Share

Jul 3, 2017

கலைவாணன் கண்ணதாசன்


சமீபத்தில் கூத்துப்பட்டறைக்கு கண்ணதாசனின் மகன் ஸ்ரீனிவாசன் வந்திருந்தார். அவருடைய மகன் பாரத். இவரை கூத்துப்பட்டறை மாணவராக சேர்ப்பதற்காக வந்திருந்தார். அக்ரிகல்சுரல் ஆஃபீசர் ஸ்ரீனிவாசன்.
கண்ணதாசன் தன் அண்ணன் ஏ.எல்.எஸ் பெயரை மகனுக்கு வைத்திருக்கிறார். ஸ்ரீனிவாசன், மகன் பாரத் இருவரையும் பார்த்த போது எனக்கு மறைந்த கலைவாணன் கண்ணதாசன் ஞாபகம் வந்தது.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் எடிட்டர் கே.ஆர்.ராமலிங்கம் அவர்களின் எடிட்டிங் அறையில் கலைவாணனை சந்தித்திருக்கிறேன். அப்போது கலைவாணன் என்னைப்போலவே அஸிஸ்டண்ட் டைரக்டர்.

கே.ஆர்.ராமலிங்கம் நல்ல மனிதர். வேலையில்லாத நேரத்தில் என்னை எடிட்டிங் அறைக்கு தினமும் வரச்சொல்வார். எடிட்டிங் பற்றியும் நான் தெரிந்து கொள்ள ரொம்ப உதவியாக இருந்தவர் ராமலிங்கம்.

பெங்களூரு அசோகா ஓட்டலில் வி.கே.ராமசாமி, சுமலதா காம்பினேசனில் ‘சந்தம் தப்பாது, தாளம் தப்பாது’ பாடல் ஷூட்டிங்.
இன்னும் வி.கே.ராமசாமி பற்றி பதிவு எழுதவில்லை. வி.கே.ஆர் என்னைப் பற்றி பிறரிடம் சொன்ன வார்த்தைகள்: ’ இந்த யூனிட்டில் இந்தப் பையன் ஒரு ஜென்ட்ல்மேன்.’
இதையும் நான் இதுவரை எங்கும் குறிப்பிட்டதேயில்லை. இவ்வளவு காலம் கழித்து, எவ்வளவோ எழுதிய பின் இப்போது தான் சொல்கிறேன்.

வி.கே.ஆரின் மனைவி ரமணி முன்னாள் நடிகை. இவர் ஷூட்டிங் போது என்னைப்பற்றி டைரக்டரிடம் கேட்டார்.”இந்தப்பையன் கலைவாணனின் தம்பியா?”
எனக்கு அப்போது கலைவாணனைத் தெரியாது. பார்த்ததும் கிடையாது. கண்ணதாசன் மகன் என்பதும் நான் அறிந்திருக்கவில்லை.
ரமணி சொன்னார் : ’இந்தப் பையன் கலைவாணன் சாயலில் இருப்பதால் கேட்கிறேன்.’

அப்போது கலைவாணன் ஹீரோ ஆகும் ஆசையில் இருந்திருக்கிறார்.
டைரக்டர் சொன்னார் : ’இல்லம்மா. இவன் டைரக்சன் கத்துக்க வந்திருக்கிறான். இவனுக்கும் அவன மாதிரி ஹீரோ ஆச வந்துடாம!’
ஏனோ ஒவ்வொருவருக்கும் என்னைப் பார்த்தால் அந்தக் காலத்தில் யார் யாரோ மாதிரி தோண்றும். இதற்கு என்ன சொல்ல முடியும்?

அப்புறம் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் கலைவாணனை சந்தித்த போது எனக்கும் கலைவாணனுக்கும் அப்படி சாயலில் எந்த சம்பந்தமும் கிடையவே கிடையாது என்று உறுதியாக எனக்குத் தோண்றியது.
                                 ( கலைவாணன் )
கலைவாணன் என்னை விட உயரம்.ஆறடி இரண்டு  அங்குலம்!
கண்ணதாசன் பிள்ளைகளில் அவரைப்போல உயரமானவர் கலைவாணன்.
என்னையும் அவரையும் அறிந்த நண்பர்கள் யாரும் எங்களுக்குள் சாயல் ஒற்றுமை இருந்ததாக சொன்னதேயில்லை. சொல்லப்போனால் நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்டவர்கள். சாயல் ஒற்றுமையென்று கிஞ்சித்தும் கிடையாது என்று அடித்துச்சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னை முதல் முறையாக பார்த்தவர்கள் சிலரும் கலைவாணனை முதலில் பார்த்தவர்களும் மட்டுமே  நாங்கள் இருவரும் ஒரே சாயல் என்று சொல்லியிருக்கிறார்கள்.

’கரை கடந்த ஒருத்தி’ பட வில்லன் மனோபாரதி
( இவருடைய மகள் ‘பிரியமுடன் பிரபு’ படத்தில் கதாநாயகி ) எனக்கு கொஞ்சம் அறிமுகம். அவர் ரோகினி இண்டர் நேசனல் லாட்ஜில் மற்ற சிலரிடம் என்னை காட்டி “ ஜி.என்.ரங்கராஜனை அவர் ஆஃபிஸில் போய் நடிக்க சான்ஸ் கேட்டு சந்திக்கப்போய் இருந்தேன். அங்கே கலைவாணன்னு அவரோட அசிஸ்டண்ட். அவர் பார்க்க இவர் போலவே இருக்கிறார். ” என்றார்.

தேனாம்பேட்டையில் ஒருவர் என்னிடம் “ நீங்க கலைவாணன் தம்பியா?” என்று வலிய வந்து கேட்டார்.
இப்படி சென்னையில் நான் இருந்த காலங்களில் எனக்கும் கலைவாணனுக்கும் சாயல் ஒற்றுமை இருப்பதாக வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பல மாதங்கள் பழகிய அளவில் எனக்கும் கலைவாணனுக்கும் முக சாயல் என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்பது எனது திண்ணமான அபிப்ராயம்.

படம் பார்க்க நான் தேவி காம்ப்ளெக்ஸ் போயிருந்த போது கலைவாணன் அங்கே வேறு ஒரு படம் பார்க்க வந்திருந்தார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை போடுவார். அப்போது நான் ‘சாமி’ என்று அழைப்பேன்.

எடிட்டிங் அறையில் தினமும் சந்திக்கிற சூழல் இருந்த போது அவர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பாடலை வாய் விட்டு பாடிக்கொண்டே தான் இருப்பார். அது அவர் அப்பா எழுதிய பாடல் தான். எனக்கு இப்போது கூட அந்தப் பாடல் கேட்க நேரும்போது கலைவாணன் நினைவு தான் உடனே வரும்.
அந்தப்பாடல் “ அழகே அழகு, தேவதை! ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்!”

இந்த அழகே, அழகு பாடல் காட்சியை ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.

சிவாஜி கணேசன் ஷுட்டிங் ஒன்றில் ஒரு அசிஸ்டெண்ட் “ டேய் கலைவாணா!” என்று கூப்பிட்ட போது “ டேய், இங்க வாடா. என்.எஸ்.கே கலைவாணர் பெயரைத்தான் இவனுக்கு கவிஞர் வைத்திருக்கிறார். இப்படி மரியாதையில்லாம கூப்பிடாதடா.” என்று சிவாஜி கண்டித்ததுண்டு.


கலைவாணன் அவருடைய அண்ணன் கண்மணி சுப்பு இயக்கத்தில் “அன்புள்ள அத்தான்” படத்தில் ஷோபாவுக்கு ஜோடியாக நடித்த போது கவிஞர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்துப் போய் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் காட்டியிருக்கிறார்.
“ இவன் நடிக்க ஆசைப்படுகிறான். இவனுக்கு உங்க ஆசி வேண்டும்”


கலைவாணன் சிரிக்கும்படியாக உரையாடுவார். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்.
அப்பாவிடம் “ யாரைப்பற்றியெல்லாமோ பாட்டெழுதியிருக்கிறீர்களே. என்னைப் பற்றி ஒரு பாட்டு எழுதுங்கப்பா” என்று சொன்னபோது கவிஞர் உடனே, உடனே “ உன்னைப்பற்றி எப்போதோ எழுதி விட்டேனே! ’ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ? இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலர் இருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே!’ பாட்டு உன்னைப் பற்றித் தான் எழுதினேன்!” என்றாராம்.


தன் அண்ணன் கண்மணி சுப்பு இயக்கத்தில் ஷோபாவுடன் கலைவாணன் நடித்த “அன்புள்ள அத்தான்” Utter flap!

(இப்போது சில வருடங்களுக்கு முன் கலைவாணன் மகன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக நடித்த ’பொன்மாலைப் பொழுது’ படம் கூட ஓடவில்லை. இந்தப் பட பூஜையில் கமல் ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.)

அமெரிக்கா போயிருந்த போது உடல் நிலை மிகவும் சீர் கெட்டு மருத்துவமனையில் இருந்த கவிஞரை கவனித்துக்கொள்ள கலைவாணன் சென்றார். அங்கே கவிஞரின் மூன்று வயது குழந்தையான தன் step sister விசாலியை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி விளையாண்டிருக்கிறார்.

 கண்ணதாசன் அமெரிக்காவிலேயே இறந்த பின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. ஈமக்கிரியையில் கொள்ளி போடும் கண்மணி சுப்பு அருகில் கதறி அழுதவாறு கலைவாணன் நிற்கிற நிழற்படம் செய்திப் பத்திரிக்கையில் நான் பார்க்க நேர்ந்தது.

பின்னாளில் கலைவாணன் “கண் சிமிட்டும் நேரம்” “ வா அருகில் வா” என்று இரண்டு த்ரில்லர் படங்களை இயக்கினார்.


அகால மரணம் என்பது யாருக்கு என்றாலும் வேதனையான, கொடுமையான விஷயம்.
A  promising future was cut short.
ஏன்? எதனால்? போன்ற காரணங்கள் துச்சமானவை.………………………………..

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_12.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.