Share

Feb 25, 2020

என் அப்பாவும் ஜெமினியும்


ஒரு விஷயம் நான் அதிகமாக எப்போதுமே
கேட்க நேர்ந்திருக்கிறது.
என் பால்ய காலம் தொட்டு.
எத்தனை ஆயிரக்கணக்கான தடவை.
கணக்கே கிடையாது.
என் 'தலைமுறைகள்' ஸ்டேட்டஸில் இப்போது
சாரு நிவேதிதா கமெண்ட் போட்டிருக்கிறார்.
'அப்பா ஜெமினி மாதிரியே  இருக்காங்களே'

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது
ஒரு பத்தாம்  வகுப்பு படிக்கும் அக்கா
"டேய் உங்கப்பா அச்சு அசல் ஜெமினி கணேசன் மாதிரியே இருக்குறாருடா"
ஒரு நாள் மழை பெய்த போது பள்ளியில் இருந்து அழைத்து போக அப்பா வரக்காணோமேன்னு அழுத போது சொன்னாள் 'கடிதம் எழுதி மழையில போடு. அப்பா வருவார்.' அவளே டிக்டேட் செய்தாள். கடிதத்தை மழையில் வீசினேன்.
அந்த அக்கா என் அப்பாவுக்கு எழுதிய
காதல் கடிதம் அந்த பள்ளியின் மதர் சுப்பீரியர் கைக்கு சிக்கும்படியாகி, ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தவளை உடனே, உடனே ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மிக பிரபலமான ஒரு குடும்பத்தை சேர்ந்த
பெண் அந்த அக்கா.
I must admit that my father was very promiscuous.
இது பற்றி எங்கள் குடும்ப அந்த கால கிழவிகள் காதாட்டிக்கொண்டே,
என் அம்மாவிடம் சொல்லும் ஆறுதல்
"ஒன் புருஷன் என்ன பண்ணுவான். பாவம். அவுளுங்க வந்து அவன் மேல விழுகிறாளுங்க. சிறுக்கி முண்டைக"
சாயல் வேறு.
சாயல் என்பது ஒருவர் சொல்லும்போது இன்னொருவர் எனக்கு அப்படி தெரியல என்று மறுக்கும்படியாகவே இருக்கும். சம்பந்தப்பட்டவரே மறக்கலாம். 'எனக்கும் அவருக்கும் என்னங்க சாயல்'
உருவ ஒற்றுமை என்பது அப்படியல்ல. ஆச்சரியம் ஏற்படும்.
பிரபலங்களின் உருவ ஒற்றுமை சிலருக்கு அமைந்து விடும்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது விபரீதமாக என் அப்பா பற்றி ஒரு பையன் சீரியஸாக "ஜெமினி ஏன் ஒன்ன பாக்க அடிக்கடி ஸ்கூலுக்கு வர்றாரு" வெள்ளந்தியாக கேட்டிருக்கிறான்.
சீனியர் ஸ்டூடண்ட்ஸ் தான் கன்ஃபர்மா சொன்னாங்களாம்.
கல்லூரியில் படிக்கும்போதும்.
என் அப்பா ஜெமினியை விட பத்து வயது இளையவர்.
கஸ்டம்ஸ் அன்ட் சென்ட்ரல் எக்ஸைஸ் ஆஃபிஸர்.
குற்றாலத்தில் அப்பா எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்க அருவியை நோக்கி சென்ற போது, ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டமே "ஜெமினி கணேசன், ஜெமினி கணேசன்" என்று ஓடி வந்திருக்கிறது.
இதே போல விக்ரம சிங்க புரம் அகஸ்தியர் ஃபால்ஸிலும் நடந்திருக்கிறது.
எங்கள் குடும்ப திருமணம் ஒன்றில்
ஜெமினி கணேசன் கலந்து கொண்ட போது பலரும் குழம்பிப் போய் என் அப்பாவிடம் ஆட்டோக்ராப் கேட்டார்கள்.

ஜெமினியே " என்ன மாதிரி இருக்கீங்க" என்றார்.
ஒரு வயதான அம்மணி அப்பாவிடம் வந்து பரவசமாக " நான் டைரக்டர் கே. சோமுவோட தங்கச்சிப்பா, ஒன் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா. " ஜெமினியின் படங்களாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.
கே. சோமு டவுன் பஸ், சம்பூர்ண ராமாயணம், பட்டினத்தார் படங்களின் இயக்குநர்.
..............
....

Feb 23, 2020

தி. ஜானகிராமன் எழுதிய கடிதம்

எப்போதோ கல்கியில், முப்பது வருஷம் முந்தையதாய் இருக்கும்.
அதில் படித்த விஷயம்.

தி. ஜானகிராமனை சந்தித்த அனுபவம் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்தார்.


பாலகுமாரன் : "இன்றைக்கும் அந்த சந்திப்பு பசுமையாக இருக்கிறது. மிக அரிதாகத் தான் இம்மாதிரியான சந்திப்புகள் நிகழ்கின்றன.

தில்லியிலிருந்து திருவான்மியூருக்கு ஜானகிராமன் குடிபெயர்ந்த நேரம். அவரைப் பார்க்க நானும்
என் மனைவி சாந்தாவும் போனோம்.

மடியில் வைத்து எழுதுகின்ற மரப்பலகை, பேனா, குறிப்பு நோட்டு, ஹார்லிக்ஸ் பாட்டில், அன்று அரைத்த காப்பிப்பொடி, கும்பகோணம் வெற்றிலை,  வறுத்த சீவல், பழங்கள் என்று வாங்கிப் போனோம். நமஸ்கரித்தோம்.

ரொம்ப மேலோட்டமான விசாரிப்புகள், மிகச் சுருக்கமாய், அவர் எழுத்து என்னை எப்படி பாதித்தது என்று சொன்னேன். சாந்தாவும் சொன்னாள்.

நான் சினிமாவில் ஆர்வம் காட்டுவது பற்றி எதிர்ப்பாக சொல்லாது, லேசாக கவலைப்பட்டார். அவ்வளவு தான் பேச்சு.

பிறகு வெறுமே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எதுவும் பேசாமல் வெறுமே அருகிருக்கும் நட்பு எல்லாரிடமும் ஏற்படுவதில்லை.
அவர் பேசாதது எனக்கோ சாந்தாவுக்கோ புதிதாயில்லை.

தி. ஜானகிராமன் கண்களால் ஊடுருவார். ஆழ்ந்து மனிதர்களைப் பார்ப்பார். ஓரக்கண் பார்வையோ, பார்த்துப் பார்த்து கண்களை விலக்குவதோயில்லை.

பிறிகொரு சமயம் இப்படி ஆழ்ந்து பார்க்கின்ற பழக்கம் எனக்கு வந்தபோது,  கண்களின் வழியே மனதைப் படிக்கிற இயல்பு ஏற்பட்ட போது, தி. ஜானகிராமன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. "

....

தி. ஜானகிராமன் எழுதிய ஒரு கடிதம்


அன்புள்ள பாலகுமாரன்,

நேற்று நீங்கள் அவ்வளவு அந்தரங்க அன்புடன் விசாரித்து, பலவித (எனக்குப் பிடித்த) பொருள்களை வாங்கி வந்தபோது, எனக்கு
பி. எஸ். ராமையா, இன்னும் மூன்று நாலு பேர் ஞாபகம் வந்தது.
அவர்கள் மிக்க உற்சாகத்துடனும் திறந்த மகிழ்ச்சியோடும் உங்களைத் தழுவி, நன்றி தெரிவிப்பார்கள்.
எனக்கு இந்த மாதிரி செய்ய தைரியம் வருவதில்லை. காரணம் - வெளியே காட்ட பயந்து.
பல பேருக்கு " ஒரு வார்த்தை சொல்லணுமே. இதெல்லாம் இவனுக்கு Due என்று எண்ணம் போலிருக்கிறது" என்று தோன்றும்.  தோன்றியிருக்கிறது, சிலருக்கு.

ஒரு சினிமா டைரக்டர் இருபது வருஷம் முன் என் கதை ஒன்றைப் படம் எடுக்கிறேன் என்று வந்தவர்,
தாம் படமாக்கப் போகிற, ஆக்கிய இரண்டு கதைகளை - அந்தந்த பாவத்திற்கேற்ப, முக பாவ, அங்க அசைவுகளுடனும், அபிநயங்களுடனும்
சொல்லிக்கொண்டு வந்தார்.
நான் வழக்கம் போல இடித்த புளி போல கேட்டுக் கொண்டிருந்தேன்.
" என்ன இவ்வளவு சொல்றேன். ரீயாக்டே பண்ண  மாட்டேங்கறேளே? " என்று despair உடன் சொன்னார்.

எனக்கு வருத்தமாயிருந்தது.
நான் இப்படி placid ஆகவும் prosaic ஆகவும் இருக்கிறேனே என்று.
ஆனால் குருடன் எப்படி ராஜ முழி முழிப்பான்?
நான் அவரிடம் எப்படி என் இயலாமையை விளக்குவது?

அவர் அப்புறம் என் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். ஓரளவுக்கு நீங்களும் என் மாதிரி சங்கோசியாக இருப்பதால், என் placidity யைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு ஒரு ஆச்வாசம். இது சரியான ஊகம் என்று நினைக்கிறேன்.

தேடி வந்தவர்களுக்குத் திருப்தியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கம்.

நாம் நிறையப் பேசவும் இல்லை. புரிந்து கொள்கிறவர்கள் இப்படித் தான் அதிகமாகப் பேசாமல் திளைப்பார்கள் என்று தோன்றுகிறது.

சாந்தாவுக்கு சென்னை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோருக்கும்
என் அன்பு.

நமஸ்காரம்.

தி. ஜா

........

பாலகுமாரன் : " இந்தக் கடிதம் பற்றி எதுவும் சொல்லி அபிப்ராயம் உருவாக்க விரும்பவில்லை.
இது மிகவும் ஆழ்ந்த ஸ்நேகமான கடிதம். மேலோட்டமாய் இதில் ஒன்றும் தெரியாது.
உள்ளே நிறைய பொதிந்திருக்கும், கொழுக்கட்டைப் பூரணமாய்.

மனசும் எழுத்தும் ஒன்றாக இருக்கும் நிலை எல்லோருக்கும் ஏற்படாது. "

https://m.facebook.com/story.php?story_fbid=2661128320767284&id=100006104256328

..........

சாரு நிவேதிதா இந்த கடிதம் குறித்து விசாரித்தார்.

" இந்தக் கடிதம் எப்படிக் கிடைத்தது ராஜநாயஹம்?"

அதற்கு என் பதில் :

முப்பது வருஷம் முந்தி கல்கியில் 'வி. ஐ. பிக்கு வந்த கடிதங்கள்' என்று தொடர்ந்து வாராவாரம் வெளியிட்டு வந்தார்கள்.
அப்பொழுதுதான் இந்த கடிதம் பால குமாரன் குறிப்புடன் வெளியிட்டார்கள். அதை கத்தரித்து நான்
தி. ஜானகிராமன் நள பாகம் நாவலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

இன்று புத்தகங்களை ஒழுங்கு செய்யும் போது கண்டு பிடித்தேன்.

கடிதத்தில் 21.12.1983. தவறாக அச்சுப்பிழையுடன் வருடம்  1983 என்று பிரசுரமாகியிருந்தது. வருடம் 1981 ஆக இருக்கும். ஏனென்றால் தி. ஜானகிராமன் 1982 நவம்பர் 18ம் தேதி இறந்து விட்டார். இதை அப்போதே நான் அதில் மார்க் செய்து வைத்திருந்தேன்.

.....




...


Feb 22, 2020

செல்லப்பாவுக்கு புரியாத வயலன்ஸ்

இலக்கியம் நம்மை
எங்கேயும் கொண்டு போய் சேர்க்காது என்பது
தனக்கு அப்போது புரிந்ததாக,
எப்போதோ ரொம்ப வருடங்களுக்கு முன்           ஜெயமோகன் எழுதிய விஷயம் ஒன்று
ஞாபகம் வந்தது.

சி.சு செல்லப்பாவை சந்திக்க போனபோது  நடந்ததாக.

ஜெயமோகனிடம் கோபத்துடன்
செல்லப்பா சொன்னாராம்
 “க. நா.சு  உடனடியாக
கழுவிலே ஏற்றப்பட வேண்டிய தீய சக்தி”

 ந.முத்துசாமியிடம் இதை நான்
ஒரு உரையாடலின் போது சொன்னேன்.

 செல்லப்பாவின் இயல்பு அவருக்கு
நன்கு தெரியுமாதலால்
உடனே மிக அழகாக சொன்னார்.
" தான் கோபமாய் பேசுபவை செல்லப்பாவுக்கு                             வெறும் வார்த்தைகளாக இருந்திருக்கிறது.
இந்த வார்த்தைகளில் உள்ள ’வயலன்ஸ்’ செல்லப்பாவுக்கு புரியல.”

...........

மோக முள் பில் புத்தகத்தில்

தி. ஜானகிராமன் 'மோக முள்',
 லா. ச. ரா ' அபிதா
மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தில்
 1982ல் வாங்கிய பில்.



மோக முள் நாற்பது ரூபாய்.

1989ல் புதுவை பல்கலை கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கம் நடைபெற்ற போது என்னிடம் இருந்த ஜானகிராமன் நூல்களையும் பெற்று காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
அப்படியும் மோக முள் பில்  தொலைந்து போய் விடாமல் இருந்திருக்கிறது.
வாழ்க்கை ஸ்தம்பித்த போதெல்லாம் மோக முள்ளைத் தான் மீண்டும் மீண்டும் கணக்கற்ற தடவை எடுத்து படித்திருக்கிறேன். இன்றும் அழுத்தமாக இந்த பில் புத்தகத்திலேயே இருக்கிறது.

 மதுரை சென்ட்ரல் தியேட்டர் தாண்டி அப்போது மீனாட்சி புத்தக நிலையம்.

எல்லா பதிப்பக வெளியீடுகளும் கிடைக்கும்.

புத்தக நிலைய அதிபர் செல்லப்பன் மறக்க முடியாத நபர்.

ஒரு சமயம் புத்தகங்கள் சில வாங்கி பில் போட்டு பணம் கொடுத்த பின்
உ.வே.சுவாமிநாதய்யரின் ' என் சரித்திரம்' பார்த்து விட்டு நான் 'அட, சரி இதற்கு இப்ப கையில காசு இல்ல. அடுத்த முறை வாங்கிக் கொள்கிறேன்'
என்று சொன்ன போது
 செல்லப்பன் 'பரவாயில்லை. உ. வே. சாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். பணம் மெதுவாக கொடுங்கள்.'

சாதாரணமாக புத்தகம் கடனுக்கு தருபவரல்ல.

இங்கே  புத்தகம் வாங்க  என்னைப் போல அடிக்கடி வந்த இன்னொரு கஸ்டமர் பழ. கருப்பையா.
ஏதோ ஒரு புத்தகம் பற்றி என்னிடம் 'வாங்கலாமா?'
என்று அபிப்ராயம் கேட்டார் என்பது நினைவிருக்கிறது. நான் ஏற்கனவே படித்திருந்த அந்த புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி சொன்னேன். உடனே அதற்கும் பில் போட சொல்லி வாங்கிக் கொண்டார்.

எனக்கு அவருடன் அறிமுகமெல்லாம் கிடையாது.
செல்லப்பனிடம் கேட்டார் பழ. கருப்பையா 'யார் இந்த பையன்? '

சரவணன் மாணிக்கவாசகம் அன்றைய என்னுடைய அத்தனை நூல்களையும் படித்ததற்கு கைமாறு போல,
இப்போது எவ்வளவோ நூல்கள் வாங்கி அன்பளிப்பாகவே கொடுத்திருக்கிறார்.

Feb 20, 2020

Survival drama movies



மலையாள படம் Helen
நான் மகன் கீர்த்தியோடு போன டிசம்பரில் பார்க்கும் போது
டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away
ஞாபகம் வந்தது.
Desperate attempt to survive.

கீர்த்தி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினான்.

ஹெலன் படத்தின் எலி,
காஸ்ட் அவே படத்தின் வாலி பால்.

வாலி பாலுக்கு வில்சன் என்று அந்த சக் நோலன்ட்
பெயரிட்டு சினேகிதம் கொண்டிருந்தான்.

எலி, வாலிபால்  இழந்து
ஹெலனும், சக் நோலன்ட்டும்
தவிக்கும் நிர்ப்பந்தம்.

Feb 18, 2020

1982ம் வருஷத்தில் வாங்கிய புத்தகத்தின் பில்

புத்தகங்களை அடுக்கி ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது தி. ஜானகிராமன்
 குறு நாவல் தொகுப்பில் இருந்து இந்த பில் விழுந்தது.

சிவஞானம், நாலாவது சார்
 என இரு குறுநாவல்கள் இந்த நூலில்.


  1982ல ஆகஸ்ட் 3ம் தேதி இந்த நூலை வாங்கியிருந்திருக்கிறேன்.

விலை நான்கு ரூபாய் இருபத்தைந்து காசு.

நான் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்திற்கு ரெகுலர் கஸ்டமர் என்பதால் டிஸ்கவுண்ட் இருபத்தைந்து காசு.
நான்கு ரூபாய்க்கு இதை வாங்கியிருக்கிறேன்.

எவ்வளவு பொருள், சொத்து, நகையெல்லாம் தொலைந்து போய் விட்டது.
இந்த பில் பிடிவாதமாக என்னுடன் இருக்கிறது.

புத்தகம் தொலைவதை விட புத்தகம் வாங்கிய பில் தொலைவதற்கு வாய்ப்பு அதிகம்.

அப்போது 1982ல் நான் படித்தவுடன் என்னிடம் இருந்து இதை பெற்று
சரவணன் மாணிக்கவாசகம் படித்த பின் அவருடைய தாயாரும் இதை படித்திருக்கிறார்.
சரவணனுடைய அம்மா தலை சிறந்த வாசகி.

 ஒரு நூலை வாங்கினால் நான் படிப்பதோடு அன்று சரவணனும், சரவணன் அம்மாவும் படித்து விடுவார்கள்.

அதன் பின் வெவ்வேறு காலங்களில் மீண்டும், மீண்டும் நான் மறு வாசிப்பு செய்து கொண்டே இருந்திருக்கிறேன்.

அவ்வளவிற்கும் சிரத்தையோடு இந்த பில் புத்தகத்தில் இருந்து கீழே விழுந்து காணாமல் போகாமல்..


Feb 17, 2020

வெஜ்ஜி - நான் வெஜ்ஜி

சின்ன ப்பியாரஸ் எங்க பள்ளியில் ஒரு ஆசிரியர். பிராமணர்.
P. R. சேதுரத்னம். ஆங்கில ஆசிரியர்.
பேசும்போது  வலது கை விரல்களால் தன் இடது உள்ளங்கையில் ஒரு தட்டு தட்டி விட்டு "அடேய்" என்று மாணவர்களை விளிப்பார்.

 இவருடைய அண்ணாவும் எங்கள் பள்ளியில் ஆசிரியர்.
 பெரிய ப்பியாரஸ்.
P. R. சுவாமிநாதன். விஞ்ஞான ஆசிரியர்.
இருவருமே நல்ல முதியவர்கள். ரிட்டயர்மெண்ட்டுக்கு பிறகும் பள்ளியில் ஆசிரியராக நீடிக்க நிர்வாகம்
இந்த சகோதரர்களுக்கு அனுமதியளித்திருந்தது.

சின்ன ப்பியாரஸ், "அடேய், ராஜநாயஹத்தை பார்க்காதீர்கள். அவன் ஒரு லூசு. Mischievous boy.
Blundering boy.  அவனுடைய slapstick comedy, jokes உங்கள் கவனத்தை படிப்பிலிருந்து திசை திருப்பி விடும். You should avoid this 'watching Rajanayahem temptation' "

 ஆனால்  வகுப்பு தோழர்களுக்கு  வகுப்பு நடக்கும் போது என்னை கவனிக்காமல் இருப்பது சாத்தியப்படாத விஷயமாய் இருந்தது.

அவர் எப்போதுமே non - vegetarians பற்றி ஒன்று சொல்வார்.

" அடேய், மாமிசம் சாப்பிறவாளாலே தான் காய்கறி விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. அவாளெல்லாம் வெஜிட்டேரியனா மாறிட்டான்னா, லோகத்தில காய்கறி விலையெல்லாம் வாங்க முடியாதபடி ரொம்ப டிமாண்ட் வந்துடும் "

வீடு வாடகைக்கு தேடும் போது பல இடங்களில் வெஜிட்டேரியனா இருந்தா தான் என்ற சட்டத்தை பார்க்க வேண்டியிருந்தது.

Non vegetarian என்பது ஒரு உணவுப் பழக்கம்.
கெட்ட பழக்கம் போல ஏன் முத்திரை குத்தப் படுகிறது?

 வெஜிட்டேரியன் எப்போதுமே காய்கறி தான் சாப்பிடுவார்கள். ஆனால் மாமிசம் சாப்பிடுபவர்கள் காய்கறியும் சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் பெரும்பான்மையோர்
 வாரம் ஒரு முறை வீட்டில் non-veg சாப்பிடுபவர்கள். அவ்வளவு தான் வசதி.

இதில் ஒமட்டுது, வாந்தி வருதுன்னு அருவருப்பு  சைவம் சாப்பிடறவங்களுக்கு என்னத்துக்கு?

முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஆர். எஸ்.எஸ், பி. ஜே பி காரர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது.
முஸ்லீம்களுக்கு பன்றிக் கறி ஆகாது. பன்றின்னு வாயால சொன்னாலே ஹராம்.

கிறிஸ்தவர்கள் மாட்டுக்கறியும் சாப்பிடுவார்கள். பன்றிக் கறியும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சீனாக்காரனுக்கு எதுவுமே தள்ளுபடி கெடையாதே. வளச்சி வெட்டுவானே.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.

என்னுடைய இளைய மகன் அஷ்வத். இவனுடைய ஆஃபிஸில் ஒரு கலீக். அன்பரசன்.

லஞ்ச் சாப்பிடும் போது அன்பரசன் கர்சிஃபை எடுத்து தன் மூக்கில் வைத்துக் கொண்டு, சைவம் சாப்பிடும் ஒருவரைப் பார்த்து சொல்வது
" ஏங்க அந்தாள எந்திரிச்சு அடுத்த ரூமுள போய் ஒக்காரச்சொல்லுங்கங்க. தயிர் சாத நாத்தம் ஒமட்டிக்கிட்டு வருது. யோவ் ஏய்யா சித்ரவத பண்ற.. போய்யா அடுத்த ரூமுக்கு."

எங்காவது ஆஃபிஸ் பார்ட்டிக்கு ரெஸ்ட்ரெண்ட் போனால் கூட பேரரிடம் சைவ மனிதரை காட்டி "இந்தாளுக்கு பக்கத்திலே எங்கயாவது சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி கொண்டாந்து கொடுங்க. என்னாது வெஜிடபிள் ரைஸ் போதுமா..
யோவ் நீ நாலு டேபிள் தள்ளி போய் ஒக்காந்துக்க. என் கண்ணு முன்னாடி ஒக்காந்துடாத. எனக்கு வாந்தி வந்துடும்"

தயிர் சாதமுண்பவரிடம் அன்பரசன் செய்வது, அசைவம் சாப்பிடுபவர்களை பார்த்து முகம் சுளித்து எப்போதும் அருவருப்பவர்களுக்கெதிரான
Shock treatment. எள்ளல். பகடி.

...

Feb 14, 2020

சிலராமன்

அவன் பேரு பலராமன் இல்ல. சிலராமன். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல. சிவராமனோன்னு கொழப்பிக்க வேண்டாம். சிலராமன்.
Some Rama.
ராமன் எத்தனையோ ராமன்.
என்னா வகைறான்னா
கல்யாண ராமன் இல்லயா.. போல இவன் காதல் ராமன்.
 இவன் முழுப்பேரு கம்பன் சிலராமன்.

கவிங்கன் தான்.
(கம்பம் போல் நல்லா நெடு, நெடுன்னு வளந்திருப்பான்.
அதனால் கம்பன் என்ற பெயர் பொருத்தம் தான்.
இதனால் பெரும்பாலும் கம்பன் என்றே பலரும் அழைத்தார்கள்.)

இவனோட தோஸ்துங்க மூணு பேர். அப்புறம் என்ன, அவங்களும் கவிங்கர்களே.
கவியரங்கம், பிரசங்கம் என்ற தவிப்பில் பட்டப் படிப்பையும் சேர்த்து காக்டைல் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க.

சிலராமனின் ஃப்ரெண்ஸுங்க மூணு பேருக்கும் கவித எழுத காதலிங்க லிங்க் கெடச்ச விஷயம் தெரிய வந்ததும்,
இவனும் கனவு, கற்பனை கூட்டி ஏட்டுச்சுரைக்காய் காதலி ஒன்றை உருவாக்கி கத உட்டான்.

ஏனைய கவிஞர்களின் காதலியரை விட தன் காதற்கிழத்தி பேரழகி என
பீலா உட்டான் சிலராமன் உராங்குட்டான்.

"உங்கள் நண்பர்கள் வளையாபதி, குண்டலகேசி , சீவகன் மூவரும் நலம் தானே? அவர்களுக்கு என் அன்பை சொல்லுங்கள். " என்று இவன் காதலி மேகலை எழுதிய கடிதம் ஒன்றைக்கூட காட்டினான்.

கடிதத்தில் மேகலையின் கையெழுத்து கூட சிலராமன் கையெழுத்து போலவே இருப்பது கண்ட கவிங்க சகாக்கள் புல்லரித்து, செடியரித்து, மரம் அரித்து வியந்தார்கள்
'ஆஹா, என்ன ஒரு அபூர்வ பொருத்தம்'

சிலராமன் சிற்சில கவிதைகளைக் காட்டி" மேகலை எழுதியவை" என்று விளம்பிய போது தான் அவர்கள் வெட்கி தலை குனியும்படியானது 'ச்சே, சிலராமன் நம்மள அம்மணமாக்கிட்டானே'

குண்டலகேசி, வளையாபதி, சீவகன் மூவரின் காதலியர்க்கும் கவிதை எழுதவே தெரியாது.

காதலியோடு தியேட்டருக்கு நாளை படம் பார்க்க
போவதாக சில சமயமும், நேற்று படம் பார்த்ததாக சில சமயமும் சிலராமன் சொல்லிக் கொண்டே இருந்தான்.

பிப்ரவரி வந்தது. கவிங்கர்கள் வேலண்டைன்'ஸ் டே அன்று மதுர கோஸி ஹோட்டலில் காதலியரோடு விருந்துண்ண முடிவெடுத்தனர்.

சிலராமன் தான் அந்த யோசனையை முதலில் முன் வைத்தான்.

பிப்ரவரி 14 தேதி மாலை கோஸி ஹோட்டல் திறந்த வெளியில் ஏனையோர் காதலியரோடு ஆஜர். சிலராமன் தன் ஜோடியோடு வரவில்லை.

டின்னர் கிட்டத்தட்ட முடிகிற நேரத்தில் தேம்பிக்கொண்டே கம்பன் சிலராமன் வந்தான்.
விக்கியழுதான்.

"மேகல செத்துட்டாடா. வேலண்டைன் டே அன்னக்கே என்னய உட்டுப்போயிட்டாளேடா "


Feb 12, 2020

Parasite

Parasite

வேலை கிடைக்காமல் ஏழ்மையில் உழலும் போது, பித்தலாட்டத்தால், தகுதிக்கு மிஞ்சி சுக சௌகரியம் காணக்கிடைப்பது பற்றி
உடனே  நினைவுக்கு வருவது
கமல் ஹாசனின் பழைய 'பேசும் படம்'.
கண்ணைக் கூச வைக்கும்,
நெஞ்சை பதற வைக்கும்
கொடூர வன்முறை காட்சிகள் அதில் கிடையாது.

வேலையில்லாமல் இருப்பது நிர்வாணமாக இருப்பது போல. மரண தண்டனை விதிக்கப்பட்டது போல எவ்வளவு கனமான நிர்க்கதி.

ஒரு வேலையில்லாத ஏழை குடும்பமே humbug, scumbag தந்திரோபாயம் என பெரிய சீமான் குடும்பத்தில் வேலைகளில் செட்டில் ஆகி... ஐயோ..

 ஆஸ்கர் 'பாராசைட் 'லாஜிக் பார்க்க வேண்டாத ஃபேன்டஸி படமும் இல்லை.

மிகப்பெரிய பங்களாவின்' கீழ்ப்பகுதி சுரங்க அறை காட்சிகள் 'நிச்சய பித்துக்குளித்தனம்.'

அந்த ஏழை குடும்ப குடிலையொட்டி கண் பார்க்க ஒண்ணுக்கு போகும் பொறுக்கியை தட்டி கேட்க கூட கையாலாகாத ஆள் பணக்கார சீமானை கொலை செய்ய முடிகிறது.
கருமம், எத்தனை க்ளைமாக்ஸ் கொலைகள்.

அந்த பணக்கார மகளை காதலிக்கும் ஹீரோ தலையில் கல்லை தூக்கி பலமாக போட்ட பின் ரத்தம் குபு, குபுவென பெருகி, (பிழைப்பதரிது தெரியுமா?) பின் காதலியால் காப்பாற்றப்படுகிறானா?
கடைசியில் அந்த பெரிய பங்களாவையே விலைக்கு வாங்கி விடுகிறானாக்கும்?
இதெல்லாமே
அர்த பழசு எம். ஜி.ஆர் சமாச்சாரங்கள்.
பங்களாவை விலைக்கு வாங்குவதாக கனவு காண்கிறான் என்றால் If wishes were horses beggars would ride.

பழைய மொந்தையில் கெட்டுப் போன காலாவதியான சரக்கு.

அப்புறம் அந்த கல், வெள்ளம், அது, இது என்ற உருவக மிரட்டல்.
தலையில், மூளையில்
இரும்பு குண்டால் அடிக்கிற சித்ரவதை.

Those Metaphors are the director 's tool to fool
 the so called movie connoisseurs.
மூளை வெளிய தொங்குற திரையிருட்டு ஞானிகள் அவற்றோடு கட்டிப்புரண்டு, ஆனந்த கண்ணீர் வடிக்கட்டும். கொட்டு அடிக்கட்டும்.
டும் டும் டும் டும்.

Feb 11, 2020

Dark Knight Joker Heath Ledger

ரெண்டு ஜோக்கர் கொலை வெறி தாண்டவமும் கோதம் சிட்டியில தான். This city deserves a better class of criminal.

இந்த ஜோக்கர் ஃபீனிக்ஸ்
பெஸ்ட் ஆக்டர் ஆஸ்கர் விருது பெறுவது மிடில் ஏஜ்ல.

ஹீத் லெட்ஜர் இருபத்தெட்டு வயசுல செத்தப்பறம் டார்க் நைட் படமே ஆறு மாதம் கழிச்சி தான்
ரிலீஸ் ஆச்சி.

நோலன் படத்தில  சப்போர்ட்டிங் ஆக்டருக்கான ஆஸ்கர் விருத வாங்கிக் கொள்ள
லெட்ஜரோட அப்பா, அம்மா, தங்கச்சி மேடையேறிய காட்சி மறக்கவே முடியாது.

கொஞ்சங்கூட அழுகாச்சி கிடையாது.
அழகொட்ட ஆம்பிள பிள்ளைய பறி கொடுத்த
புத்ர சோகம் சாதாரணமானதா?

Heath was an outstanding, unique son.
But the parents stayed strong.
They controlled emotions.
Placid manner.

தகப்பனும், தாயும், தங்கையும் உணர்வை உள்ளடக்கி ஹீத் பற்றி ஆஸ்கர் மேடையில் பேசிய பேச்சைப் பற்றி சொல்ல அந்த கருப்பு வீரன் படத்தின் ஜோக்கர் டயலாக் தான்.
" Very poor choice of words"

Heath Ledger's unforgettable different performances in Brokeback Mountain and Dark Knight.

A very promising future had been cut short.

Feb 10, 2020

R. P. ராஜநாயஹம் பற்றி யவனிகா ஸ்ரீராம்

R. P. ராஜநாயஹம் பற்றி யவனிகா ஸ்ரீராம்

வேற உலகம் வேற வாழ்வுகள்
மெயின்ஸ்ட்ரீம் அல்லாத உங்கள் பார்வைகள் கொஞ்சம்
குஜிலியும் மனித யதார்த்தமும் கலந்த பகட்டற்ற வித்தியாசமான பதிவுகள்
இரத்தமும் சதையுமான மனித குணாம்சங்களை
உங்களின் சொந்த முன்முடிவுகள் ஏதுமற்று அப்பிடியே அங்கேயே அவர்களாகவே  விட்டுச்செல்வது உங்களின் தனிச் சிறப்பு சார்

Feb 9, 2020

வயிரவன் பொஞ்சாதி

வயிரவனுக்கு குஷ்டம். ஆத்துக்கு அந்த பக்கம் தத்தனேரிக்கு படம் பாக்க போற ஆரப்பாளய சல்லிங்களுக்கு ரொம்ப நெருக்கம்.

கஞ்சா விக்கற தொழு நோயாளியிடம் கொஞ்சமும் அய்யரவு காட்டாத இந்த கஸ்டமர்கள்
வயிரவன் பற்றி எப்போதுமே விசால மனதுடன்
' There is nothing wrong with seller
 Vairavan. He is an important person in our Thathaneri premises. We are depending on him'  என்ற காந்தீய நோக்கில் கௌரவித்தார்கள்.

போலீஸ் எப்போதும் வயிரவனை லத்தியால லேசா ரெண்டு தட்டு தட்டி விட்டு சரக்க புடுங்கிட்டு ' ச்சீ போறான். இவன எதுக்கு தூக்கிட்டு போனும்' ன்னு அரெஸ்ட் பண்ணாம போயிடுறதுண்டு.

இந்த வயிரவன் பேச்சில் அதிகமும் அவனுடைய மனைவி தான் இடம் பெறுவாள்.

'எம் பொஞ்சாதிக்கு மல்லிகப்பூ தாம்பா ரொம்ப பிடிக்கும் '

' எம் பொஞ்சாதி சுசிலா பாட்டு
 ரசிச்சு கேப்பா '

' எம். ஜி.ஆரு படம் ரிலீஸ் ஆனா போதும். எப்பயா கூட்டிட்டு போறன்னு அனத்துவா. '

'  ஒன்ன இப்படி உருக்கொலச்சுட்டானே ஆண்டவன்.
நா சாமியே கும்பிட மாட்டேம்பா எம்பொஞ்சாதி. வைராக்கியமானவ. கோயிலுக்கு நா கூட்டிப்போனா கஞ்சா விக்றது ஒரு பொழப்பா? எங்கள நாசம் பண்ணிட்டியே. நீ வெளங்கவே மாட்ட போன்னு சாமிய கன்னா பின்னான்னு திட்டுவா.'

'ரொம்ப எரக்க சுபாவம்ப்பா.. சர்க்கஸ் பாக்கப்போனா அங்க அந்த பிள்ளைக வித்த காட்டும் போது பரிதாப படுவா.
ஐயோ, ஐயோ ன்னு புலம்பி, பாவம் இந்த பிள்ளங்கன்னு உச்சு கொட்டுவா. கண்ணு கலங்கிடுவா. ஆபத்தான வித்தய சர்க்கஸ்ல பாக்க மாட்டாப்பா. கண்ண மூடிக்குவா. எம் பொஞ்சாதிக்கு எளகுன மனசுப்பா. கொழந்த மனசு. '

.. 

Feb 5, 2020

சென்னை புத்தக கண்காட்சியில்

ஞாயிற்றுக்கிழமை (19.01.2020)
புத்தக கண்காட்சியில்
ஒரு சில நிமிடங்கள்

பத்மஜா நாராயணன், லீனா மணிமேகலை,
 ஷோபா சக்தி,  கோணங்கியுடன்.

கோணங்கி ‘என் பேட்டி பாத்தியா?’

மீடியா வெளிச்சத்துல விழுந்துட்டான்.
அதில் சந்தோஷமும் அவனுக்கு இருக்கிறது.

” என் புது நாவல்  வந்திருக்கு தெரியுமா?”

ஷோபா சக்தி என்னுடைய லேட்டஸ்ட் பதிவு பற்றியெல்லாம் சொல்லி “ அண்ணன், பாத்தீங்களா..உங்களை எப்போதும் படித்துக்கொண்டே தான் இருக்கிறேன்.”

 மூன்றாவது முறையாக சந்திக்கிறேன். விகடன் விருது விழா ஒன்றில், எலியட்ஸ் பீச் ஸ்பேசஸில் ஒரு தடவை ஏற்கனவே ஷோபா சக்தியை பார்த்ததுண்டு.

கவிஞர் மஹி ஆதிரனை ( டெபுடி சூப்ரிண்ட் ஆஃப் போலீஸ்) பத்மா நாராயணன் காட்டி “ மஹி தான் என்னை பத்து வருடங்களுக்கு முன் ராஜநாயஹத்தை படிக்கச் சொன்னவர்.”

 பத்து வருடமாக நான் நன்கறிந்திருந்த மஹி ஆதிரனை நேரில் முதல் முறையாக பார்த்தேன். சிலிர்ப்பாய் இருந்தது.
இப்போது கமுதியில் இருக்கிறார்.
மஹி ஆதிரன் அவசரமாக கிளம்பி விட்டார்.
அவர் இந்த புகைப்படத்தில் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

லீனா மணிமேகலையை அன்று தான் பார்த்தேன்.

 கோணங்கிட்ட
 'வீடு மாத்த வேண்டிருக்கு.
தாம்பரத்துக்கு போப்போறேன்'னேன்.
'  மாறிக்கிட்டே இரு. ஒரே எடத்துல இருக்காத'ன்னான் அந்த நாடோடி மன்னன்.



...........


Feb 4, 2020

ந. சிதம்பர சுப்ரமணியம்



சாதாரணமா இந்த நவீன யுகத்தில்
ஏழ்மையில் உள்ள
ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால்
 "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது.

முகத்தில் அம்மைத்தழும்பு.
ஒரு ஏழைப்பெண். இவள் பெயர் பார்வதி.

 இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம்
" என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயியின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."

மணிக்கொடி எழுத்தாளர்
ந.சிதம்பர சுப்பிரமணியம் வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தார்.
 மணிக்கொடி கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் கதை இலாக்காவில் வேலை பார்த்தவர்.
 அடுத்த தலைமுறை அசோகமித்திரனும் கூட கி.ராமச்சந்திரன் ஜெமினி ஸ்டுடியோவில் இருந்த காலத்தில், அதற்கு பின்னும் அங்கே ஜெமினியிலேயே குமாஸ்தா உத்தியோகம் பார்த்திருக்கிறார் .

எழுத்தாளர் நிறைய சம்பாதிப்பது
அபத்தமாக தோன்றலாம்.
ஆடிட்டிங் வேலை பார்த்த ந.சிதம்பர சுப்பிரமணியம் சம்பாதித்தார் என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு எழுத்தாளர் சினிமா தியேட்டர் விலைக்கு வாங்கினார் என்றால் அதிசயம் தானே. அதுவும் மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில். ஓடியன் தியேட்டரை
 ந. சிதம்பர சுப்பிரமணியம் வாங்கினார்.

 ஆனால் அவர் ஓடியன் தியேட்டரை வாங்கிய பின் தான் தெரிந்தது.
அதில் நிறைய வில்லங்கம்.
ஆமாம். ஏமாந்துவிட்டார்.

அன்றைக்கே ரியல் எஸ்டேட் பிசினஸ் பிராடு வேலைகள் உச்சத்தில் தான் இருந்திருக்கிறது. ந.சிதம்பர சுப்பிரமணியம் அவருடைய ஆயுட்கால சேமிப்பை தொலைத்தது இப்படித்தான்.

 அவரே எழுதியது போல
 " மனம் கோட்டை கட்டிக் கொண்டே வரும்.
ஆனால் காலம் அவைகளை
தகர்த்துக் கொண்டே வரும்."

'சக்ரவாகம்' சிறுகதை தொகுப்பும் 'இதய நாதம் ' நாவலும் அவரை நினைவில் வைக்க உதவுகின்றன.
தி.ஜா வின்' சிவப்பு ரிக் ஷா ' சிறுகதை தொகுப்புக்கு ஒரு நல்ல முன்னுரை எழுதினார்.

1978ல் டெல்லியில் இருந்து திஜா வந்திருந்த போது அசோகமித்திரனுடன் இவரை தேடி தி.நகரில் அலைந்திருக்கிறார்.

சரோஜினி தெருவில் ந.சி . இருப்பதாக தி.ஜானகிராமன் தான் கேள்விப்பட்டதை வைத்து அசோகமித்திரனிடம் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக கதவை தட்ட வேண்டிய நிர்பந்தம். ஆனால் பலிக்கவில்லை.
அன்றே திஜா டெல்லி திரும்பவேண்டிய சூழல். ரயிலில் ரிசர்வ் செய்த பின் பயணத்தை எப்படி மாற்றமுடியும்? அவரை தேடி அலைந்த பின் திஜா அன்று மோரும் சாதம் சாப்பிட்டார் என்பதை அசோகமித்திரன்  ஞாபகத்தில் வைத்திருந்து எழுதியிருந்தார்.

ஆனால் அப்போது ந.சி. இவர்கள் தேடியலைந்த சரோஜினி தெருவில் குடியிருக்கவில்லை.
 அடுத்த தெருவில் அதாவது மோதிலால் தெருவில் குடியிருந்த விஷயம் அப்புறம் தான் அசோகமித்திரனுக்கு தெரிய வருகிறது.
இவர்கள் தேடியலைந்ததற்கு அடுத்த வாரம் ந.சிதம்பர சுப்பிரமணியன் இறந்து விட்டார்.

..

"சுவர்க்கம் நம் முன்பாக இருந்தாலும் அதை நாம் அடைவதில்லை. ஏனென்றால் நம்முடைய முயற்சிகள் அதை நரகமாக்குவதிலேயே கழிந்து விடுகின்றன ."

- ந.சிதம்பர சுப்ரமணியம்.

...

இப்போது எழுத்து பிரசுரம் வெளியீடாக  சிதம்பர சுப்ரமணியத்தின் 'சக்ரவாகம்' சிறுகதை தொகுப்பு.