Share

Dec 13, 2015

அரங்கவியல் நாயகர் சே.ராமானுஜம்


தப்பாட்டம், திருக்குறுங்குடி கைசிக நாடகம், போன்றவற்றை நாடக உலகம் அறியச்செய்த சே.ராமானுஜம். சில்ட்ரன்ஸ் தியேட்டர் நடத்தியவர்.


ந.முத்துசாமி சார் பற்றி ஒரு பதிவு 5ம்தேதி எழுதியபோது மிகத் தற்செயலாக ”டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்று ராமானுஜம் போன்றவர்கள் தமிழ் நாடக இயக்கத்துக்கு வந்தார்கள் என்றால், அதற்கு முற்றிலும் மாறாக ’எழுத்து’ பத்திரிக்கையின் வழித்தோன்றல் ‘கூத்துப்பட்டறை’ என்ற பெருமிதம் முத்துசாமிக்கு உண்டு” என நான் குறிப்பிட்ட போது 7ம் தேதி ராமானுஜம் மறைந்து விடுவார் என்று நினைத்துப்பார்க்கவே இல்லை.


நாங்குனேரியில் பிறந்து டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்று, காந்தி கிராமத்தில் வேலை பார்த்து பின், ஜி.சங்கரப்பிள்ளை அழைத்ததால் கேரளா திருச்சூர் போய் நாடகப்பள்ளி அமைத்தவர். அங்கே இவர் சாதனை காரணமாக மிகுந்த செல்வாக்கு பெற்றவர். இவர் அங்கேயே இருந்திருந்தால் தகுதிக்கேற்ற அங்கீகாரம் பெற்றிருப்பாரே என்று எண்ணினால் அது உண்மை. மறைந்த போது இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த கேரள கலைஞர்கள் அதற்கு சாட்சி. ’எங்கட குருவான!’


திருச்சூரிலிருந்து இவர் தஞ்சை தமிழ்பல்கலை கழகத்திற்கு துணை வேந்தர் வி.ஐ.சுப்ரமண்யத்தின் அழைப்பின் பேரில் வந்தவர் ராமானுஜம்.

கைசிக நாடகத்தை மீட்டெடுக்க ந.முத்துசாமி மூலம் திருக்குறுங்குடியில் பிறந்த அனிதா ரத்னம் அறிமுகம் சே.ராமானுஜத்திற்கு கிடைத்திருக்கிறது.

யாருடைய கவனிப்பும் இன்றி இருந்த கைசிகம், இரண்டு பேர் சம்பிரதாயமாக, அசுவாரசியமாக நம்பிராயர் கோயிலில் பார்த்துக்கொண்டிருந்த கைசிகம்

இன்று உலகம் முழுவதிலும் இருந்து மூவாயிரம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறதென்றால் பிரமிப்பான விஷயம். மிகுந்த பிராயாசையுடன் கைசிகத்தின் ஓலைச்சுவடிகளைத்தேடி மீட்டெடுத்த புண்ணியவான் ராமானுஜம். நம்பாடவன், பிரும்ம ராட்சஸ் பாத்திரங்களை கைசிகத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ராமானுஜம். பைரவி ராகப் பண்களை புராதன தமிழிசையில் ’கைசிகம்’ என்பார்கள்.


போன ஏகாதசியில் கூட திருக்குறுங்குடி கோவிலில் இதை இயக்கிக்காட்டியவர் இந்த ஏகாதசியில் பூவுலகில் இல்லை.


இவருடைய ’வெறியாட்டம்’ நாடகம் இன்றும் சிலாகித்து நினைவு கூரப்படுகிறது.


திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நேற்று நடந்த இரங்கல் கூட்டத்தில் உற்ற தோழர் ஒருவரை, ஆத்மார்த்த சினேகத்தை இழந்து ந.முத்துசாமி, அரசு, மங்கை, மு. நடேஷ், கலைராணி, அனிதாரத்னம், பிரளயன், கருணா பிரசாத், காவ்யா சண்முகசுந்தரம் ஆகியோர் கண்ணில் நீர் மல்க, தளுதளுத்து கலங்கியதைப் பார்த்த போது நெஞ்சே உறைந்து போய்விட்டது. எல்லோருமே அவர் தங்களுக்குள் நிகழ்த்திய Transformation பற்றிப் பேசினார்கள். அவருக்கு தங்கள் மீது இருந்த விசேஷமான அன்பு பற்றி சலிக்காமலே பேசினார்கள். அவர் நாடக உலகத்தில் குறிப்பாக ’அன்பு’ என்பதை ஒரு ஆயுதமாகமாகவே கொண்டிருந்த மகான் என்பதை வலியுறுத்திக்கூறினார்கள்.

ந.முத்துசாமியின் ’நாற்காலிக்காரர்’, இந்திரா பார்த்தசாரதியின் ’கால யந்திரம், ’ராமானுஜர்’ நாடகங்களை பிரமாதமான ஈடுபாட்டுடன் இயக்கியவர் ராமானுஜம்.

நவீன நாடக ஆசான் அல்காஜியின் மாணவரான பேராசிரியர் சே.ராமானுஜத்தின் அபூர்வ பங்களிப்பு ’குழந்தைகளுக்கான நாடக அரங்கம்’ என்கிற அசாத்தியமான சாதனையல்லவா?

ஒரு அனுபவச்செறிவு மிகுந்த முதிய ஞானி மறையும்போது ஒரு மிகச்சிறந்த நூலகத்தையேயல்லவா இழக்க நேரிடுகிறது.....


…………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.