Share

Jun 26, 2020

ராஜநாயஹம் பற்றி வாசுகி பாஸ்கர்

பெரு மதிப்பிற்குரிய நண்பர் வாசுகி பாஸ்கர்
 என் எழுத்துக்கு மகுடம் சூட்டி கௌரவித்திருக்கிறார். 
படித்துப் பாருங்கள். 

"என் மகள் சிமிண்ட் ஷெல்ப்களில் ஏறும் குரங்கு சேஷ்டைகள் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது, முந்தாநாள் காலை உயரத்திலிருந்த புத்தகங்களை ஜோஸ்யக்காரனின் கிளியைப் போல வீசிக்கொண்டிருந்தாள், கோவத்தில் எச்சரித்தபடி கீழே குனிந்து எடுத்த புத்தகம் "சினிமா பதிவுகள்"  R. P. ராஜநாயஹம் சார் எழுதியது. 

சங்கர் கொலைவழக்கு தீர்ப்பு வந்த நேரம், மன ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகி எதைதையோ சிந்தித்துக் கொண்டிருந்த போது புத்தகம் கைக்கு கிடைத்தது. முற்றிலும் புதியவொரு அனுபவத்துக்காக படிக்கத் தொடங்கினேன், 240 பக்கம், போனதே தெரியவில்லை. Rejuvenate என்று சொல்வார்களே, அது போல பேரனுபவம். 

R. P. ராஜநாயஹம் சார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே விழுப்புரம் வந்தார், அவருக்கு விழுப்புரத்தில் ஒரு வேலை, கல்யாண சமாச்சாரம். நண்பர்கள் சிலர் பரிந்துரைக்க என்னை தொடர்பு கொண்டார், வழி போக்கன் கூட செய்யக் கூடிய உதவி, அதற்கு அவர் பதில் செலுத்திய அன்பு மிகை, அது அவரது சுபாவம். விடை பெறும் போது அவரது இரண்டு புத்தகங்களை கையொப்பமிட்டு கொடுத்திருந்தார், உன்னத மனிதரும் அருமை நண்பருமான வாசுகி பாஸ்கர் அவர்களுக்கு என்று முதல் பக்க கையொப்பம். இப்போது தான் கவனித்தேன்,  சாரின் வார்த்தைகளுக்கு நான் மிகை, பெருந்தன்மை பூடகம் இல்லை, நிஜம். 

இந்த இரண்டு புத்தகங்களையும் நான் மறந்தே போனேன், R. P. ராஜநாயஹம் சாரின் முகநூல் blog பதிவுகளை விரும்பி படித்து வந்தாலும் அவர் கொடுத்த புத்தகங்களுக்கு நான் இலக்கிய அந்தஸ்தோ ஆய்வு கௌரவமோ கொடுக்க வில்லை, இனாமாக கிடைத்தது இல்லையா, மனுஷ புத்தி. அதற்காக சாரிடம் நான் இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இலக்கியமாவது மயிராவது, படிக்கிறவனுக்கு அனுபவத்தை கொடுக்காத இலக்கியம் எதற்கு? என்று சொல்வதின் மூலம் அவரின் இலக்கிய புலமையையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை, முற்றிலும் பிரெஷ்ஷான எழுத்துப் பாணி, சோர்வு தட்டுப்படவில்லை. காட்டாற்றின் வெள்ளத்தின் வேகம் கண்களுக்கு வெளிச்சம், ஆனால் "குதிச்சி பார்றா அப்பத்தான் தெரியும்" என்று மெளனமாக ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கும், அது தான் R. P. ராஜநாயஹம் சாரின் எழுத்து நடை, என்ன வேகம், எவ்வளவு தகவல்கள்? இடையிடையில் ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலம். 

எம்ஜிஆரில் ஆரம்பித்து சாமிக்கண்ணு வரை, ஜுராசிக் பார்க் டூர் போல சினிமா டூர் ஆனால் வழக்கமான சினிமா வரலாறு இல்லை, பிரபலம் - பிரபலமில்லாதவர், வாழ்ந்தவர் - கெட்டவர் என்று சினிமாவின் 360 டிகிரி சமாச்சாரங்கள். சாமிக்கண்ணு கூட பிரபலம் தான், முள்ளும் மலரும் சாமிக்கண்ணு. ஆனால் அரிய செய்தி பராசக்தி படமாவதற்கு முன்னே அதன் நாடக வடிவத்தில் சிவாஜி ரோலில் குணசேகரனாக நடித்தவர் சாமிக்கண்ணு, எவ்வளவு தகவல்கள்? 

நான் என் வாழ்க்கையில் ஒரு பக்கத்தை படித்து விட்டு வெடித்துச் சிரித்தது இந்தப் புத்தகம் தான், சிரிப்பு வராமல் கூட போகலாம், நீங்கள் அவர் ரசிகராக இருந்தால். ஜெய்சங்கர் பற்றிய பதிவு, எப்போதும் துருவென்று இருப்பார், பல்டியடிப்பார், தாவிக்குதிப்பார், டப்பா படத்தில் கூட வெள்ளிவிழா படத்தில் நடிப்பதைப் போல உற்சாகமாக இருப்பார் என்கிறார். அடுத்தது, சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கே அறியாத மக்கள் சினிமாவும் போரடிக்கும் என்று அறிந்துக்கொண்டது ஜெய்சங்கர் படங்கள் பார்த்த பிறகு தான்  (வெடித்துச் சிரித்தேன், மனைவி முறைக்கிறார்) 

1970 களில் மதுரை தமுக்கம் மைதானத்தில் என்னத்த கண்ணையாவும் கமலும் ஒரு நாடகம் நடிக்கிறார்கள், கன்னையா வீட்டு ஃப்யூஸை பிடிங்கிவிட்டு கமல் கன்னையாவின் மகளை கடத்துகிறார், மேடையில் ஒரே இருட்டு. இந்தாங்க இதெ மெயின்லே சொருவுங்க என்று ஃப்யூஸை தூக்கி போட்டு கமல் எஸ்கேப் ஆகிறார், அப்போ என்னத்த கன்னையா வசனம் 

" ஏன் தம்பி, சொருகுனா எரியுமா?"  

தமுக்கம் மைதானமே சிரிப்பில் அதிர்ந்து இருக்கிறது, "வரும் ஆனா வராது" என்கிற வசனத்தை தாண்டி என்னத்த கன்னையாவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது, என்னத்த கன்னையாவின் முன் தயாரிப்பில்லாத டைமிங் சென்ஸ் பயங்கரமாம், நமக்குத் தெரியுமா? வெற்றி பெற்று பணம் புகழ் அந்தஸ்து பெற்றவர்கள் மட்டுமே ஞானஸ்தர், மனித மதிப்பீடு, எவ்வளவு அபத்தம்? 

சினிமா பற்றியான நம் பொது அபிப்பிராயங்களை பல இடங்களில் அடித்து உடைக்கிறார். நம்பியார் படத்தில் தான் வில்லன், நிஜத்தில் சாந்த சொரூபி, சாமியார். இது சொல்லப்பட்டு வந்தவை, ஆனால் நம்பியார் முகம் சுளிக்கும்படி பயங்கர விரசமாக பேசக்கூடியவராம், காதை பொத்த வேண்டுமாம். மிகைப்படுத்தப்பட்ட ஜோடி பாலசந்தர் - நாகேஷ், நாகேஷை பாலசந்தர் பயன்படுத்தியதைப் போல யாரும் பயன்படுத்தியது இல்லை, இந்த ஜோடியை கமல் கூட பல இடங்களில் புகழ்ந்து இருக்கிறார், ஆனால் நாகேஷ் மித மிஞ்சிய ஓவர் ஆக்டிங் செய்ய ஆரம்பித்ததே பாலச்சந்தரால்  தான் என்று கவனப்படுத்துகிறார், உண்மையும் கூட.  

கமலஹாசன் கேமரா சென்ஸ் இல்லாமல் நடிக்க முடிந்ததில்லை, இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை இருக்கு என்கிற கமலின் மெணக்கீடலை சுட்டி காட்டுகிறார், சுபாவம் மாறாமல் இயல்பாய் இருப்பதென்பது கடும் பயிற்சி, அது இந்தியாவிலேயே வாய்த்தது மோகன் லால் ஒருவருக்குத்தான் என்கிறார், மறுக்க முடியுமா? ( கமல் ரசிகர்கள் நோ டென்சன், R. P. ராஜநாயஹம் கமலைப் பற்றிய ஆதர்சத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார், தீவிர கமல் ரசிகர் ) 

நான் தங்கவேலு காமெடிக்கு ரசிகனாக இருந்திருக்கிறேன், ஆனால் இதுவரை அதை சொல்லத் தெரிந்ததில்லை, புத்தகத்தை மூடி வைத்து விட்டு தங்கவேலுவை அசை போட்டேன், ஆமாம் பிரமாதமான நடிகன். எப்படி அவரை என் ஆதர்சமென பிரகடனப்படுத்தாமல் போனேன்? R. P. ராஜநாயஹம் அதை மீட்டெடுத்தார், ஈபன் அண்ணனுக்கு போன் செய்தேன். ஒரு மணி நேரம் தங்கவேலுவை பற்றிப் பேசினோம், கல்யாணப் பரிசில் அவர் ஒரு காட்சி சொன்னார். வேலை வெட்டி இல்லாத தங்கவேலு மற்றுமொரு வேலை இல்லாத நண்பனான ஜெமினி கணேசனை வீட்டுக்கு அழைத்து வந்து பெரிய கம்பெனியின் மேனேஜர் என்கிறார், "என்னப்பா பொய் சொல்ற?" என்று ஜெமினி கணேசன் காதில் கடிக்கிறார். தங்கவேலு ஸ்பாட்டிலேயே 

"அட யார்ரா இவன், உண்மையை கூட சொல்ல விட மாட்றான்" 

அந்த டைமிங் நினைத்து நானும் அண்ணனும் பத்து நிமிடம் சிரித்தோம்.  

நான் தங்கவேலு ரசிகன், மீட்டுக் கொடுத்தது R. P. ராஜநாயஹம் சார். 

சினிமா ஒரு பூதம், நல்லது கொஞ்சமும் கெட்டது நிறையவும் கொடுக்கும் அபூர்வ பூதம். திறமை ஒரு அளவுகோல் அதே நேரம் திறமை மட்டுமே அளவுகோல் இல்லை, எத்தனை அசாத்திய கலைஞர்களை அது மென்று சாக்கடையில் துப்பியிருக்கிறது? சினிமாவில் இருப்பவன் நேரம், காலம், ஆன்மீகம், ஜோசியத்தை தாண்டி சிந்திப்பது கஷ்டம் தான், எப்படி ஜெய்கிறான்? எதற்காக ஜெயிக்கிறான்? ஏன் ஜெய்கிறான்? ஏன் தோற்கிறான்? யாருக்குமே புலப்படவில்லை, myth . அதனால் தான் நேரம் காலம் ஜோசியம் பக்தி மயக்கமோ என்னவோ. 

எம்.கே.தியாகராஜ பாகவதர், அந்தக்கால பெண்களின் ஆதர்சம் என்பதை விட ஆர்கஸம், பெரு வாழ்வு வாழ்ந்த சீமான், அவரது சமாதி தேடி கண்டு பிடிக்கும் நிலையில் திருச்சியில் இருந்திருக்கிறது, அதுவும் மலம் போகுமிடத்தில். Strange 

சினிமாவை தன் வரலாற்றோடு இணைத்து எழுதிய பாணி Classic , சரோஜா தேவி பற்றி எழுதும் போது சரோஜா தேவி என்னும் புனைப்பெயரில் எழுதி வந்த காம ரசக் கதைகளை படித்து நீதி போதனை வாத்தியாரிடம் மாட்டிக்கொண்டாராம் ராஜநாயஹம். 
பின்னொரு நாள் பள்ளி விழாவில் "நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" பாடினாராம், 

"இந்த பாட்டை பாட வேற ஆளே கிடைக்கலையாடா உங்களுக்கு" என்றாராம் நீதி போதனை.  

குறிப்பெடுக்கவில்லை, நினைவில் நின்றதை எழுதியிருக்கிறேன், இந்த புத்தகம் அதையும் தாண்டி பேசியிருக்கிறது, தகவல் களஞ்சியம்
 R. P. ராஜநாயஹம் சார். 
தகவல் தெரிந்தால் போதுமா? மொழி வேண்டுமே? சட்டகத்திற்குள் அடங்காத தனி நடை, சுவாரசியம். ராஜநாயஹம் சாரை சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியிருக்கிறது, ஜெயித்திருந்தால் இந்த நூல் வந்திருக்குமா தெரியவில்லை, நினைத்தபடி மன நிறைவோடு வாழ்ந்தவர் பலர், அது பிரபலத்தன்மை என்கிற விதிகளுக்கு கீழ் இயங்க வேண்டியதில்லை, 

நீங்கள் ஒரு அசாத்தியமான திறமைசாலி சார். அடுத்து உங்களது இலக்கிய பதிவுகள் நூலை எடுத்து வைத்திருக்கிறேன். மீண்டும் மன்னிப்பு கோருகிறேன், தற்செயலாகத் தான் படிக்க ஆரம்பித்தேன், நல்ல நேரம் விபத்தில் தொடங்கியதைப் போல, நல்ல அனுபவம், உளப்பூர்வமாக நன்றி சார்."

- வாசுகி பாஸ்கர்

Jun 25, 2020

ராஜநாயஹம் பற்றி மேன் மக்கள்



Dass Ilango : ஞாபக சக்தியில் கலைஞருடன்           தங்களை ஒப்பிட்டிருந்தேன். 

Kannan P. Samy : It is just not memory power, but remembering things that matter, paying attention to details - it's about living life intensively. 
R. P. sir is perfect example of that. 
So is Kalaignar or Charu. 
High intensity life. 
Pity that they are the most misunderstood people. 

Prabhu Rajadurai : I'm sure, had you got that chance 
you would have been an interesting companion to persons like KARUNANITHI with your anecdotes and histrionic skills, R. P. Rajanayahem 

Vaidheeswaran Sundaram : வாழ்க்கையை விரித்துப் போட்ட பரந்த  வியப்பு  நிறைந்த  விதானம்  
அவர்  வெளிப்பாடுகள்

தேவேந்திர பூபதி : துக்கத்தைக் கூட வலியின்றி கடத்தல். தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. 
அனுபவத்தை மீறின அறிவில்லை.. 
பகிருங்கள். அறிந்து கொள்கிறோம், 
R. P. ராஜநாயஹம் சார். 
Data bank R. P. sir. 

Arunan Sivakumar : Not only Data bank sir. 
Think Tank too. 
We are grateful to you for ever. 

சுரேஷ் காத்தான் : ஊஞ்சலாட்டு அல்ல உங்கள் பதிவுகள்... உச்சந்தலையில் நச்சென்று 
இறங்கும் சுத்தியலடிகள். 

Hariharan Sarvesan : ராஜநாயஹம் ஸ்வாமீ,
 நீர் முந்தைய பிறவிகளில் ராஜரிஷியாக வாழ்ந்திருப்பீர்கள். 

A. B. Rajasekaran : முக நூலில் நான் ஒரு வரி விடாமல் படிக்கும் எழுத்துகளில் ஒன்று 
திரு. R. P. ராஜநாயஹம் அவர்களுடையது. 
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் பயங்கர interesting ஆன எழுத்து நடை, அவர் ஒரு தகவல் களஞ்சியமும் கூட. பன்முக திறமையாளர்.

Senthil Kumaran : நீங்கள் எழுதும் காலத்தில் நாங்கள் வாசகனாக இருப்பதே மிகப் பெரிய ஆசீர்வாதம் சார்.

Mohan Hariharan : R. P. ராஜநாயஹம் அவர்களை சிறிது காலத்திற்கு முன் தான் Facebook ல் அறிமுகம் கிடைத்தது.
அவருடைய வீச்சு, கதை, இலக்கியம், நாடகம், நடிப்பு, தமிழ், ஆங்கிலம் போன்ற பல துறைகளிலும் பரந்து விரிந்து ஆழமானது. அவைகளை விவரிக்கும் தன்மை ஒரு சுவாரஸ்யமான படிப்பினைகள். 
I'm simply fascinated by his articles.

SriVathsan : Either happiness or sorrow,  it is in extreme level in your write up. 
Your biggest fan.
ஆச்சர்யம், அபூர்வம்  இவற்றின் உச்சமான அதிசய மனிதர் சார் நீங்கள். தகவல் புதையல்களின் சுரங்கம். பன்முக திறமைகளின் ஒரே முகம். உங்கள் வாசகனாக இருப்பதில் எனக்கு கர்வம். 

Veeranmani Balamurugan : நீங்கள் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். 
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.

Jun 24, 2020

கரோனாவும் லோகமும்

டெல்லியில் மட்டுமே ஜூலை 31ம் தேதியில் 
ஐந்து லட்சம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்றால்?? 

நம் நிலை.. 
கடவுள் கையில தான் என்று அரசு 
சொல்லி விட்டதாக சொல்பவர்கள் 
சொல்கிறதை கேட்க முடிகிறது. 

பிரேசில் கரோனா பாதிப்பு உலக அளவில் இரண்டாம் இடம். 
பிரேசில் அதிபர் காட்டிய அலட்சியம் பற்றி 
உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் 
சுட்டிக் காட்டியுள்ளார். 

போல்ஸொனரோ கரோனாவுக்கு வைத்த பெயர் 
'லிட்டில் ஃப்ளு'. 
வைரஸை விட லாக்டவுன் பொருளாதார சரிவு தான் மகா மோசமானது என்றார். 

ஐரோப்பிய நாடுகள் பயண விஷயங்களில் தளர்வை தெரிவிக்கின்றன. 

ஃப்ரான்ஸ் சுத்தமாக கரோனா பயம் நீங்கி லட்சக்கணக்கான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறதாமே? 

ஃப்ரான்ஸ் மிகவும் குதூகலமாகவும் திங்கள்கிழமையை கொண்டாடி குடமுடைத்திருக்கிறது. 
ஒரு வருடாந்திர இசை விழாவுக்காக ஆயிரக்கணக்கில் பெருங்கூட்டமாய் மக்கள் கூடி ஆடி பாடி பொங்கி விடுதலை சுகங்கண்டிருக்கிறார்கள். 

ட்ரம்ப் Pandemic கூத்து - Erratic and chaotic. 

இப்டியிருந்தா எப்டி.. ன்னு டெட்ராஸ் கவலப்பட்றது நியாயந்தான. 

இன்னக்கி 'ஹிண்டு' ல இவர் தந்த எச்சரிக்கை படிக்க கிடைத்தது. 
' Greater threat is not the virus, but the lack of 
global solidarity and leadership '

Jun 22, 2020

ஒற்றை வாடை தியேட்டரில் சேவா ஸ்டேஜ்

வருடம் 1950. 

கவிஞர் வைத்தீஸ்வரன் அவருடைய மாமா வீட்டில் இருந்து தான் படித்து கொண்டிருந்திருக்கிறார். சும்மா வளர்ந்த பையன். 

மாமா திரைப்பட நடிகர் எஸ். வி. சகஸ்ர நாமம் அப்போது தான் சேவா ஸ்டேஜ் நாடக கம்பெனி ஆரம்பித்துள்ளார். 
வால்டாக்ஸ் ஒற்றை வாடை தியேட்டரில் தான் நாடக காட்சிகள் நடந்திருக்கிறது. 

முதல் நாடகம் 'மோகினித்தீவு' 

டி. கே. பாலச்சந்திரன் தான் 
முதல் நாடக கதாநாயகன். 

பாலச்சந்திரன் பின்னால் பல மலையாள படங்களில் நடித்தவர். 
அதனாலோ என்னவோ கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். 

தமிழில் கே. எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கிய தெய்வத்தின் தெய்வம், குல விளக்கு போன்ற படங்களில் நடித்தவர். 

குல விளக்கு படத்தில் இவருக்கும் விஜயஸ்ரீக்கும் 
ஒரு பாடல். 

ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி பாடிய 
'கொண்டு வந்தால் அதை கொண்டு வா வா, 
பால் குடிக்கிற நேரம் அல்லவா 
உண்டு மகிழ்ந்திட ஓடி ஓடி வா 
பழம் உண்ணுகிற நேரம் அல்லவா '

 ஒற்றை வாடை தியேட்டரில் எழுபது வருடங்களுக்கு முன்பு சகஸ்ர நாமம் மோகினித்தீவு நடக்கிற போது வைத்தீஸ்வரனுக்கு கோடை விடுமுறை. 
அதனால் இவருடைய மாமா இவரை 
அந்த தியேட்டருக்கு போக சொல்வாராம். 
பகல் மூன்று மணிக்கு போய்
 டிக்கெட் கவுண்டரில் இருப்பார். 

ஆறு மணிக்கு க்ரீன் ரூமுக்கு போய் இவரே முகத்தில் பவுடர் பூசிக்கொள்வார். 

மேக் அப் மேன் இவருடைய தலையில் 
ஒரு பழைய Wig ஐ மாட்டி விடுவார். 
பிறகு ஜிகினா தைத்த பழைய அழுக்கு அங்கி மாட்டிக்கொண்டு நாடகத்தில் அரச குமாரன் நிற்கும்போதெல்லாம் அவன் பின்னால் தண்டு பிடித்துக் கொண்டு நிற்கிற சேவகன். 

அப்போது வைத்தீஸ்வரன் போலவே அரச குமாரனுக்கு இன்னொரு சேவகனும் இன்னொரு பக்கத்தில் தண்டு பிடித்துக் கொண்டு நிற்பான். அரசன் முன்னும் பின்னும் நகரும் போது இந்த இரண்டு சேவகர்களும் நகர வேண்டும். 
அந்த இன்னொரு சேவகன் ஏ. எல். ராகவன். 

இப்படி உபரி நடிகனாயிருந்த ராகவனுக்குள்               அப்போது தான் இசைப்பாடகன் உருவாகிக்கொண்டிருந்திருக்கிறான் என்பதை என்னிடம் கவிஞர் வைத்தீஸ்வரன் நினைவு கூர்கிறார்.

.... 



Jun 21, 2020

ஏ. எல். ராகவன்

ஏ. எல். ராகவன் மறைந்து விட்டார் என்ற செய்தியை எனக்கு தெரியப்படுத்தியவர் கவிஞர் வைத்தீஸ்வரன். 

'கல்லும் கனியாகும்' படத்தை டி. எம். எஸ்ஸுடன் இவர் இணைந்து தயாரித்து இரண்டாவது கதாநாயகனாக நடித்த போது, நடிப்பு என்பது பின்னணி பாடகர்களான இருவருக்குமே சாத்தியப்படவில்லை. 
 ராகவன் முக லட்சணம் காரணமாக ' இவர் நடிகராக ஒரு ரவுண்டு வர முடியும்.' என்று
 ஒரு பத்திரிகை குறிப்பிட்டதுண்டு. 

பார்த்தால் பசி தீரும் படத்தில் 
'அன்று ஊமை பெண்ணல்லோ ' பாடல் நிறைய வித்தியாச தன்மை கொண்ட விரிவான பாடல். 
இதை அற்புதமாக, அசத்தலாக பாடியிருக்கிறார். 
குரல் கூட ஜெமினி கணேசனுக்கு பிசிறேயில்லாமல் நேர்த்தியாக
 பொருந்தியது தான் விசேஷம். 

இவர் பாடியதில் உச்சம் தொட்ட பாடல்' அன்று ஊமை பெண்ணல்லோ. '

' எங்கிருந்தாலும் வாழ்க ' 
ஒரு பிரமாதமானதென்று சொல்ல வேண்டும். 

ஜெமினி கணேசன், பாலாஜி, முத்துராமனுக்கெல்லாம் பாடியவர். 

எம் ஆர் ராதாவுக்கு ஒரு பாடல் "புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை... அட அசட்டு பய புள்ள ஆராரோ"

பாலாஜிக்கு பாடிய' பட்டு சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்து நின்ற போது... '
சரணத்தில்' தேர் கொண்டு வந்ததோ, தேனள்ளி தந்ததோ, வானத்தில் தூது சென்றதோ ஓஓஓ, வானத்தில் தூது சென்றதோ '

நாகேஷுக்கு நிறைய பாடினார். 
ஏ. எல். ராகவன் குரலும், பாவமும் அட்டகாசமாக நாகேஷுக்கு என்றே வார்த்தாற் போல பொருத்தம். 

சீட்டு கட்டு ராஜா, ராஜா பாடலில் ' ஊட்டி மலை ரோஜா ரோஜா, '

' குபு குபு குபு குபு நான் எஞ்சின்,
டக்கு டக்கு டக்கு டக்கு நான் வண்டி 

இஞ்சின் வேகம் இளமையின் வேகம் 
என் பின்னாலே தொடராதே 

இஞ்சின் மட்டும் ரயிலாகாது 
என்னை விட்டு போகாதே '

' வாழைத் தண்டு போல உடம்பு அலேக் 
நான் வாரியணைச்சா வழுக்குறியே நீ அலேக் '

நவக்கிரகம் படத்தில் நாகேஷுக்கு 'எல்லாமே வயத்துக்கு தான்டா, இல்லாத கொடுமைக்கு தான்டா. 
அதிலேயே இன்னொரு பாடல் பரீட்சார்த்தமாக பாலசந்தர் வைத்தார். 
ஏ. எல். ராகவன்' பேசுங்க சார் 'ன்னு ஆரம்பித்து' நாய் வாலை நிமிர்த்தி வைக்க ஆன மட்டும் பாடு பட்டேன் 'ன்னு பாடலை முடித்திருப்பார்.

ஆங்கில உச்சரிப்புள்ள பாடல்களில்  சாதனையே செய்தவர். 

சந்திர பாபுவின் 'ஹலோ மை டியர் ராமி' யில் சரிக்கு சரி 'சைனா பஜாரு நைனா உஷாரு' மெட்ராஸ் பாஷையில் கலக்கியிருப்பார். 

அன்பே வா 'ஒன்ஸ் எ பாப்பா மெட் எ மாமா இன் எ லிட்டில் டூரிஸ்ட் பஸ்.' தூள். 

குழந்தையும் தெய்வமும் -' சன்டே பிக்சர், மன்டே பீச்சி, ட்யூஸ்டே சர்க்கஸ், வென்ஸ்டே ட்ராமா.. டூடூடூ டூடூடூடுடு பாமா '

நான் யார் தெரியுமா பாட்டில்' ஸ்டாப் தட் ' என்று நுழையும் குரலில் ஒரு ஆப்பிரிக்க பாடலை என்ன ஒரு வேகத்துடன் பாடியிருப்பார் தெரியுமா? 

சௌராஸ்டிரரான ராகவன்
 அதே கண்களில் 
' சொட்டிஜா, சொட்டிஜா, சொட்டிஜா 
ஏ சொன்னவா, சொன்னவா, சொன்னவா '

' எவ்வளவு பாடல்கள் சார் சினிமாவில் பாடினீர்கள்? ' என்று நான் கேட்ட போது
 சற்று நிதானித்து ராகவன் சொன்னார்
 "  ஒரு ஐநூறு இருக்கும்" 

பழம்பெரும் நடிகை எம். என். ராஜத்தின் கணவர் என்பது One more feather in his cap. 

........ 

பழங்கதையாய் கனவாய் 
- R. P. ராஜநாயஹம் 

சென்னையில் ஹேமா மாலினியின்
 ரிக்கார்டிங் தியேட்டர்.

  ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பெங்களூரில் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதற்கு வந்திருந்தார்.

பேசி முடித்து விட்டு தியேட்டரின் உள்பகுதியிலிருந்து வெளியே வந்தவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னிடம் 
“ என்னை நேராக இருந்து பார்க்காமல் பக்கவாட்டில் இருந்து  பாருங்கள். அப்படிப்பார்க்கும்போது 
நான் ‘வாத்து’ போலவே இருப்பேன்”
 
மேக்கப்பில்லாமல் இருக்கும் மூர்த்தி முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

டப்பிங் தியேட்டரில் இருந்த ஜெயா சக்ரவர்த்தி (ஹேமாமாலினியின் தாயார்)யிடமும் தன்னை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது 
வாத்து போலவே இருப்பதை ஊர்ஜிதமாக வெண்ணிற ஆடை மூர்த்தி மீண்டும் சொன்னார்.

வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான காலத்திலிருந்து   எவ்வளவு உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த நடிகர். 

நாகேஷ்,
தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்,
கவுண்டமணி, ஒய்.ஜி.மகேந்திரன், 
ஜனகராஜ், விவேக்,
வடிவேலு என்று காமெடி கிங் ஆக 
மார்க்கெட்டில் டாப்பில் யார் இருந்தாலும் சளைக்காமல் அவர்களுக்குத் துணையாக 
நின்று ‘சள,சள’ என்று, வழ,வழ வசனம் பேசிக்கொண்டிருந்தவர்.

ஹேமாமாலினி தியேட்டருக்கு அப்போது காரில் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் (எம்.என்.ராஜத்தின் கணவர்) வந்தார்.

 அந்த நேரம் அவர் ஒரு படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

 இந்த படம் இன்னும் அடுத்த சில மாதங்களில் அவருக்கு பெரும் நஷ்ட த்தைக்கொடுத்து அவரையும் நடிகை எம்.என்.ராஜத்தையும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டது.

என்னையும் சுப்ரமண்ய ஐயரையும் அவர்  காரில் ஏறிக்கொள்ளச்சொன்னார். 

நான் வேலை செய்யும் பட டைரக்டர் பெயரைச் சொன்னபோது “ அப்படி ஒரு டைரக்டரா?” என்றார்.
 அவருக்கு  டைரக்டரைத்தெரியவில்லை.

 இது தான் சினிமா உலகம். இத்தனைக்கும் அந்த டைரக்டர் அப்போது இயக்கி பதினொரு வருடத்தில் நான்கு படங்கள் வெளி வந்திருந்தன.

ஏ.எல்.ராகவனிடம் சொன்னேன். “ நீங்க பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ்
‘எங்கிருந்தாலும் வாழ்க’ தான்.

 'நான் யார் தெரியுமா?' ஜெய்சங்கர் படத்தில் 
இவர் ஒரு பாடலில் விசித்திரமாக
 ஆப்பிரிக்க மொழியில் பாடியிருப்பார்.
அந்த பாடலைப்பற்றி கேட்டேன். 

https://www.youtube.com/watch?v=4RnGvxOAd6k
 
 ஏ.எல் ராகவன் “ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.”

எஸ்.பாலச்சந்தரின் “அந்த நாள்".
 அதில் ஏ.எல்.ராகவன் நடித்திருப்பதைப்பற்றி நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
”ஃபீல்டுல யாருக்கும் தெரியாத விஷயமெல்லாம் எப்படி தெரிஞ்சி வச்சிருக்கீங்க”

சுப்ரமண்ய ஐயர் “ எனக்கு இந்தப் பையனப்பார்க்கும்போதெல்லாம் இது தான் பிரமிப்பு.என்சைக்ளோபீடியா. 
இந்த வயசுக்கு தெரியாத பல விஷயங்கள் ராஜநாயஹத்துக்குத்தெரிஞ்சிருக்கு”

பாண்டி பஜாரில் காரில் இருந்து இறங்கும்போது ஏ.எல்.ராகவன் வாஞ்சையுடன் “ ராஜநாயஹம், அவசியம் நீங்க எங்க வீட்டுக்கு வரணும்!”

கமலா தியேட்டரில் ராகவன்- ராஜம் தம்பதியரின் சொந்தப்படம் காற்றாடிக்கொண்டிருந்த போது தூரத்தில் அங்கே தியேட்டரில் நின்று கொண்டிருந்த டைரக்டரை ராகவன்  திட்டினார். 

நூல்வேலி படத்தில் வரும் பங்களா
 இவர்கள் சொத்து. 
அதை இந்த படத்தயாரிப்பு காரணமாக 
இழக்க நேரிட்டது. 

ஏ.எல்.ராகவன் தயாரித்த
 அந்த பட த்தில் அஸிஸ்டண்டாக சேர்க்க
 என் பெரியப்பா
 திருச்சி டிஸ்ட்ரிப்யூட்டர் சுகுமார் மூலமாக
 என்னை அழைத்துச்சென்றிருந்தார். 

வீட்டில் நுழையும் போது எம்.என்.ராஜம் மாடியில் துணிகள் காயப்போட்டுக்கொண்டு இருந்தார்.

என் பெரியப்பா காரில் இருந்து இறங்கியவுடன் 
மேலே பார்த்து அடையாளம் கண்டு "அம்மா, வணக்கம்மா" என்ற போது சிரித்த முகத்துடன்
 எம். என். ராஜம் பதில் வணக்கம் சொன்னார். 

 ஏ.எல்.ராகவனும் எம்.என்.ராஜமும் கட்டாயம் என்னை தாங்கள் தயாரிக்கும் பட த்தில் 
உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள 
டைரக்டரிடம் சிபாரிசு செய்வதாக
 முழு மனதோடு தான் சொன்னார்கள். 

ஆனால் டைரக்டர் மறுத்து விட்டார்.

 அதன் பின் தான் ஹிண்டு ரங்கராஜன்
 தயாரித்த படத்தில்
 நான் உதவி இயக்குனரானேன்.

...

https://m.facebook.com/story.php?story_fbid=2733065920240190&id=100006104256328

Jun 20, 2020

சீரியல் கில்லர் தாழனுக

தீர்மானமாக ஒரு மனத்தடை. 
இந்த சீரியல் கில்லர் படங்களே 
இனி பார்க்கவே முடியாது.
நேத்து 'அஞ்சாம் பதுராவா? பத்துராவா?' மலையாளம் 
பார்த்தவுடன் சைக்கோ கொலைகாரன் த்ரில் சமாச்சாரம் சுத்தமா திகட்டிடுச்சு. 
இது இந்த படத்தாலன்னு தான்னு கெடயாது. இதுக்கு முன்ன சைக்கோ படமொன்னு பாத்தப்பவே போதும் போதும்னு சொறிஞ்சி விட்டு எந்திரிக்கும்படியா தான் ஆயி போச்சி. 

அனா, ஆவன்னா அஞ்சாம் பத்துரா கதாநாயகன விட உதயநிதி ஸ்டாலின் நல்ல நடிகர்.  கதாபாத்திரத்தை
 தன் நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். 

என்னய்யா? சீரியல் கில்லர்னாலே
 ஒரே கத தானே. 

ப்ரசண்டேஸன்ல  டைரடக்கர் கிளப்பிட்டாருன்னு படம் பாத்தவங்க பூச்சாண்டி காமிச்சா சரியாயிடுமா? 

சின்ன பையனா இருக்கும் போதே 
அவன் மனச பாதிக்கிற மாதிரி
 சில அனுபவங்கள். 
சைக்காலஜிக்கலா அவன் பெரியவனானதும் சைக்கோவாகி கொலை, கொலையா முந்திரிக்கா..
 அதான. 
அதுல ஒரு சஸ்பென்ஸ் என்னன்னா
 அவன யாருன்னு போலீஸால
 கண்டு பிடிக்கவே முடியாது. 
கதயில திருப்பம் என்னனா, 
தாழன் கொடூரமா கொல பண்ற sadist. 
பெரிய புடுங்கி. கண்ண புடுங்கி, 
நாக்க புடுங்கி, ஹார்ட்ட புடுங்கி.. 
சும்மா டெர்ரரா மிரட்டுவான். ஊரே மிரளும். 
பன்னி பண்ணை. 
கடைசியா போலீஸ் கையில சிக்குவான்.
 ஜெயில்ல போட்டப்புறம்,  இல்லாங்காட்டி கோர்ட்டுக்கு போற வழியில என்கவுண்டர்.  சிக்காமலே கூட எஸ்கேப் ஆயிடுவான். 
போலீஸ் கேரக்டர் ரோல்ல வர்ரவனே கொலகாரன
தப்பிக்க விட்டு பொழச்சி போடான்னுடுவான். 
 இல்ல கதய மாத்தனும்னா தற்கொலை பண்ணுக்குவான். அல்லாங்காட்டி 
பைத்தியம்னு மென்டலாஸ்பத்திரி. 
எதுனா புதுசா க்ளைமாக்ஸ் இருக்கா?

.. 

Jun 18, 2020

'சினிமா எனும் பூதம்' பற்றி சிவகுமார் கணேசன்

சினிமா எனும் பூதம்
R. P. ராஜநாயஹம்
Zero Degree Publishing 

சிவாஜி,எம்ஜிஆர்,முத்துராமன்,கமல்,ரஜினி போன்ற பிரபலங்களை மட்டுமல்ல,திரைப்படங்களில் சில காட்சிகளே வந்து போன பி.டி.சந்தானம்,ஹரிநாத் ராஜா,டவுன் பஸ் கண்ணப்பா,ஆதித்யன் போன்ற அபிரபலங்களைப் பற்றியும் நாமறியாத செய்திகளை,மெலிதான நகைச்சுவை மிளிரும் தொய்வில்லாத நடையில் 312 பக்கங்களில் சொல்லும் புத்தகம்.

தண்ணிலவு தேனிறைக்க எழுதிய மாயவநாதன்,வாராய் நீ வாராய் எழுதிய கா.மு.ஷெரிப், காவேரி ஓரம் கவி சொன்ன காதல் எழுதிய கே.டி.சந்தானம்,கம்பதாசன் முதலான நாம் மறந்த கவிஞர்களைப் பற்றி எத்தனை தகவல்கள்.

M.R.ராதா,நாகேஷ்,சந்திரபாபு அடேயப்பா எப்பேர்ப்பட்ட கலைஞர்கள்.

திரைப்பட உருவாக்கத்தில் படாதபாடு படும் புரடக்ஷன் அஸிஸ்டென்ட்ஸ்,அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்,70களில் தமிழ் ரசிகர்களை ஆக்ரமித்திருந்த இந்திப் படங்கள்,இந்திப் பாடல்கள்,கழிவறையாகிப் போன எம்.கே.தியாகராஜ பாகவதரின் சமாதி என ஏராளமான தகவல்களை, திரைப்படத் துறையில் பணிபுரிந்ததால் அலட்சியமாகச் சொல்லிச் செல்கிறார்.

வி.குமாரின் நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம் நான் தேடுவேன் பாடல்,டி.ராஜேந்தரால் வசந்தம் பாடி வர வைகை ஓடி வர ஆனது.சங்கர் கணேஷின் விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா பாடல்,வாள மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணமானது எனபதைச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்.

ரத்னமாலாவுக்கும் சிவாஜி கணேசனுக்குமான உறவு, நம்பியாரைப் பற்றிய மனோரமாவின் நம்ப முடியாத கமெண்ட்,ஜெமினி,சௌகார் ஜானகி,கமல்,அம்பரீஷ் போன்ற பலரின் மறுபக்கத்திலெல்லாம் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர், பாலாஜியின் மறுபக்கத்தைச் சொல்லும் போது யாருக்குத்தான் அப்படி ஒரு மறுபக்கம் இல்லை என்று கடந்து போகிறார்.

அத்தனை நடிக, நடிகையர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்.தயாரிப்பாளர்கள் என நாமறிந்த, நாமறியாத, நாம் மறந்த அத்தனை பேரையும் ஆச்சர்யமான தகவல்களோடு நினைவுபடுத்தும் இந்தப் புத்தகத்தை சினிமா ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

... 

Jun 15, 2020

சுஷாந்த் சிங் வள்ளண்மை

கேரள வெள்ளப் பேரழிவின் போது 
2018, ஆகஸ்ட் 21ம் தேதி 
சுபம் ரஞ்சன் என்பவர் இன்ஸ்டாக்ராமில் 
"உதவி செய்யனும்னு ஆசை. ஆனால் பணமில்லை "

இதற்கு பதிலாக சுஷாந்த் சிங் 
" நான் உன்னுடைய பெயரில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை தருகிறேன். அது அங்கேயுள்ள நம்முடைய நண்பர்களுக்கு  சென்றடைவதை உறுதிப்படுத்தவும் "

கேரள முதல்வர் பினராயி விஜயன் இப்போது 
சுஷாந்த் சிங்கிற்கான இரங்கல் செய்தியில் 
இந்த விஷேச வள்ளண்மையை 
நினைவு கூர்ந்துள்ளார். 

தனித்து நிற்கும் இரங்கல். 

Courtesy : The Hindu 
Monday, June 15, 2020

Jun 13, 2020

ஒரே கல்லு

கீழே நின்று ஏன் கல்லெறிகிறாய். மேலே வந்தால் நீயே பறித்துக் கொள்ளலாமே, ?!
- கலாப்ரியா 

சொலவடை - ஒரே கல்லு, ரெண்டு மாங்கா 

கல்லெறியும் கெட்டவனின் 
நோக்கம்  களவு. 

 கல்ல விட்டமா, பொறக்குனமா, ஓடுனமான்னு பரபரக்கும்போதே ,
பிடிச்சி மாத்த குடுத்து கட்டி வச்சிடுவாங்கெளே. 
இதுல எங்கன அவன் சாவகாசமா மேல  ஏறி, பறிச்சி...

மரம் ஏறுவதும் திறன் சம்பந்தப்பட்டது. 

அதுலயும் இந்த காலத்தில 
hard work தேவையில்ல. Smart work தான். 
 

ஓ. ஏ. கே. தேவர் வில்லத்தனமான 
குளோஸ் - அப் டயலாக் 'நான் யார் தெரியுமா?' வில் 
"ஒரே கல்லு, நாலு மாங்கா "

இன்னொரு படத்தில் தேங்காய் சீனிவாசன் 
தன் பாணி கொனஷ்டையுடன்,
 வார்த்தைகளை அழுத்தி சொல்வது 
" ஒர்ரே கல்லு, ஏர்ராளமான மாங்க்கா "

இன்னொரு சொலவடை  உண்டும். 

காய்ச்ச மரம் கல்லடி படும்.

உங்க ஊர் எதுங்க?

உங்க ஊர் எதுங்க என்று  ஒருவரை 
கேட்க நேர்ந்தது. 

அவர் " 'பு 'நால ஆரம்பிச்சு 'டை ' யன்னாலே முடியுற ஊர் தான் என் ஊருங்க " என்றார். 
"முதல் எழுத்து ' பு '.கடைசி எழுத்து 'டை ' " என்று மீண்டும் சொன்னார்.

நான் அதீத ஆரோக்கிய பிரக்ஞையுடன்
 இதை அலசி ஆராய்ந்து, 
இந்த மனிதர் தத்துவார்த்தமாக 
சித்தர் பாணியில் பேசுகிறார் போலும் 
என யோசித்தேன்.

இவர் கொஞ்சம் வித்தியாசமான 
கணியன் பூங்குன்றன்? 

எல்லோருக்கும் நேடிவ் ப்ளேஸ் 
பெண்ணின் பிறப்புறுப்பு தானே
 என பரந்த மனசோடு 
சொல்கிறாரோ என்னவோ. 

இந்திரன் பற்றி ஒரு  செய்தி. 

எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.

அது அசிங்கமான வழியென்று சொன்னான். 
அரிதாக அவன் 
தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,
விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம். 

பூங்குன்றன் ' யாதும் ஊரே'என்றார். 

இவர் 'எல்லோருக்குமே ஒரே.. ஒரே ஒரு ஊர் தான்' என இயம்புகிறாரோ?..

அவரே சஸ்பென்சை உடைத்து சொன்னார். 

" புதுக்கோட்டை "

எல்லோரிடமும், எந்த ஊர் என்று யார் கேட்டாலும் எப்போதும் அப்படித்தான் சொல்வாராம்.

 சொல்லி விட்டு குலுங்கி குலுங்கி 
அவரே வெடி சிரிப்பு சிரித்தார்.

இவரே பலரிடம் எடுத்து கொடுப்பாராம் 
" என் ஊர் எதுன்னு கேளுங்களேன்" 

( ஆங்கிலத்தில் PUDUKKOTTAI. இதை வைத்துக் கூட அந்த புதுக்கோட்டைக்காரர் ஒரு ஜோக் சமைக்கலாம்) 

..... 
 

Jun 10, 2020

Corona death is busy everywhere

Death is busy here, busy there 
Death is busy everywhere 

அற்பாயுளில் போய் விட்ட ஷெல்லி சொன்ன               சாசுவத மதிப்பு கொண்ட வார்த்தைகள் 
இந்த கரோனா காலத்தில் 
உலகை பொறுத்தவரை 
 வீரிய மிக்கதாகியிருக்கிறது. 

Corona death is busy everywhere. 

இளைய பாரதியின் தாயாரின் படத்திறப்பு விழாவில் தான் ஜெ. அன்பழகனை 
ஒரே தடவை நேரில் 
கண்ணால் பார்த்திருக்கிறேன். 
தன்னை பெற்ற தாயின் நினைவு வருவதாக மேடையில் உரையாற்றும் போது நெகிழ்ந்தார்
 என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. 

ந. முத்துசாமியுடன் அந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். 

களப்பணி காட்டிய செயல் வீரர் ஜெ. அன்பழகன்.

கட்சி தலைவரிடம் துணிச்சலாக திருத்தங்கள் பற்றி விமர்சிக்க தைரியம் உள்ள தீரனை
 திராவிட முன்னேற்றக் கழகம் 
இழந்திருக்க கூடாது.

'உன் உடம்பை பார்த்துக்கொள் அன்பு ' என அவருடைய தலைவர் மு. க. ஸ்டாலின் வாஞ்சையுடன் எச்சரிக்கை செய்திருந்தும், உடம்பை போட்டு விட்டு
 தன் பிறந்த நாளென்றே போய் விட்டார்.


Jun 9, 2020

ரோகி இச்சிச்சதும் பாலு, வைத்தியன் கற்பிச்சத்ததும் பாலு

ரோகி இச்சிச்சதும் பாலு,
வைத்தியன் கற்பிச்சதும் பாலு

சாதாரணமா தலைவலி, ஜலதோஷம், 
காய்ச்சல், இருமல், தும்மல் இதுக்கெல்லாம்
 சும்மா ஒரு டாக்டர பாத்தா போதும்னு 
 இருந்த காலம் இனி கிடையவே கிடையாதுன்னு ஆகி போச்சி. 
Normal simple diseases are paralysed. 

We must be prepared to live with the virus. 
Spike continues. 

Lockdown puts everybody's livelihood in peril. 

How to balance between disease spread 
and economy?

கொஞ்ச காலம் முன்னல்லாம் 
டெங்கு காய்ச்சல் வந்தா ட்ரிப் ஏத்துவாங்களாம். 

 நோயாளி பழங்கள் நிறைய சாப்பிடனுமாம். 

எனக்கு பழங்கள் ரொம்ப பிடிக்கும். 

டெங்கு வந்தா ஹையா ஜாலி தான். 
நான் நிறைய பழங்கள் சாப்பிடலாம்னு நெனச்சிருக்கேன். 

சொலவடை. ’ரோகி இச்சிச்சதும் பாலு, வைத்தியன் கற்பிச்சதும் பாலு’.

 நோயாளிக்கு பசும்பால் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஏங்கியிருக்கிறான்.

 டாக்டர் வந்து சொன்னாராம் 
“ நிறைய பால் நல்லா சூடா குடிக்கனும்”
நோயாளிக்கு வாயெல்லாம் பல்லு.

பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்று பயமுறுத்திக்கொண்டிருந்ததே.

பழைய டைஃபாய்டு, மலேரியா, காலரா.. 

நான் பாலகனாய் இருந்த போது 
டிங்கி ஜுரம் பிரபலம்.

டிங்கி ரொம்ப நல்ல காய்ச்சல்.
 மூன்று நாள் தான் ஒருத்தர படாத பாடு படுத்தும். அப்புறம் போயிந்தே! காணாமல் போய் விடும்.

 நான் நாலாவது நாள் எந்திரிச்சி குளிச்சி பள்ளிக்கூடம் போகணும்னு பிடிவாதம் பண்ணேன். வீட்டில விடல. நாளைக்கு போகலாம்னு 
அம்மா, அப்பா சொல்லிட்டாங்க.

பள்ளிக்கூடத்துக்கு போனா மூணு மிஸ்ங்க 
டிங்கி காய்ச்சல் லீவு. ஒரே ஜாலி.

ஆனா பசங்க எல்லாம் ’உனக்கு டிங்கி வந்துடுச்சா’

 ’எனக்கு டிங்கி வந்துட்டு போயிடுச்சு’ன்னு 
குசலம் பேசிக்கிட்டானுங்க.

 ஒருத்தன் ‘ எனக்கு இனிமே தான் டிங்கி’ன்னு பரவசமானான்.

காய்ச்சல்னா அப்படி ’டிங்கி’ மாதிரி இருக்கணும்.

டெங்கு, பன்றிகாய்ச்சல்லாம் கொலகார காய்ச்சல். 

ம்.. காலம் கெட்டுப்போச்சு. இப்ப கரோனா. 

அந்தக்காலத்துல காய்ச்சல் refresh button மாதிரி.

 நல்ல காய்ச்சல் வந்து போன பின்
 முகத்துல ஒரு அழகான களை வரும்.
 உடம்பு கூட பூசுன மாதிரி ஆகி 
  ஒரு பாலீஷ் வந்துடும்.

Feed a cold, Starve the feverனுவாங்க.

 ஜலதோஷமா? மூச்சு முட்ட நல்லா சாப்பிடு. 
சளி பறந்துடும். 
காய்ச்சலா? வயித்த காயப்போடு.

இன்னொரு காய்ச்சல். 
மன்மதன் அம்பால் வருவது.
ஸ்டீஃபனோ பென்னி சொன்னது
 “ If you meet an angel, you will have fever".

தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் படிப்பது 
எவ்வளவு அற்புதமான விஷயம். 
திரும்ப ரிவைஸ் பண்ணுவது எவ்வளவு நல்லது.

 Crime and punishment, Brothers Karamazov, Idiot, White nights..

ஆனா மெரிடித் சொன்னான்
 “ தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் படிப்பதால் சீக்கிரமாகவோ, தாமதமாகவோ மூளைக்காய்ச்சலால் 
பாதிக்கப்பட நேரிடும்”

இது நிச்சயம் தாஸ்தயேவ்ஸ்கிக்கு compliment தான்.

Jun 7, 2020

பின்னணி பாடகர் எஸ். வி. பொன்னுசாமி



'அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடி வா '
எஸ். வி. பொன்னுசாமி பாடிய பாடல்களில் இது தான் மாஸ்டர் பீஸ். 
சரணத்தில்' கோபுர வாசல் மடியினிலே, மடியினிலே இளம் குமரி உன்னை பார்க்கிறேன், பார்க்கிறேன் ' பிரமாதமாக பாடியிருப்பார். 
ஜமுனா ராணியுடன் இணைந்து. 
எஸ். எஸ். ஆர் படம்' அல்லி '. இதில் அந்தி மலர் பாட்டு ஏ. வி. எம். ராஜனுக்கும் புஸ்பலதாவுக்கும். 

' ஐந்து லட்சம் ' ஜெமினி கணேசனுக்கு 
"எப்படி இருக்கும், என்னென்ன செய்யும்? 
சொல்லால் விளக்க முடியாது,
 சுவைத்தால் அன்றி தெரியாது "

சங்கமம் பாடலொன்று 
" வண்ண பூ போட்ட சேலையொன்றில் புது பொண்ணு பக்கம் வந்தா மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும், "
வெண்ணிற ஆடை நிர்மலா கேள்விக்கு 
" அம்மா மயக்கம் வரும் " என்ற ஜெமினி கணேசன் குரலாக ஒலிப்பது எஸ். வி. பொன்னுசாமி தான். 

'கண் காட்சி 'படத்தில் மனோரமா" காட பிடிப்போம், கௌதாரி பிடிப்போம், காக்கா பிடிக்க மாட்டோம்"
பாட்டில் சுருளிராஜனுக்காக "சீட்டி அடிப்போம், தெம்மாங்கு படிப்போம், டேக்கா கொடுக்க மாட்டோம்" என்ற ஆண்குரல் பொன்னுசாமியுடையது தான். 

நாகேஷுக்கு பின்னணி பாடியவர்களில் ஏ. எல். ராகவன், தாராபுரம் சுந்தர்ராஜன், சாய்பாபா (பாலைய்யா மகன்) இவர்களோடு எஸ். வி. பொண்ணுசாமியும் நகைச்சுவை பாடலுக்கு பொருந்தி வந்தவர். 

'ஆசை அலைகள்' படத்தில் நாகேஷுக்கு 
"சொல்லப்போனா கோவிக்கிறா,
சொல்லா விட்டா மாட்டிக்கிறா "

பொன்னுசாமி சீனியர் பாடகர். 

மகதல நாட்டு மேரி என்ற பழைய படமொன்றில் 
கே. ராணி என்ற பாடகியுடன் "கண்ணும் கண்ணும் ஒன்னுக்கொன்னு" பாடலை பாடியிருக்கிறார். 
அதிலேயே " கதை கேளுங்க, நல்ல கதை கேளுங்க" பாடலும் பொன்னுசாமி பாடியது தான். 

'உத்தமி பெற்ற ரத்தினம் ' ஏ. எல். ராகவனும் பொன்னுசாமியும்
' லல்ல லல்ல லல்லல்லா 'பாடியிருக்கிறார்கள். 

மறக்கப்பட்ட ஒரு நல்ல திரை பின்னணி பாடகர்
எஸ். வி. பொன்னுசாமி.

Jun 6, 2020

இரவு இந்திரன்

பேராசிரியர் டாக்டர் செ. ரவீந்திரன் தன் பெயரை ஐம்பது வருடங்களுக்கு முன்பு "இரவீந்திரன்" என்று தான் எப்போதுமே குறிப்பிட்டு வந்திருந்திருக்கிறார் 

தமிழ் படிக்க வந்த ஒரு அமெரிக்க பெண் 
"இரவு இந்திரன்" என்று ஸ்பஷ்டமாக உச்சரித்திருக்கிறார். 

அப்புறம் தான் ரவீந்திரன் ஆகியிருக்கிறார். 

பேசும்போது புன்னகையுடன் 
இப்படி அள்ளி தெளித்துக் கொண்டே இருப்பார். 

பேராசிரியர் செ.ரவீந்திரன் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்று பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

அவரை நான்கு வருடங்களுக்கு முன்பு 
சந்தித்த போது எனக்கு 
ஐன்ஸ்டீன் ஞாபகமும் வந்தது.
 டி.கே.சி ஞாபகமும் வந்தது.
 ரவீந்திரனின் கண்கள் சிரிக்கிறது. 
புருவம் சிரிக்கிறது. மீசை சிரிக்கிறது. 
அவரது தலை முடி சிரிக்கிறது.

ந. முத்துசாமியின் மூத்த மகன் 
ஓவியர் மு. நடேஷுக்கு எத்தனையோ குருநாதர்கள். 
நாடக மேடை ஒளியமைப்புக்கு குரு 
செ.ரவீந்திரன் தான். 

 ” 'நீராகாராம்'அருந்திக்கொண்டிருக்கிறேன்"
என்று செல்பேசியில் அவர் சொன்ன போது முதலில் புரியவில்லை. 

”மது”வைத் தான் ”நீராகாரம்” என்கிறார். 
 ”நீரின்றி அமையாது உலகு” என்றார்.
 
அவரைப்பொறுத்தவரை
 “When your pocket and body permit,
 you can go on drinking”

Jun 5, 2020

க. நா.சு கலை நுட்பங்கள்

கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது. 

கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன. கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும். நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன். இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு. 

Jealous Mistress. 
ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி. 

அவருடைய நாவல்கள் சர்மாவின் உயில், பொய்த் தேவு, ஒரு நாள், வாழ்ந்தவர்கள் கெட்டால், அசுர கணம் எல்லாம் மகத்தான படைப்புகள். 
தி. ஜானகிராமனுக்கு முன்பு பிரதியின்பம் என்பதை க. நா. சு தான் காட்டியவர்.
 அவருடைய உரைநடை விஷேச தரமானதாக இருக்கிறதை இப்போது படித்தாலும்
 உணர முடியும். 

த‌ற்போதைய எழுத்தாளர் ஒருவரின் நாவலை படித்த போது போதும் போதும் என்று ஆகி விட்டது. 

உடனே க. நா. சு நாவல்களை மறு வாசிப்பு செய்தேன். அப்போது தான் செரிமான பிரச்சினை சரியாகியது. 

க.நா.சுவின் விமர்சன நூல் 'கலை நுட்பங்கள்' அவருடைய புகைப்படத்துடன் வெளி வந்தது. 
அதை பார்க்க க. நா.சு உயிருடன் இல்லை. 
அந்த நூலை மகாதேவனுக்கு 
சமர்ப்பணம் செய்திருந்தார். 
மகாதேவன் இன்றைய உயர் நீதிமன்ற நீதியரசர். 

க.நா.சுவுக்கு மா. அரங்கநாதனின் மகன் மகாதேவன் மீது மிகுந்த அன்பும் வாஞ்சையும் இருந்திருக்கிறது. 

க. நா.சு மட்டுமல்ல. முன்றில் அலுவலகத்திற்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் மகாதேவனிடம் தான் அதிகமாக பேசுவார்கள் என்று அவருடைய அப்பா மா. அரங்கநாதன் எழுதியிருக்கிறார். 

பிரமிளின் ஆத்மார்த்தமான நண்பராக மகாதேவன் இருந்தார் என்பது அறிந்த விஷயம். போஷகராக அவரை பேணியவர். 
பிரமிள் இவரிடம் மட்டும் தான்
 சண்டை போட்டதில்லை. 

கநாசு எதையும் தொழ மறுத்தவர். 
புனிதம் என புல்லரிப்பு எதுவும் 
அவருக்கு கிடையாது.

 நடராஜர் சிலை பற்றி அவர் சொன்ன 
ஒரு கமெண்ட். 
' ஒற்றை காலை அவர் தூக்கி நிற்பதற்கு 
கொசு கடி கூட காரணமாயிருக்கலாம் .'

நான் இங்கே குறிப்பிட வந்த இன்னொரு விஷயம் 
சுந்தர ராமசாமி ' கநாசு நினைவோடை '
 நூலில் செய்துள்ள தகவல் பிழை பற்றி. 

கநாசு வின் தகப்பனார் தஞ்சை மாவட்டத்தில் 
ஒரு சாதாரண சப் போஸ்ட் மாஸ்டர் தான். 

ஆனால் சுராவின் முதுமை மறதி காரணமாக 
' கநாசு' வின் தகப்பனார் தென் ஆப்பிரிக்காவிலே 'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' பதவி வகித்தவர் என்று ரொம்ப விசித்திரமாக, படு அபத்தமாக குறிப்பிட்டுள்ளார். 

தபால் துறை யில் போஸ்ட் மாஸ்டர் 
என்பது பொதுவான வார்த்தை. 

பிரான்ச் போஸ்ட் மாஸ்டர், சப் போஸ்ட் மாஸ்டர், ஹெட் போஸ்ட் மாஸ்டர் என்று பல பிரிவு தபால் துறையின் உள்வட்டத்தில் உண்டு. 

ஒரு மாவட்டத்துக்கு அந்த காலத்தில் 
ஒரு ஹெட் போஸ்ட் மாஸ்டர் தான். 

பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் Extra department எனப்படும் கீழ்நிலை ஊழியர். 
அதாவது தபால்துறையின் உள் ஊழியர்களான Postman , Class 4 இவர்களுக்கும் கீழ்.

ஜனங்கள் எல்லோரையுமே போஸ்ட் மாஸ்டர் 
என்று தான் நினைப்பார்கள். 

' போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' என்பது தபால் துறை யில் மாநிலத்திலேயே உயர் அதிகாரி. 

நான் இந்த நினைவோடையை படித்தவுடன்
 சுந்தர ராமசாமிக்கே தொலைபேசியில் தெரிவித்தேன். அதிர்ந்து விட்டார். 

அவருக்கு தான் எழுதியுள்ளபடி தான் ஞாபகமாம்.

 காலச்சுவடு கண்ணனுக்கும் சுட்டி காட்டினேன். அதோடு திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் 2005ல் நடந்த  காலச்சுவடு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி 
கவிதை வாசிக்க வந்திருந்தார். 
அந்த இலக்கிய கூட்டத்தில் நான் தான் 
அதிக நேரம் பேசினேன். 
அந்த கூட்டத்தில் பகீரங்கமாக 'இந்த தவறை அடுத்த பதிப்பில் திருத்த வேண்டும்'என நான் பேசினேன்.

Jun 2, 2020

Caesium

கமலுக்கு தசாவதாரத்தில் வாயல். 

விஸ்வரூபத்தில் சீஸியம்.

'உன்னை காணாமல் நான் இங்கு நான் இல்லையே '
பாட்டு எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. 

அந்த பிரமாதமான, அட்டகாசமான 
 முதல் ஸ்டண்ட் காட்சியும்.

விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள சேகர் கபூர்                     இந்தியில் கதாநாயகனாக நடித்தவர். 

பூலான் தேவி கதையை படமாய் எடுத்தவர்.

 எலிசபெத், கோல்டன் ஏஜ் என்று              ஆங்கிலப்படங்கள் இயக்கியவர். 

பத்மஸ்ரீ விருது வாங்கியவர். 

மறைந்த நடிகர் தேவ் ஆனந்தின் 
சொந்த தங்கை மகன். 

 இவருடைய ரோலை படத்தில் இப்படி சாதாரணமாக கமல் அமைத்திருக்கவேண்டுமா.

போஸ்டரில் சேகர் கபூருக்கு கொடுத்த முக்கியத்துவம் கதாபாத்திரத்திலும்
 தந்திருக்க வேண்டும்.

கதயில எடமில்லன்னு சுலபமா சொல்லலாம். 

ஹே ராமில் ஹேமா மாலினியை
 புலம்ப விட்டவர் தானே கமல். 

அதே படத்தில் சௌகார் ஜானகி
 ஒரு எக்ஸ்ட்ரா நடிகை போல வருவார். 
அவர் இந்த disgrace பற்றி அப்போது
 ரொம்ப பதறி விட்டாராம். 

சீஸியத்தை வைத்து ஒரு நாவல் " The Overlook."

 மைக்கல் கான்னல்லி எழுதியது.

சீஸியம் கையாளுகிற வாய்ப்புள்ள 
ஒரு சைன்டிஸ்ட். 

சீஸியம் வேண்டி இவரை தீவிரவாதிகள் 
 தேடி வரும் வாய்ப்பு பற்றி 
 FBI எச்சரிக்கை செய்ய
 இரு ஏஜன்ட்களை அனுப்புகிறது. 

அவருடைய மனைவி அவர்களில் ஆண் ஏஜன்ட் மாக்ஸ்வெல்லிடம் மனதைப் பறிகொடுக்கிறாள்.

 வேலியே பயிரை மேய முடிவு செய்தால்……

தன் கணவனை அந்த FBI கறுப்பாடு துணையுடன் மனைவியே கொலை செய்கிறாள்.

 சீஸியம் வேண்டி முஸ்லிம் தீவிரவாதிகள்                                  கொன்றது போன்று
 கொலையாளிகள் இருவராலுமே 
இந்த கொலைகேஸ் திசை திருப்பப் படுகிறது.

Framing Muslim terrorists with a crime 
they didn’t commit.
 They can never defend themselves! 
Caesium and the terrorists were 
part of the misdirection.

It’s not about caesium or terrorism. 
It’s the basic equation: 
sex plus money equals murder.

 Detective Harry Bosch in Michael Connelly’s novels.

இந்த நாவலை திரைப்படமாய் எடுத்தால் 
இங்கே யாரும் கோபப்படமாட்டார்கள்.