-
எஸ்.எஸ்.வாசன் தன் ஜெமினி ஸ்டுடியோவின் அந்த உதவி ஒளிப்பதிவாளரை
நிமிர்ந்து பார்க்கிறார். என்.கிருஷ்ணசுவாமி முப்பது வயதைத்தொட்டிருக்கவில்லை அப்போது.
தனியாக படம் எடுக்க முடிவு செய்து விட்டார். அதனால் ஜெமினி ஸ்டுடியோவிலிருந்து வெளியேற
முடிவு செய்து தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறார். அதை ஒப்புக்கொண்டு அப்ரூவல் லெட்டர்
தரும் வாசன் கிருஷ்ணசாமியிடம் சொல்கிறார்.
“ I give this letter to you with
mixed feelings of joy and sorrow. Joy, because you are improving your prospects
and Sorrow, because you are leaving us.”
”ஒன்றே குலம்” தயாரிப்பும் இயக்கமும் கிருஷ்ணசுவாமி தான்.
ஆர்.எஸ்.மனோகர், மாதுரி தேவி, சந்திர பாபு, சாரங்கபாணி ஆகியோர்
நடித்த படம் ’ஓன்றே குலம்’. எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த ’மீரா’ படத்தின் இசையமைப்பாளர்
எஸ்.வி.வெங்கட்ராமன் தான் இசையமைத்தார். வசனம் எஸ்.டி.சுந்தரம்.
கோடம்பாக்கத்தில் நடந்த ‘ஒன்றே குலம்’ பூஜைக்கு அப்போதைய
முதலமைச்சர் காமராஜர் தாமதமாக வர நேர்ந்தது. ரயில்வே லெவல் க்ராஸிங்கில் 45 நிமிடம்
முதல்வரின் கார் காத்திருக்க நேரிட்டதால் அப்போது தான் கோடம்பாக்கம் பாலம் வேண்டும்
என முடிவெடுத்து செயல் படுத்தினார் படிக்காத மேதை. ஒரு வகையில் கோடம்பாக்கம் பாலம்
வர கிருஷ்ணசுவாமியும் கூட ஒரு காரணம்!
“ ஏன் பிறந்தாய் கண்ணே! ஏன் பிறந்தாய் கண்ணே” என்ற பாடலை
இப்போது 91 வயதில் கூட அழகாக பாடிக்காட்டுகிறார் என்.கிருஷ்ண சுவாமி!
இந்தப்படம் 1955ல் ரிலீஸ். பின்னால் பிரபல இந்தி நடிகையாக
கலக்கப்போகும் வஹிதா ரஹ்மானுக்கு கூட ஒரு பாட்டு.
“ மாங்கிளை மேலே, பூங்குயில் கூவுது
வசந்தம் வருகுதடி, நெஞ்சில் மையல் பெருகுதடி
மாறனைப் போல காதலன் வருவான்
மானே எழுந்திரடி, இளமை போனால் வராதடி!”
இதையடுத்து அவர் எடுத்த படம் இன்று யாருக்கும் சொல்லித்தெரியவேண்டியதே
இல்லை. ”படிக்காத மேதை”
பெங்காலி கதை. ஆஷா பூர்ணாதேவி எழுதிய ’ஜோக், பியோக்’ தான்
படிக்காத மேதையின் மூலக்கதை.
ட்ரீட்மெண்ட் எல்லாம் கிருஷ்ணசுவாமியே எழுதித் தயார் செய்திருந்தார்,
ஜி.என்.வேலுமணி அப்போது பாகப்பிரிவினை தயாரித்துக்கொண்டிருந்தார்.
அந்தப்படத்திற்கு மட்டுமல்லாமல். பீம்சிங் தான் படிக்காத மேதைக்கும் இயக்குனர். வேலுமணிக்கு
ஒரு நியாயமான கவலை. பாகப்பிரிவினைக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கும் எம்.எஸ்.சோலைமலையையே
கிருஷ்ணசுவாமி தன் படத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டால் தன் படவேலையில் சிக்கல் ஏற்படுமே.
தற்செயலாக வேலுமணி ஒரு நாள் கிருஷ்ணசுவாமியை சந்திக்க நேர்ந்த போது “ உடுமலை நாராயண
கவி கூட ஒரு குட்டை கவி இருக்கானே. அவனை உன் படத்துக்கு வசனம் எழுதச்சொல்லலாமே!” என்று
அனாவசிய ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஆனால் தன் சுய நலத்தோடு அவர் சொன்ன இந்த ஆலோசனை
குட்டை கவி எனப்படும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வாழ்வில் மிகப்பெரிய பொன்னான வாய்ப்பாக
ஆகிப்போனது. இதற்குப்பிறகு தான் ’தெய்வப்பிறவி’க்கு வசனம் எழுத வாய்ப்பும் உடனே தேடி
வந்தது.
குட்டை கவி அப்போது உடுமலை நாராயண கவிக்கு உதவியாளர். கிருஷ்ணசுவாமியை
‘குனா,கானா கே.எஸ்.ஜி’ சந்திக்கிறார். படிக்காதமேதையின்
ட்ரீட்மெண்ட்டைக்காட்டி கிருஷ்ணசுவாமி விளக்கியவுடன் கே.எஸ்.ஜி “முதலாளி!முதலாளி! இதுக்கு
நானே வசனம் எழுதுறேன் முதலாளி..” என்று கெஞ்சிக்கொண்டே கையைப்பிடித்துக்கொண்டு விட்டார்.
வேறு யாரையாவது முடிவு செய்து விடக்கூடாதே என்ற கவலையும் தான் காரணம்.
முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை
உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி
சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’
“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு
செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் சொன்னவுடன் கதையை முழுக்க
அசை போட்டு விட்ட கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள் “ குடல புடுங்கி
வக்க சொல்றீங்களே முதலாளி…”
பீம்சிங் இயக்கிய படிக்காத மேதையும், கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய
தெய்வப்பிறவியும் 1960ல் தான் ரிலீஸ். வசனம்
எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அதன் பிறகு 1962ல் சாரதாவை இயக்கி பின்னர் உச்சம் தொட்டு ‘இயக்குனர் திலகம்’ என்ற பட்டம் பெற்றார்.
இயக்குனர் திலகம் எனும்போது துக்ளக் சோ கேள்வி பதில் ஒன்று
நினைவுக்கு வருகிறது.
’தமிழகத்தின் இரண்டு திலகங்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’-
இது வாசகர் கேள்வி. இந்த கேள்வி மக்கள் திலகம், நடிகர் திலகம் குறித்தது என்பது வெளிப்படை. ஆனால் சோவின் குறும்பான பதில்.
“ இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சிறந்த இயக்குனர்.
திரை இசை திலகம் கே.வி.மஹாதேவன் சிறந்த இசையமைப்பாளர்.”
’படிக்காத மேதை’ தயாரித்த என்.கிருஷ்ண சுவாமி அதன் பின்னர்
1965ல் இன்னொரு படம் தயாரித்து அவரே இயக்கினார். அதன் பெயர் ‘படித்த மனைவி’. எஸ்.எஸ்.ராஜேந்திரன்,விஜயகுமாரி
நடித்தது.
’அன்பே உன் பெயர் அன்னை, அழகே உன் பெயர் மங்கை, அறிவே உன்
பெயர் தலைவி, இந்த அமைப்பே எந்தன் மனைவி.” பாடல் ’படித்த மனைவி’யில் தான்.
தஞ்சை பாபநாசத்தில் பிறந்தவர் என்.கிருஷ்ண சுவாமி.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட் படிக்கும்போது
(1939 -1941) டைகர் வரதாச்சாரியாரிடம் இசை பயின்றிருக்கிறார். பம்மல் சம்பந்தம் முதலியாரின்
மனோகரா நாடகத்தில் விஜயாளாக ஸ்திரிபார்ட் வேடம் செய்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பற்றி, சங்கீதமேதைகள்
பற்றியெல்லாம் டாக்குமெண்டரி தயாரித்திருக்கிறார். இப்போதும் சுறுசுறுப்புடன் டி.வி
சீரியல்கள் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறார்.