Share

Feb 14, 2020

சிலராமன்

அவன் பேரு பலராமன் இல்ல. சிலராமன். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல. சிவராமனோன்னு கொழப்பிக்க வேண்டாம். சிலராமன்.
Some Rama.
ராமன் எத்தனையோ ராமன்.
என்னா வகைறான்னா
கல்யாண ராமன் இல்லயா.. போல இவன் காதல் ராமன்.
 இவன் முழுப்பேரு கம்பன் சிலராமன்.

கவிங்கன் தான்.
(கம்பம் போல் நல்லா நெடு, நெடுன்னு வளந்திருப்பான்.
அதனால் கம்பன் என்ற பெயர் பொருத்தம் தான்.
இதனால் பெரும்பாலும் கம்பன் என்றே பலரும் அழைத்தார்கள்.)

இவனோட தோஸ்துங்க மூணு பேர். அப்புறம் என்ன, அவங்களும் கவிங்கர்களே.
கவியரங்கம், பிரசங்கம் என்ற தவிப்பில் பட்டப் படிப்பையும் சேர்த்து காக்டைல் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க.

சிலராமனின் ஃப்ரெண்ஸுங்க மூணு பேருக்கும் கவித எழுத காதலிங்க லிங்க் கெடச்ச விஷயம் தெரிய வந்ததும்,
இவனும் கனவு, கற்பனை கூட்டி ஏட்டுச்சுரைக்காய் காதலி ஒன்றை உருவாக்கி கத உட்டான்.

ஏனைய கவிஞர்களின் காதலியரை விட தன் காதற்கிழத்தி பேரழகி என
பீலா உட்டான் சிலராமன் உராங்குட்டான்.

"உங்கள் நண்பர்கள் வளையாபதி, குண்டலகேசி , சீவகன் மூவரும் நலம் தானே? அவர்களுக்கு என் அன்பை சொல்லுங்கள். " என்று இவன் காதலி மேகலை எழுதிய கடிதம் ஒன்றைக்கூட காட்டினான்.

கடிதத்தில் மேகலையின் கையெழுத்து கூட சிலராமன் கையெழுத்து போலவே இருப்பது கண்ட கவிங்க சகாக்கள் புல்லரித்து, செடியரித்து, மரம் அரித்து வியந்தார்கள்
'ஆஹா, என்ன ஒரு அபூர்வ பொருத்தம்'

சிலராமன் சிற்சில கவிதைகளைக் காட்டி" மேகலை எழுதியவை" என்று விளம்பிய போது தான் அவர்கள் வெட்கி தலை குனியும்படியானது 'ச்சே, சிலராமன் நம்மள அம்மணமாக்கிட்டானே'

குண்டலகேசி, வளையாபதி, சீவகன் மூவரின் காதலியர்க்கும் கவிதை எழுதவே தெரியாது.

காதலியோடு தியேட்டருக்கு நாளை படம் பார்க்க
போவதாக சில சமயமும், நேற்று படம் பார்த்ததாக சில சமயமும் சிலராமன் சொல்லிக் கொண்டே இருந்தான்.

பிப்ரவரி வந்தது. கவிங்கர்கள் வேலண்டைன்'ஸ் டே அன்று மதுர கோஸி ஹோட்டலில் காதலியரோடு விருந்துண்ண முடிவெடுத்தனர்.

சிலராமன் தான் அந்த யோசனையை முதலில் முன் வைத்தான்.

பிப்ரவரி 14 தேதி மாலை கோஸி ஹோட்டல் திறந்த வெளியில் ஏனையோர் காதலியரோடு ஆஜர். சிலராமன் தன் ஜோடியோடு வரவில்லை.

டின்னர் கிட்டத்தட்ட முடிகிற நேரத்தில் தேம்பிக்கொண்டே கம்பன் சிலராமன் வந்தான்.
விக்கியழுதான்.

"மேகல செத்துட்டாடா. வேலண்டைன் டே அன்னக்கே என்னய உட்டுப்போயிட்டாளேடா "


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.