Share

Nov 20, 2015

இயக்குனர் திலகம் கே.எஸ் கோபாலகிருஷ்ணன்





கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் படம் ’சாரதா’ வை இப்போது பார்க்கும்போது அந்தக்காலத்தில் எப்படி ஒரு புதிய இயக்குனர் இப்படி ஒரு வித்தியாசமான படம் எடுக்க முடிந்தது என்றோன்றும். ஒரே நேரத்தில் இந்தியில் குருதத், தமிழில் எஸ்.எஸ்.ஆர் இருவரையும் கதாநாயகனாக வைத்து எடுத்தார். படம் ரிலீஸுக்கு முன்னரே குருதத் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். 
 ஸ்ரீதர் வசனகர்த்தாவாக இருந்த காலத்தில் அவருக்கு ’அமரதீபம்’ போன்ற படங்களில் வசனம் எழுத உதவியாளராக இருந்தவர் கே.எஸ்.ஜி. பின்னர் இவரே வசனகர்த்தாவாக கிருஷ்ணன் பஞ்சுவின் ’தெய்வப்பிறவி’க்கெல்லாம் வசனம் எழுதியவர். 
திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறார்.

இவர் மீது நிறைய GOSSIP! இன்று சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள். பல பிரபல நடிகைகள் இவரோடு இணைத்து பேசப்பட்டார்கள்.
மல்லியம் என்ற கிராமம் சொந்த ஊர். தமிழ் சினிமாவில் ’இயக்குனர் திலகம்’ என்ற பட்டம் பெறும் அளவுக்கு 1960களில் கொடி கட்டினார்.



இவர் படங்களுக்கு பெண்கள் அதிகம் வருவார்கள்.கதைக்கரு என்பதைப்பொருத்தவரை இவர் எடுத்த ’செல்வம்’ முழுக்க பாலியலை  சார்ந்தது. Carnal desire! சிறந்த படம் என்பதை இன்று கூட அறிய முடியும். நாற்பது வருடங்களுக்கு முன் ’செல்வம்’ எதிர்கொண்ட கடும் விமர்சனம் சொல்லி முடியாது.
கிருஸ்தவ நிறுவனங்கள் திரைப்படங்களை பள்ளி மாணவர்களுக்கு காட்டுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். திருச்சியில் ஒரு பாதிரியார் சொன்னார். “சிவாஜி நடித்த படம். கே.எஸ்.ஜி இயக்கம் என்பதால் குடும்பப் பாங்கான படமாயிருக்கும் என்ற நம்பிக்கையில் திருச்சி பிரபாத்தில் ரிலீஸ் ஆகியிருந்த ’செல்வம்’ பார்க்க பள்ளிக்கூட விடுதி மாணவர்களை அழைத்துப்போய்விட்டோம்.மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.குடும்பப்பெண்கள் இடைவேளையில் தலை நிமிர்ந்து உட்காரமுடியாமல் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதை இன்றும் மறக்கமுடியவில்லை.”
ஒரு சிவாஜி ரசிகர். இப்போதும் சிவாஜி படம்  தியேட்டரில் பார்க்காமல் இருக்கமாட்டார். அனேகமாக சிவாஜியின் ஒவ்வொரு படத்தையும் பத்து,இருபது முறை பார்த்து விடுவார். ஆனால் ’செல்வம்’ அந்தக்காலத்தில் ரிலீசான போது ஒரு முறை பார்த்த போது படத்தின் இடைவேளையோடு எழுந்து கோபத்தோடு வெளியேறியவர்  அதன் பிறகு பழைய படமாக தியேட்டர்களில் போட்டாலும் சரி, இன்று வரை டி.வி.டியிலும் கூட பார்க்கவே மாட்டார். தாராபுரம் சுந்தர்ராஜன் ஜமுனாராணியுடன்  பாடிய பாடல் “ உனக்காகவா, நான் உனக்காகவா! என்னைக்காணவா,என்னில் உன்னைக்காணவா!” பாடல், டி.எம்.எஸ்,சுசிலாவின்  ”ஒன்றா, இரண்டா எடுத்துச்சொல்ல” பாடல் எங்கேயாவது ஒலிக்கக் கேட்டால் கூட அவர் முகம் இறுகிப்போய்விடும்.

’சித்தி’ யில் பத்மினியிடம் கிளர்ந்தெழும் தாபத்தை எம்.ஆர். ராதா வெளிப்படுத்துவது விரசவிரகமாக இருப்பதாக சொன்னவர்கள் உண்டு.

கே எஸ் ஜி எனப்படும் இயக்குனர் கே எஸ் கோபால கிருஷ்ணன் உச்சத்தில் இருந்த காலத்தில் மிகுந்த வாய்த்துடுக்கு உள்ளவர். சிவாஜியிடம் கூட தன் வாய்த்துடுக்கை காட்டக்கூடியவர்.யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவார்.விநியோகஸ்தர்களிடம் முகத்தில் அடித்தாற்போல பேசி விடுவார்.

சாதாரண கதாசிரியராய் இருக்கும்போதே ஏவிஎம் ஸ்டூடியோவில் சுவாரசியமாக கே எஸ் ஜி டீ குடித்தவாறே ஒரு படத்தின் கதையில் குறிப்பிட்ட காட்சியொன்றை உணர்ச்சி வசப்பட்டு விளக்கமாக சொல்லிக்கொண்டிருக்கும்போது, வி எம் செட்டியாரிடம் மிக தற்செயல் அனிச்சையாகஎச்சில் கப்’பை கொடுத்து விட்டாராம்.

’கை கொடுத்த தெய்வம்’ படத்தில் எஸ் எஸ் ஆர் எழுதிய கடிதம். சிவாஜி வாசிக்கவேண்டும். முண்டா பனியன் நாலு முழ வேட்டியுடன் செட்டில் இயக்கும் கே எஸ் ஜி 'நீங்கள் கடிதத்தை வாசிக்கிற முகபாவம் கொடுத்தால் போதும்.ராஜேந்திரன் குரல் படத்தில் ஓவர்லேப் செய்து கொள்வேன்' என சொல்லியதும் " யோவ் னா கானா நானே என் குரல்ல பேசிடுறேனே " (சிவாஜி செல்லமாக னா கானா என்று தான் கே எஸ் ஜி யை கூப்பிடுவாராம்.குனா கானா என்றால் ’குட்ை கி’! )என்றதும் மூக்குபொடியை உறிஞ்சிய குள்ளமான கே எஸ் ஜிஇது என் படம், நான் டைரக்டர். நான் சொல்றபடி செய்யுங்க " என்றவாறே நிற்காமல் மற்ற விஷயங்களை கவனிக்கச்சென்றுவிட்டாராம்! சிவாஜி சிரித்துவிட்டாராம்!

’பேசும் தெய்வம்’ ஷூட்டிங்கில் சிவாஜி ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறார். மற்ற நடிகர்களையெல்லாம் பத்மினி உள்பட நடிக்கிற போது பாராட்டும் கே.எஸ்.ஜி தன்னை மட்டும் பாராட்டுவதேயில்லை. சிவாஜி நடித்து முடித்ததும் அடுத்த ஷாட் போய் விடுவார் இயக்குனர். குழந்தை போலஏங்கி சிவாஜி கேட்டிருக்கிறார்:’ஏண்டா குனா கானா! என் நடிப்பை பாராட்ட மாட்டியா? மத்தவங்கள மட்டும் தான் பாராட்டுவியா?’ கே.எஸ்.ஜி. இவரை நிமிர்ந்து பார்த்து விட்டு கண் கலங்கிப்போய் சொன்னாராம். “நீங்க எப்பவுமே என் எதிர்பார்ப்புக்கும் மேலே மிகவும் அற்புதமாக, ரொம்ப பிரமாதமாக நடித்து விடும்போது உங்களை பாராட்ட எனக்கு என்ன தகுதியிருக்கிறது?” சிவாஜி அழுது விட்டாராம்!

இவர் படங்களில் எஸ்.வி ரங்காராவ் மிகவும் பயன்படுத்தப்பட்டவர். சாரதா துவங்கி,தெய்வத்தின் தெய்வம் , கற்பகம் ,கைகொடுத்த தெய்வம்,பேசும் தெய்வம் ,கண்கண்ட தெய்வம் என்று எத்தனையோ படங்கள் ரங்கா ராவ் நடிப்பால் பெருமைப்படுத்தப்பட்டவை. இந்தகண் கண்ட தெய்வம்’  ரங்காராவ்,எஸ் வி சுப்பைய்யா,பத்மினி அருமையாக நடித்திருப்பார்கள் . 

இந்த படம் மீண்டும் ரங்காராவ் ,சுப்பையா இருவரும் மறைந்த பின் (ரங்காராவ் 1974 ல் மறைந்தார்.1980ல் சுப்பையா மறைந்தார் )பலவருடம் கழித்து சிவாஜி, தேங்காய் சீனிவாசன்,கே.ஆர் விஜயா நடிப்பில் "படிக்காத பண்ணையார் " என பலவருடம் கழித்து கே எஸ் ஜியால் இயக்கப்பட்டு வந்தது.ரங்காராவ்,சுப்பையா இருவரும் எவ்வளவு சிறந்த மகத்தான நடிகர்கள் என்பதை உணர்த்துவதாக படிக்காத பண்ணையார் அமைந்து விட்டது.பத்மினி இடத்தில் கே ஆர் விஜயா சகிக்கவில்லை. கண் கண்ட தெய்வம் படத்திற்கு உறை போட காணாது ’படிக்காத பண்ணையார்’.

கதை சொல்லும்போதும் சரி, காட்சியை விளக்கும்போது, நடிகர்கள் நடிக்கும்போதும் உணர்ச்சி வசப்பட்டு அழுது விடுவார்.கோபத்தையும் மிக கடுமையாக வெளிப்படுத்துவார்.

ரங்காராவ்ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவ் அவர்களை பார்த்து சத்தமாக திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய நடிகரைப்பார்த்து இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.

கமல் ஹாசன் ’குறத்தி மகன் படத்தில் கே.எஸ்.ஜி என்னை ஒரு ஓரமா நிறுத்திட்டார் அண்ணே..’ என்று ஆர்.சி.சக்தியிடம் அழுதிருக்கிறார்.

சாவித்திரியை ’ஆயிரம் ரூபாய்’ படத்தில் குறத்தியாகவே நடிக்க வைத்தவர்.’கை கொடுத்த தெய்வம்’ சாவித்திரிக்கு முக்கியமான படம்.

பணமா பாசமா படத்தில் எஸ்,வரலட்சுமி, பகவதி, விஜய நிர்மலா மூவரும் பின்னியெடுத்திருப்பார்கள்.
 அந்த பணத்திமிர் மாமியார் வரலட்சுமி பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
’அலேக்’ நிர்மலா என்று பேர் பெற்று ‘எலந்த பயம் எலந்த பயம்’ பாட்டின் மூலம் கொடி கட்டினார் விஜய நிர்மலா.
அமெரிக்கையான கண்ணியமான அப்பாவாக எல்லோர் மனதிலும் பகவதி இடம் பிடித்தார்.
அதன் பிறகு தமிழ்ப்படங்களில் சிலவருடங்கள் பிசியாக நல்ல ரவுண்டு வந்தார்கள்.

’பணமா பாசமா’ மாமியார் ரோலுக்கு எஸ்.வரலட்சுமி நடிப்பு முதலில் இயக்குனர் கே.எஸ்.ஜிக்கு கொஞ்சமும் திருப்தியே இல்லையாம். சாவித்திரியிடம் போய் “வரலட்சுமி சரியில்லை.நீ தான் அந்த ரோலை பிரமாதமாக செய்யமுடியும்” என்று கெஞ்சியிருக்கிறார். ஜெமினி கணேசனுக்கு மாமியாராக சாவித்திரி!
சாவித்திரி பதில்: வாத்யாரே! நான் தான் அந்த மாமியார் ரோல் செய்தே ஆக வேண்டும் என்று நீங்க நினைச்சா ஹீரோவ மாத்திடுங்க.
கே.எஸ்.ஜிக்கு ஹீரோவை மாற்ற விருப்பமே இல்லை. அந்த ரோலுக்கு ஜெமினி தான் சரியான சாய்ஸ்.
சாவித்திரி உடனே ’வரலட்சுமியை மாற்ற வேண்டாம். நான் அவளுக்கு கவுன்சலிங் செய்கிறேன்.இனி பிரமாதமா அவ நடிப்பா’ என்று எஸ்.வரலட்சுமியை நேரில் சந்தித்து கோச்சிங் கொடுத்திருக்கிறார்.

கே.எஸ்.ஜியிடம் ’தண்ணீர்,தண்ணீர்’ கோமல் சுவாமிநாதன் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.


கற்பகம் ஸ்டூடியோ நிறுவப்பட்ட இடம் அப்போது இவருக்கு கே.ஆர் விஜயா கொடுத்தது. மிக காஸ்ட்லி குருதட்சனை.அதை நெகிழ்ச்சியுடன் கே எஸ் ஜி குறிப்பிடுவார்.இந்த உலகத்திலேயே சம்பாதித்த சொத்தை மற்றவருக்கு தானமாக கொடுத்தவர் கே.ஆர்.விஜயா தான் என கே.எஸ்.ஜி நன்றியோடு உணர்ச்சிவசப்பட்டு பரவசமாக குறிப்பிடுவார்.

எம்.ஜி.ஆர்   ’சங்கே முழங்கு’ படத்திற்கு இவர் வசனம் எழுதியிருக்கிறார்.  அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் படமாக கே.எஸ்.ஜி  ’வாசனை’யே இல்லாமல் தான் இருந்தது.
 
திரையுலகை முழுமையாக ஆக்கிரமித்த ஒரு துறுதுறுப்பான செயல் ஊக்கம் மிகுந்த இயக்குனர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி மக்கள் கவனத்திலிருந்து முழுமையாக விலகி மறைய முடிந்திருக்கிறது என்பது திரையுலகம் கண்ட விசித்திரங்களில் ஒன்று.
 ........................................


(தமிழ் ’தி இந்து’ செய்தித்தாள் இந்து டாக்கிஸில்  20.11.2015 அன்ற எடிட் செய்யப்பவெளியாகியுள்ளது)  
..........

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.