பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டு 

சிவாஜிக்கு இதே போல அமைத்தார்கள். 


1944 ல் வெளி வந்த படம் ஜகதலப் பிரதாபன். அப்போது சின்னப்பாவுக்கு இருபத்தெட்டு வயது தான். 35வயதில் சின்னப்பா மறைந்து விட்டார். எம்ஜியாரை விட ஒரு வயது தான்

 மூத்தவர் சின்னப்பா. 


எம்ஜியார் பிறந்த ஜாதகத்தை வித்வான் வே.லட்சுமணன் 1911ல் வைத்து கணித்து குறித்தார். (ஏனென்றால் ஜாதகம் குறிக்க உண்மையான பிறந்த நேரம்,தேதி, வருடம் தேவையாயிற்றே)

அதன்படி பார்த்தால் எம்ஜியாரைவிட சின்னப்பா ஐந்து வயது இளையவர்.


எம். ஜி.ஆர் அமெரிக்கா ப்ரூக்ளின் ஹாஸ்பிடலில் இருந்து தமிழகம் திரும்பிய போது 

இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் அவர் வயது பற்றி" He is 67.But his old film world colleagues claim that he is 74. " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


ஆனால் காலம்

எம்.கே .டி - பி .யு .சின்னப்பா ,

எம்ஜியார் -சிவாஜி ,

கமல் -ரஜினி

என திரைப்பட சகாப்தங்களை பிரித்தது!


எம் கே டி படங்களில் அவர் உட்கார்ந்தால் பாட்டு .. எழுந்தால் பாட்டு ...

நடக்கும்போது கூட ஒரு பாட்டு பாடுவார்.

 ஆள் ரொம்ப அழகானவர்.


 தியாக ராஜ பாகவதர் காலத்தில் 

பி யு சின்னப்பா அவருக்கு ஈடான நட்சத்திர நடிகர். 

குஸ்தி போடுவார்.

சொந்தக்குரலில் தான் பாடுவார்.

எம்.கே.டியை விட திறமையான நல்ல நடிகர்.


எம்.கே .டி பாடல்கள் ஜனரஞ்சகமானவை. 

ஆனால் பி .யு. சின்னப்பா பாடல்களை எல்லோரும் பாடிவிட முடியாது. 

சின்னப்பா தாளஞானம் மிகுந்தவர் என்பதால் அற்புதமாக ஸ்வரம் பாடுவார்.


"காதல் கனிரசமே, சந்ததம் கலாவதி 

மதி சேர் சரசே "சித்தரஞ்சனி ராகத்தில் 

'மங்கையர்க்கரசி 'யில் அஞ்சலி தேவியைப் 

பார்த்து பாடிய பாடல் பிரபலமானது. 


 'குமுதம்' வார இதழ் ஒன்றில் சின்னப்பாவின் மனைவி நடிகை கண்ணாம்பாஎன்று 'சுனிலிடம் கேளுங்கள் ' பகுதியில் தவறுதலாக ,அபத்தமாக குறிப்பிட்டிருந்தார்கள்.

 கண்ணாம்பா 'கண்ணகி ' திரைப்படத்தில் சின்னப்பாவின் ஜோடியாக நடித்தவர் தான்.

 ஆனால் அவருடைய கணவர் நாகபூசனம் என்பவர். 

இந்த நாகபூசனம் -கண்ணாம்பா தம்பதி 

பின்னால் எம்ஜியாரை வைத்து 'தாலி பாக்கியம் ' என்ற படம் தயாரித்து மிகுந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

நாகபூஷனத்திற்கு பெருந்தொகை கொடுத்து படப்பிடிப்பு நேரத்தில் எம். ஜி. ஆர் உதவியதுண்டு. 


 கண்ணாம்பா வின் கணீரென்ற 'மனோகரா ' வசனம் யாராலும் மறக்கமுடியாதது.


... 


இறக்கை முளைத்த இலவ விதை

 "என்ன செய்தென்ன? 

காசை கண்ணால் பார்க்க முடியவில்லை. 

இண்டெலக்சுவல் என்று 

இறக்கை முளைத்த இலவ விதை போல 

ஒரு பட்டம் தான் மிஞ்சிற்று" 


இறக்கை முளைத்த இலவ விதை!


என்ன ஒரு keen observation. 

தி. ஜானகிராமன் 

'மாடியும் தாடியும்' சிறுகதையில். 


"முயற்சி இருக்கிற புருஷ சிம்மத்தை 

லட்சுமி வலிய வலிய வந்து

 இறுகத் தழுவிக்கத்தான் செய்வா. 

எத்தனை சக்தி வந்து 

அவளைப் பிடிச்சு இழுத்தாலும் 

அவ பிடிச்ச பிடியை விடுவாளோ! "


.... 

Nov 17, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்

 க்ரியா ராமகிருஷ்ணனின் தாயார்

 நான்கு வருடங்களுக்கு முன்பு தான் மறைந்தார். 

இறக்கும் போது அவருக்கு நூறு வயது. 


நிறை வாழ்வு வாழ்ந்த தாயின் மகன் 

நீடித்திருக்க வேண்டிய தன் பல வயதைத் தொலைத்து விட்டு அவசரமாக கிளம்பியிருக்கிறார். 


1989ம் ஆண்டில் அவருடைய க்ரியாவில் 

நான் பங்குதாரராக என்னை இணைத்துக் கொள்வாரா? என்று அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஆர்வமாக விசாரித்திருக்கிறேன்.                    பெருந்தொகையைத் தூக்கித் தர தயாராக இருந்தேன். 

ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்றே                   பட்டென்று பதில் வந்தது. 

இப்படிக்கூட எனக்கு ஆசை விசித்திரமாக. 

எட்டாக் கனவாக

இப்படியெல்லாம் கொஞ்ச நஞ்சமா

அன்றைய கோமாளி தவிப்பு. 


ஏன் இதை சொல்ல வேண்டியிருக்கிறது? 

க்ரியா என்ற அந்த பதிப்பு நிறுவனத்தின் மீது இருந்த கவர்ச்சி, க்ரியா வசீகரம். 


புத்தகம் இப்படியும் நேர்த்தியான உயர்ந்த வடிவமைப்பு கொண்டிருக்க முடியுமா..!


அந்த இளமையில் வாசிப்பு என்பதற்கு கனமான நூல்களை அழகான வடிவில் தந்த போது

 க்ரியா ராமகிருஷ்ணன் மீது ஈர்ப்பு. 


இங்கே அந்த பட்டியல் எழுதி விடக் கூடாது என்று வைராக்கியமாக தவிர்க்க நினைக்கிறேன். 

கேட்லாக் வேலை கூடாது. 


"The BBI combinatory Dictionary of English 

A guide to word combinations " நூலெல்லாம் க்ரியா ராமகிருஷ்ணன் இல்லாமல் கிடைத்திருக்குமா? 


எந்த ஊரில் இருந்தாலும், எந்த வேலையாக சென்னை வந்தாலும் ராயப்பேட்டை க்ரியா

 போக ஒரு தவிப்பு. எப்படியாவது போய் புத்தகங்களை அள்ளிக் கொண்டு தான்

 ஊர் திரும்புகிற காலம் இருந்திருக்கிறது. 

அப்படி முடியாது ஊர் திரும்ப நேர்ந்த போது

 அது பெரிய இழப்பு போல 

அன்று தோண்றியிருக்கிறது. 


கடந்த ஐந்தாண்டுகளில் அவரோடு பழக வாய்ப்பு இருந்தது. 

 க்ரியா பதிப்பித்திருந்த பல நூல்களை

 இந்த ஐந்தாண்டுகளிலே ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறேன். 


பதிப்பாளராக அவருடைய சாதனைக்கு இந்திய அரசாங்கம் உயர்ந்த பத்ம விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன் பதிவில் எழுதியிருக்கிறேன். 



கடந்த முப்பது ஆண்டுகளில் என்னைப் பார்த்து பலரும் சொல்லி, கேட்டு கேட்டு சலித்த                         ஒரு வார்த்தை. 

முத்துசாமி இறந்த வீட்டிற்கு வந்திருந்த போது     க்ரியா ராமகிருஷ்ணன் மற்றவர்களிடம் 'ராஜநாயஹத்திற்கு ஏன் வயதாவதில்லை' என்றார். 

மயானத்தில் வந்திருந்த பல பெரியவர்களிடம் பன்சி உள்பட, என்னை வலிந்து அறிமுகம் செய்தார். 


மூன்று வருடங்களுக்கு முன் ஒரு முறை அவரிடம் சொன்னேன் 'என்னுடைய புத்தகங்கள் க்ரியா பதிப்பாக வர வாய்ப்பு இல்லை' 

உடனே ' ஏன் வராது? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? மெயிலில் அனுப்பி வையுங்கள்.' 

என்றார். 

நான் அனுப்பவில்லை.

 க்ரியா ராமகிருஷ்ணன் பல மாதிரி மாற்றி மாற்றி எழுதச் செய்வார். என் இயல்புக்கு ஒத்து வராது. 


சென்ற ஜனவரி மாதம் புக் ஃபேரில் என்னிடம் 

' உங்க சினிமா எனும் பூதம் ஒரு காப்பி 

வாங்க வேண்டும்' என்ற போது மையமாக சிரித்தேன். 


அது தான் கடைசி சந்திப்பு. 


இந்த கரோனா லாக்டவுன் போது

 பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஒரு பதிவு க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி ஃபேஸ்புக்கில எழுதியிருந்த விஷயத்தை உடனடியாக செல் பேசியில் தெரிவித்தேன். 

வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பி வைத்தேன். 

ரவிக்குமாரின் 

அந்த பதிவின் லிங்க் 

ட்விட்டரில் நான் ஷேர் செய்ததைப் பற்றி சொன்னேன்.

Nov 16, 2020

பூசாரித்தனம்

 ந. முத்துசாமி சார் அந்தக்கால 

கூத்துப்பட்டறை நிகழ்வுகளை 

மிகுந்த சிரமத்துடன் தான்

 ஈடேற்ற முடிந்திருக்கிறது.


க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில் 

அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார்.


ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர். 


சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி 

முகம் சுளித்திருக்கிறார். 


அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான                                       இந்த சலுகை 

அசூயை ஏற்படுத்தியிருக்கிறது.


 ”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி

 தடுத்து நிறுத்தி விட்டாராம்.


முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம் 

ரொம்ப புண்படுத்தியிருக்கிறது. 

இந்த அவமானத்தை என்னிடம்

 அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.


நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று.

" போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். போஸ் கிருஷ்ணமாச்சாரியை

 அச்சுதன் கூடலூரும் திட்டுவார்.

 டெல்லிக்கு போன 

கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள். 

ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான். 

அதாவது pauper."


https://m.facebook.com/story.php?story_fbid=2925879714292142&id=100006104256328




Get well soon Cre-A Ramakrishnan



க்ரியா ராமகிருஷ்ணனின் 

துணைவியார் ஜெயா அவர்கள் மறைந்த போது

 ந. முத்துசாமி அங்கே போயிருந்திருக்கிறார். 

எல்லோரும் சோகமான ஒரு சூழலில்

 உறைந்த நிலையில். 


முத்துசாமி வாய் விட்டு தேம்பி அழுதிருக்கிறார். 

உடனே அங்கிருந்தவர்கள் எல்லோருமே உடைந்து அழுதிருக்கிறார்கள். 


"Only people who are capable of loving strongly can also suffer great sorrow, but this same necessity of loving serves to counteract their grief and heals them." 


- Leo Tolstoy


https://m.facebook.com/story.php?story_fbid=2927577984122315&id=100006104256328

.. 

Nov 7, 2020

டி. எம். எஸ். சினிமா பாட்டுக்கச்சேரி

 T. M. சௌந்தர்ராஜன் சினிமா பாட்டுக்கச்சேரி கேட்பது வேடிக்கையாக இருக்கும். 


'ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ண சாக்கிறா, 

அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்கிறா, சிரிக்கிறா, சிரிக்கிறா' பாடலை பாடுவதற்கு முன் கொணட்டுவார். 

 பல கொணஷ்டை  செய்து விட்டு அப்புறம் தான் பாடவே ஆரம்பிப்பார். பாடும் போதும் கொணட்டிக்கொண்டே தான் 

  இந்த பாட்டை பாடுவார். 

 'அர கொற வார்த்த சொல்லி பாதியை' என நிறுத்தி 'முழுங்குறா' என்பதை பாடாமல் முழுங்கி, சைகையில் சொல்வார்.


ஏதாவது ஒரு பாட்டின் இடையில் பாடுவதை நிறுத்தி ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்களிடம் 

' எனக்குப் புரிஞ்சா தான் ஆடியன்ஸுக்குப் புரியும் ' என்று கண்டிப்பார். 


"கல்யாண சாப்பாடு போடவா, தம்பி கூட வா, "

பாடும் போது ' காரு வச்சி அழைக்கணும், கச்சேரி வைக்கணும் ' வரியடுத்து  நீளமாக பாகவதர் பாடுவது போல ரொம்ப நேரம் அனுபவித்து' ஸ்வர வரிசை' பாட ஆரம்பித்து விடுவார். ஸ்வர வரிசை பாடி முடித்து மெதுவாக 'காரு வச்சி அழைக்கணும், கச்சேரி வைக்கணும்' னு பாடலை தொடரும் போது ரசிகர்கள் விசிலும், கைத்தட்டலும் கலகலப்பாய் கேட்கும். 

சுதந்திரமாக ரொம்ப ரிலாக்ஸ்டாக 

டி. எம். எஸ் கச்சேரி. 


சிவாஜி பாட்டு பாடு, எம். ஜி.ஆர் பாட்டு பாடு என்று கட்சி கட்டுவார்கள். 


டி. எம். எஸ் நடித்த 'கல்லும் கனியாகும்' படப்பாடல் 

"கை விரலில் பிறந்தது ராகம், என் குரலில் வளர்ந்தது கீதம் " பாடும் போது எம். ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று கூப்பாடு. விசில் சத்தம். 

பாட்டை நிறுத்தி சௌந்தர்ராஜன்  உதட்டுக்குள் விரல் விட்டு சவாலாக பெரிய விசில் அடிப்பார். 

" எனக்கும் விசில் விடத்தெரியும் " 

Playfulness. 

ஆதங்கத்துடன் சலித்து சொல்வார் 

" அவங்க ரெண்டு பேருக்குமே 

என் குரல் தானடா. நான் பாடி நடிச்ச என் பாட்ட

 பாட  விட மாட்டேங்கிறீங்களேடா" 


சீரியஸான சினிமா பாடல் ரசிகர்கள் பலர் 'பாட்ட ஒழுங்கா பாடாம ஏன் இந்த சேட்ட' ன்னு எரிச்சல் கொள்வதுமுண்டு. 


சீர்காழி கோவிந்தராஜன் சினிமா பாட்டு கச்சேரியில் பாடும் போது 

குதூகலம், சோகம் என்ற பாவத்தை காட்டி கண்ணை உருட்டி, தலையை ஆட்டி வார்த்தைகளை அழுத்தி பாடுவார். பாடலில் கவனமாய் இருப்பார். 


' யோவ் சீர்காழி கச்சேரி தான்யா கேக்க நல்லாருக்கும் ' என்பவர்கள் உண்டு. 


..

Nov 5, 2020

எழுத்து தாழன் கொம்பு தாழன்

 Let the cat out of the bag

- R.P.ராஜநாயஹம்


ஒரு பிரமுகன். எழுத்தாளன்.

 அஷ்டாவதான பிரமுகன்.


அந்தாளுடைய புத்தகம் எதையுமே நான் படித்ததில்லை


ஒரு வேலையாக ஒரு பக்கம் போயிருந்த போது அங்கே ஒரு கடையில் பெயர் பலகையில் பெயர் இருந்ததாலும் அவன் பெயர்  பரிச்சயம் தான் என்பதாலும் நான்  நுழைந்து அங்கே இருந்த ஆளிடம் கேட்டேன். ’அவர் இருக்கிறாரா?’. 

எனக்கு முக பரிச்சயம் கிடையாது.

அந்த ஆள் வாயெல்லாம் பல்லாகி

 ’நான் தான்’ என்றான்.


”ஓ, தற்செயலாக ஒங்க கடைன்னு தெரிய வந்ததால வந்தேன். 

என் பெயர் ராஜநாயஹம். R.P.ராஜநாயஹம்.”

 

பிரமுகன் ”நீங்க லொயோலா காலேஜா?” 


”இல்லங்க. அவுரு ச.ராஜநாயகம். 

கிருஸ்தவ பாதிரியார்.

நான் சன்னியாசி கிடையாது. 

குடும்பஸ்தன் R.P.ராஜநாயஹம்.”


என்ன பண்ணிறீங்க?


நான் சொன்னேன்.


'நானும் எழுதுவேனுங்க.’


பிரமுக எழுத்தாளன் ’அப்படியா?’


இயல்பாக பல விஷயங்கள் 

அப்புறம் பேச வேண்டியிருந்தது.


சென்னையில் உள்ள எல்லா சினிமாக்கார எழுத்தாளன்கள் போல இவனும் சினிமா டைரக்ட் பண்ணப்போறேன் என்று சொன்னான்.


பிரமுகன் : படம் ஒன்னு டைரக்ட் பண்ணப்போறேன்.


நான் “ எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுங்க.”


பிரமுகன் “ ம். சரி”


இன்னும் சினிமா, இலக்கியம் இப்படி கொஞ்சம் பேச்சு வளர்ந்தது.


பிரமுகன் தன்னிலை மறந்து சற்றே இளகிய நிலையில் அவனில்  ’மியா மியா’  சத்தம். 

பூன வெளிய வந்து விட்டது. 

மைண்ட் 'வாய்' ஓவர்ஃப்ளோ ஆகி விட்டது.


“ ஏதாவது ஆர்ட்டிக்கிள் எழுதறதுக்கு ரெஃபரன்ஸ் தேவப்பட்டா R.P.ராஜநாயஹம் blog அப்பப்ப பார்ப்பேன். ரொம்ப வருஷமா உங்கள படிச்சிக்கிட்டிருக்கேன்.”


 'R. P. ராஜநாயஹத்த காப்பியடித்து எழுதுவேன்'றதையும் 

 எவ்வளவு நாசூக்கா சொல்றான் 

இந்த எழுத்து தாழன். 


எழுத்து தாழனுங்க சில பேரு 

கொம்பு தாழனுக. 

..........

Nov 4, 2020

Dangerously dysfunctional

 அச்சரங்களுடைய நகரம் கோட்டயம். 

பூரங்களுடைய நகரம் திருச்சூர். 

After effects ஊர்களுக்கும் உண்டாகும். 


நந்தியின் மகன் தான் விநாயகன் 

என்று ஒரு குறிப்பு. 


நகுலனின் குட்டியான ஆங்கிலக் கவிதை 

What is birth? 

We are the after - effect. 


சிவ வாக்கியர் ' மரணம் - அது ஜனனத்தின் பயன்.' 


 டெம்பஸ்ட்டில் சேக்ஸ்பியர் : Hell is empty, and all the devils are here. 


ஓ, அப்படியா. Dangerously dysfunctional. 


To spell this out in black and white - 

அதனால் தானா The devil has better chance in this world. 


ஆயிரம் வருஷ பழைய கோயில்களை பார்ப்பதில் எப்போதும் ஒரு கிளர்ச்சி, பரவசம் உண்டு. 

மூன்று வருடங்களுக்கு முன் குறுங்காளீஸ்வரர் கோயில் பார்க்க  போயிருந்த போது 

குருக்களின் lip service "இந்த கோயிலுக்கு வந்துட்டாலே நல்ல காலம் பொறந்துட்டதுன்னு அர்த்தம். நல்ல காலம் ஆரம்பிச்சா தான் இந்த கோயிலுக்கு வர முடியும்." 


ஒரு  நாடகத்தில் பகவான் க்ருஷ்ணராக 

க்ரேஸி மோகன். 

க்ரேஸி க்ருஷ்ணருக்கு போன். 

" க்ருஷ்ணா, போன்ல உங்க அம்மா "


" நான் இல்லேன்னு சொல்லிடு "


" நீ இல்லேன்னு சொன்னா

 அது நாத்திகம் இல்லையா? "


" நான் ஆத்துல இல்லேன்னு சொல்லிடு. 

அது ஆத்திகம் "


... 

Nov 3, 2020

குலதெய்வமும் மேஜரும்

 மேஜர் சுந்தர்ராஜன்  தன் அனுபவங்களை சுவாரஸ்யமாக பேட்டிகளில் சொல்வார். 


ஒரு முறை காலத்தின் விசித்திர மாற்றம் பற்றி சொன்னார். 

'குல தெய்வம்'என்ற ஒரு பழைய படம் பார்க்க தியேட்டருக்கு போயிருக்கிறார். 

ராஜகோபால் என்ற நடிகர் வருகிற காட்சிகளில் எல்லாம் ஏளனமாக ' இது என்னடா நடிப்பு' என்று அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் சலித்து ரசிகர்கள் எரிச்சல் பட்டிருக்கிறார்கள். சத்தம் போட்டு திட்டியிருக்கிறார்கள். அந்த நடிகர் அந்த படத்தில் சிறப்பாக நடித்தவராக கருதப்பட்டவர். 

'குல தெய்வம் ' ராஜகோபால் என்று அந்த படத்தின் பெயரை சேர்த்தே அழைக்கப்பட்டவர். 

படங்களில் அவருடைய பெயர் குலதெய்வம் ராஜகோபால் என்றே டைட்டிலில் வரும். 


மேஜர் சுந்தர்ராஜன் இதை குறிப்பிட்டுசொல்லியிருந்தார்.  அவருடைய நடிப்பு வெளிறி பழசாகி அவுட் ஆஃப் டேட் ஆகி விட்டதே.


(எங்க சின்ன ராசா, ஆரோரோ ஆரீரரோ போன்ற படங்களில் குலதெய்வம் ராஜகோபால் நடித்திருந்தார். 

சகஸ்ர நாமத்தின் சேவாஸ்டேஜ் நடிகர்.                     சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர்.) 


நேற்று ஒரு சேனலில் மேஜர் சந்திரகாந்த் பார்த்த போது இது ஞாபகம் வந்தது. 

இதில் ஏ. வி. எம். ராஜன் பெயர் ரஜினி காந்த். 

இந்த கதாபாத்திரத்தின் பெயரை சிவாஜி ராவுக்கு வைத்து  பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். 


மேஜர் சந்திரகாந்த் நாடகமாக சுந்தர்ராஜனை மேடையேற்றி பாலச்சந்தர் நடிக்க வைத்தார். 

அதன் பின் தான் படமாகவும் எடுத்தார். 

சுந்தர்ராஜன் அதனாலேயே மேஜர் சுந்தர்ராஜன் என்று காலம் முழுவதும் அழைக்கப்பட்டார். 


மேஜர் சந்திரகாந்த் படத்தில் அவருடைய நடிப்பு ரொம்ப வெளிறி பழசாக பொறுமையை சோதித்தது. டைட்டில் ரோல் இப்போது பார்க்க 

படு நாடகத்தனமாக நாகேஷும் தான்.

 இப்படி சீரியஸாக நடிக்க வைத்துத்தான் நாகேஷை பாலச்சந்தர் கெடுத்தார். 


குலதெய்வம் ராஜகோபால் பற்றி மேஜர் சொன்னதைத் தான் இதற்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. 


இதற்கு முந்தைய வருடம் 'நாணல்' என்று 

ஒரு பாலச்சந்தர் படம். அதில் நாகேஷும் 

மேஜர் சுந்தர்ராஜனும் நல்ல பெர்ஃபாமன்ஸ்.

இன்று மா. அரங்கநாதன் பிறந்த நாள்

 நவம்பர் 3ம் தேதி 

இன்று மா.அரங்கநாதன் பிறந்தநாள். 


நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க விசேஷ படைப்பாளி. 


நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்


'நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்'

 நேர்த்தியான வார்த்தைகள்.


"மா. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள் "

அசோகமித்திரனின் கணிப்பு.


 மா. அரங்கநாதனின் 'தேட்டை' சிறுகதை

காட்டும் காட்சி.


'நான் இவரோடு வாழ மாட்டேன் ' உதறி விட்டு

இங்கே பாண்டிச்சேரி வந்து சமையல் வேலை செய்து காலம் தள்ளும் அந்த நாகம்மாவை பார்த்து விட தேடிக்கொண்டு வரும் அத்தை என்றழைக்கப்படும் மூதாட்டி


'ஒன்னக் கட்டிக்கிட்டதாலே எனக்கு இந்த நிலை ' என்ற கணவனையும், பெற்ற மகனையும் விட்டு விலகிய நாகம்மா,


யாருமில்லை - ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் -

அவ்வாறு உணரப்பட்டு விட்டால் - இன்னொன்று வருவதற்கு வழி வகை ஏற்படும் என்கிறார்

 மா. அரங்கநாதன்.


பல கதைகள் இந்த வட்டத்துக்குள் தானே சுழலும்.

ஆனால் இதில் வெகு இயல்பாக தலை காட்டும் அந்த முத்துக்கறுப்பன் ஸ்டோர்ஸ்

 பலசரக்கு கடைக்காரர் மூலம்

ஒரு அற்புத தரிசனம்.


இந்த அபூர்வம் தான் மகத்தான மா. அரங்கநாதன்.


அரங்கநாதன் கதைகளில் தொடர்ந்து வரும் முத்துக்கறுப்பன் யார்? என்று கேட்டால்

 "என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு                  உதவி செய்கிறவன் முத்துக்கறுப்பன்."

என்று தான் சொன்னார்.


அஸ்திரம் தான் முத்துக்கறுப்பன்.


மற்றவரைப்பற்றி கவலைப்படுபவர் இல்லை என்று  சொல்லி விட முடியாது.

நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்.


..


. அரங்கநாதனின் 'அசலம்'

The theatre is so endlessly fascinating because it’s so accidental. It’s so much like life.” – Arthur Miller


ஆர்தர் மில்லர் பிரபலமான அமெரிக்க நாடகாசிரியர் என்று முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.

  மர்லின் மன்றோவுக்கு 

ஒரு ஐந்து வருடம் வீட்டுக்காரர். புருஷன். 

நாடகாசிரியராக புலிட்சர் விருதெல்லாம் 

வாங்கிய கலைஞர். 


கூத்து நாடகம் என்பது இருக்க 

நாடகம் மேடையேற்றத்தில் நடக்கும் 

விபரீத விபத்தாக நடந்த கூத்து ஒன்றை

 மா. அரங்கநாதனின் 'அசலம்' சிறுகதையில் காணலாம். 


ராமன் வேடங்கட்டிய முத்துக்கறுப்பன் அந்த கூத்தை தன் எண்பதாவது வயதில் சாட்சாத் ஸ்ரீ ராமனிடம் சொல்கிறார். 


" நான் அந்த இடத்தில் ( குடிசைகள் உள்ள குப்பம்) 

இராமன் வேடங்கட்டி சீதா கல்யாணம் நாடகம் போட்டிருக்கேன்.. 

அடுத்த வருசமே அந்த நாடக வாத்தியாரு செத்துப் போனாரு - சீதையா நடிச்சது யாரு தெரியுமா - மேலத்தெரு ஆவுடையப்பன் - இன்னும் இருக்கான். 

என்ன பண்ணினான் தெரியுமில்லே. இராவணன் கழுத்திலே மாலையைப் போட்டுட்டான். "


இராவணன் வில்லை ஒடிச்சுச் தொலைச்சிட்டான். 

லேசா அதைத் தொட்டு கீழே வைக்க வேண்டியது தானே - வித்தையெல்லாம் காட்டி நடிச்சான் - வில்லு படார்னு ஒடிஞ்சது. சீதை என்ன செய்வா - சொல்லிக் குடுத்த மாதிரி 

ஒடிச்சவனுக்கு மாலையிட்டா" 


"வாத்யாரு நேரே வந்து மேடைன்னு கூட பாக்காம அந்த ஆவுடையப்பன அடிச்சாரு பாரு - நான் வந்து வெலக்கினேன் - கொன்னு போட்டிருப்பாரு "


" பொறகு ஒரு வழியா வில்லை திரும்பவும் கட்டி வச்சு இராவணன் ஒடிச்சது வேற வில் - சரியான வில்லு இது தான்னு சனக மகாராசா சொல்லி, நான் ஒடிக்க வந்தேன். என்ன ஆச்சுங்கறே - 

அந்த மாதிரி இருகக் கட்டி வச்சா யார் தான் ஒடிக்க முடியும்.. ? சீதைக்குக் கிடைச்சது எனக்கும் திரை மறைவிலே கிடைச்சது"


....


மா. அரங்கநாதனின் சாகச புனைவுகள்

"எனக்குக் கடவுள் பத்தித் தெரியாது. 

அதனாலே நம்பிக்கையுமில்லே. 

ஆனா இந்தக் கோவில் என்ன பாவம் செய்தது?

நம்ம முன்னோரோட நம்பிக்கை மட்டுந்தான் 

அது காட்டற விஷயம். 

அதை ஏன் உதாசீனம் செய்யனும்? 

அப்படிச் செய்வது வால்யூவா? 

சொல்லப் போனா 

பிளவு படாம தடுக்கிற ஒரு அம்சம் 

இந்தக் கோவில் எல்லாத்திலும் இருக்கு. 


சில காரியங்கள் பிளவை நீக்குமென்றால், 

அது மகோன்னதமானது தான். 

கடவுள் இதற்கு மாற்றானால், 

அந்த நம்பிக்கை இருந்து விட்டுப் போகட்டுமே. "


- மா. அரங்கநாதன்  'திரிசூலம்' சிறுகதையில் 


அரங்கநாதன் கதைகளின் தனித்துவம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது,

 வாசகனுக்கு அவர் காட்டும் கதையின் 

பூடகத் தன்மை.

 இந்த படைப்புக் கலைஞன் எதையோ மறைக்கிறாராரோ என்ற தவிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தும் கதை கூறல் பாணி விசேஷத்துவமானது. 

இத்தனைக்கும் எழுது முறை

 அற்புதமான எளிமை கூடியது. 


வாசிப்பவரை மிக Comfortable ஆக Driver's seat ல் உட்கார வைக்கும் நேர்த்தியான form அரங்கநாதனின் craftsmanship. 


இலக்கிய சுவை, இலக்கிய சுகமாக விரியும் வினோத விசித்திரம். 


நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். 

முத்துக்கறுப்பன் பிரம்மாஸ்திரம். 


பிரம்மாஸ்திரம் அபூர்வமாக பயன்படுத்த வேண்டியது என்பது தான் பொதுப் புத்தியில் பதிந்த விஷயம். 

அதெல்லாம் அப்படி இல்லை என்பது

 அரங்கநாதன் படைத்த சாகச புனைவுகள் சொல்லும் சாதனை செய்தி.


.......