Share

Oct 19, 2018

கம்புக்கூட்டன்


ஒரு சொலவடை. ’வேதநாயகம் பிள்ளை போல சடைச்சிக்கிறானே’ன்னு. அவரு எந்த வேதநாயகம்பிள்ளை? மாயூரம் வேதநாயகம் பிள்ளையா? அல்லது வேறு யாராவதா? யாருக்கும் தெரியாது.
சின்ன வயசில அதாவது வாலிப வயசில கம்புக்கூட்டன் தன் ஒட்டிப்போன கன்னத்தை எப்படி உப்ப வைப்பது என்று ரொம்ப சடைச்சிக்குவான். அது அவனுடைய ஆதாரக்கவலையாய் இருந்தது. கன்னம் இன்று வரை உப்பவே இல்லை.

இப்ப கம்புக்கூட்டனுக்கு அறுபத்தஞ்சு வயசு. எப்படியிருக்கான்னு விசாரிச்சா, இப்ப ’சாப்பிடுறதுக்கு பல் இருந்தா போதும்’னு சடைச்சிக்கிறான். எப்பவும் இந்த கவலை தான்.
ஆசைகளும், நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு வியர்த்தமானவை?

இளந்தாரியா இருக்கிறப்ப கம்புக்கூட்டன் அவனோட பொக்கவாய்  பாட்டிய கன்னத்தில, கை விரல்களை மூடி  குத்துகிற மாதிரி வைத்து அழுத்துவானாம். இதனால் முகம் பக்கவாட்டில் திரும்பிய நிலையில் பாட்டி சிரமமெடுத்து ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்பி கத்துவாளாம். “கம்புக்கூட்டா, கருவாயா, கம்புக்கூட்டா, கருவாயா”
ஆரப்பாளையம் பார்க்கில் கிழவி கத்துவதை அப்படியே குருவிமண்டையன் நடித்துக்காட்டியதுண்டு.
கூப்பாட்டை ஆம்ப்ளிஃபையர் வைத்து விஸ்தாரமாக பெருக்கியது போல அலறலாக செய்து காட்டுவது
காதில் இன்னமும் கூட ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஏ.ஏ.ரோட்ல கம்புக்கூட்டன் யாராவது ஒருத்தனுக்கு ஒரு நாள் சாயந்தரம் அஞ்சு மணிக்கு டீ வாங்கிக்கொடுத்தான்னா, மறு நாள் அதே நேரத்துக்கு வந்து முந்தின நாள் இவன் கிட்ட டீ வாங்கி குடிச்சவன முழிச்சி முழிச்சி பார்ப்பான். ’இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே’ என்ற தோரணையில். இன்னேரம் டீ சாப்பிட கூப்பிட்டிருக்கணுமேன்னு.
’சபாஷ் மீனா’ படத்தில கண்ணாடி ஜன்னல குலதெய்வம் கல் வீசி உடைச்சிருப்பான்னு முடிவு பண்ணி ஜன்னலுக்கு கண்ணாடி மாட்ட வரும் சிவாஜி “இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே” என்று வெள்ளந்தியாக வீட்டுக்காரரை குழம்பிப்போய் பார்க்கும் போது கல் விழும். கொஞ்ச லேட்டு.

இந்த சபாஷ் மீனா காட்சி சார்லி சாப்ளின் நடித்த “The Kid" படத்தில் இருந்து உருவப்பட்டது. அதி மதுர ’மதுர பக்கி’களுக்கு சபாஷ் மீனா தான்  தெரியும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.