Share

Jul 13, 2017

A Ferocious Politician


எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட போது அவருடன் என் மாமனார் இணைந்தவர். கட்சி ஆரம்பிக்கு முன்னர் தாமரைக்கொடியை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்றியவர். எம்.ஜி.ஆர் கட்சிக்கு கொடி நிச்சயிக்கும் முன் தாமரை வரையப்பட்ட கொடி தான் அதிமுகவிற்கு தமிழகமெங்கும் கம்பத்தில் ஏற்றப்பட்டது.

தி.மு.க. அமைச்சர் மாதவன் என் மாமனாரை கட்சியை விட்டு எம்.ஜி.ஆருடன் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ போனில் பேசிப்பார்த்தார். நடக்கவில்லை.


அ.தி.மு.கவை மேற்கு முகவை மாவட்டத்தில் வளர்ப்பதில் பெரும்பங்காற்றியவர் என்று கட்சிக்காரர்கள் சொல்வார்கள்.
தி.மு.க. ஆட்சியில் அன்று அதனால் பல சிக்கல்களை சந்தித்தவர்.

அதிமுகவில் வெறும்பயல்களெல்லாம் பெரும்பணக்காரர்கள் ஆன போது அந்தக்கால மதிப்பில் பல லட்சங்களை அரசியலில் தொலைத்தவர்.
He was a ferocious politician. 

தி.மு.கவில் இருந்த மதுரை பழக்கடை பாண்டியை ஸ்ரீவி கிருஷ்ணன் கோவில் அருகில் அதிமுகவினர் தாக்க முற்பட்ட போது காரில் இருந்த சிறுவன் இளஞ்செழியன் இறக்கும்படியானது.
பிரபலமான அந்த இளஞ்செழியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரில் ஒருவர் என் மாமனார். இன்னொருவர் தாமரைக்கனி.
அப்போது தீப்பொறி ஆறுமுகம் இளஞ்செழியன் கொலை வழக்கு பற்றி ஆக்ரோஷமாக தமிழக தி.மு.க மேடையில் என் மாமனார் பெயரை குறிப்பிட்டு விவரித்து பேசுவதுண்டு.
முரசொலியில் என் மாமனார் புகைப்படம் போட்டு கடுமையாக தாக்கி எழுதப்பட்டது.
( பழக்கடை பாண்டி பின்னால் அதிமுகவிற்கு வந்து, மதுரையில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயலலிதாவுக்கு சேலைகள் வாங்கிக் கொடுத்து, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டதனால், பின் ராமாவரம் தோட்டத்தில் அடி வெளுக்கப்பட்டது சுவாரசியமான தனி கதை )


1977ல் எம்.ஜி.ஆர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேட்பாளராக என் மாமனாரை தேர்தலில் நிற்கச் செய்ய முடிவெடுத்த போது “என்னை இங்கே நிறுத்தினால் அதிமுக ஒரு தொகுதியை இழக்க நேரிடும் “ என்று சொல்லியிருக்கிறார்.
மம்சாபுரம் அறிவரசன் வேட்பாளராக கட்சியால் அறிவிக்கப்பட்ட போது அதை தடுத்து தாமரைக்கனியை வேட்பாளராக்கச் செய்தார்.

ஐந்தாம் முறையாக தாமரைக்கனி எம்.எல்.ஏ.வாக இருந்த போது ஒரு கூட்டத்தில் பேசிய போது சொன்னார் : ”நான் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன போது ஒரு முறை என்னையும் சந்திரனையும் மௌண்ட் ரோட்டில் பார்க்க நேர்ந்த எம்.ஜி.ஆர்
“ சந்திரன்! அசெம்பிளிக்கு போகாம இங்க என்ன செய்றீங்க” என்று சந்திரனைப் பார்த்து கேட்டார். அப்ப சந்திரன் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ என்று எம்.ஜி.ஆரே நினைத்துக்கொண்டிருந்தார். எஸ்.எம்.டி சந்திரன் போட்ட பிச்சை இந்த எம்.எல்.ஏ பதவி!”
.............................

1979ல் ஆளுங்கட்சிக்காரன் ஒருவனை கள்ளச்சாராய கேஸில் போலீஸ் அரெஸ்ட் செய்திருக்கிறது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷன்
சப் – இன்ஸ்பெக்டர் ரெங்கராஜன்.
கட்சிக்காரர்கள் என் மாமனாரிடம் வந்து முறையிட்டவுடன் இவர் ஸ்டேசனுக்கு வந்து எஸ்.ஐ யை பார்த்திருக்கிறார். அவர் விசாரித்து விட்டு அனுப்பி விடுவதாக சொல்லியிருக்கிறார். இவர் சமாதானமாகி ஸ்டேஷனை விட்டு இறங்கிய போது எம்.எல்.ஏ தாமரைக்கனி “ என்ன அண்ணாச்சி! விடமாட்டேன்றானா? வாங்க. அவன என்னன்னு கேப்போம்” என்று மீண்டும் ஸ்டேசனுக்குள் அழைத்திருக்கிறார்.

போனவுடன் விவாதம் முற்றியிருக்கிறது. எஸ்.ஐ பொறுமையிழந்து “ இப்ப கூட நான் சந்திரனை அரெஸ்ட் செய்ய முடியும். இளஞ்செழியன் கொலை வழக்குல வாரண்ட் இருக்கு.” என்று சொல்லியிருக்கிறார். என் மாமனாரின் கையைப் பற்றி பிடித்திருக்கிறார். உடனே தாமரைக்கனி ஓங்கி எஸ்.ஐயின் பிடறியில் அடித்திருக்கிறார். அடித்தவர் அங்கு நிற்கவில்லை. உடனே ஸ்டேஷனை விட்டு வெளியேறி விட்டார்.

என் மாமனாரும் எஸ்.ஐயும் போலீஸ் ஸ்டேஷனில் கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.
சட்டசபையில் அன்று விவாதப்பொருள் ஆன நிகழ்வு.

இது பற்றி அவருடைய டைரியில் எழுதியிருந்தார் : ”கைது செய்யப்பட்டு மதுரை சென்ட்ரல் ஜெயிலில் நான் அடைக்கப்பட்டேன். அங்கிருந்த கைதிகள் எல்லோரும் என்னை ’ஆளுங்கட்சிக்காரன் ஒருவன் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு வந்திருக்கிறானே!’ என்று அதிசயமாக பார்த்தார்கள்.”
…………………………..



நான் என் திருமணப் பத்திரிக்கையை கொடுக்க மதுரை நத்தம் ரோட்டில் இருந்த எஸ்.பி. ( நார்த் ஆஃபிஸ்) போயிருந்தேன். அங்கே என்னுடைய கல்லூரி வகுப்புத் தோழன் எஸ்.பி.யின் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்தார். பட்டாபி. அவருடன் இன்னொரு ஸ்பெஷல் ஆஃபிசர். அவர் ரெங்கராஜன்!
ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேசனில் என் மாமனாருடன் கை கலப்பில் ஈடுபட்ட எஸ்.ஐ. ரெங்கராஜன்.

பட்டாபிக்கு பத்திரிக்கை வைத்தேன். பட்டாபி பக்கத்தில் இருந்த ரெங்கராஜனிடம் சிரித்தவாறு சொன்னார்: “ எஸ்.எம்.டி.சந்திரன் மகளைத் தான் என் நண்பர் ராஜநாயஹம் மணம் புரிகிறார்.”
என்னுடைய திருமணம் நவம்பர் ஏழாம் தேதி.
பட்டாபி என்னிடம் ” நவம்பர் பதினாறாம் தேதி ரெங்கராஜனுக்கு திருமணம்!”

நான் ரெங்கராஜனுக்கு என் திருமணப் பத்திரிக்கையை கொடுத்தேன். அவர் தன்னுடைய திருமணப்பத்திரிக்கையை எனக்கு கொடுத்தார்.
கட்டாயம் திருமணத்திற்கு வரவேண்டும் என்று ரெங்கராஜன் என்னிடம் சொன்னார். நானும் என் திருமணத்திற்கு அவசியம் ரெங்கராஜன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
இருவரும் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம். “ Wish you a happy married life!”

என் வகுப்புத் தோழன் பட்டாபி என் திருமணத்திற்கு வந்திருந்தார். ரெங்கராஜனால் வர முடியவில்லை. நானும் கூட அவர் திருமணத்தின் போது புது மாப்பிள்ளை என்பதால் போக முடியாமல் போய் விட்டது.

................................

https://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_11.html

https://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

https://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2015/02/blog-post_7.html

https://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.