Share

Jun 17, 2018

பாட்டுல டயலாக்


நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
’ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ஆடிப்பாடுங்கள் இன்றாவது’
பாடலை போதைக்காரர் காது கொடுத்து நன்கு கவனித்து கேட்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த மாதிரி ஆட்கள் எப்படியும் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் react செய்வார்கள். நான் நின்று அவர் கவனிக்காத வகையில் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்.
பாடலின் ஒவ்வொரு சரண முடிவில் எஸ்.பி.பி தத்துவமாக டயலாக் சொல்கிறார். ரொம்ப நெனப்போடு அந்த டயலாக்குகள்.
’நாம் பிறந்த மண்’ படத்தில் கமல் கூட ரொம்ப ஓவர் நெனப்போடு தான் பாடலின் டயலாக்குகளுக்கு நடித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
’கட்டிடம் ஜொலிக்கிறது..அஸ்திவாரம் அழுகிறது.’
’இன்பங்கள் தூங்குவதில்லை.. துன்பங்களும் அப்படித்தான்’
அப்படி இரு சரண முடிவில் டயலாக் வரும்போதும் குடிகாரர் முகம் சுளித்து ‘ச்சே’ என்பதாக தலையை உதறினார்.
மூன்றாவது சரணம் முடியும் போது டயலாக்
’உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்’
உடனே போதைக்காரர் ஒரு கூப்பாடு போட்டார்
“உழுதவர்கள் ஒழ்க்கிறார்கள். ஒங்கள குனிய வச்சு தள்ளுவார்கள்.
அறுத்தவர்கள் புழுத்துவார்கள். பாடச்சொன்னா ஒழுங்கா பாட்ட பாடுங்கடா.. ஏண்டா தேவையில்லாம பேசிறீங்க. பெரிய தத்துவப்புழுத்திங்க..”
Children, fools and drunkards have a beautiful vision.
………………….
மதுரையில் ஒரு சினிமா பாடல் கச்சேரி. பாடகர் ”தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பாட ஆரம்பித்தார்.
தோரணையெல்லாம் சிவாஜி பாணியில். ஏதோ அந்தப்பாடலை அந்த மேடைப்பாடகரே எழுதி இசையமைத்து பாடுவதாக ஒரு பெருமிதமான அங்க சேஷ்டைகள்.
“உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன” என்று இரண்டு விரல் நீட்டி கையை ஆட்டிக்காட்டி டயலாக் சொன்னார்.
ஏற்கனவே ஏதாவது உடைசல் கொடுக்கும் முடிவில் முன்னால் நின்று கொண்டிருந்த குருவி மண்டையன் உடனே ஒரு கூப்பாடு போட்டான் “ அவை இரண்டும் கருத்தக்கண்ணு கசாப்புக்கடையில் அறுக்கப்பட்டு விட்டன”
.................................

கஜல், சூஃபி பாடல்களில் இடையிடையே பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு இதமாக, பாந்தமாக இருக்கிறது. பாடல்களுக்கு இடையே பேசுவதற்கு ஒரு நேர்த்தியான இயல்பு தன்மை இருக்கிறது.
............

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.