Share

Feb 25, 2015

டாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ்

 பாண்டிச்சேரி போன புதிதில் டாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ் பெயர் இலக்கிய உலகில் அடிக்கடி கேள்விப்பட்ட போது கடாமீசையோடு ஜிப்பா, வேட்டியோடு ஒரு உருவம் தான் மனதிற்குள் தோற்றம் கொண்டது.

தி.ஜா. நினைவு கூட்டம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பில்டிங்கில் நடந்த போது நேரில் சந்தித்தேன். ஒரு மென்மையான கெசட்டட் ஆஃபீசர் போன்ற ஒருவரை வீரப்பிள்ளை என அர்த்தம் கொள்ள சிரமமாயிருந்தது.

ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர் எப்படி இலக்கிய உபாசகராக இருக்கமுடியும். இவர் புதுவை அரசாங்க ஆஸ்பத்திரியில் மெடிக்கல் ஆஃபீசராய் இருந்தார். மாலை நான்கு மணிக்கு ஆஸ்பத்திரி விட்டு வந்து விட்டால் மற்ற டாக்டர் போல கிளினிக் பிசினஸெல்லாம் கிடையாது. முழுக்க இலக்கிய வாசிப்பு.

அவருடைய மனைவி ஒரு டாக்டர். இரண்டு பேருக்கும் ஒரு மகன், ஒரு மகள். ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இருவரும் அம்மாவோடு.
வீரப்பிள்ளை அவருடைய மனைவியை மெடிக்கல் காலேஜில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். 


பொதுவாக இந்த காதல் திருமணம் செய்கிற பல பேரை  நான் பார்த்த அளவில்
‘தேடி தேடி தேரைய பிடிச்சிருக்கானே!” 
‘ இந்த டப்பா தாட்டிக்கு இவ்வளவு மெனக்கெட்டிருக்கானே!’
 ‘கொஞ்சமாவது இவனுக்கு பொருத்தமில்லையே!’
இப்படி சலித்து சொல்லும்படியாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் வீரப்பிள்ளையின் திருமண ஆல்பம் பார்த்த போது அந்த டாக்டரம்மா ரொம்ப அழகாக, மெஜஸ்டிக்காக, ‘ஆகா! டாக்டர் எப்படிப்பட்ட அதிர்ஸ்டசாலி!’ என எண்ணும்படியாக தெரிந்தார்.

வீரப்பிள்ளை சொல்வதுபடி பார்த்தால் அந்த அம்மா கிறிஸ்தவர் என்பதால் அது பிரிவுக்கு வித்திட்டு விட்டதாகத் தெரிந்தது.  
திருமணத்தின் போதே டாக்டரம்மாவின் அப்பா பிடிவாதமாக மாப்பிள்ளை வீரப்பிள்ளையை கிறிஸ்தவராக மாற வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். இவர் மறுத்து விட்டார்.
வீரப்பிள்ளை தன் தம்பிக்கு பண உதவி செய்திருக்கிறார். பெரிய தொகை. இதை டாக்டரம்மா விரும்பவில்லை. நேரம் பார்த்து டாக்டரம்மாவின் அப்பா ‘ இதுக்கு மேல அவன் கூட இருக்காதே. வந்துடு.’ என்று தூபம் போட்டு பிரித்து விட்டார்.

இவருடைய மகனும் மகளும் இவர் தோளிலேயே தொங்கி விளையாடுபவர்கள். அவ்வளவு பிரியம். அவர்கள் கூட டாக்டரம்மாவுடன் போய் விட்டார்கள்.


டாக்டர் வீரப்பிள்ளைக்கு மற்ற டாக்டர்கள் போல பிராக்டிஸ் செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ பிரியமில்லை. எனக்குத்தெரிந்து  நான் பார்த்து கிளினிக் வைக்காத டாக்டர் இவர் இரண்டாமவர்.
 மதுரையில் ஒரு ‘கஞ்சா குடிக்கி’ டாக்டர் மெடிக்கல் காலேஜில் ஆசிரியர். வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்ததும் எப்போதும் சல்லிகள் புடை சூழ புகை சூழ கஞ்சா போதையில் தான் இருப்பார். இவரும் கிளினிக் வைக்க விரும்பாமல் தான் இருந்தார்.

பாண்டிச்சேரி டாக்டர் வீரப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ‘மருத்துவர்கள் கிளினிக் சம்பாத்தியமெல்லாம் நியாயமில்லாத விஷயம்.பணம் சம்பாதிக்க  நல்ல வழி. ஆனால் பெரிய மோசடி வியாபாரம்’ – உறுதிபட சொல்வார்.

மிகப்பழைய ‘கணையாழி’ இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. துரையரசன் என்ற பெயரில்.
என்னைப்போல இவருக்கு குடும்பத்தில் செல்லப்பெயர் ‘துரை’.

வெளியூர்க்காரர்களான கி.ராவிற்கும் எனக்கும் அவர் ஒரு நல்ல நண்பராக அன்று இருந்தார்.

கி.ரா. புதுவை பல்கலைக் கழக ‘வருகை தரு’ பேராசிரியராக  நாடோடி கருத்தரங்கம் நடத்திய போது ‘ ராஜநாயஹம்! இந்தாங்க நம்ம டாக்டர் நண்பரிடம் இந்த அழைப்பிதழை கொடுத்துடுங்க” என்றார். நான் கருத்தரங்க அழைப்பிதழை வாங்கினேன். “ டாக்டர் வீரப் ” என்று எழுதியிருந்தார்.
கி.ரா. சொன்னார் ‘இருக்கட்டுமே. திலீப், பிரதீப் மாதிரி இவர் வீரப்!”
பிள்ளை என்ற ஜாதிப்பெயரில் டாக்டர் இருக்கிறாரே என்ற கிண்டல்!
நான் வீரப்பிள்ளையிடம் வீட்டிற்குப்போய் கொடுத்தேன். அவரும் வெட்கப்பட்டு ‘டாக்டர் வீரப்’ அழைப்பிதழைப்பார்த்து சிரித்தார். “ ஐயோ! நான் என்ன செய்ய? எனக்கு இப்படி ஜாதியை சேர்த்து பிறக்கும்போது பெயர் வைத்து விட்டார்கள்!”


செல்ஃப் குக்கிங் செய்வார். மட்டன் வாங்கி விட்டு, இஞ்சி வாங்கிக்கொண்டு இருந்த போது நான் போனேன். பேசிக்கொண்டே வீட்டுக்கு போய் சமையலை ஆரம்பித்த போது இஞ்சியை எடுத்துப்பார்க்கிறார். கெட்டுப்போன இஞ்சி. இஞ்சி இல்லாமல் தான் மட்டனை சமைத்தார்.

கி.ராவும் நானும் பேசிக்கொள்ளும்போது இவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவுத்துயரம் பற்றி வருத்தப்படுவோம். நான் கி.ராவைக்கேட்டேன். “ஐயா! நீங்க இதில் தலையிட்டு சமரசம் பேசி தம்பதியரை இணைக்க முடியாதா?” என்று கேட்டேன்.
“ இந்த மாதிரி விஷயத்தில் யாராலும் சமரசம் செய்ய முடியாது. அவர்களாக இணக்கமாகி இணைந்தால் தான் உண்டு.”
எனக்கு டாக்டரும் டாக்டரம்மாவும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. “ மாலைப்பொழுதின் மயக்கத்திலே  நான் கனவு கண்டேன் தோழி” பாக்யலக்ஷ்மி படத்தில் சௌகார் ஜானகிக்காக சுசிலா பாடிய பாடல் வீரப்பிள்ளைக்கு மிகவும் பிடிக்கும்,
கணையாழியில் இவருடைய கவிதை ஒன்று “என்னுடைய வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் முழு நிலவு நீ தான்”

நான் புதுவையில் இருந்த போது அசோகமித்திரன், தேனுகா போன்றோரை அழைத்து பல இலக்கிய நிகழ்ச்சிகள் இவர் வீட்டில் தான் நடத்தப்பட்டிருக்கிறது.


பல வருடங்களுக்கு முன் கி.ரா தொலை பேசியில் பேசும்போது டாக்டர் வீரப்பிள்ளை புதுவையிலிருந்து காரைக்காலுக்கு ட்ரான்ஸ்பரில் போய் விட்டதாகச்சொன்னார். மனைவி குழந்தைகளோடு சேரவேயில்லை என்பதையும் சொன்னார்.

சில வருடங்களுக்கு முன் போனில் பேசிய போது காரைக்காலில் வீரப்பிள்ளை இறந்து விட்ட தகவலை கி.ரா வேதனையுடன் சொன்னார்.
அவர் இறந்து விட்ட விஷயம் ரொம்ப தாமதமாகத் தான் மற்றவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. கட்டிலை விட்டு கீழே விழுந்த நிலையில் அவர் பிணம்.

நொண்டியா இருக்கலாம். ஆனா  ஒண்டியா இருக்கக்கூடாது.


  .................................................... 
இடமிருந்து வலம்
ராஜ் கௌதமன், R.P.ராஜநாயஹம்,கி.ராஜ நாராயணன், டாக்டர் ச.வீரப்பிள்ளை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.