Share

Mar 16, 2020

ப. சிங்காரம்

ப.சிங்காரம்

ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.
மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார்.

 நானும் சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்து
அவரை பார்க்கப் போயிருந்தோம்.

 'புயலிலே ஒரு தோணி ' 'கடலுக்கு அப்பால் 'நாவல்களை படித்து மலைத்து போய்விட்டோம்.

மதுரை Y.M.C.A யில் அப்போது அவர் தங்கியிருந்தார்.
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என பழங்கள் வாங்கி அவருக்கு கொண்டு போனேன்.

 அவருடன் அவர் அறையில் வேறு
இரு இளைஞர்கள் தங்கியிருந்தனர்.
ப. சிங்காரம் எங்களை சந்தித்த நிலையில்
மிகவும் நெகிழ்ந்திருந்தார்.
அவர் கண்ணில் தெறித்த அன்பு விஷேசமானது.

அவர் தன் நாவல்கள் பற்றி சாதாரணமாக தான் பேசினார்.

நவீன தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள், பத்திரிகைகள் தனக்கு அன்னியம் என்றே சொன்னார். ஆச்சரியமாயிருந்தது.
'நான் தினத்தந்தியில் வேலை பார்த்தவன். எனக்கெப்படி உங்கள் இலக்கிய உலகம் பற்றி தெரியும்.'

அவருடன் Y.M.C.A வால் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் அலட்சியமாக இருந்தனர்.
சிநேக பாவமே அவர்களின் நடவடிக்கைகளில் இல்லை. பொதுவாக ஹாஸ்டல் அறைகளில் உடனிருப்போர் இணக்கமாக அமைவது சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதிலும் இவர் மகத்தான படைப்பாளி. கேட்க வேண்டுமா? வயதிலும் அந்த ரூம் மேட் களுக்கு மிகவும் மூத்தவர்.

பின்னால் Y.M.C.A நிறுவனம்
 கட்டிடம் புதுப்பிக்க  வேண்டியிருக்கிறது என காரணம் காட்டி நிர்ப்பந்தமாக வெளியேற்றியதையும்,
இவர் விருப்பமின்றி நாடார் மேன்சனில்
 அந்திம காலத்தில் தங்கியிருந்ததையும்
இப்போது எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது .

...

காலச்சுவடு கண்ணன்  ப .சிங்காரத்தின் வாசகர் கடிதம் சி.சு . செல்லப்பாவின் 'எழுத்து ' இதழ் ஒன்றில் வெளியாகியிருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது ஆச்சரியமாக இருந்தது.

இதை தொட்டு நான் அதற்கு எதிர்வினையாக எழுதியிருந்த கடிதம் காலச்சுவடில் பிரசுரமானது.

பொதுவாக நான் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியதே இல்லை. இது கூட விஷய முக்கியத்துவம் கருதி தான்.

புயலிலே ஒரு தோணி நாவல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

அவரை சந்திப்பதற்கு முன் அந்த நாவலில் உள்ள விஷயங்கள் பற்றி, (அதோடு வேறு பல குறிப்புக்களுமாக )ஒரு நோட் புத்தகத்தில் நான் எழுதியிருந்த குறிப்புகளை பார்த்து விட்டு கோணங்கி
 ' இதை அப்படியே புத்தகமாக போடலாம் ' என சிலாகித்தான். அந்த நோட் புத்தகம் தொலைந்து விட்டது.

ஒரு விஷயம். இப்போது காணக்கிடைக்கும்
 ப. சிங்காரத்தின் புகைப்படங்கள்
 அய்யனார் ஆனந்த் (பௌத்த அய்யனார்) முயற்சியின் காரணமாக நமக்கு கிடைத்தவை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.