என்னோடு இருந்த மற்றொரு நண்பர்
சுகுமார் மூலமாக,
நாங்கள் குடியிருந்த வீட்டில் தங்குவதற்காக,
ராமசாமி வந்து சேர்ந்தார்.
அந்த எங்கள் நண்பருக்கு ஒரு பேங்க்கில் வேலை. அதே பாங்கில் வேலைக்கு வந்தவர் இந்த ராமசாமி.
அவருடைய உடல் அமைப்பில் பிள்ளையாரின் அம்சங்கள் முழுமையாய் இருந்தன. உயரமும் குறைவு.
குண்டு ராமசாமி.
இன்னொரு பேங்கில் வேலை பார்த்த ஒருவரும் எங்களோடு அப்போது இருந்தார். அவர் திருமணமானவர்.
ராமசாமி ஐயர் ஒரு பேங்க்கில் வேலை பார்த்தவர்.
பேங்க் வேலையில் சொந்த ஊரில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். எமர்ஜென்ஸிக்கெதிராக தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் காரரான ராமசாமி ஐயர் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டார்..
மிசா கைதிகள் அனைவரும் விடுதலையான போது அவரும் விடுதலையானார்.
ரொம்ப சிரமத்திற்கு பிறகு தான் பேங்க் வேலை மீண்டும் அவருக்கு கிடைத்தது.
உடனே நான் உத்யோகம் பார்த்துக்கொண்டிருந்த இந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். நானும் அரசாங்க பணியில் புதிதாக அப்போது சேர்ந்திருந்தேன்.
அவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பின் இன்னும் இருவர் எல். ஐ. சி உத்யோகத்தில் இருந்த நடுத்தர வயதினர் அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு குடும்பம் ரொம்ப தூரமான ஒரு ஊரில்.
இப்போது எங்கள் அறையில் ஆறு பேர். அனைவரிலும் நான் தான் இளையவன். எனக்கு மீசை கூட சரியாக அப்போது அரும்பவில்லை.
ராமசாமி திருமணமாகாதவர் என்றாலும் நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார்.
தி.க.காரரான அழகர் பால் கடை வைத்திருந்தார். பனங்கற்கண்டு பால் சூடாக தருவார். பிரட் போல ’பன்’ அவர் கடையில் இருக்கும்.
இரவு உணவு முடிந்தவுடன் அழகர் கடைக்கு போய் பால் சாப்பிடுவோம்.
அவர் ராமசாமியை ரமணி என்று அழைத்தார். இருவருக்கும் நெருக்கம். இந்த தி.க.காரர் அழகரும் ஆர்.எஸ்.எஸ் ராமசாமியும் ஒரே சிறையில் மிசாவில் இருந்திருக்கிறார்கள்.
அங்கே மிசா கைதிகளாய் இருந்த அரசியல்வாதிகள் அனைவருமே ராமசாமியை ரமணி என்று தான் அழைப்பார்களாம்.
ராமசாமி சொன்னார். அவருடைய ஊரில் அவருடைய சொந்த பந்தங்களும் ரமணி என்றே இவரை அழைப்பார்களாம்.
திராவிடர் கழகம் அழகரும், ஆர்.எஸ்.எஸ். ராமசாமியும் மிகுந்த கண்ணியம் கலந்த நட்புடன் பழகுவார்கள். அழகர் முதியவர்.
ரமணியும், அழகரும் எதிர் அரசியல் பேசவே மாட்டார்கள்.
வழக்கம் போல் இரவு பனங்கற்கண்டு பால் சாப்பிட அழகர் கடைக்குள் நுழைவோம்.
அழகர் ’வாங்கய்யா’ என்று எங்களை வரவேற்பவர்
அடுத்து “ரமணி, வாங்க” என்பார்.
ஒரே முறை என்னிடம் அழகர் “ராஜநாயஹம், நீங்க ரொம்ப சின்ன பையன். ரமணி ஆர்.எஸ்.எஸ்.காரர். அவர் சொல்ற அரசியல நம்பிடாதீங்க, வாலிபர்கள தான் ஆர்.எஸ்.எஸ் காரங்க மாத்த பார்ப்பாங்க” என்றார்.
ஆனால் ஒரு அதிசய ஆச்சர்யம். ரமணி அவருடைய கொள்கை, கருத்து எதையும் என்னிடம் பேசியதே இல்லை. இதை அழகரிடம் சொல்லி தெளிவு படுத்தினேன்.
ஆசுவாசமான அழகர் “நான் சொன்னத மறந்துடுங்க. ரமணி கிட்ட ’அழகர் இப்படி சொன்னார்’னு சொல்லிடாதீங்க. அவர் மனம் புண்பட்டு போயிடுவார். ரொம்ப நல்ல மனுஷன்.” என்றார்.
இருவருக்கும் நெருக்கம் இருந்தது. ’ரமணிக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும். பாவம் மிசாவில ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்’ என்று அழகர் கவலைப்படுவார்.
பெரியார் இறந்த அன்று நடந்த அரசியல் பற்றி நடுங்கும் குரலில் அழகர் வேதனைப்படுவார்.
”அய்யா இறந்த உடனயே, உடம்பு இருக்கும்போதே, ரெண்டு க்ரூப்பா உட்காந்துட்டாங்கங்க. எம்.ஜி.ஆர், திருவாரூர் தங்கராசு, எம்.ஆர்.ராதா ஒரு புறம். ஆமா, ராதா ஆதரவு தங்கராசுவுக்கு.
கருணாநிதி, மணியம்மை, வீரமணி இன்னொரு புறம்னு உக்காந்துட்டாங்க. ஏன் கேக்கறீங்க” தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அழகர் குமுறுவார்.
ரமணி எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க இருப்பார். நல்ல குண்டு. ’பெரிய தூரு’ என்று அவருடைய பட்டெக்ஸ் பற்றி பஜாரில் கடை வைத்திருந்த சர்புதின் பாய் சொல்வார். சர்புதினும் ரமணி போலவே குண்டு தான். என்றாலும் ரமணியை ரொம்ப கிண்டலடிப்பார்.
ரமணி இடுப்பில் அரிசிப்பையை கட்டி விட்டால் அவர் நடக்கும்போதே மாவாய் ஆகிவிடும் என்று சர்பு சொல்வார். க்ரைண்டர் ராமசாமி.
ரமணி இப்படி ஒரு ஜோக் அடித்தால் அவர் உடனே நின்ற இடத்தில் ஒரு அடி தள்ளி நின்று உற்று பார்ப்பார். அதன் பிறகு தான் முகத்தை மேலும் கீழும் ஆட்டி சிரிப்பார்.
நடக்கும் போது நான் ஒரு ஜோக் சொல்கிறேன் என்று வைத்துக்கொண்டால், உடனே ரமணி நின்று விடுவார். ஒரு அடி பின்னால் போவார். உற்று என் முகத்தை பார்ப்பார். மேலும் கீழும் உச்சி முதல் பாதம் வரை ஒரு ஆச்சரியப்பார்வை.
அப்புறம் தலையை ஆட்டி சிரிப்பார்.
சர்பு ஒரு நாள் சொல்வார் ”ராமசாமி, இன்னக்கி மரத்தில வால தொங்க விட்டு ஊஞ்சலாடுனியாமே”
மறு நாள் “ யோவ் ரமணி, இன்னக்கி தும்பிக்கய ஊணி நாலு காலயும் தூக்கி சங்கு சக்கரமா சுத்துனியாமேய்யா..மூன்றாந்தல்ல..” என்பார்.
இதெற்கெல்லாம் ரமணி தன் பாணியில் உள்ளூர் வியாபாரி சர்புதினை ஏற இறங்க பார்த்து விட்டு தலையை ஆட்டி சிரிப்பார்.
ராத்திரி நாங்கள் குடியிருப்பில் ஆறு பேரும் வரிசையாக படுத்திருப்போம்.
படபடவென்று சத்தமாக ரமணியின் Farting. சரம் பட்டாசு போல. ஆனால் ஒரு அதிசயம். அவருடைய அபான வாயு நாற்றமே எடுக்காது.
அணு குண்டு வெடிச்சத்தத்தில் அபான வாயு அவ்வப்போது வெளியேறும்.
ஒரு நாள் அவருக்கு வலது புறம் நானும், இடது புறம் சுகுமாரும் ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டு ஒரே நேரத்தில் பதறி இரு பக்கமும் எழுந்து விட்டோம்.
ரமணி “சாரி, நேக்கு தான் காஸ்ட்ரபிள். ஒன்னுமில்லை படுத்துண்டுடுங்க… சாரி.” என்று சொன்னார்.
ஒரு நாற்றம் எடுக்காத வெடி சத்த குசு.
வித்தியாசமான மறக்க முடியாத அனுபவம்.
மிசாவில் அவர் டூ டாய்லட் போகிற சூழல் பற்றி விவரிப்பார்.
மலக்கிடங்கு. சின்ன நீண்ட திண்டில் அங்கெங்கே அவ்வப்போது கைதிகள் வருவார்கள். உட்கார்வார்கள். உட்கார்ந்தவுடன் கீழேயுள்ள மலக்கிடங்கில் உள்ள ஈக்கள் எழுந்து இவரை மூடி விடும். முகத்தில் தேனடை போல ஈக்கள்.
”யாரு… யார் நீங்க..” சக கைதி கேட்கும் போது இவர் முகத்தில் உள்ள ஈக்களை இடது கையால் மழித்து (ஷேவ் செய்வது போல)
“என்ன தெரியலியா? நான் தான் ராமசாமி. ரமணிம்பேளே..” என்பாராம்.
சிறையில் எந்த அந்தரங்கத்திற்கும் மரியாதை, மதிப்பே கிடையாது.
இங்கே வேலைக்கு வந்த பின்பு, காலையில் எழுந்தவுடன் எங்கள் வீட்டில் இருந்து கிளம்பி,
ரமணி எப்போதும் ஊரில் இருந்த ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு போய் அங்கே இருக்கும் ஃப்ளஷ் அவுட் டாய்லட்டில் காலை கடன் முடிப்பார்.
நாங்கள் குடியிருந்த வீட்டில் எடுப்பு கக்கூஸ். தோட்டி வந்து சுத்தம் செய்வார். எவ்வளவோ முயற்சி செய்தும் ஃப்ள்ஷ் அவுட் டாய்லட் உள்ள வீடு எங்களுக்கு கிடைக்கவில்லை. ரொம்ப சொற்பம். அதுவும் சொந்த வீட்டுக்காரர்கள் தான் அப்போது அப்படி வீட்டில்.
இரவில் தாக சாந்தி செய்யும் எங்கள் நண்பர்கள் முன் முதலில் வேடிக்கை தான் பார்த்தார்.
நான் மது குடிக்காவிட்டாலும் மது போதையில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய அத்தனை கலாட்டாவையும் செய்பவன்.
”என்ன, நாங்க தண்ணியடிச்சவங்க அமைதியா இருக்கோம். நீ ஏய்யா போதக்காரன் சேட்டையெல்லாம் பண்ற” என்பார்கள்.
ரமணியிடம் ஒரு நாள் “ஐயரே, கொஞ்சம் சரக்கு குடிச்சி பாக்கிறீங்களா?” என்று கேட்டார்கள்.
சித்தர் போல “ Why not?” என்றார்.
அவர்கள் ஒரு டம்ளரில் ஊற்றி கொடுத்தார்கள்.
இவர் தரையில் அமர்ந்து டம்ளரில் இருந்த பிராந்தியை மெதுவாக வாயில் வைத்து ’குடிகார அவசரமே இல்லாமல்’
ஏதோ பால் சாப்பிடும் குழந்தை போல,
இரண்டு கையாலும் கண்ணாடி டம்ளரை பிடித்துக் கொண்டு,
சர்பத் சாப்பிடுவது போல முக சுளிப்பே இல்லாமல்
நிதானமாக கண்ணை உருட்டி எல்லோரையும் பார்த்துக்கொண்டே குடித்தார்.
அடுத்து ஒரு டம்ளர் சரக்கையும் அதே பாணியில் தான்.
மது இப்படி அவரை ஆக்ரமித்து விட்டது.
நான் வேலையே பிடிக்காமல் ராஜினாமா செய்து விட்டு ஊரை விட்டு கிளம்பினேன். ஒரு வரி resignation letter. “ I resign my job as the nature of work does’nt suit my temporament”
ஒரு முறை ரயிலில் சென்னையில் இருந்து நானும் என் அப்பாவும் திரும்பி வரும்போது ராமசாமியை எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் சந்தித்தோம். அதே உற்சாகம். அதே சிரிப்பு.
என்னைப்பற்றி அப்பாவிடம் சொன்னார்: “தொர, துறு துறுப்பு. ஜாலியான டைப். ஊரில ஒவ்வொரு இடத்த பாக்கும் போது உங்க பையன் ஞாபகம் எப்போதும் வரும்.” மேலும் பெருமையாக சொன்னார்.
என் அப்பாவுக்கு நான் அரசாங்க வேலையை விட்டதில் கடும் அதிருப்தி. அந்த அதிருப்தியை ராமசாமியிடமும் கவலையுடன் தெரிவித்தார்.
ராமசாமிக்கு திருமணம் ஆனது. குழந்தைகள் பிறந்தார்கள்.
பின்னால் மதுரைக்கு வந்த சர்புதின் சொன்னார். ”ராமசாமி பேங்க் வேல முடிஞ்சி கெளம்பினாலே தண்ணி தான்யா. குடிச்சிட்டு அங்கங்க விழுந்து கெடக்கிறாப்ல.”
அடிக்ட் ஆகி விட்டார் ரமணி என்பது தெரிந்தது.
பின்னால் ஒரு துக்க செய்தி.
மனைவி குழந்தையை விட்டு விட்டு அகால மரணமடைந்து விட்டார்.
அரசியலில் உச்சம் தொட்ட பிரமுகர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினாராம்.
காரணம் பிரபல பிரமுகரின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் ராமசாமி உழைப்பு இருந்ததாம்.
அவருக்காக ஊரில் ஓட்டு கேட்டு வீடு வீடாக படியேறி இறங்கியிருக்கிறார் ராமசாமி.
கல்லாய் உறைந்து போன ராமசாமி பற்றிய நினைவுகள்.
………..