ஆனந்த விகடன் (31.12.2014 தேதியிடப்பட்டது) ஜெயகாந்தன் பேட்டி குறித்து சில வார்த்தைகள்.
ஜெயகாந்தன் அந்தக்காலத்தில் எஸ்.எஸ்.வாசன் குறித்து சொன்னதையெல்லாம் இந்தப்பேட்டியில் மகன் எஸ்.எஸ்.பாலன் மேல் ஏற்றி சொல்கிறார்.
ஆனந்த விகடன் முதலாளி வாசன் இவருக்கு எழுத வாய்ப்பு கொடுத்த போது ஜெயகாந்தன் வயது 20 எனில் அது 1954ம் ஆண்டு.
இந்த விஷயம் " அது தான் வருத்தமாக இருக்கிறது பாலு!" பேட்டியில் பாலன் வாய்ப்பு கொடுத்ததாக பதிவாகியிருக்கிறது.
இது ஜெயகாந்தன் தவறாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பேட்டியை எழுத்தாக்கம் செய்துள்ள தமிழ்மகன் செய்துள்ள தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு.
பாலன் மீதுள்ள அதீத விசுவாசம் காரணமாக வாசன் பற்றி குறிப்பிட்ட விஷயத்தையெல்லாம் பாலன் மீதேற்றியிருக்கலாம்.
பேட்டியில் முன்பகுதியில் உள்ள விஷயங்கள் வாசன் சம்பந்தப்பட்டவை.
முத்திரைக்கதைகள் பத்தாண்டு காலம் எழுதியதெல்லாம் வாசன் உபகாரம்.'அக்னிப்ரவேசம்' கதை கொந்தளிப்பின் போது 'நீங்கள் எழுதுங்கோ' என்று பச்சைக்கொடி காட்டிய பண்பாளர் வாசன் தான்.
அதெல்லாம் இந்தபேட்டியில் பாலன் என்பது போல பதிவாகியிருக்கிறது.
இன்னொரு விஷயம். 'இதயம் பேசுகிறது' மணியன் ஆனந்த விகடனில் வேலை பார்த்த போது தான் ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத்தொகுப்பை முதலாளி பார்வைக்கு வைத்து அதை வாசித்த வாசன் ஜெயகாந்தனுக்கு முத்திரைக்கதைகள் எழுத வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
1954ல் ஜெயகாந்தனுக்கு 20 வயது என்றால் எஸ்.எஸ். பாலனுக்கு
அப்போது 19 வயது தான்!
பத்தாண்டு காலம் முத்திரைக்கதைகள் எழுதியுள்ளார். வாசன் மறைந்த ஆண்டு 1969.
அப்பாவுக்கு உதவியாக பட்டத்து இளவரசர் சகல அதிகாரத்துடன் இருந்திருக்கலாம் தான். ஏவிஎம் செட்டியார் காலத்தில் சரவணன் பட வேலைகளையெல்லாம் பார்த்தவர் தான். அது போல ஸ்டுடியோ நிர்வாகத்திலும், பத்திரிக்கையிலும் பாலன் செயல் பட்டிருக்கலாம்.
ஜெமினியின் தரமான தயாரிப்புகளான 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'வாழ்க்கைப்படகு' பாலன் இயக்கிய படங்கள் தான். வாசன் இறப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன் வந்த படங்கள்.
சிவாஜி,ஜெமினி கணேசன் இருவரையும் இயக்கியவர்.
1974ல் எம்.ஜி.ஆர் படம் 'சிரித்துவாழவேண்டும்' பாலன் இயக்கம் தான்.
ஆனால் ஜெயகாந்தன் எப்போதும் வாசனையே தன் வாழ்க்கைக்கு வழி திறந்தவர் என்பதாக நிறுவியிருக்கிறார். அதோடு வாசன் காலத்திற்கு பின் பாலன் நிர்வகித்த ஆனந்த விகடன் பத்திரிக்கை மீது மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்.
வாசன் பற்றி அதிகம் நினைவு கூர்ந்த தமிழ்படைப்பாளிகள் இருவர்.
ஒருவர் ஜெயகாந்தன். பத்திரிக்கை அதிபர் வாசன் பற்றி பேசியவர்.
மற்றொருவர் அசோகமித்திரன். ஸ்டுடியோ அதிபர் சினிமாக்காரர் ஜெமினி வாசன் பற்றி பேசியவர்.