Share

Feb 23, 2018

கிரக பீடைகள்


திருதராஷ்ட்ரன் குருஷேத்ர யுத்தம் முடிந்த பின் தன் தம்பியும் ஞானியுமாகிய விதுரனிடம் புலம்புகிறான்: “ இது என்னடா விபரீதம். மகாராஜா நான். கபோதியாய் பிறந்தேன். காந்தாரி மூலம் எனக்கு பிறந்த நூறு பிள்ளைகள். ஒரு பெண். யுயுத்சு எனக்கு வப்பாட்டி மகன் தான. அவன் பாண்டவர்களோட சேந்துட்டான். 18 நாள் யுத்தத்துல நூறு மகன்களையும் பறி கொடுத்துட்டேன். ஜயத்ரதன் செத்துட்டதால என் ஒரே மகள் துச்சலை விதவையாயிட்டா.
புத்ர சோகம் எவ்வளவு கொடுமை. ஒரு பிள்ளைய பறி கொடுத்தாலே தாங்க முடியாதேடா. கபோதியா பொறந்து நான் பெத்த பிள்ளைகள கண்ணால பாக்க கூட கொடுத்து வக்கலயேடா”
நீதிமான் விதுரன் பதில் : அண்ணே, மனுசன் அவன் அம்மா வயித்தில கருவா ஜனிச்சி, பத்து மாசத்தில யோனித்துவாரம் வழியா வெளிய வந்து விழுந்த அந்த வினாடி முதல் ’நாய்கள் மாமிசத்த துரத்துவது போல’ கிரக பீடைகள் அவனை துரத்த ஆரம்பித்து விடுகின்றன.”
’கிரக பீடைகள்’ என்கிறான் விதுரன்.
இத புரிஞ்சிக்கிட்டா ஜாதகமே பாக்க மாட்டோம்.
கோச்சாரத்தில் முக்கிய கிரகங்கள் சனியும் குருவும்.
பன்னிரண்டு ராசியையும் சுற்றி வர சனி முப்பது வருடம் எடுக்கிறான். குரு பன்னிரண்டு வருடங்கள்.
குரு ஒரு ராசியிலிருந்து இரண்டாமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடம், ஒன்பதாமிடம், பதினொன்றாமிடம் வரும் போது மட்டும் நன்மை செய்கிறான்.
ஜென்மராசியிலோ, மூன்றாமிடத்திலோ, நான்காமிடத்திலோ,
ஆறாமிடத்திலோ, எட்டாமிடத்திலோ, பத்தாமிடத்திலோ, பன்னிரண்டாம் இடத்திலோ மனுசனை படாத பாடு படுத்தி எடுத்துடுறான்.
மற்றபடி ஜென்மத்தில் ராமர் சீதையை வனத்தில் சிறை வைத்ததும் அதாவது ஜென்மராசியில் குரு இருக்கும்போது இதற்கீடான துயர்.
மூன்றாமிடத்தில் குரு இருந்த போது தான் துரியோதனன் படையோடு மாண்டான். எவ்வளவு சப்போர்ட் இருந்தது அவனுக்கு. பீஷ்மர், கர்ணன், துரோணர், அஷ்வத்தாமா என எப்பேர்ப்பட்ட டைனாமிக் பெர்சன்ஸ். அவர்கள் எல்லாம் துணையிருந்த போதும் துரியோதனனின் ராசிக்கு மூன்றில் குரு நின்ற போது தான் அவனுக்கு சர்வ நாசம் நிகழ்ந்தது.
தர்மபுத்திரர் நாலில் வனவாசம் போனதும். குரு நான்கில் நிற்கும்போது சக்ரவர்த்தி தர்மனே வனவாசம் ஏகிய சூழல்.
சத்திய மாமுனி கைகால்களில் தளை பூண்டது ஆறில் குரு நிற்கும்போது.
நல்லவன போலீஸ் அரஸ்ட் செய்வது குரு ஆறில் நிற்கும்போது தான்.
சண்டை செய்யும்போது வாலிக்கு எதிராளி பலம் பாதி கிடைத்து விடும். எப்பேர்ப்பட்ட வலிமை இது. அப்படிப்பட்ட வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது வாலி ராசிக்கு எட்டில் குரு நின்ற போது தான். ’இன்மையெட்டினில் வாலி பட்டமிழந்ததும்.’
பத்தில் குரு ‘ குரு பத்தில்- ஈசனார் திருவோட்டில் இரந்து உண்டதும்’
பத்தில குரு ஸ்தான சலனம். கௌரவ பங்கம்.
பரமேஸ்வரனே ‘பிச்சாண்டி பாத்திரத்தில் பிச்சையிடுங்கள்’ என்று பிச்சையெடுத்து சாப்பிட்டாராம்.
பன்னிரண்டில் குரு இருக்கும்போது தான் ராவணன் முடி துறந்த நிலை. ஈஸ்வர பட்டம் பெற்ற ராவணனே ராமனிடம் தோற்று “மண் மகள் முகம் கண்டேன், மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய்” என்று புலம்பியழுது உயிர் விட்ட போது ராவணன் ராசிக்கு பன்னிரண்டில் குரு நின்றிருந்தான்.
சனி ஒரு ராசியில் ரெண்டரை வருடம் நிற்பான். மூன்றாமிடம், ஆறாமிடம், பதினொன்றாமிடம் வரும் போது மட்டும் ஒரு மனுசனுக்கு நிம்மதியை கொடுப்பான். அதாவது முப்பது வருடத்தில் ஏழரை வருடம் மட்டும் சுகம்.
ராசிக்கு பன்னிரண்டாமிடம், ஒன்று, இரண்டாமிடம் வரும்போது ஏழரைச் சனி.
நான்காமிடம் வரும் போது மரணச்சனி. உயிரை எடுப்பதிலேயே குறியாயிருப்பான். தாயார்க்கு ஆகாது. வீடு, நில புலன்களை வில்லங்கப்படுத்துவான்.
ராசிக்கு ஐந்தாமிடம் சனி வரும்போத பூர்வ புண்ணிய யோகத்தையெல்லாம் Freeze பண்ணிடுவான். முன்னோர் செய்த புண்ணியங்கள் கூட பலிக்காது. அந்த ரெண்டரை வருடம் புத்திரர்களுக்கும் தீமை செய்யும்.
ஏழாமிடம் வரும்போது குடும்பத்தில் சிக்கல், பிரச்னை. தாரம் உடல் ஆரோக்கியம் சரியா இருக்காது. மனைவி வகையில் பல மாதிரியான கவலைகள். வீட்டில் நிம்மதி சுத்தமாய் இராது.
எட்டாமிடம் சனி. அஷ்டமத்து சனி. அஷ்டமத்து சனி பிட்டத்து துணிய புடுங்கிடும். கோமணத்தையே உருவி விட்டுறும்னா எப்படி கொடுமை? ஏழரை சனியில ஏழரை வருஷத்தில அனுபவிக்கிற கொடுமைய இந்த ரெண்டரை வருஷத்தில அனுபவிக்கணும். முழுக்க பொருள் விரையங்கள அவசர அவசரமா சனி செய்வானாம். சொத்து, நகை, பணமெல்லாம் கொள்ளையடிப்பான் சனின்னு ஐதீகம்.
ஒன்பதில சனி தகப்பனுக்கு கண்டம். பாக்யங்கள பூரா முடக்கிடுவான்.
பத்தில சனி வரும் போது தொழில்ல பல சரிவு, சிக்கல், வேலை போயிடும்.
சனி மூணு, ஆறு. பதினொன்னு இருக்கும்போது எப்படியும் குரு ஒரு வருடம் ஜென்மத்தில, மூணுல, நாலில, ஆறில, எட்டில, பத்தில, பன்னிரண்டுல நின்னு அதிலும் கெடுப்பான்.
முப்பது வருட வாழ்க்கையில ஒரு மூன்று வருடம் நிம்மதின்னு சொல்லலாம்.
அப்படியும் சொல்ல முடியுமா. ராகு கேது பெயர்ச்சி மூணு, ஆறு, பதினொன்னு தவிர மத்த இடங்கள்ள நின்னா சிலுவையில அறஞ்சிடுவானுங்க.
சரி கோச்சாரம் சரியா இருந்தா தசா புக்தி கெடுக்கும். ஆறாம் வீட்டுக்காரன் தசை, எட்டாம் வீட்டுக்காரன் தசை, மாரகாதிபதி தசை, பன்னிரண்டாம் வீட்டுக்காரன் தசை இப்படி வந்திச்சின்னா லைஃபே ஸ்பாயில் ஆயிடும்.
ஜோசியன் கோச்சாரம் சரியாயிருந்தா தசாபுக்தி சரியாயில்லம்பான். தசாபுக்தி சரியாயிருந்தா கோச்சாரம் கெடுக்குத்துன்னுடுவான்.
பரிகாரம் சொல்லி காசை புடுங்க ஜோஷியம் எவ்வளவு வசதியாருக்கு!
ஒருவன் நல்லாயிருப்பதாக தெரிந்தால் ஜோதிடம் பிரமாதமா சொல்வார்கள். கஷ்டப்படுகிறான் என்றால் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஏன் பலிக்கவில்லை என்பதற்கு பல சால்ஜாப்பு சொல்ல முடியும்.
’கிரக அடைவுகள், அவயோக ஜாதகம், ராகு கேதுகளுக்கிடையில் எல்லா கிரகமும் சிக்கி யோக பலன்களை கெடுத்து விட்டதே… ஒன்பதாம் வீட்டுக்காரன் நீசமாகி அவனுக்கு நீசபங்கம் ஏற்படல, லக்னாதிபதி கெட்டுப்போயிட்டான், பத்தில பாவியாவது நிக்கணும், ஒரு கிரகம் கூட இல்ல,
பிறந்த நேரத்தில் குரு என்ற பிரஹஸ்பதிக்கு ஆறு எட்டு பன்னிரண்டில் சந்திரன் சகட யோகம். வாழ்க்கையே சக்கரம் போல…. ஒன்பதாம் வீட்டுக்காரன் எட்டில போய் பத்தாம் வீட்டுக்காரன் பதினொன்னுல போய் நின்னுட்டான். இப்பேர்ப்பட்ட கிரக அடைவுக்கு எந்த யோகமுமே பலிக்காது…’ இப்படி உச்சு கொட்டி, உச்சு கொட்டி ஜோதிடன் பரிதாபப்படுவான்.
தலை சுத்த வைக்கும் ஜோதிடம்.
இதை தான் விதுரன் “ பிரசவத்தில யோனித்துவாரத்தில் இருந்து வெளிய வந்து இந்த பூமியில் விழுந்த அந்த வினாடி முதல் கிரக பீடைகள்
‘நாய்கள் மாமிசத்தை துரத்துவது போல’ மனிதனை துரத்த ஆரம்பிக்கின்றன’ என்கிறான். எது வரை? Until his death.

ஸோர்பா தி கிரீக் ரொம்ப விஷேசமான மூவி. ஸோர்பாவாக வரும் ஆண்டனி குயின் : life is trouble, Only death is not. To be alive is to undo your belt and look for trouble.
கிரேக்க தத்துவஞானி சோலன். மனிதன் எப்போது சந்தோசமாயிருக்கிறான்? என்ற கேள்விக்கு சமாதியில் தான் என்று சொன்னான். பரமபதம் அடைந்து விட்டார் என்று சொல்வது போல ஒருவர் மரணத்தின் போது இந்த Vocabulary. “ He has attained Solan’s Happiness”
ஜோதிடம் பார்க்காமல் இருப்பவன் தான் உண்மையிலேயே யோக ஜாதகக்காரன்.
ஸ்ரீ ஜாதகபலன்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒருவன் ஜாதகத்தில் ஐந்தாமிடம் புத்ரஸ்தானம். பெண்புத்திரம் பிறப்பதே புத்திர தோஷம் என்று தான் கிரந்தங்கள் சொல்கின்றன.
பெண் ஜாதகத்தில் எந்த இடத்தில் கிரகம் நின்றாலும் பலன் திடுக்கிடும்படியாக இருக்கும். ஏழு எட்டாமிடம் சுத்தமாக கிரகமில்லாமல் இருக்க வேண்டும். கிரகமிருந்தால் பெண் ஜாதகம் அவயோக ஜாதகம். கிரகங்கள் கூடியிருப்பது, கிரகங்கள் நீசமாயிருப்பது, கிரகங்கள் பார்வை எல்லாமே பெரும்பாலும் பெண்ணுக்கு துர்பலன்கள் தான்.
பெண்ணின் ஜாதகத்தை ஜோதிடனிடம் காட்டாமலிருப்பதே நல்லது.
நான் 1989ல் புதுவை பல்கலை கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் பேசிய போது நளபாகம் நாவல் பற்றி பேசும்போது பெண் ஜாதகம் பற்றி, ஆண் களத்திர ஸ்தானம் பற்றிய வக்கிர குறிப்புகள் பற்றி ஜாதக பலன்கள் கூறுவது பற்றி கோடிட்டு காட்டினேன்.

’ஜோதிடம் தனை இகழ்’ 
- புதிய ஆத்திச்சூடியில் பாரதி
…………………..

http://rprajanayahem.blogspot.in/2018/01/blog-post_31.html

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_4.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.