ஒச்சு மதுரை கம்மாக்கரையில் செய்த சாகஸத்தில் ஒன்று. பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு எழுபது வயது பெரியவரிடம் ‘ அப்பு, உனக்கு நச்னு ஒரு செம தாட்டிய பொண்டாட்டியா நான் கொண்டு வர்றேன்’ன்னு சொல்லி கணிசமான ஒரு தொகையை கறந்த விஷயம்.
அந்த கிழவர் இதை சொல்லி அழுத போது கம்மாக்கரையில் மட்டுமல்லாது அரசரடி ஆரப்பாளையம் ரோட்டிலேயே ’ஸ்கூப் நியூஸ்’ ஒச்சுவின் இந்த நளின சாகசம் தான். அவனுக்கே அறிமுகமில்லாத ஒரு பெண்ணையே காட்டியிருக்கிறான் பாவி. அவள் அந்தக்கால பிரபல நடிகை கலர் காஞ்சனா மாதிரியேயிருந்திருக்கிறாள். அவளிடம் பேசி இவரை சுட்டிக்காட்டிக்காட்டிய போது அந்த ’கலர் காஞ்சனா எதிரொலி’ கிழவரை பார்த்து சிரித்திருக்கிறாள். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என்று எண்ண வேண்டும் என இறும்பூதெய்தி விட்டார்.
ஏனோ ஒச்சு இது போன்ற ஒரே சீரான ஃப்ராடு வேலைகள் தான் செய்திருக்கிறான். எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் ஒருவர் புதிதாய் கல்யாணமானவர். அவருடன் உடல் உறவு செய்ய புத்தம்புதிய மனைவி அனுமதிக்கவில்லையாம். அதை இவர் ஒச்சுவிடம் சொல்லியிருக்கிறார்.
“உனக்கு பொம்பிளைய கையாளத்தெரியலை. நான் சூப்பர் தாட்டி கொண்டு வருகிறேன். கொஞ்சம் பழகி விட்டால் அப்புறம் பொண்டாட்டிய ஈசியா தட்டி படுக்கப்போட்டுடுவ”
– ஒச்சு கவுன்சலிங்!
”ஆனா ஒன்னு.. நீ தாட்டிய அணையும் போது நான் கூடவே நிப்பேன். உனக்கு நெம்புகோலின் தத்துவத்த எப்படி விளக்குறதுன்னு நானே விளக்கு புடிச்சு சொல்லித்தருவேன். கூச்சப்படக்கூடாது..சரியா..?”
கிறுக்கு வாத்தியார் வெள்ளந்தியாக : ’இது தான் விளக்கு பிடிக்கிறதுங்கறதா?’
சபலப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்ணையும் காட்டி விட்டான். பெரிய தொகை கைமாறியிருக்கிறது. அவள் லட்டு போல இருந்ததாக அந்த கிறுக்கு வாத்தியார் சொல்லி, சொல்லி புலம்பினார்.வேறு வழியேயில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்தவரான அவர் ’எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை, எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை’ என்று மனந்திருந்தி, ஏமாற்றத்தை தாங்கி சகித்துக்கொண்டார்.
……….......
ஒச்சு தத்தனேரி டூரிங் டாக்கிஸில் எல்லாம் பழைய படம் பார்க்க எங்களோடு வருவான். ’தொர, வாங்க தொர, சூப்பர் படம் தொர’ என்று கூடவே வருவான். ரொம்ப மரியாதையும் பிரியமுமாக என்னிடம் இருப்பான். தரை டிக்கட்டில் கூட்டம் நெருக்கியடிக்கும். கொட்டாயில் ‘திரள்மணி கதிர்கள் வீசி திசையாளும் ஆதவன்’ சீர்காழி பாட்டு போட்டு விட்டால் பாதி பாட்டில் நிறுத்தி விட்டு படம் போட்டு விடுவான். ஒச்சு முண்டியடித்து டிக்கட் வாங்கி கொடுத்து விட்டு உள்ளே போனவுடன் மணலில் படுத்து உடனே,உடனே தூங்கி விடுவான். இண்டர்வெலில் வாய் பிளந்து தூங்குபவனைப் பார்த்து கம்மாக்கரை கண்ணன் பொங்கி அழும் குரலில் தேம்புவான் ” இடம் பாத்து செத்தியாடா ஒச்சு, தத்தனேரி சுடுகாடு பக்கத்தில தானன்னு இடம் பாத்து செத்தியா.. பச்ச மூங்கில் என் செலவுடா ஒச்சு”
………...............................
அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் மு.க மன்றம் ஒன்று உண்டு. அங்கே நின்று கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.
பின்னால் என் மாமனாராய் ஆகப்போகிறவரின் அண்ணன் அங்கு வந்து விட்டார். ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்து அந்த தெருவில் இருந்த அவருடைய உடன் பிறந்த தங்கையை பார்த்து விட்டு திரும்பும் போது என்னை பார்த்து விட்டார். உடனே நான் அவரை பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்துப்போய் ஒரு கோல்ட் ஸ்பாட் வாங்கிக் கொடுக்கிறேன். ஒச்சு நல்ல போதையில் வந்து விட்டான். தள்ளாடியவாறு “ தொர” சொல்லி எனக்கு சல்யூட் அடித்தான். கோல்ட் ஸ்பாட் குடித்துக் கொண்டிருந்த மாமா கவனிக்கும்படியாக திரும்ப திரும்ப ‘தொர’ சொல்லி என்னைப் பார்த்து தள்ளாடி தள்ளாடி சல்யூட் செய்து கொண்டே இருந்தான்.
எனக்கு பகீர் என்றது. மாமா என்னைப் பற்றி என்ன நினைப்பார்.
’ச்சீ ... சுத்த ரௌடிப்பய பிள்ள சாவகாசம்’
நான் அவனை ஏறெடுத்தும் பாராமல் “ வீட்டுக்கு வாங்க, மாமா” என்றேன். ”இன்னொரு தடவ வர்றேன். அவசரமா ஊருக்கு போகவேண்டியிருக்கு. நகைக்கடைய வச்சிக்கிட்டு…. பெரிய பொறுப்புல்லையா? என்ன நான் சொல்றது.”
அங்கிருந்த கழக நண்பர்கள் எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டு ஒச்சுவை அப்புறப்படுத்த முனையும்போது அவன் “ எங்க தொரடா.. விடுங்கடா என்னை”ன்னு திமுறுவதையும் காண நேர்ந்தது.
ஒரு வழியாக மாமாவை ஆட்டோவ அனுப்பி விட்டு நான் ரௌத்திரம் பழகினேன்.
“ எங்கடா ஒச்சு… தாயோளி.. அவன செருப்பால அடிக்காம என் ஆத்திரம் தீராது. கேவலப்படுத்திட்டானே”
அப்போதெல்லாம் என்னிடம் fiery signs அதிகம்.
’தோழரே… விடுங்க தோழரெ… ஒங்க கிட்ட ஆரஞ்சு மிட்டாய் கேக்கத்தான் வந்திருக்கான். போதையில ’நாக்கு உலருது. தொர ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுங்க’ன்னு உங்களப் பாத்து புலம்பிக்கிட்டே இருந்தான். நாங்க வாங்கி கொடுத்து மன்றத்தில படுக்க வச்சிருக்கோம். ஆளு ஃப்ளாட் ஆகிட்டான்.’
நான் கோபத்தோடு அவன ரெண்டு மிதி மிதிக்காட்டா என் ஆத்திரம் தீராது என்று மன்றத்தை நோக்கி போனேன்.
கழக கண்மணிகள் ’தோழரே, வேண்டாம்’
என்னை சமாதானப்படுத்தினார்கள்.
என்னை அந்த ஏரியாவில் ’தோழர்’ என்றே விளிப்பார்கள். ’தோழர்’ என்றால் அது நான் தான்.
முதலில் அங்கிருந்து கிளம்பினால் தான் என் கோபம் மறைய வாய்ப்பு. நான் உடனே வீட்டுக்கு கிளம்பினேன்.
மறு நாள் மாலை தி.மு.க மன்றத்துப் பக்கம் வருகிறேன். செய்தி அதிர்ச்சி.
’தோழரே, ஒச்சு செத்துட்டான் தோழரே’
போத தெளுஞ்சி இங்க இருந்து ராவு வீட்டுக்கு போய் படுத்திருக்கிறான். ஆளு எழுந்திருக்கல. மத்தியானத்துக்கு மேல தத்தனேரி சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போயிட்டாங்கே.
எனக்கு உயிரே இல்ல. உடம்பே ஆடி விட்டது. ஒரு வேளை நான் எல்லோரும் பார்க்க அவனை நேற்று ரெண்டு மிதி மிதிச்சிருந்தா இன்று என் மேல கொலக்கேஸ் தான்.
எப்படியோ கோபத்தை அடக்கிக்கொண்டு வீட்டுப்போய் விட்டதால் தப்பித்தேன்.
இந்த விஷயத்தை என் திருமணத்திற்கு பின்னால் என் பெரிய மாமனாரிடமே சொல்லியிருக்கிறேன்.
இப்போது நினைத்தாலும் முதுகில் ஒரு சொடுக்கு சொடுக்கும்.
…………………………………………………………………
................................................................................