Share

Dec 22, 2015

சார்வாகன்



நேற்று இரவு கூத்துப்பட்டறையில் ஒரு அருமையான நாடகம். ந.முத்துசாமியின் ’கருவேல மரம்’. நாடகம் முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்பிய போது முத்துசாமி சார் சொன்னார்: ’சார்வாகன் இறந்துட்டாராம்.’



மறைந்த தமிழ் எழுத்தாளர் சார்வாகன் பத்மஸ்ரீ விருது பெற்றவர். பத்மஸ்ரீ விருது பெற்ற ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி போல நாடக செயல்பாடுகளுக்காக, படைப்பிலக்கியத்துக்காக இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவரல்ல. மருத்துவத்துறை ஆராய்ச்சிக்காக, மருத்துவத்துறை சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
டாக்டர் ஹரி சீனிவாசன் என்ற சார்வாகன்.

சில நாட்களுக்கு முன் இந்த மாதம் ந.முத்துசாமி, கி.ரா இருவருமே என்னிடம் சார்வாகன் பற்றி பேசினார்கள்.


இந்து சாஸ்திரத்தில் சார்வாக ரிஷி ஒரு நாத்திகர். இந்த ரிஷியின் பெயரால் சிறந்த சிறுகதைகள் எழுதிய டாக்டர் ஹரி சீனிவாசன். ஆண்டன் செக்காவ், சாமர்செட் மாம் கூட டாக்டர்கள் தானே!
குஷ்டரோகத்தின் மீது சமூகத்துக்கு உள்ள அருவருப்பு. இவர் தன்னுடைய பணியாளர்களாகக் கூட குஷ்டரோகிகளை அருகாமையில் வைத்திருந்தவர். ”இவர்களுக்கு குணமாகி விட்டது. ” என்பார்.

கி.ராஜநாராயணனை சந்திக்க புதுவைக்கு சார்வாகன் சென்றிருக்கிறார். ”உங்களைப் பார்க்கனும்போல இருந்துச்சி. அதனால வந்தேன்” என்றாராம்.
மருத்துவராக இருந்தால் என்ன? முதுமையும் நோயும் படுத்தும் பாடு. இவருடைய ஏற்கனவே மனைவி மறைந்து விட்டார். சார்வாகன் கால்கள் வீங்கி யானைக்கால் போல இருந்திருக்கிறது. கி.ரா.விடம் தன் காலை கையால் அமுக்கி காட்டியிருக்கிறார். அமுக்கிய இடம் பள்ளமாக ஆகியிருக்கிறது. பிறகு பள்ளம் மறைய  நேரம் ஆகியிருக்கிறது. இதை ஒரு விளையாட்டு போல செய்து காட்டியிருக்கிறார்.
குஷ்டரோகிகளுக்கு உலகத்தரமான, உயர்வான சிகிச்சை அளித்து அளப்பறிய சாதனை செய்தவர்!


க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட சார்வாகனின் சிறுகதைத்தொகுப்பு “எதுக்குச் சொல்றேன்னா…” அன்றைக்கு படிக்க கிடைத்தவர்கள் பாக்யவான்கள்.
நற்றிணைப்பதிப்பகம் இப்போது அவருடைய படைப்புகளை வெளியிட்டிருக்கிறது.
..................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.