'ஷோர்' ரொம்ப பழைய இந்தி படம்.
இரைச்சலால் துன்புறுவது.
கதாநாயகனாக மனோஜ் குமார்.
மிஸ்டர் பாரத்.
தேச பக்திக்கு இங்கே அர்ஜுன் படங்கள் போலே அந்தக் காலத்தில் இவருடைய படங்கள்
அங்கே இந்தியில்.
ஷோர் படத்தில் வேலை பார்க்கிற ஃபேக்டரி யந்திரங்களின் தாளாத இரைச்சல்.
ட்ராஃபிக் வாகனங்களின் இரைச்சல்,
வானத்தில் விமான சத்தம்,
ஜனங்களின் கூப்பாடு.
கடைசியில் கதாநாயகனின் காதுகள்
செவிடாகிப் போய் விடும்.
சப்தமில்லாத மௌன உலகை
விந்தையுடன் கவனிப்பதாக படம் முடியும்.
எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'
'வெளிச்சந்தடி எனில் காதுகளைப் பொத்திக்கொள்ளலாம்.
காதுகளே கூச்சலிட்டால் என்ன செய்ய முடியும்? '
இன்று விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேக்கு இங்கிலாந்து சிறையில்
இந்த பிரச்சினை.
வெங்கட்ராம் அந்திம காலத்தில் செவிடர் தான்.
கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரையில்
வந்தவர் தான் எம். வி. வி.
பொதுவாக அபிப்ராயத்தில் குருவை
யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
காதுகள் நாவலில்
" பிச்சமூர்த்தி, கு. ப. ரா இருவரையும் இரட்டையர்கள் என்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள், ஏக காலத்தில் ஒரே பத்திரிக்கையில் எழுதிய நண்பர்கள் என்கிற அளவில் அது சரியாக இருக்கலாம்.
ஆனால்,
பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும்
அடுத்த இடம் தான்
நான் கு. ப. ரா வுக்குத் தருவேன் "
என்கிறார்.
(ஒரு விஷயம். ந. பிச்சமூர்த்தி,
கு. ப. ராஜ கோபாலன் இருவரின்
குடும்பமும் ஒரே வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள்.)
தமிழ் தாத்தா சாமிநாதய்யருக்கு
தன் குரு பற்றி
உள்ள மரியாதையும், பக்தியும்
எல்லோருக்கும் தெரிந்ததே.
அவர் ராமசாமி முதலியார் என்பவருடன்
பழக வாய்த்தது.
ராமசாமி முதலியாரை சந்தித்த உ.வே.சாமிநாதய்யர்
’எங்க வாத்யாருக்கே ( மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவ்வளவு விஷயம் தெரியாது’ என்றாராம்.
.....
கோவிட் 19 காட்டும் திகில்.
வீட்டை விட்டு வெளியே வந்தால்
சகல மனிதர்களின், கடைகளின்
சோகம், தவிப்பு, தத்தளிப்பு காணக்கிடைக்கிறது.
ஃப்ரான்சிஸ் கிருபாவின்
'நகரில் சிக்கியவன்' கவிதையின் கடைசி வரிகள்
"வளையிலிருந்து வெளியே வந்து,
பகலில் நகரச்சாலையோரம்
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு
இரை தேடும் எலியின் கண்கள்
அச்சத்தின் மச்சங்கள் "