Share

Dec 4, 2014

பழங்கதையாய்க் கனவாய்




சென்னையில் ஹேமா மாலினியின் ரிக்கார்டிங் தியேட்டர். வெண்ணிற ஆடை மூர்த்தி ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த படத்தில் பெங்களூரில் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதற்கு வந்திருந்தார்.
பேசி முடித்து விட்டு தியேட்டரின் உள்பகுதியிலிருந்து வெளியே வந்தவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னிடம் “ என்னை நேராக இருந்து பார்க்காமல் பக்கவாட்டில் இருந்து  பாருங்கள். அப்படிப்பார்க்கும்போது நான் ‘வாத்து’ போலவே இருப்பேன்!”
 
மேக்கப்பில்லாமல் இருக்கும் மூர்த்தி முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
டப்பிங் தியேட்டரில் இருந்த ஜெயா சக்ரவர்த்தி (ஹேமாமாலினியின் தாயார்)யிடமும் தன்னை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது வாத்து போலவே இருப்பதை ஊர்ஜிதமாக வெண்ணிற ஆடை மூர்த்தி மீண்டும் சொன்னார்.
வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று முப்பத்து ஒன்பது வருடமாக படு உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கும்  நகைச்சுவை நடிகர்.
நாகேஷ்,தேங்காய் சீனிவாசன்,சுருளிராஜன்,கவுண்டமணி, ஒய்.ஜி.மகேந்திரன்,ஜனகராஜ்,விவேக்,வடிவேலு, என்று காமெடி கிங் ஆக மார்க்கெட்டில் டாப்பில் யார் இருந்தாலும் சளைக்காமல் அவர்களுக்குத் துணையாக நின்று சளைக்காமல் ‘சள,சள’ என்று, வழ,வழ வசனம் பேசிக்கொண்டிருப்பவர்.
ஹேமாமாலினி தியேட்டருக்கு அப்போது காரில் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் (எம்.என்.ராஜத்தின் கணவர்) வந்தார். அந்த நேரம் அவர் ஒரு படம் எடுத்துக்கொண்டிருந்தார். இந்த படம் இன்னும் அடுத்த சில மாதங்களில் அவருக்கு பெரும் நஷ்ட த்தைக்கொடுத்து அவரையும் நடிகை எம்.என்.ராஜத்தையும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டது.
என்னையும் சுப்ரமண்ய ஐயரையும் அவர்  காரில் ஏறிக்கொள்ளச்சொன்னார். நான் வேலை செய்யும் பட டைரக்டர் பெயரைச் சொன்னபோது “ அப்படி ஒரு டைரக்டரா?” என்றார். அவருக்கு  டைரக்டரைத்தெரியவில்லை. இது தான் சினிமா உலகம். இத்தனைக்கும் அந்த டைரக்டர் அப்போது இயக்கி பதினொரு வருடத்தில் நான்கு படங்கள் வெளி வந்திருந்தன.
ஏ.எல்.ராகவனிடம் சொன்னேன். “ நீங்க பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ்
‘எங்கிருந்தாலும் வாழ்க’ தான்.
 'நான் யார் தெரியுமா?' ஜெய்சங்கர் படத்தில் இவர் ஒரு பாடலில் விசித்திரமாக ஆப்பிரிக்க மொழியில் பாடியிருப்பார்.அந்த பாடலைப்பற்றி கேட்டேன். 
https://www.youtube.com/watch?v=4RnGvxOAd6k
 ஏ.எல் ராகவன் “ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.”
எஸ்.பாலச்சந்தரின் “அந்த நாள்”. அதில் ஏ.எல்.ராகவன் நடித்திருப்பதைப்பற்றிச்சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.”பீல்டுல யாருக்கும் தெரியாத விஷயமெல்லாம் எப்படி தெரிஞ்சி வச்சிருக்கீங்க!”
சுப்ரமண்ய ஐயர் “ எனக்கு இந்தப் பையனப்பார்க்கும்போதெல்லாம் இது தான் பிரமிப்பு.என்சைக்ளோபீடியா! இந்த வயசுக்கு தெரியாத பல விஷயங்கள் ராஜநாயஹத்துக்குத்தெரிஞ்சிருக்கு!”
பாண்டி பஜாரில் காரில் இருந்து இறங்கும்போது ஏ.எல்.ராகவன் வாஞ்சையுடன் “ ராஜநாயஹம்! அவசியம் நீங்க எங்க வீட்டுக்கு வரணும்!”

கமலா தியேட்டரில் ராகவன்- ராஜம் தம்பதியரின் சொந்தப்படம் காற்றாடிக்கொண்டிருந்த போது தூரத்தில் அங்கே தியேட்டரில் நின்று கொண்டிருந்த டைரக்டரை திட்டினார் ஏ.எல்.ராகவன். 

இப்போது இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. ஏ.எல்.ராகவன் தயாரித்த அந்த பட த்தில் அஸிஸ்டண்ட் ஆக என்னை சேர்க்க திருச்சி டிஸ்ட் ரிப்யூட்டர் சுகுமார் என்னை அழைத்துச்சென்றிருந்தார். வீட்டில் நுழையும் போது எம்.என்.ராஜம் மாடியில் துணிகள் காயப்போட்டுக்கொண்டு இருந்தார். ஏ.எல்.ராகவனும் எம்.என்.ராஜமும் கட்டாயம் என்னை தாங்கள் தயாரிக்கும் பட த்தில் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ள டைரக்டரிடம் சிபாரிசு செய்வதாக முழு மனதோடு தான் சொன்னார்கள். ஆனால் டைரக்டர் மறுத்து விட்டார். அதன் பின் தான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த படத்தில் நான் உதவி இயக்குனரானேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.