Share

Sep 25, 2020

சாவித்திரியம்மாவுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடல்

 நாற்பது வருடங்களுக்கு முன்பு 

ஒரு வார பத்திரிகை பின்னணி பாடகர்களின் வாழ்க்கைத்துணைவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்து பதில் பெற்று வெளியிட்டது. 


எஸ். பி. பாலசுப்பிரமணியம் மனைவி சாவித்திரி அவர்களிடமும் அந்த கேள்வி கேட்கப்பட்டது. 

'உங்கள் கணவர் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? '


சாவித்திரியம்மா சொன்ன பதில் 

" 'கேட்டதெல்லாம் நான் தருவேன். 

எனை நீ மறவாதே' என்ற பாடல் "


'திக்கு தெரியாத காட்டில்' என்ற படத்தில்            பாலுவும் சுசிலாவும்,                                 முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்குமாக           பாடிய பாடல் அது. 

1972ல் வந்த வண்ணப் படம். 


இந்த பாடலை விட எத்தனையோ சிறப்பான பாடல்களை அந்த நேரத்தில் எஸ். பி. பி பாடியிருந்தார் தான். ஆனால் அவர் மனைவிக்கு இதன் முத‌ல் இரண்டு வரிகள் 

ரொம்ப முக்கியம் அல்லவா? 

'கேட்டதெல்லாம் நான் தருவேன். 

எனை நீ மறவாதே '


.. 


டி. எம். எஸ் மார்க்கெட் போன பின் ரொம்ப விரக்தியில் இருந்தார். ரொம்ப புலம்ப ஆரம்பித்து விட்டார். மார்க்கெட் போய் ரொம்ப காலமான பின்னும் புலம்பல் நிற்கவில்லை. 

பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தன்னை பாட யாரும் அழைப்பதில்லை. பாட வாய்ப்பு தருவதில்லை என்று ஆவலாதி சொல்லிக் கொண்டே இருந்தார். 


எஸ். பி. பாலசுப்பிரமணியம் என்ன செய்தார் தெரியுமா? சௌந்தர்ராஜன் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்தார். 

"நீங்க நெறய்ய சாதிச்சிட்டீங்க. ரொம்ப பெரிய பின்னணி பாடகர் அண்ணே நீங்க. 

ஒங்க பாட்டு எல்லாமே சாகா வரம் பெற்றவை. 

உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.

 வெளி நாட்டுல கச்சேரி செய்யப் போகும் போதெல்லாம் நானும் என் மகன் சரணும் இணைந்து 

ஒங்களோட ' பொன்னொன்று  கண்டேன், 

பெண் அங்கு இல்லை, 

என்னென்று நான் சொல்லலாகுமா?' பாடலைப் பாடி கைத்தட்டு வாங்குவோம். 

எதைப்பற்றியும் கவலைப்படாம நீங்க சந்தோஷமா இருங்கண்ணே. நீங்க எவ்வளவு பெரிய ஆளு "


டி. எம். எஸ்ஸிற்கு பிரமாதமாக கவுன்சலிங் செய்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.